9 Feb 2020

MESSAGE FROM CHRISTMAS CELEBRATIONS

கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
நமது கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அளித்த தேவசெய்தியில் இருந்து ஒரு சில துளிகள்.... 
இது கிறிஸ்துமஸ் கொண்டாடி, நாட்கள் ஆகிவிட்டதே என்று இல்லாமல், என்றைக்கும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவையான செய்தியாய் இருப்பதால், சற்று கவனமாக வாசியுங்கள்! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! முதலாவதாக,
இயேசுவிடம் சென்று, ஐயா, நீங்கள் எதற்காக இந்த பூமிக்கு வந்தீர்கள் எனக் கேட்டால், அவர் என்ன சொல்லுவார்? 
"நீதிமான்களை அல்ல; பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்" (மத். 9:13; மாற்கு 2:17) 
என்பார் அல்லவா! கிறிஸ்தவர்களாகிய நீங்கள், நான் மட்டும் பரலோகத்துக்கு சொல்லுவேன், வேறு யாரும் என்னோடு வரவேண்டாம் எனச் சொல்லுவீர்கள் எனில், நீங்கள் பரிதபிக்கப்படத் தக்க இடத்தில் இருக்கின்றீர்கள்! பிறருக்கு இயேசுவை அறிவியுங்கள்! அறிவிக்கின்ற ஊழியங்களுக்கு தாராளமாக  உதவி செய்யுங்கள்! இதன் பொருள், நீங்கள் இயேசுவோடு இணைகிண்றீர்கள். இரண்டாவதாக, 
"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும் நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே" (2கொரி.8:9)
உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி, இயேசு தரித்திரராகவே இந்த உலகத்தில் பிறந்தார்; எட்டாம் நாளிலே, நியாயப் பிரமானத்தின்படி தேவாலயத்துக்கு சென்று பலி செலுத்த ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கக் கூட, அவர்களிடம் பணம் இல்லாமல் புறாக்களை பலியிட்டார்கள். அவர் அப்படிப்பட்ட ஏழைக் கோலமெடுக்கக் காரணம், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்குத்தான். உங்களை செல்வ செழிப்புள்ளவர்களாக்கும்படிக்கு, இயேசு தரித்திரரானார்.  
நாம் எப்படிப்பட்ட ஐசுவரியவான்களாகக் கூடாது எனத் தேவன் விரும்புகிறார் என்பதையும் வேதத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளுகின்றோம். முதலாவது,
லூக்கா 12:15-21 வரை வாசித்துப் பாருங்கள்! இயேசு கூறிய ஒரு உவமைக்கதை, இந்த ஐசுவரியவானின் நிலம் நன்கு விளைந்தது. சுக போகமாக வாழுவேன் என்று உள்ளத்தில் நினைத்தான். ஆண்டவர் முட்டாளெனத் திட்டினார். காரணம், தன்னைப்பற்றியே இவன் நினைத்ததுதான். தேவையில் இருந்த சொந்த காரர்கள், ஊர்க்காரர்கள் இருந்தார்கள். உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலைதான் இவனுக்கு இல்லை.  ஐசுவரியத்தில் பிரச்சனை இல்லை, சுயநலம்தான் பிரச்சனை. பிறனுக்கானவைகளையும் நோக்க மனமில்லை. இரண்டாவதாக,
லூக்கா 16:19ல் இருந்து கடைசிவரை வாசித்துப்பாருங்கள். இங்கே லாசரு, ஐசுவரியாவான் உவமைக் கதை. ஏழைகளைப் பற்றி அக்கறை இல்லாத வாழ்க்கை. சம்பிரம்பமாய் சுகபோகமாய் வாழ்ந்து வந்தான். இறந்த பின் என்ன நடந்தது? நிலைமை தலைகீழாக மாறியது. லாசரு பணக்காரன் ஆனான். பணக்காரன் ஏழையானான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள், ஆவிக்குரிய தரித்திரத்தில் இருக்கின்றார்கள். இவர்களைக் குறித்த கரிசனை இல்லையெனில், இந்த லாசரு, பணக்காரன் உவமையின்படி பணக்காரனுக்கு நடந்தது, உங்களுக்கும் நடக்கும் என்பதை மறந்து போகாதிருங்கள்! இது எச்சரிக்கை! மூன்றாவதாக,
மாற்கு 10:17-25வரை வாசித்துப் பாருங்கள்! இவன் மிகுந்த பணம் படைத்தவனாய் இருந்தபடியால், மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிண்றீர்கள்? இவன் கொடுத்துப் பழக்கமில்லாதவன். எனவேதான் துக்கத்தோடே போய்விட்டான். இன்று ஆண்டவர் உங்களை உன் சொத்துக்களை விற்று ஊழியத்துக்கு கொடு என்று கூறினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? 99.9% பேர் துக்கத்தோடே போய்விடுவீர்கள். அல்லது இது வேறு ஒரு இயேசு எனக் கூறிவிடுவீர்கள்! 0.1% பேரைப் பற்றி உங்களுக்குத் சொல்லுகின்றேன். இவர்கள் முதலாவது பத்தில் ஒன்றைக் கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள். அதிலே உண்மையாய் இருந்தவர்கள்! 
உங்கள் வருமானம் மிகக் குறைவாக இருக்கும் போதே நீங்கள் குறைந்த பட்சம் ஆண்டவருக்கு (ஊழியத்துக்கு) கொடுங்கள்! உதாரணத்துக்கு உங்களுக்கு, (இந்தியாவில் உள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு) வாரத்தில் இருநாட்கள்தான் வேலை கிடைக்கின்றது என வைத்துக்கொள்ளுங்கள். ஆக வார வருமானம் ரூ. 1000 இதில் பத்தில் ஒன்றை ஆண்டவருக்கு கொடுங்கள்! இதைப் பார்க்கும் இயேசு கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கிறான்(ள்) என அறிந்து, ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார் இப்பொழுது ஆறு நாட்களும் வேலை வருமானம் ரூ மூவாயிரம் ஆண்டவருக்கு நன்றியுள்ள இருதயத்தோடு கொடுக்க ஆரம்பிக்கின்றீர்கள்  இப்படி வருமானம் உயர உயர உங்கள் வருமானத்த்தில் பத்தில் ஒன்றை கொடுக்கிண்றீர்கள். இது உங்களுக்கு பெரிய விடயமாகத் தெரியாது. 
ஒரு சபையில் பத்தில் ஒன்றை ஆண்டவருக்கு கொடுப்பது அவசியம் எனப் பேசிவிட்டு, வெளியே வந்தேன். அந்த ஆராதனைக்கு வந்த ஒரு சகோதரன், என்னோடு பேசிக்கொண்டே வந்தார். நீங்கள் பத்தில் ஒன்றை கொடுப்பது பற்றிப் பேசினீர்கள். ஆண்டவர், ஒருவனுக்கு இரண்டு வஸ்திரம் இருந்தால், தேவையில் இருக்கிறவனுக்கு ஒன்றை கொடுத்துவிடு எனக் கூறி 50%க்கு போய்விட்டார் என்றார். அப்படி கொடுக்க ஆண்டவர் நமக்குக் கிருபை தருவாராக. இதிலிருந்து நீங்கள் அறிவது ஐசுவரியத்தில் குற்றமில்லை, பண ஆசை குற்றமுடையதாய் இருக்கின்றது. மூன்றாவதாக, 

"ஆதலால் பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும் அப்படியானார்"இதே வசனம் ஆங்கில வேதாகமத்தில், எப்படி வருகின்றது எனப் பார்ப்போம். 
"Since we, God's children, are human beings-made of flesh and blood-he became flesh and blood too by being born in human form; for only as a human being could he die and in dying break the power of the devil who had the power of death"(Hebrews 2:14) (The living Bible illustrated)
 ஆங்கிலத்தில் இந்த வசனம் மிகச் சரியாக வந்திருக்கின்றது. இந்த வசனத்தின் எனது மொழிபெயர்ப்பு இது: 'நாம் கடவுளுடைய பிள்ளைகளாக, மனிதர்களாக இரத்தமும் சதையுமாய் இருப்பதினால், அவரும் இரத்தமும் சதையும் உடைய மனிதனாகப் பிறந்தார்; மரணத்திற்கு அதிகாரியான பிசாசின் வல்லமையை தமது மரணத்தினாலே உடைத்தெறியும்படிக்கு அப்படியானார்' இந்த வசனத்தின்படி, பிசாசு உயிரோடுதான் இருக்கின்றான். ஆனால் கிறிஸ்தவர்கள் வாழ்க்கையிலே வல்லமை கொள்ளாதபடிக்கு அவனுடைய வல்லமையை இயேசு கிறிஸ்து, நிர்மூலமாக்கிவிட்டார். கிறிஸ்தவர்கள் பிசாசுக்கு இணங்கும்போது, அவனுடைய வழிகாட்டுதல் கிரியை செய்து, உங்களை இன்னல்களுக்கு உள்ளாக்கி விடுகிறது. சாட்சியைக் கெடுத்துவிடுகிறது. 
இன்றைக்கு சபைகளில், பிசாசு என்னை இப்படி படுத்தினான், அப்படி படுத்தினான், ஆண்டவர்தான் என்னை விடுவித்தார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! உண்மை என்னவெனில், பிசாசு எனது வாழ்க்கையில் கிரியை செய்யவே முடியாது, ஏனெனில் இயேசு எனக்காக இந்த உலகத்தில் பிறந்து மனிதனானார். பிசாசின் வல்லமையை என் வாழ்க்கையிலே தமது மரணத்தினால் முறித்திருக்கிறார். நான் ஆசீர்வதிக்கப்படுகின்றேன்! அனேக சிக்கல்கள் என்னைவிட்டு நீங்குகின்றது. 
இயேசு கிறிஸ்து மனிதனாய் பிறந்ததின் பலனை, என் வாழ்நாளெல்லாம் நான் அனுபவிப்பேன். மேலே உள்ள 3 விடயங்களிலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வாழ்த்துகின்றேன்..... உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளைக் கடந்து செல்லும்போது, பரிசுத்த ஆவியானவர் இந்தச் சத்தியங்களை உங்கள் நினைவுக்குக் கொண்டுவருவாராக.... 
வாழ்த்துக்களுடன் உங்கள் சகோதரன்....