2015ன் தங்க வாக்கியம்
இந்த புதிய வருடத்தின் முதல் நாளிலே இந்த இடத்தில் உங்களை சந்தித்து ஆண்டவர் அருளிய வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்து உங்களுக்காக ஜெபிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!
"வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய் சேர்க்கிறதற்கும், இதோ ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகின்றேன்." யாத். 23:2௦
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர் கொடுத்திருக்கிற அநேக வாக்குத்தத்தங்கள் நிபந்தனையோடு கூடியவை. இந்த குறிப்பிட்ட வாக்கு நாம் பயணம் செய்வதற்கு ஒப்பாக இருக்கின்றது. எனவே நமது வாழ்க்கைப் பயணத்திலே இந்த 2015ம் ஆண்டு முழுவதும் அனுதினமும் நிறைவேற வேண்டுமானால், ஆண்டவர் கூறியுள்ள நிபந்தனைகளை நாம் ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும். அற்பணியுங்கள்! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!
ஆண்டவருடைய நிபந்தனைகள்:
1. உண்மையில்லாத அறிக்கையை பிறருக்குக் கொடுக்காதீர்! (Don't pass along untrue reports) தவறு எனத் தெரிந்து தீய மனிதனோடு ஒத்துழைக்காதீர்!
2. ஏழை என்ற ஒரே காரணத்துக்காக அவன் பக்கம் சாய்ந்து உன் சாட்சியை இழந்துவிடாதே.
3. கலவரங்களில் ஈடுபடாதீர்! அதிகமானவர்கள் இருக்கின்ற பக்கம் சாய்ந்து நியாயத்தைப் புரட்டாதீர்! (கூட்டத்தோடு கோயிந்தா போடாதீர்!)
4. உன்னைப் பகைக்கிறவர்களுக்கு மறைமுகமாகவும், நேராகவும் உதவி செய்.
5. ஏழையாய் இருக்கிறான் என்பதினிமித்தம் அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.
6. கள்ளக் காரியத்துக்கு விலகி தூர நில். குற்றமறியாதவனை தண்டிக்காதே. அதைப்போல, ஆண்டவர் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டார். சுய நன்மைக்காக பிறரை தவறான வழியில் நடத்தாதே.
7. இலஞ்சம் வாங்காதே. பிரச்னையை சரியாக அறிந்து கொள்ள விடாமல் அது தடுக்கும். நேர்மையாய் நடக்கின்ற மனிதனை இலஞ்சம் மனமடிவாக்கும்.
8. அந்நியனை ஒடுக்க வேண்டாம்; நீயும் ஒருகாலத்தில் அன்னியனாய் இருந்தவன் தானே.
9. உன் விவசாய நிலத்தை ஏழு வருடங்களுக்கு ஒரு வருடம் சும்மா போடு. அல்லது ஏழாவது வருடத்தில் விளையும் தானியம் அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிடு.
1௦. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்து ஒரு நாள் ஓய்வெடு.
மேலே உள்ளவைகளுக்கு கீழ் படிய கவனமாய் இரு. ஜெபத்தின் போதும் உறுதிமொழி எடுக்கும் போதும் அந்நிய தேவர்களின் பெயரை உச்சரியாதே. மேலும் நீ இரட்சிக்கப்பட்ட நாளை கொண்டாடு; ஊழியத்துக்கு உற்ச்சாகமாய் கொடு.
இவைகளை கவனமாய் கடைப்பிடிக்க ஒப்புக் கொடு. அப்பொழுது ஆண்டவருடைய இந்த வாக்கு அனுதினமும் உன் வாழ்க்கைப் பயணத்தில் நிறைவேறும்.
இதோ ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகின்றேன்: அப்படி உனக்கு முன் செல்லும் தூதனுக்கு செவி கொடு. அவரைக் கோபபடுத்தாதே, ஏனெனில் ஆண்டவருடைய பெயர் அவர் உள்ளத்தில் உள்ளது. அவருடைய வழிகாட்டுதலுக்கு கவனமாய் கீழ்படி. அப்படி செய்தால் ஆண்டவர் உன் சத்துருவுக்கு சத்துருவாகவும், பகைவருக்கு பகைவராகவும் இருப்பார். விக்கிரக ஆராதனையை உன்னிலிருந்து விலக்கி, ஆண்டவர் ஒருவரையே சேவி. அப்பொழுது உனது உணவை அவர் ஆசீர்வதிப்பார். உனக்கு தண்ணீரில்லாமல் போகாது. வியாதி உன்னிலிருந்து விலகும்.
கர்ப்பம் கழிதலும், மலடும் உன் குடும்பத்தில் இருப்பதில்லை. நீ விரிவடைய விரிவடைய பிரச்சனைகளை உன் முன் நின்று துரத்திவிடுவேன்; உன் எல்லைகளை விஸ்தாரமாகுவேன். இந்த வருடத்தில் நமக்கு இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் தேவையாய் இருக்கிறது. ஆண்டவருடைய நிபந்தனைகளை மிகவும் கவனமாய் பின்பற்றுவோம்; ஆண்டவர் இந்த வருட இறுதிக்குள் தாம் ஆயத்தம் பண்ணின இடத்தில் நாம் ஈஸ்கடோஸ் அங்கத்தினர் ஒவ்வொருவரையும் கொண்டு போய் சேர்த்து மகிமைப்படுவார்.
இரண்டாவதாக,
"கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்..." சங்கீதம் 115:12
இந்த வாக்குத்தத்தத்துக்கு நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். அது 'நம்ப வேண்டும்'. தியானிப்போம்:
அற்புதம் எதிர்பாரு-நீ
அதிசயம் எதிர்பாரு
கர்த்தரின் வேதத்தை தியானிக்கும் போது
அற்புதம் எதிர்பாரு.
கர்த்தர் நினைத்திருக்கிறார்: ஆண்டவர் உதவி செய்யும்படியாகவே நினைத்திருக்கிறார், என்பதே இதன் பொருளாகும். உதாரணமாக, ஆதி.8:1ல்,
"தேவன் நோவாவையும் அவனுடனே பேழையில் இருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார். தேவன் பூமியின் மீது காற்றை வீசப்பண்ணினார்; அப்பொழுது ஜலம் அமர்ந்தது"
கர்த்தர் நினைக்கவே மழை நின்று ஜலமும் அமர்ந்தது. சங்கீதக்காரன் தாவீதும், 136:23ல்,
"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரை துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது"
என தனது தாழ்வில் நினைத்து, உதவி செய்த ஆண்டவரைத் துதித்து, நம்மையும் துதியுங்கள் என்று அழைக்கிறார். இரண்டாவதாக முன்னாடி நடந்த சம்பவங்களை நினைத்து, அதினிமித்தம் உதவி செய்ய நினைப்பது: யாத். 2:24,25ல்,
"தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தான் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்"
அடுத்த அதிகாரம் 3ல், மோசேயை சந்தித்து எகிப்திற்கு வர ஆயத்தம் செய்தார். (மீட்கும்படியாக ஒரு இரட்சகனை ஆயத்தம் செய்தார்) நீங்களும் கடன் பிரச்சனை என்னும் அடிமைத்தனத்துக்குள்ளாக இருக்கின்றீர்களா? ஆண்டவர் உங்களை நினைத்தருளி, ஒரு நபரை எழுப்பித் தருவார்.
ஆண்டவருடைய அன்பு ஏசாயா 44ல், வெளிப்படுகின்றது: அறிவும், சொரணையும் இல்லாத இஸ்ரவேல் ஜனங்கள், ஆண்டவரை விட்டு சோரம்போய், மரக்கட்டையினால் செய்த சொரூபத்தை வணங்கவே, 21,22ல்,
"யாக்கோபே, இஸ்ரவேலே இவைகளை நினை; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களை கார் மேகத்தைப்போலவும், அகற்றி விட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக் கொண்டேன்"
ஒரு காதலன் தன் காதலியை எப்படி மறக்காமல் இருக்கின்றானோ, அதைப்போல, ஆண்டவர் தமது மக்களின் மீதுள்ள மனதுருக்கத்தினால் இவ்வாறு அழைக்கிறார். எனக்கன்பான சகோதர சகோதரியே! ஆண்டவரை விட்டுப் பின்வாங்கிப் போன உன்னை, ஊழியர் நடந்துகொண்ட விதத்தினால், ஆண்டவரைக் குற்றஞ்சாட்டி விக்கிரக வணக்கத்துக்குள் சென்ற உன்னை, மனவாட்டியாகிய உன்னை மணவாளன் இயேசு அழைக்கிறார். கோழி தன் குஞ்சுகளை எதிரியாகிய பருந்தினிடத்திடமிருந்து பாதுகாக்க அழைப்பதைப்போல, ஆண்டவர், நான் உன்னை மறப்பதில்லை, மனந்திரும்பு என அழைக்கிறார். மேலும் ஏசாயா 49:14-16ல்,
"சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இறங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது"
ஆண்டவருடைய அன்பை என்னவென்று சொல்லுவது? உதவி செய்ய ஆளில்லாமல், உன்னைவிட வலிமையானவர்களின் கைகளில் சிக்கி சீரழிந்த உன்னை, ஆண்டவரிடம் ஜெபித்து ஜெபித்துப் பார்த்து கிடைக்காததினால் ஆண்டவருடைய அன்பை சந்தேகித்த உன்னை கர்த்தர் என்னைக் கைவிட்டார் எனக் கூறும் சீயோனே உன்னைப் பார்த்து, "உன் தாயே உன்னை மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை; நீ என் உள்ளங்கைகளில் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாய்; உன்னுடைய போக்கும் வரத்தும் என்னால் கண்காணிக்கப்படுகிறது" என கர்த்தர் கூறுகின்றார்.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, ஆண்டவர் உங்களுக்கு கூறுகின்றார்: 'உன் ஜெபங்களும் உன் தான தருமங்களும் எனது சந்நிதியில் வந்து எட்டி இருக்கிறது, இப்பொழுதே உனக்கு வழிகாட்ட ஆட்களை அனுப்புகிறேன்' இந்த 2015ல், கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்'
இறுதியாக,
"என் இளவயதின் பாவங்களையும், என் மீறுதல்களையும் நினையாதிரும்;...." சங்கீதம் 25:7.
'இளங்கன்று பயமறியாது' எனக் கூறுவார்கள். அதைப்போலவே பயமறியாமல் பாவத்தில் சிக்குவதும், மனித தன்மையின் வரையரையை மீறுவதையும் அதிகமாய் நடப்பிக்கிற / செய்கிற வயதுதான் இள வயதுதான். எனவே தான் என்னைப் போல ஊழியர்களை ஆண்டவர் எழுப்பியிருக்கிறார். இளவயதுள்ளோர் அநேகரை மீட்கும்படியாக, எனக்காக ஜெபியுங்கள், இந்த ஊழியத்தை உங்கள் தாராளமான நன்கொடையினால் தாங்குங்கள்!
நமது வங்கி கணக்கு: ZION RIVIVAL MINISTRIES, INDIAN BANK, OTTERY BRANCH, A/c NO: 441176777; IFS CODE: IDIB000O004. இந்த IFS CODEல், உள்ள சைபர்களுக்கு இடையில் பெரிதாக உள்ளது ஆங்கில எழுத்து 'O' ஆகும்.
இந்த 2015ல், ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிற வாக்கின்படி ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
எங்களை அதிகமாக நேசித்து வழிநடத்தி வருகின்ற அன்பின் தகப்பனே! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு மகிமையை செலுத்துகிறோம். வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லமையுள்ளவரே உமக்கு மகிமையை கொடுக்கிறோம்! துதிக்கின்றோம்! சங்கீதம் 138:2ல், உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும், உமது வார்த்தையை மகிமை படுத்தி இருக்கிறீர் என்று எழுதி இருக்கிற வாக்கின் படி, இந்த வருடம் நீர் எமக்குக் கொடுத்த,
"வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய் சேர்க்கிறதற்கும், இதோ ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகின்றேன்." யாத். 23:2௦
மற்றும்,
"கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்..." சங்கீதம் 115:12என்ற வாக்குத்தத்தங்களை மகிமைப்படுத்துவதற்க்காய் நன்றி செலுத்துகிறோம். மேலும் உமது வாக்கு இந்த வருடத்திலே நிறைவேற கவனமாய் / விழிப்புடன் நிபந்தனைகளுக்கு கீழ்படிய கிருபை செய்யும். பின் மாற்றத்தில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கிறோம்; மீண்டும் உற்சாகத்தின் ஆவியினால் நிரப்பி, உம்மைப் பற்றும் பயத்தோடுகூட வாழ ஜெபிக்கிறோம். முன் நிலைமையைப் பார்க்கிலும் பின் நிலைமையை ஆசீர்வதியும். இந்த வருடம் முழுவதும் எங்களுக்கு முன் சென்று கோணலானவைகளை செவ்வையாக்கித் தருவதற்காய் நன்றி செலுத்துகிறோம். எங்களுக்காய் மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென்.