25 Nov 2015

You Must be Born Again


நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் 


இரட்சிப்புக்கான நிபந்தனைகளை நாம் நிறைவேற்றும் பொழுது, கடவுளும் நமது மனதில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருகின்றார். அதுவே மறுபடியும் பிறத்தல் என்பது. புதிதாக பிறத்தல் என்பது, புதிய வாழ்க்கையாகாது. அதாவது திருந்தி வாழ்வது ஆகாது. அது நமது அடிப்படைத்  தன்மையை மாற்றாது. நமது வாயில் பிறக்கும் வார்த்தைகளையும் சுத்தமாக்காது. நற்செய்தி அழைப்புக்கு நாம் இணங்கி மனந்திரும்பும்போது, குற்ற உணர்வின் மீது கிருபை கிரியை செய்து, புதிய பிறப்பை உண்டாக்குகின்றது. இதுதான் மறுபடியும் பிறத்தல் என்பது. கீழே நாம் இதைப்பற்றி விரிவாக காண்போம். 

இயேசு (மேலும் பேதுருவும், யோவானும் யாக்கொபுங்கூட) ஆவிக்குரிய பிறப்பை பற்றி மேலும் கூறியுள்ளனர். யோவான் 3:5-7ல்
"இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும்  பிறவாவிட்டால் தேவனுடைய இராஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்.
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்பட வேண்டாம்"

1பேதுரு 1:23ல்,
"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே".
யாக்கோபு 1:18ல்,
"அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதர்க்கு நம்மை சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்"
1யோவான் 3:9ல்,
"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான்"
பரிசுத்த ஆவியானவர், விசுவாசிக்கிறவர்களின் மனதிலே அசைவாடி, மேன்மையான  மாற்றங்களைக் கொண்டுவருகின்றார். இந்த முழு அனுபவமும் மறைபொருளை உள்ளடக்கியது ஆகும். இயேசு சொன்னார் யோவான் 3:8ல்,
"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனேவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்"
மறுபடியும் பிறத்தலைக் குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகின்றது என கவனிக்க விரும்புகிறோம்.
1. புதிய பிறப்பின் அவசியம்: இயேசு நிக்கோதேமுவிடம் (அந்த நாட்களில் மிக உயர்வாக மதிக்கப்பட்ட, நல்ல பழக்க வழக்கமுடைய மனிதர்) 'நீ மறுபடியும் பிறக்க வேண்டும்' எனக் கூறினார். இந்த வாக்கியம் புதிய பிறப்பு என்பது நமது விருப்பத் தேர்வல்ல, புதிய பிறப்பு இன்றியமையாதது என தெளிவாகின்றது. 

நாம் நமது சொந்த முயற்சியால் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது. ஆகையால், மறுபடியும் பிறத்தல் நமக்கு அத்தியாவசியமாகின்றது. இந்த உலகின் முதல் மனிதனாகிய ஆதாம் (கீழ்படியாமை என்ற பாவத்தின் மூலமாக) இயல்பான நிலைமையிலேயே பாவத்தைப் பெற்றுக் கொண்டான். மேலும் இந்தப் பாவமானது, இயல்பாகவே அவனது வழித்தோன்றல்கள் எல்லோருக்கும் கடந்து வந்தது. நாம் ஒவ்வொருவரும் பாவ சுபாவத்திலேயே இருக்கின்றோம். இந்த பாவ சுபாவம் கடவுளுக்கு விரோதமான பகை. எனவே நாம் கடவுளைப் பிரியப்படுத்த முடியாதவர்களாகி விட்டோம். மனித இனம் (ஆதியாகமம் 3ல் விழுந்ததில் இருந்து) முழுவதும் பாவத்திலேயே விழுந்துவிட்டது. நம்மை நாமே இதிலிருந்து (பாவத்திலிருந்து) மீண்டு வெளியே வர முடியாதபடி ஆழமாகிவிட்டது. நமது இயற்கையான பிறப்பின் மூலமாக கடவுளுடைய காரியங்களில் உள்ள விருப்பம், புரிந்து கொள்ளுதலின் மூலமாக வரும் மகிழ்ச்சி இவைகளை அடைய முடியவில்லை. எரேமியா 17:9ல்,
"எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?"
கடவுளுடைய தெய்வத்தன்மை மற்றும் தூய்மையின் நிமித்தம் மறுபடியும் பிறத்தல் நமக்கு நிச்சயம் தேவை. கடவுள் ஒளியாய் இருக்கின்றார், அவரிடத்தில் எவ்வளவேனும் இருளில்லை. எரேமியா 57:15ல், 
"நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவராகிய மகத்துவமும் உன்னதமுமானவர் (கர்த்தர்) சொல்லுகிறார்......"
இப்படிப்பட்ட கடவுள் எப்பொழுதுமே நித்தியத்துக்கும் பாவத்துக்கு எதிரிதான். பரிசுத்தம் என்பது தூய்மை, தெய்வத்தன்மை, களங்கமின்மை ஆகும். மேலும் 1பேதுரு 1:15,16ல்,
"உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கைகளேல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே"
மேலும் நாம் நமது பாவமான விருப்பங்களை நினைக்கும்போது, நாம் நமது பழைய வாழ்க்கையில், நமது உயர் நிலையிலிருந்து சரிந்து விழுந்ததை அறிவோம். நாம் இன்னும் உயர் நிலையை அடையவில்லை என்பதை அறிகிறோம். கடவுளின் பரிசுத்தம், நமக்குள்ளே செயலிலும் எண்ணத்திலும் தீவிரமான மாற்றத்தை எதிர்பார்க்கின்றது. மேலும் நாம் மறுபடியும் பிறவாவிட்டால் கடவுளுக்கும் நமக்கும் இடையே ஒரு ஆழமான பிளவை ஏற்ப்படுத்துகிறோம். 

2. மறுபிறப்பின் பண்பு: புதிய பிறப்பு என்பது மிகப் பெரிய தேவையானால் அது என்ன? அதை நாம் எப்படி விளக்கலாம்? எங்கே போய் அதைக் கண்டுபிடிப்பது?
'மறுபடியும் பிறத்தல்' என்னும் பதம் உள்ளான குணத்தில் ஏற்ப்படும் மாற்றம். ஒருவரது வெளிப்படையான வாழ்க்கையிலும் அந்த மாற்றத்தைப் பார்க்க முடியும். பவுல் அப்போஸ்தலர் இதைப்பற்றிக் கூறும் போது, தீத்து 3:5ல், 'மறு ஜென்ம முழுக்கு' எனக் கூறுகின்றார். அப்போஸ்தலர் பேதுரு 2பேதுரு 1:4ல், 'திவ்ய சுபாவம்' என குறிப்பிடுகின்றார். அப்போஸ்தலர் யோவான் 1யோவான் 3:14ல், 'மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம்' எனக் கூறுகின்றார். 

மறுபடியும் பிறத்தல் என்பது உள்ளத்தில் ஏற்ப்படும் ஒரு மாற்றம். இதைத்தான் ஆவியில் பிறப்பது எனக் கூறுவதும் ஆகும். ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசமாகிய நற்செய்தியை விசுவாசிக்கும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதனின் உள்ளத்தில் புதிய வாழ்க்கையை ஸ்தாபிக்கிறார். தீத்து 3:5ன்படி, இது, 'பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதல்' இந்த புதிய பிறப்பானது பரிசுத்த ஆவியானவரால் எண்ணுக்கடங்காத ஆன்மீக மாற்றத்தை மனித உள்ளத்திலே கொண்டுவருகிறது. இது பாவ மன்னிப்பு மட்டுமல்ல, பாவத்தை எதிர்ப்பது! கடவுள் தமது கிருபையால் மனித பண்பிலே கொண்டுவரும் மாபெரும் மாற்றமாகும் - பாவத்தின் ஆளுகைக்குக் முடிவு செய்கிற மாற்றமாகும். உண்மையாகவே 'மறுபடியும் பிறத்தல்' என்பது முழுவதுமாக விளக்க முடியாத ஒரு புதிராகும். அதே நேரத்தில் மனிதனால் விவரிக்க முடியாவிட்டாலும் உண்மையாகவே அது இருக்கிறது. 

மறுபடியும் பிறத்தல் என்பது, விசுவாசிக்கும் உள்ளத்திலே பரிசுத்த ஆவியானவர் அமைதியாக வேலை செய்வதினால் வருகின்ற உறுதியான மாற்றமாகும். ஆனால் மனிதன் குறைந்த பட்சம் மூன்று காரியங்களுக்கு சரியாக பதிலளிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் மாற்றத்தை (மறுபடியும் பிறத்தலை) கொண்டுவருகின்றார். 

அ) நாம் நமது பாவத்தன்மையையும் இழந்து போன நிலைமையையும் உணரவேண்டும். பாவத்தைக் குறித்த நமது வரையறை ஆழமற்றதாக மேம்போக்காக இருக்கின்றது. அது எவ்வளவு தூரம் ஆண்டவரை எதிர்க்கின்றது என்பதை உணரத் தவறிவிட்டோம். 

ஆ) பழைய பாவ வாழ்க்கையிலிருந்து நாம் மனந்திரும்பி இருக்கிறோம் என்பதை நாம் நமது செயல்களின் மூலமாக நிரூபித்துக் காட்டவேண்டும். மனந்திரும்புதல் என்பது நமது மனநிலையின் தலைகீழான மாற்றமாகும். மனந்திரும்பியவர்கள் பாவத்தைக் குறித்து கடுமையான நிலைமையைக் கொண்டிருப்பார்கள். இழிவான கீழ்த்தரமான கதைகளைப்படித்ததினாலும், முட்டாள்தனமான பேச்சுக்களை பேசியதற்காகவும், ஆண்டவரைக் குறித்து தெய்வ நிந்தனை செய்ததற்காகவும், கள்ளத்தனமான பாலியல் மனப்பான்மைக்காகவும் வெட்கப்படுவார்கள், மன வருத்தத்தோடு தலைகுனிவார்கள். மனந்திரும்பியவர்கள் கடவுளைக் குறித்த மனப்பான்மையில் தலைகீழாக மாறியிருப்பார்கள். பல வருடங்களாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலித்த இந்த குற்றத்திற்காக விஷேசமாய் ஆழ்ந்த வேதனைப்பட்டிருப்பார்கள். மனந்திரும்பியவர்கள் தங்களைக் குறித்த மனப்பான்மையில் தலைகீழாக மாறியிருப்பார்கள். தவறாக நடந்ததை, நான் செய்தது சரிதான் என்று தங்களையே நீதிகரிக்காமல், தங்களது தகுதியின்மையைப் பார்த்து தங்களையே அடக்கிக் கொண்டிருப்பார்கள். தன் முழு இருதயத்தோடு பாவத்திலிருந்து மனந்திரும்ப விரும்புகிற ஒருவரது மனநிலை பாவத்தைக் குறித்த மன வருத்தத்தினால் நிறைந்திருக்கும். 

இ) இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகளின் பலனை விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் மறுபடியும் பிறத்தலைக்  குறித்து பேசிய பொழுது, யோவான் 3:14ல், தான் எப்படி சிலுவையில் உயர்த்தப் படுவேன் என கூறிவிட்டு, அடுத்த வசனத்தில் கீழ்க் கண்டவாறு முடிக்கின்றார். 
"தன்னை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும்" (யோவான் 3:15)

'தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ' என்ற பதம், தொடர்ந்து செயல்புரிவதை குறிப்பிடுகின்றது. இதன் அர்த்தம் விசுவாசித்துக் கொண்டே இருப்பது ஆகும். இங்கே வற்புறுத்திக் கூற விரும்புவது என்னவென்றால், ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வைக்கும் விசுவாச மனப்பான்மை அல்ல. இயேசு கிறிஸ்துவின் மீது தொடர்ந்து வைக்கும் விசுவாசமும், இயேசுவுக்கு கீழ்படிவதும் ஆகும். தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதும், வேத வசனத்தைப் போதிக்கும் சபையில் ஐக்கியம் வைத்துக் கொள்ள நாடுவதும், ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவோடு கூட நடக்க தன்னை அர்ப்பணிப்பதும் ஆகும். 

மறுபடியும் பிறத்தல் என்பது பரிசுத்த ஆவியானவரால், மனிதனின் உள்ளான ஒழுக்க நெறியில் மாற்றத்தைக் கொண்டுவருதல் ஆகும், ஆனால் இது அம்மனிதன் சுவிஷேசத்துக்கு அளிக்கும் பதிலைப் பொறுத்தே அமையும்.

மறுபடியும் பிறக்கும் போது, மக்கள் அழுவதோ, கத்துவதோ, ஆடுவதோ, நடுங்குவதோ தேவையான ஒன்றல்ல. இயேசு யோவான் 3:8ல், 'மறுபடியும் பிறத்தல்' என்பது காற்றைப் போன்றது என்றார். காற்று எப்பொழுதும்  ஒரே மாதிரியாக அடிக்காது  என்பதை நாமெல்லாருமே அறிவோம். பல நேரங்களில் தென்றலாகவும், சில வேளைகளில்  புயலாகவும் அடிக்கும். இதைப் போலவே நமது மறுபடியும் பிறத்தலும் இருக்கும். சிலரது மறுபிறப்பு இடி, மின்னலோடு கூடிய புயலாகவும் இருக்கும்.  அப்போஸ்தலர் பவுலுக்கு, தமஸ்குவுக்கு போகும் வழியில், வானத்திலிருந்து சடுதியில் தோன்றிய ஒளியும், சப்தமாயும் அது இருந்தது. ஆனால் அநேகருக்கு இதைப்போல் அல்லாமல் குறைந்த அனுபவம் இருக்கும். ஆரம்ப காலங்களில் தினமும் குடும்ப ஜெபங்களில் நடத்தும் ஆவிக்குரிய  பெற்றோர் இருந்தனர். அவர்கள் பாவத்தின் விளைவுகளை (அளவுக்கு அதிகமாகவே) பிள்ளைகளுக்கு போதித்தனர். ஆனால் இன்றோ நிலைமை வேறு. மனிதர்கள் எப்பொழுதும் பாவத்தினாலே ஈர்க்கும் தன்மையுடையவர்கலாகவே பிறக்கின்றனர். அவர்கள் சுபாவம் பாவம் செய்வதற்கு விருப்பமுடையதாகவே இருக்கின்றது. ஆரம்ப காலங்களில் சுய சித்தத்தை செய்கின்றவர்களாகவும், கோப வெறியுள்ளவர்களாயும் அதிலே விருப்பமுடையவர்களாகவும் இருந்தனர். இவர்களின் மறுபிறப்பு தென்றலைப்போல இருக்கும். பாவத்தின் உழையான சேற்றிலே வாழ்ந்தவர்களாக இருக்கின்றவர்களின் மறுபிறப்பு, வெடித்துக் கிளம்பும் அனுபவமாக இருக்கும். 

ஈ) மறுபடியும் பிறத்தலின் வெளிப்படை (சாட்சி): மறுபடியும் பிறந்ததை யாராலும் மறைக்க முடியாது. ஒரு மனிதன் மறுபடியும் பிறந்திருந்தால், அவருடைய வாழ்க்கையில் மற்றும் குணத்தில் காணப்படும் மாற்றங்களே பிறருக்கு காட்டிக் கொடுத்துவிடும். கடவுளின் விளங்கிக்கொள்ள முடியாத செயல், மனித உள்ளத்திலே மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. அவர்களது அழகுணர்வு, பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், நிதானித்தல், அபிப்பிராயங்கள், தோற்றம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இவைகளில் மாற்றத்தைக் கொண்டுவருகின்றது. இதைப்போல வாழ்க்கையின் எண்ணற்ற பகுதிகளில் மாற்றத்தைக் கொண்டுவருகின்றது. 

1. மனுக்குலத்தோடு ஐக்கியம் கொள்ள புதிய அன்பு: எதிரிகளைக்கூட நேசிக்கும் உள்ளம். வேதாகமம் கூறுகின்றது, 1யோவான் 4:7ல், 
"பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்" 
இது பிள்ளைகளின் மீதுள்ள அம்மாவின் அன்பு, வாலிபர்கள் எதிர்பாலாரோடு வைக்கும் அன்பு இவைகளெல்லாம் மறுபடியும் பிறந்ததின் அடையாளம் அல்ல. அன்பைக் குறித்து விவரிக்க கிரேக்க மொழியில் விஷேச வார்த்தைகள் நிறைய உள்ளது. இது 1கொரிந்தியர்13ல், காணக்கிடக்கிறது. 
"அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது....."
இப்படிப்பட்ட அன்பினால் நிறைந்தவர்கள் கடவுளால் பிறந்தவர்கள், அதாவது மறுபடியும் பிறந்தவர்கள்.

நம்முடைய அன்பு எப்பொழுது பரிசோதிக்கப்படுமென்றால், பிறர் நம்மை தவறாக பயன்படுத்தும்போது. அதைத்தான் சிலுவையில் இயேசுகிறிஸ்து விவரித்துக் காட்டினார். அவர் இரத்தம் படிந்த கைகளையுடையவர்களை, (அவரை சிலுவையில் அடித்தவர்களை) சிலுவையிலிருந்து கீழ் நோக்கிப்பார்த்து, 
"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கின்றார்களே என்றார்....."
ஸ்தேவானும் தன்னைக் கல்லெரிந்தவர்களிடத்தில் இதே அன்பைக் காட்டினார். 
அப்போஸ்தலர் 7:60ல், 
"அவனோ முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்த பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்"
மறுபடியும் பிறந்தவர்களுக்கு நம்மைத் தரக்குறைவாக நடத்துபவர்களிடம் காட்டும் அன்பு ஒரு அடையாளம். 
2. ஆண்டவரின் கட்டளைகளுக்கு பக்தியுடன் கீழ்படிதல்: அப்போஸ்தலர் யோவான், 1யோவான் 5:3ல்,
"நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்பு கூறுவதாம்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்"
சில இடங்களில் கீழ்படிதல் என்பது ஒரு கெட்டவார்த்தை. ஒரு சுவிஷேசகர் புதிய ஏற்பாட்டிலுள்ள கட்டளைகளுக்கு கீழ்படிதலைக் குறித்து விளக்கமாக பேசினாரென்றால், அதற்கு அவர்கள் நாம் தேவனுடைய கிருபையினாலே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், நம்முடைய நற்செயல்களினால் அல்ல என்பார்கள். நற்செயல்களுக்கும் கீழ்ப்படிதலுக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நற்செயல்கள் என்பது கடவுளின் பொருட்டு, சரியான மனோபாவத்துடன், அன்புடன் செய்யப்படும் செயல்களே நற்செயல்களாகும். நற்செயல்கள் சேவையைப் பற்றிப் பேசுகின்றது. கீழ்படிதல் என்பது, பிறருடைய போதனைக்கு முழுமனதுடன் இணங்கி செயல்படுவது. கீழ்படிதல் இனங்குவதைப் பற்றி பேசுகின்றது. (கிரியையினாலே இரட்சிப்பு என்ற பிழையிலிருந்து தப்பிக்கொள்ள, சிலர் கீழ்படிதலில்லாத இரட்சிப்பு என்ற தவறான போதனையில் சிலர் விழுந்துவிடுகின்றனர்). வேதாகமம், கீழ்படிவதற்க்குள் நடத்தாத விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளுவதில்லை. எபிரெயர் 5:9ல், 
"தாம் பூரணரான பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதர்க்குக் காரணராகி,"
தாங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என நினைப்பவர்கள், புதிய ஏற்பாட்டின் முக்கிய போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையானால், அவர்கள் ஆண்டவரைப் பிரியப்படுத்துவது எப்படி? என்பதைக் குறித்து சிந்திக்கவேண்டும். 

புதிய விசுவாசிகளுக்கு, சீடர்கள் ஆண்டவருடைய கட்டளைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்க கற்றுக் கொடுக்கவேண்டும். மத்தேயு 7:21ல்,
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை"
மறுபடியும் பிறந்தவர்கள், ஆண்டவருடைய சித்தத்தை கேட்பவர்களாக மட்டுமல்ல, அதன்படி செய்ய விருப்பமுடையவர்களாயும்  இருப்பார்கள்.  
3. பாவத்திலிருப்பதற்க்கு முழு மனதோடே வெறுப்பு தெரிவித்தல்: நாம் 1யோவான் 3:9ல், 
"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்யமாட்டான்"
என வாசிக்கிறோம்.

கிரேக்க வார்த்தையில் அவன் தொடர்ச்சியாகவே பாவஞ்செய்யான் என வருகின்றது. மறுபடியும் பிறந்தவர்கள் வாழ்க்கையில், முறையான பழக்கமாக பாவம் இருக்காது. தேவனால் பிறந்தவர்கள் பாவத்திலே வாழமாட்டார்கள். அவர்கள், புதிய தன்மையை - தெய்வீகத் தன்மையை - பாவத்தை வெறுக்கும் தன்மையைப் பெற்றுக் கொண்டவர்கள். அவர்கள் பாவம் எந்த ரூபத்தில் வந்தாலும் பயனற்றதாய் கருதுவார்கள். பதிலாக வேத வசனத்தை அதிகமாய் நேசிப்பார்கள். ஜெபிப்பதற்கு அதிகமாய் விரும்புவார்கள், நாளுக்கு நாள் கிருபையுள்ளவர்களாக, முற்ப்போக்கு சிந்தனையுள்ளவர்களாக மென்மேலும் வளருவார்கள்! மேலும் மறுபடியும் பிறந்தவர்கள், ஆவிக்குரிய, ஆன்மீக வளர்ச்சியை நோக்கி செல்லுவார்கள்! மேலும் திடீரென தாக்கும் பாவத்தின் மீது புதிய வெற்றிகளையும் ஆதாயத்தையும் அடைவார்கள். 

பெரியாரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுத்த வேதாகமத்தை விமரிசனம் செய்வார்கள். அதில் ஒன்று படைப்பைப் பற்றியது. அதிலொருவர் இப்படியாக பேசிக்கொண்டிருந்தார், 'பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவர், களிமண்ணை எடுத்தாராம், பிசைந்து பொம்மையைப் செய்தாராம், தன் சுவாசத்தை  ஊதினாராம், பூமியிலே மனிதன் பிறந்து விட்டானாம்' என்று. அப்பொழுது மறுபடியும் பிறந்த ஒருவர் எழுந்து நின்று, 'இதற்க்கு நான் பதில் சொல்லுகிறேன், ஆண்டவர் எப்படி இந்த உலகத்தைப் படைத்தார் என்பதைப் பற்றி எனக்கு அதிகமாக தெரியாது. ஆனால் ஒன்று தெரியும், ஒருநாள் இரவு ஆண்டவர் இந்த நகரத்துக்கு இறங்கி வந்து, களி மண்ணைக்கூட அல்ல, சகதியை எடுத்து, அவருடைய சுவாசத்தை ஊதியதால், சூதாட்டத்தில், திருடுவதில், மதுக் குடிப்பதில், பாலியலில் மனசாட்சி இல்லாமல் ஈடுபட்ட ஒருவன் இன்று அன்பினால் சமாதானத்தினால் நிறைந்த வாழ்க்கை வாழுகின்றான், உங்களுக்கு முன் நிற்கின்ற நான்தான் அந்த மனிதன்!' என்றார். அதைப்போல எனது நண்பரே! நீங்கள் யாராயிருந்தாலும், அவருக்கு கடவுள் என்ன செய்தாரோ அதையே உங்களுக்கும் தருவார். அன்பினாலும் சமாதானத்தினாலும் நிறைப்பார்.

நம் எல்லோருக்குமே எதிர்காலம் என்பது நிச்சயமற்றது. நாட்கள் வேகமாக கடந்து போகின்றது. இந்த வாய்ப்பைப்போல இன்னொரு வாய்ப்பு வருமா? தெரியாது. அன்பு நண்பரே ஒரு நாள் நிச்சயமாக வருகின்றது! மறுபடியும் பிறக்காதவர்கள்,ப்பொழுதுமே பிறக்காதவர்களாகவே மாறிவிடுவர். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து எல்லோருக்கும் நித்திய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார், இதை ஏன் விசுவாசிக்கக் கூடாது? இயேசுவை ஏற்றுக் கொண்டு ஏன் கீழ்படியக்கூடாது? சீடத்துவத்தின் வழியிலே நடப்பதற்கு நம்மை அர்ப்பணிப்போம், தினமும் இயேசுவைப் பின்பற்றுவோம்! 

ஜெபிப்போமா?

அன்புள்ள எங்கள் பரம தகப்பனே! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம், மறுபடியும் பிறப்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கிருபை செய்ததற்க்காய் நன்றி செலுத்துகின்றோம். இந்த மறுபடியும் பிறத்தலின் அனுபவத்தை இன்று எங்களுக்குத் தரும்படியாய் ஜெபிக்கிறோம்! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே, ஆமென்.

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இந்த சத்தியத்தை உங்கள் நண்பர்களும் அறியச் செய்யுங்கள்! அதினால் நீங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்தவர்கலாவீர்கள்! நன்றி!

இந்த செய்தி You Must be Born Again என்ற தலைப்பில்  Bible Helps ிறுவனத்தார் வெளியிட்ட  Tract No:45 மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்து எழுதியவர்: சகோ.செல்வின் துரை