அன்பான, அறிவார்ந்த தமிழ்நாடு, புதுச்சேரி வாக்காளப் பெருமக்களே!
6ந் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக இந்த இடத்தில் உங்களைச் சந்திக்கின்றேன்.
இந்திய தேசத்துக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனப் பிரிட்டன் முடிவெடுத்தபொழுது, சர். வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார்,
இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காதீர்கள்! பின்னாட்களில் சுதந்திரம் என்றால் என்ன என்பதை அறியாதவர்களின் இந்தியாவின் ஜனநாயகம் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. அது சர்வாதிகாரத்துக்கு வழிகோலும்
இப்பொழுதிருக்கின்ற இந்தியாவின் நிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள்! விலைவாசி விண்ணைத் தொடுகின்றது!! அதைக் குறித்து யாரும் கவலைப் பட்டதாகக்கூட தெரியவில்லை. மக்களை ஆடு மாடுகளைப் போல நடத்துகின்ற ஆளும் கட்சி. எதிர்க்கட்சிகூட இதில் ஏதாவது செய்கிறதா என்றால் அதுவும் இல்லை. முன்பெல்லாம் விலைவாசி சிறிது ஏறினால்கூட நாட்டில் ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெறும். அரசாங்கமும் இறங்கிவந்து, சிறிது இறங்கிவந்து சிறிது வரியைக் குறைத்து, மக்களைத் திருப்திபடுத்த முயற்சிக்கும். இப்பொழுதோ, இவை எதுவும் நிகழவில்லை.
காரணம் மிகச் சிறியதுதான். முன்பு மக்களுக்கு ஆட்சியின்மீது சலிப்பு வந்தால், ஆளும் கட்சியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. இப்பொழுதோ பணத்தைக் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாமென நினைத்து, ஆளும் பொழுதே எப்படியெல்லாம் ஊழல் பண்ணமுடியுமென ஆராய்ச்சி செய்து, அரசாங்க வேலை எல்லாவற்றிலும் ஊழல் செய்கின்றனர். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் ஒரு மாபெரும் வியாபாரமாகிவிட்டது.
இப்பொழுதுள்ள நிலையைப் பார்த்து, நீங்கள் சலிப்போ சோர்வோ அடையத்தேவையில்லை. உங்கள் கைகளில் ஒரு வலிமையான ஆயுதம் இருக்கின்றது. அதுதான் ஓட்டு! எவன் வந்தாலும் நடப்பதுதான் நடக்கும் என நினைக்காமல், வீட்டில் இருந்துவிடாமல் உங்கள் ஓட்டைப் பதிவு செய்யுங்கள். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கூட, பல ஆயிரங்களைச் செலவு செய்து, தமிழ்நாட்டுக்கு வந்து, வாக்குப்பதிவு தினத்தன்று ஓட்டளிக்கின்றர். ஓட்டு அவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை அவர்கள் வெளிநாட்டில் போய்தான் கற்றுக் கொள்ளுகின்றார்கள். உள்ளூரிலிருந்து கொண்டு, வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்! வாக்களியுங்கள்!!
இதை நீங்கள் செய்வீர்கள் என்ற முழு நிச்சயத்தோடு நாம் அடுத்த பகுதிக்குள் செல்லுவோம்! வாருங்கள்!! நீங்கள் ஏற்கனவே ஓட்டளிக்க முடிவு செய்து, எந்தக்கட்சிக்கு அளிக்கலாமென முடிவு செய்திருந்தால் மிகவும் நல்லது, அப்படியே செய்யுங்கள்..... இந்தக் குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் எனக் கூற நாங்கள் வரவில்லை.
ஓட்டளிக்க முடிவு செய்து யாருக்கு வாக்களிக்கலாம் என்ற கேள்விகளோடு நீங்கள் இருப்பீர்கள் எனில், இந்தப் பகுதி உங்களுக்கானதுதான். முதலாவது,
நான் யாருக்கு வாக்களிக்கக் கூடாது?
1. ஜாதி, மதத்தைக் கூறிக் கொண்டு வருகின்ற வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது.
2. உங்கள் வீட்டில் எத்தனை வாக்குகள் இருக்கின்றது? ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் தருகின்றேன் எனக் கூறி வருபவர்க்கு ஓட்டளிக்கக் கூடாது. இப்படி வருபவர்கள், தங்கள் பொறுப்புகளில் உண்மையில்லாதவர்களாய் இருப்பார்கள். இப்படிப்பட்ட வேட்பாளர்களுக்குத் தேர்தல் என்பது சூதாட்டம். சிறிய மீனைப்போட்டு, பெரிய மீனைப் பிடிக்க நினைக்கும் வியாபாரிகள்.
3. உங்கள் பகுதியைப் பற்றி, தெருவைப் பற்றி, கிராமத்தைப் பற்றி அதன் பிரச்சனைகளைப் பற்றித் தெரியாதவருக்கு நீங்கள் ஓட்டளிக்கக் கூடாது.
4. சட்டமன்றத்தில் உள்ளூர் பிரச்சனைகளைப் பற்றிப் பேசமாட்டாரென நீங்கள் நினைத்தால் ஓட்டளிக்க வேண்டாம்.
5. ஒருவேளை கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்திருப்பார் என்றால், அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த 5 வருடங்களில் எவ்வாறு இயங்கியது? என்பதைக் கவனியுங்கள். திருப்தி இல்லையெனில், மக்களுக்கு எந்த உயர்வும், ஆதரவும் இருக்காது.
6. கட்சிக்கு என ஓட்டளிக்க வேண்டாம். இப்போது,
நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
1. உங்களுக்கு நன்கு பழக்கமானவராக, அறிமுகமானவராக இருந்தால், வாக்களிக்கலாம். அவர் சரியில்லையெனில், சரி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.
2. தேர்தல் பரப்புரையைக் கேட்கும்போதே இவர் உண்மையானவரா? எனத் தெரிந்துவிடும். தாராளமாக வாக்களிக்கலாம்.
3. ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது, ஏரியாவுக்கு, கிராமத்துக்கு வந்து நேரடியாக மக்களை, பஞ்சாயத்துத் தலைவரை, உறுப்பினர்களைச் சந்திப்பாரெனில் தாராளமாக வாக்களிக்கலாம்.
4. பிரச்சனைகளைத் திறமையாகக் கையாளுபவர்களுக்கு தாராளமாக வாக்களிக்கலாம்.
5. எப்பொழுதுமே சேவை மனப்பான்மையுடன் இருப்பவருக்கு வாக்களியுங்கள்.
மேலே உள்ளது அனைத்தும் வேட்பாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது வாக்காளரை மையமாக வைத்து, அதாவது உங்களை மையமாக வைத்து,
1. தேர்தல் என்றாலே நீங்கள், உங்களுக்கு உதவி செய்கிற, உங்களுக்காகப் பேசுகின்றவர்களை, சேவை செய்கின்வர்களை, அரசாங்க திட்டங்களை உங்கள் பகுதிக்குக் கொண்டு வருகின்றவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கின்றீர்கள்.
2. பணக்காரர் என்ற அடிப்படையில் நீங்கள் வேட்பாளர்களைப் பார்க்க வேண்டாம்.
3. எனது ஜாதி, எனது மதம் என்ற அடிப்படையில் நீங்கள் வேட்பாளர்களைப் பார்க்க வேண்டாம்.
4. தேர்தல் என்றால் எனக்கு என்ற அடிப்படையில் பார்க்காமல், நமக்கு என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும்.
5. எங்கள் பகுதி, எங்கள் ஊர் மக்களின் வாழ்வாதாரம் உயருமா? எனப் பாருங்கள்.
6. உங்கள் பகுதி, ஊரின் நீண்டகால தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்துத் தேர்தலைப் பாருங்கள்.
மேலே உள்ளவைகளின் அடிப்படையில் நீங்கள் இந்தத் தேர்தலை அனுகினால், நிச்சயமாகவே உயர்வு அடைவீர்கள்.
7. நீங்கள் ஜெயிப்பவருக்குத்தான் எனது வாக்கு என்ற அடிப்படையில் வாக்களிக்காதிருங்கள். இப்படிப்பட்டவர்களைப் பிடிப்பதற்காகவே அரசியல் கட்சிகள் தங்களுக்கு மக்களின் செல்வாக்கு இருக்கிறது என்ற மனநிலையை வாக்காளர்களின் உள்ளத்திலே பதிப்பதற்காக ஊடகங்களின் துணையோடு, தவறான காட்சிகளை வெளியிடுகின்றன. ஒரு நல்லவருக்குத்தான் ஒட்டளிப்பேன் என்ற மன நிறைவோடு இருங்கள்.
8. ஓட்டுப் போடும் நாளன்று, உங்கள் வீட்டிலேயே இந்தச் சின்னத்துக்குத்தான் ஓட்டளிப்பேன் என்று முடிவெடுத்தபின் வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள். ஏனெனில் ஒரு கணிப்பு, ஏறக்குறைய 48% பேர், எந்தச் சின்னத்துக்கு வாக்களிப்பது என்பதை, வாக்குச் சாவடியில்தான் முடிவெடுக்கின்றார்கள் எனக் கூறுகின்றது.
அறிவார்ந்த வாக்காளப் பெருமக்களே!
இதிலே குறிப்படப்பட்டவைகளை நீங்கள் சிந்தித்துப் பார்த்து, வாக்களியுங்கள்! உங்கள் எதிற்காலம் மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளின் எதிற்காலம்கூட உங்கள் கைகளில் உள்ள ஓட்டில்தான் இருக்கின்றது.
அமைதியாகத் தேர்தல் நடக்க அதிகாரிகளுக்கு உதவி செய்யுங்கள்! சுவர்களில் விளம்பரம் எழுதும்போதும், தேர்தல் பரப்புரை தட்டிகளை வைக்கும் போதும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதபடி, மற்றவர்களோடு இனக்கமாக ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள்!
உங்கள் பகுதியில் பரப்புரையின் போதும், தேர்தல் நாளிலும் அமைதி காக்கப்பட வாழ்த்துக்கள்!!!.
உங்கள் நண்பர்களோடு இந்த வலைத்தளத்தைப் பகிறுங்கள்! ஆண்டவர்தாமே இந்தத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க உதவி செய்வாராக. உங்களை ஆசீர்வதிப்பாராக.