கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் யாவருக்கும் எமது அன்பின் வாழ்த்துக்கள்!!
"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" (எபேசியர் 1:3)
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் அனைத்துமே கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றது. வேத வாக்குத்தத்தத்தைக் கூறும்பொழுது, ஆமா, இது உனக்கு மட்டுந்தானா கொடுக்கப்பட்டிருக்கிறது! எனக்கும், பைபிள் படிக்கிற எல்லோருக்குமேதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன இருக்கிறது? என ஏளனமாகக் கேட்கும் நல்ல கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்! நீங்கள் மனம் சோர்ந்து போகாமல் இருக்க ஆண்டவர் ஒரு யோசனையை இங்கே தருகின்றார். அதுதான் நீங்கள் எடுக்கும் தீர்மானம் உங்களைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது!!
ஒரே வீட்டில் பிறந்த இரு சகோதரிகள் இருந்தனர். அவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிண்றீர்கள்? எனக் கேட்கப்பட்டது. ஒருத்தி, நான் டாக்டராக விரும்புகின்றேன் என்றாள். அடுத்தவளோ நான் ஐ.ஏ. எஸ். ஆக விரும்புகின்றேன் என்றாள். ஒரே குடும்பத்தில் கூட ஒரே விருப்பமுடையவர்களை பார்ப்பது அரிது. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, அவர்கள் படிக்கின்ற பாடங்களும் வேறுபடுகின்றது. இதைப்போலத்தான் தீர்மானங்களும். பொதுவாக, ஆண்டவரை அறியாதவர்கள், மாம்சத்தின்படி தீர்மானிப்பார்கள்! நாமோ ஆவியின்படி தீர்மானம் எடுக்க வேண்டும்.
பல வருடங்களுக்கு முன் நாங்கள் குடியிருந்த ஒரு அடுக்ககத்தில், ஒரு வக்கீல் தனது அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையாகிய மனைவியுடனும், இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தார். தினந்தோறும் தனது வேலை முடிந்து வரும்போது, நன்றாகக் குடித்துவிட்டு, தட்டு தடுமாறி, ரோட்டை அளந்துகொண்டே வருவார். இவரைப் பார்க்கும்பொழுது, நன்கு படித்தவர் ஏன் இப்படி இருக்கின்றார்? என மனம் வருந்தினேன். மட்டுமல்ல அவர் மனந்திரும்ப வேண்டும் என உபவாசித்து ஜெபித்துவந்தேன். அவரிடம் குடிக்காதீர்கள் எனச் சொல்லவே இல்லை. ஆனால் உபவாச ஜெபந்தான் அவருக்காக. ஒருநாள், நான் கேட்காமலேயே அவர் என்னிடம் வந்து, நான் இப்பொழுதெல்லாம் குடிப்பதில்லையெனக் கூறினார். நான், நீங்கள் ஒரு பைபிள் வாங்கி படியுங்கள் என்றேன். நாட்கள் கடந்தது, ஒருவருடம் இருக்கும். ஒருநாள் அவருடைய தந்தை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தவர் இறந்துவிட்டார். அவருடைய பூதவுடலை எங்கள் அடுக்கத்திலிருந்து 20 வீடுகள் தள்ளி அவர் வசித்த வீட்டிற்கு கொண்டுவந்தனர். நாங்கள் துட்டி கேட்கப் போகலாம் என்று, அடுக்ககத்தில் வாழ்ந்து வந்த பிற குடும்பத்தினருடன் சென்றோம். கணவன் இறந்து விட்டாரெனக் கேள்விப்பட்ட அவருடைய மனைவியும் இறந்து விட்டார். துக்கம் அதிகமாகி, உறவினர்களுடன் சேர்ந்து இவரும் தண்ணீரைப் போட்டுவிட்டு தலைகீழாக நின்றுகொண்டிருந்தார். இன்றைய கிறிஸ்தவ நண்பர்களும் கூட மாம்சத்தின்படி முடிவெடுத்துவிட்டு, பின்பு பின் வாங்கிப் போவதை பார்க்கின்றோம். இது பழைய ஏற்பாட்டு தீர்மானம்.
இன்று இந்த வாக்குத்தத்தத்தின்படி தீர்மானம் எடுக்கவிருக்கின்றீர்கள். ஏற்கனவே பிதாவாகிய தேவன், உங்களை ஆசீர்வதித்து இருக்கின்றார். அதாவது நீங்கள் சகல ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிண்றீர்கள்! இப்படி ஆசீர்வதிக்கப்பட்டுள்ள அனைவரும், உங்களுடைய தனிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள நீங்கள் எடுக்கும்
தீர்மானங்கள் உங்களுக்கு உதவி செய்கின்றது. ஒருவர் கடை வியாபாரம் செய்வார், ஒருவர் ஆசீரியராகப் பணிபுரிவார் இருவரும் ஒரேவிதமான தீர்மானங்களை எடுக்க முடியாது.
கிறிஸ்தவர்கள், தீர்மானம் எடுப்பது என்பது, வேதவசனத்தின்படி எடுப்பது, மாம்சத்தில் எடுப்பது அல்ல, ஆவியில் எடுப்பது, கட்டாயத்தின் பேரில் அல்ல, விருப்பத்தின் பேரில் எடுப்பது, கிறிஸ்தவ ஊழியர்கள், தங்கள் அழைப்பின்மீது எடுப்பது. பிலிப்பியர் 2:13ன்படி,
".....தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்"
முதலாவது, கர்த்தரால் உங்கள் உள்ளத்திலே விருப்பம் வைக்கப்படுகின்றது, அதைத் தொடர்ந்து, விருப்பம் செயலாகின்றது. எனவே நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் உங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்கட்டும். உங்கள் உள்ளத்திலே என்னென்ன வாங்கவேண்டும் என விரும்பினீர்களோ அதையெல்லாம் இந்த வாரத்திலே வாங்க ஆண்டவர் உதவி செய்வார். வீடு கட்டுவது, திருமண காரியங்கள், வெளிநாடுகளுக்கு செல்லுவது, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது என எதையெல்லாம் உங்கள் உள்ளத்திலே விருப்பத்தை ஆண்டவர் வைத்திருக்கின்றாரோ எல்லாவறையும் நிறைவேற்ற இப்பொழுதே அடித்தளமிடப்படுகின்றது. இரண்டாவதாக,
கொடுங்கள்: இதுவரை ஊழியத்திலே விதைக்காதவர்கள், தாராளமாக விதையுங்கள். கொடுக்கின்ற அனைத்தையும் இருமடங்காக்குங்கள்! ஆண்டவர் உங்களை ஏற்கனவே சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார் என்ற இந்த வாக்குத்தத்தின்மீது செயல்படுங்கள்! கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாய் இருக்கின்றது. மூன்றாவதாக,
ஜெபமும், வேதவாசிப்பும்: நான் தினமும் 10 அதிகாரங்களைப் படிக்க வேண்டும் என்று தீர்மானிக்காமல், ஆண்டவர் என்னோடு வசனத்தின் மூலமாகப் பேசும் வேதாகமத்தைப் படிப்பேன் என்று தீர்மானியுங்கள். முதல் நாள், 20 அதிகாரங்கள் படித்தபின்பு பேசினார், அடுத்த நாள், இரண்டாம் வசனத்திலேயே பேசினார். பேசியவசனத்தை தியானியுங்கள்! ஆண்டவர் பேசிய வசனத்தோடு, ரோமர் 5:9ஐ இணைத்துப் பாருங்கள்!
"இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க,........"
நீங்கள் நீதிமான் என்ற அடிப்படையில் அனுதினமும் உங்களுடன் ஆண்டவர் பேசிய வசனத்தைத் தியானித்தால், நீங்கள் எங்கேயோ போய்விடுவீர்கள்! தொடர்ந்து தினந்தோறும் பயிற்சி செய்யுங்கள்! உங்கள் வாழ்வு மட்டுமல்ல, உங்கள் பேரப்பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகள் என உங்கள் வம்சமே ஆசீர்வதிக்கப்படும். ஓரிரு நாள் விட்டுவிட்டீர்கள் என்றால், சோர்ந்து போக வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள்! ஆண்டவர் உங்கள் பிரயாசங்களை ஆசீர்வதிப்பார். இறுதியாக,
உங்கள் உள்ளான மனிதனைப் போஷிப்பதற்கு பணம் செலவிடுங்கள்! உள்ளான மனிதன் பலவீனமாய் இருந்தால், எளிதாக நீங்கள் அடிமைப்பட்டுவிட வாய்ப்புகள் இருக்கின்றன. பைபிளோடு கூட அநேக ஆவிக்குரிய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். அது உங்கள் உள்ளான மனிதனை பலமுள்ளவனாக்கும். வாழ்த்துக்களுடன்,
உங்கள் சகோதரன்,
செல்வின் துரை. செல்பேசி எண்: 9840836690
உங்கள் நண்பர்களுக்கு இந்தத் தளத்தை அறிமுகம் செய்யுங்கள்! நன்றி, வணக்கம்!