17 Feb 2019

YOUR FATHER IN HEAVEN CERTAINLY GIVE GOOD GIFTS TO YOU....

நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
உங்கள் ஜெபம் வல்லமையுள்ளதாக, ஆண்டவரிடம் இருந்து பதிலைப்பெற்றுக் கொள்ளுவதாக மாறும்! 
நமது சீயோன் பங்காளர் ஒருவர் அடிக்கடி இயேசு கூறியதை ஏன் வாக்குத்தத்தமாக போடக்கூடாது? எனக் கேட்பார். ஆண்டவர் இதைச் சொல்லுகின்றாரோ அதுதான் வாக்குத்தத்தமாகும்.  நானே ஆண்டவரே இதை இந்த மாத வாக்குத்தத்தமாக எடுத்துக்கொள்ளுகின்றேன் என ஜெபிப்பது இல்லை. நீண்ட மாதங்களுக்குப் பிறகு, இந்த வருட வாக்குத்தத்தமாக இயேசு தான் சொன்ன பொன்மொழியையே வாக்குத்தத்தமாக கொடுத்திருக்கின்றார். 
"ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:11)
பொல்லாதவர்களாகிய நீங்கள்...... பொல்லாதவன் என்றால் வேதாகம பொருளின்படி கொடியவன், கெடுமதியாளன் இப்படி பொருள் படும். இது சான்றோர் கூறும் வசைச்சொல்லாகும். வேதாகமத்தில் தென்னந் தெரிசலாக ஓரிரு இடங்களில் இந்த சொல் காணக்கிடக்கின்றது. இயேசு கூறிய தாலந்து உவமையில் பொல்லாத ஊழியக்காரனான இவனை புறம்பான இருளிலே தள்ளுங்கள் எனக் கூறுகின்றார். 
மத்தேயு 18:32ல், மன்னிக்காத ஊழியக்காரனைப் பார்த்து பொல்லாதவன் என்று அழைத்தார். (அதுவும் ஒரு உவமைதான்/எடுத்துக்காட்டுதான்) இங்கே ஆண்டவர் உங்களைப்பார்த்து பொல்லாதவர்கள் எனக்கூறுகின்றார். இயேசுவே கூறிவிட்டார், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுகின்றார்கள். நான் பொல்லாதவள்(ன்) என்று நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் பொல்லாத தன்மை, நீங்கள் சாட்சியாக இருக்கவேண்டிய இடத்தில், அதாவது புறமதஸ்தர் மத்தியில் வெளிப்படுகின்றது. இன்னும் சிலர் மிக மோசமாக நடந்து கொண்டு, இயேசுவே என்னை பொல்லாதவன்(ள்) என கூறி இருக்கிறார் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளுகின்றார்கள்! நற்செய்தியை புறஜாதியாரிடம் என்னைப்போல் அறிவித்தீர்களானால் அப்பொழுது தெரியும், முதலாவது கிறிஸ்தவர்களிடம் போய் சொல்லு என கூறுவதைக் கேட்கும்பொழுது. எவ்வளவு மோசமாக வேத வசனத்தை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ரீர்கள். இன்னும் சில ஊழியர்களே இதுதான் தாழ்மை என்கின்றனர். இதை எங்கே போய் சொல்ல, சரியான லூசுங்க.....
அதே இடத்தில் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா எனவும் கூறுகின்றார். பிறர் மத்தியில் இயேசுவுக்கு சாட்சியாக நடந்து கொண்ட பின், 'பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் நாமம் மகிமைப்படுகின்றது' என ஆண்டவருக்கு மகிமையை செலுத்தி இருக்கின்றீர்களா? 
நான் என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்வியின் அடிப்படையில் மட்டும் அநேகர் வேதத்தைப் படிக்கிண்றீர்கள். ஆண்டவர் என்ன செய்திருக்கின்றார் என்ற அடிப்படையிலும் வேதத்தைப் படிக்கவேண்டும். வேதத்தைப் படிக்கும்போது சில வசனங்கள் உங்கள் உள்ளத்தில் பயத்தை கொண்டு வருகின்றதா? அதிலேயே நின்று ஆண்டவரை விளக்கித் தரும்படி கேளுங்கள். அந்த பயத்தோடு நீங்கள் அடுத்த வசனத்துக்கு போய்விட்டர்களாகில் வார்த்தையாகிய இயேசுவோடு உங்கள் ஐக்கியம் என்னவாகும்? உங்கள் உள்ளம் வசனத்தோடு சமரசமாய் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தெரியாதவைகளை சந்திக்கும் போது சற்று பயம் வருவது இயற்கை. எனவே வசனத்தை விளங்கிக்கொண்டால் உள்ளத்திலே சந்தோசம், சமாதானம். 
உங்கள் பரம பிதா........
"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 
அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனால் பிறந்தவர்கள்" (யோவான் 1:12,13)
தேவ பிள்ளைகள் என்பது அதிகாரம், இந்த அதிகாரத்தை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என ஆண்டவர் எதிர்பார்க்கிறார். ஆண்டவர் தமது சீடர்களே இதை செய்திருக்கலாம், தன்னை எழுப்பினார்கள் என நினைத்த வேத பகுதியை பார்ப்போம். மத்தேயு 8:23-26ஐ பாருங்கள்.
"அவர் படவில் ஏறியபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின் சென்று ஏறினார்கள். அப்பொழுது, (அப்பொழுது என்ற வார்த்தை, அவரோ நித்திரையாய் இருந்தார் என்ற வரிக்கு முன்பு வந்திருக்க வேண்டும்)  படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று அவரோ நித்திரையாய் இருந்தார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர் அற்ப விசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அற்ப விசுவாசிகளே என ஆண்டவர் அழைத்ததற்கு காரணம், நீங்களே காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தி இருக்கலாம் என்ற தொனியில் கூறினார்.
ஆண்டவர் தமது உறவின் மூலமாகவே உங்களை ஆசீர்வதிக்க விரும்புகின்றார். என எழுதியதில் இருந்து, சிலர் நான் உபவாச ஜெபத்துக்கு எதிரி என நினைக்கின்றனர். (இதற்கு முந்தய பதிவுகளை பார்க்கவும்) இதை மறுக்கின்றாற்போல ஆண்டவர் இந்த வாக்கைத் தந்திருக்கின்றார். உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?  அதாவது நான் உபவாசித்து ஜெபித்தேன், ஆகையால் ஆண்டவர் என்னை ஆசீர்வதித்தார் என நீங்கள் சாட்சி கூற கேட்டிருப்பீர்கள். அல்லது நீங்களே கூறியிருப்பீர்கள். அதை கேட்கின்றவர்கள், நானும் 10 நாட்கள் உபவாசித்து ஜெபித்தால்தான் ஆண்டவர் கொடுப்பார் என நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது என்பதை இங்கு குறிப்பிடுகின்றேன்.  அது வேதத்துக்கு புறம்பானது. என்னுடைய பரம பிதா என்னை ஆசீர்வதித்திருக்கிறார், தகப்பன், மகன்(ள்) என்ற உறவின் மூலமாகவே ஆசீர்வதிக்கப்பட்டேன் என்பதே மிக உயரிய சாட்சி. உபவாசித்தும் பெற்றுக்கொள்ளலாம், இதை மறுக்கவில்லை. எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தரும் எனக் கேட்டவர்களும் உண்டு, எனது விசுவாசத்தை வர்த்திக்கச் செய்யும் என கேட்டவர்களும் உண்டு!
ஒரு மனிதனுக்கு இரு கைகளை போன்றது, ஜெபமும், வேத வாசிப்பும். இரு கைகளை வைத்து நேர்த்தியாக வேலை செய்ய முடியும். ஆண்டவரோடு உள்ள ஐக்கியத்தை வலுப்படுத்துவதே ஜெபமும் வேத வாசிப்பும்தான். தந்தையும் மகனுமாய் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் பொழுதே உறவு வலுப்படும். உங்கள் ஜெபம் அந்தரங்கத்தில் இருக்கட்டும்; பதில் வெளியரங்கமாய் வரட்டும். 
வேதாகமத்தில் இருவர் தங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை பெற்றுக்கொண்டதை தியானிப்போம். 
"இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஒய்வு நாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா என்றார்" (லூக்கா 13:16) 
இந்த கூனிக்கு அற்புதம் செய்த கர்த்தர் அவளது ஜெபத்தையோ உபவாசத்தையோ பார்க்காமல் அவளை ஆபிரகாமின் குமாரத்தியாக பார்த்தார். அது ஒன்றுதான் ஆண்டவர் அவளிடம் பார்த்த ஒரே தகுதி. அற்புதம் நிகழ்ந்தது. 
இன்னொரு சம்பவம், லூக்கா 19:9ல், 
"இயேசு அவனை நோக்கி இன்று இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாய் இருக்கிறானே"
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் ஒன்று இருக்கின்றது. அது, இவன் மனந்திரும்பி தனது பாவத்துக்கு பரிகாரம் அறிக்கை செய்த பொழுதே ஆண்டவரால் இவன் வீடு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டது. இவன் கிரியை செய்தபின் அல்ல, மனந்திரும்பியவுடனே ஆசீர்வதிக்கப்பட்டான். அதை போலவே நீங்கள் அந்த இளையகுமாரன் மனந்திரும்பியத்தைப் போல மனந்திரும்பும்போதே ஆசீர்வதிக்கப் படுகிண்றீர்கள். உங்களது கிரியையைப் பார்த்து ஆசீர்வதிக்கவில்லை, (உபவாசம், மற்றும் எந்த கிரியையும் அல்ல) உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவை வைத்து ஆசீர்வதிக்கின்றார். ஆபிரகாமுக்கு உண்டான அத்தனை ஆசீர்வாதங்களும் உங்கள் அனைவருக்கும் உரியது. கலாத்தியர் 3:6-9ல், 
 "அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 
ஆகையால் விசுவாசமார்க்கத்தார் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னதாக கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. 
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகின்றார்கள்" 
வசனம் 14ல், 
"ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும் படியாகவும், ........."
ஆபிரகாமோடுகூட நீங்களெல்லாரும் ஆண்டவருடைய ஆசீராதங்களுக்கு சுதந்திரவாளிகளாய் இருக்கிண்றீர்கள். எல்லாமே பணம் அல்ல, மனம். ஆண்டவருடைய பார்வையில் உங்களை நீங்களே பாருங்கள், ஆசீர்வதிக்கப்படுவீர்கள். கடைசியாக,
தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம் என்று முடிக்காமல், நிச்சயமல்லவா? என்ற கேள்வியோடு முடித்திருக்கின்றார். இதன் அர்த்தம் என்ன? நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம் என்று உங்களிடம் பலமாக, உறுதியுடன் கூறுகின்றார். இதை நீங்கள் உங்கள் மனதில் சொல்லிப்பாருங்கள். இப்பொழுது தெரியும் உறுதியாக கூறுவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். இதைப்படிக்கின்ற உங்களது ஜெபம், வல்லமையுள்ளதாக, அற்புதங்களை அதிசயங்களைக் கொண்டுவருவதாக இருக்கும். 
மாறாத வசனத்தின் மீது உங்கள் விசுவாசத்தை வைக்கும்போது, உங்கள் விசுவாசம் அசைக்கப்படுவதில்லை. மனிதர்கள் மீது விசுவாசத்தை வைக்கும்போது நீங்கள் ஏமாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. பொதுவாக விசுவாசம் என்பது இயேசு, செய்து முடித்தவைகளில் வைப்பது, நம்பிக்கை என்பது எதிர்காலத்தின் மீது வைப்பது. உங்கள் ஜெபத்தைக் கேட்டு இனிமேல் ஆண்டவர் செய்வார் என்பது நம்பிக்கை. கடைசியாக,
இந்த வசனம் ஆங்கிலத்தில் எப்படி பொருள் கொள்ளுகின்றது என்று பார்த்துவிடுவோம்.💃👍
“And if you hardhearted, sinful men know how to give good gifts to your children, won’t your Father in heaven even more certainly give good gifts to those who ask him for them” Matthew 7:11
இதன் அர்த்தம் என்னவெனில், இதன் முந்தைய வசனங்களை படித்தீர்களானால், இயேசு, ஜெபத்துக்கு ஆண்டவர் பதிலளிப்பார் என்றும், நீங்கள் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை அப்படியே கொடுப்பார் எனக் கூறி, (இப்பொழுது ஆங்கில வசனத்தின் மொழிபெயர்ப்பு அல்ல, விளக்கம்...) ஒருவேளை நான் கூறுவதை ஏற்க மறுக்கின்ற கடின மனத்துடையவர்களாய் நீங்கள் இருந்தால், ஒரு பாவம் செய்கிற மனுஷன் (ஒரு அவிசுவாசி) தனது பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை எப்படி கொடுக்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றானே, பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பரம பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகின்ற உங்களுக்கு நன்மையான ஈவுகளை கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?
ஜெபிப்போம்! ஜெயம் பெறுவோம்!!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உங்களிடத்தில் வருகின்றோம், இந்த உமது நாமத்தின் மேல் விசுவாசம் என்னை மகனாக / மகளாக தெரிந்து கொண்டிருப்பதற்காய் நன்றி! இந்த அருமையான உறவுக்காய் நன்றி!! எவ்வளவு மகிமையான உறவை எங்களோடு நீர் ஏற்படுத்தி இருக்கிறீர்! உம்மை அறியாதிருந்த நிலையிலும் இயேசுவை எங்களுக்காக சிலுவையில் பலியாக்கினீரே நன்றி!!! எங்களிடம் பொறுமையாய் இருந்ததற்காய் நன்றி!! உற்சாக மனத்தோடுகூட உமது வேலைகளை செய்யவும், சாட்சியின் மூலமாக இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்த கிருபை செய்யும். வியாதிப்பட்டவர்களுக்காக ஜெபிக்கின்றேன்! இப்பொழுதே உமது காயங்கள் சுகமாக்குவதற்காய் நன்றி! குறைவுகளை நிறைவாக்கும். பலமும் அல்ல, பராக்கிரமம் அல்ல, உம்முடைய ஆவியினாலே ஆவதற்காய் நன்றி! எங்கள் தேசத்திலே எழுப்புதலைக் கட்டளையிடுவதற்காய் நன்றி! வயல் நிலங்கள் அறுப்புக்கு விளைந்திருப்பதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் கர்த்தாவே. ஆமென், ஆமென்.