நண்பர்கள் யாவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகின்றேன்!
"தேசமே பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்" யோவேல் 2:21
நண்பர்கள் யாவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!! இப்பொழுது நமது தேசத்தின் நிலைமைகளை பார்த்தீர்களா? எவ்வளவு மோசமான செய்திகளைக் கேள்விப்படுகின்றோம். நீங்கள் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கின்றவர்கள் அல்லவா! வேதவசனம் கூறுவது நிறைவேறும் என விசுவாசியுங்கள்! நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், பைபிளில் உள்ள வாக்குத்தத்தம் நிறைவேறும் என விசுவாசித்து செயல்படுங்கள்!
கர்த்தரிடத்தில் இருந்து பெரிய காரியங்களை பெற்றுக் கொள்ளப்போகின்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலாவதாக,
உங்கள் தேவன் எப்படிப்பட்டவர்? என அறிந்து கொள்ள வேண்டும். நாம் ஆண்டவரிடத்தில் மனந்திரும்பும்போது அவர், இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாப படுகின்றவர். (வ.13) அவரிடத்தில் மனந்திரும்ப வேண்டும்.
ஊழியர் ஒருவர், வழக்கமாக தனது அதிகாலை வேத வசனத்தை வாசித்து, ஜெபித்து முடித்த வேளை, ஆண்டவர் தமது வசனத்தின் மூலமாக பேசினார். ".....கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (எபேசியர் 4:32) அன்று அவர் வாசித்த வேத பகுதி அது அல்ல. இந்த வசனம் வந்தவுடன் அவர் நான் எல்லோரையும் மன்னித்துத்தானே இருக்கிறேன். நான் யாரை மன்னிக்க வேண்டும்? என உள்ளத்திலே கேள்வி கேட்டார். பின்பு ஆண்டவரே என்னை நான் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு ஞாபகப்படுத்தும் என சொல்லிவிட்டு, கைப்பிரதிகளை எடுத்துக் கொண்டு, அந்த அதிகாலை வேளையிலே ஊழியத்துக்குப் புறப்பட்டார். வழக்கமாகவே அந்தநாள் சென்றது. அடுத்த நாள் அதிகாலையில் ஜெபிக்க ஆரம்பித்தபொழுது, மன்னிக்கப் படவேண்டிய நபர்கள், அவர்கள் நடந்த சூழ்நிலைகள் யாவற்றையும் ஆவியானவர் அவருக்கு முன்பாக கொண்டுவந்தார். இவருக்கு மிகுந்த ஆச்சரியம். இவர்களைப்பற்றி நான் இதுவரையில் நினைக்கவே இல்லையே. இயேசுவே நீர் என்னை மன்னித்ததைப்போல நான் இவர்களை மன்னிக்கின்றேன் எனக் கூறி ஜெபித்தார்.
எனக்குப் பிரியமானவர்களே! ஆண்டவர் உங்களுக்கு ஒரு வசனத்தை நினைவு படுத்துகின்றார் எனில், இது தெரிந்த வசனந்தானே, எனக்கு எல்லாமே தெரியும் என நீங்கள் எண்ணிவிடாமல், ஆண்டவர் கூற வந்ததற்கு உங்களை நீங்கள் ஒப்புக்கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். பொதுவாகவே நீங்கள் அலட்சியமாக நினைக்கின்றவைகளிலேதான் ஆவியானவராது வழிநடத்துதலும் இருக்கும். இதை நீங்கள் மறந்து போகாதிருங்கள்!! "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், ..... உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்" (சங்கீதம் 95:8) வேத வசனத்தை உங்களால் விசுவாசிக்க முடியவில்லையானால், உபவாசித்து ஜெபியுங்கள்! (சரீரத்தை ஒடுக்கும்போது ஆவி பலம் பெறும்) மேலும் நாம் ஆண்டவரிடத்தில் மனந்திரும்பும்போது, அவர் எளிதாக கோபப்பட மாட்டார். உங்களை தண்டிக்க விருப்பமற்றவர்.
ஆண்டவர் செய்யும் பெரிய காரியங்கள் என்னென்ன?
முதலாவது,
நீ திருப்தியாவாய். இதோ நான் உங்களை இனி புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல்.....(வ.19) புறஜாதிகள் உன்னை ஏன் நிந்திக்கின்றார்கள்? நீங்கள் செல்வச்செழிப்பில் குறையுள்ளவர்களாக இருப்பதால்தான். அதனால்தான் ஆண்டவர் உங்களுக்கு தானியத்தையும், திராட்சை ரசத்தையும் எண்ணையையும் கொடுத்தேன் எனக் கூறுகின்றார்.
இரண்டாவதாக,
எதிரிகள் துரத்தப்படுவார்கள், (வ.20) உங்களுக்கென்று மனிதர்கள் யாரும் எதிரிகள் கிடையாது. பிசாசுதான் எதிரி. நீங்கள் இதற்க்கு சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்ள வேண்டும். (எபேசியர் 6:11-18)
மூன்றாவதாக,
நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. உங்களுக்கு சகலத்தையும் நன்மைக்கேதுவாகச் செய்கிற (ரோமர் 8:28) இயேசுவைத் துதியுங்கள்! நன்றி சொல்லுங்கள்!! நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை. உங்கள் வருமானத்தைக் கெடுக்கும்படி ஆண்டவரே அனுப்பிய சகலமும் உங்களைவிட்டு எடுபடும் (வ.25) இரட்டிப்பான நன்மையைப் பெறுவீர்கள்! வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்! |