அன்பு நண்பர்கள் யாவருக்கும் வணக்கம்!
நேராக நாம் செய்திக்குள்ளே செல்லுவோம். இந்தச் செய்தி, உங்கள் மனதைப் புதிதாக்கும், நீங்கள் மருரூபமாவீர்கள்!(ரோமர் 12:2) உங்கள் நண்பர்களுக்கு நமது KARUNYAS.BLOGSPOT.COM என்ற இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்யுங்கள்! இதுவும் ஒரு ஊழியமே!!
பரிசுத்தம் என்றால் என்ன?
வேதாகமத்திலே முதன்முறையாக யாத்திராகமம் 13:2ல் பரிசுத்தம் வருகின்றது.
இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறானைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது.
மேலே உள்ள வசனத்திலிருந்து, தனக்காக ஒன்றைத் தெரிந்து கொள்ளுவது, பிரித்து வைப்பது, பிரத்தியேகப்படுத்துவது எனப் பரிசுத்தம் பொருள்படுகின்றது. ஆதியாகமம் 2:3ல் தேவன் ஏழாம் நாளைத் தனக்காகப் பிரித்தெடுத்து, பிரத்தியேகப்படுத்தினார் (பரிசுத்தப் படுத்தினார்). இன்னும் இதை எளிதாகக்கூறவேண்டுமானால், எல்லாருடைய வீடுகளில் நடக்கின்ற சம்பவந்தான். உங்களுடைய சிறுவயதில் சாப்பிடுகிற தட்டைத் தனியாக எடுத்து வைத்திருப்பீர்கள். அதைப் போல டம்ளரிலும். சாப்பிடுவதற்கு பிளேட்டை எடு என்றால் இருக்கிற 4,5 பிளேட்டுகளில் உங்களுக்கான பிளேட்டை எடுத்து அம்மாவிடம் கொடுப்பீர்கள் அல்லவா! அதே போல அப்பாவுக்குத் தனி பிளேட், தனி டம்ளர். அப்பாவைத் தவிற வீட்டில் உள்ள வேறுயாரும் உபயோகிப்பதில்லை. மற்ற தட்டுகளுடன்தான் இருக்கின்றது, ஆனால் பிரத்தியேகப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் போல இந்த உலகத்தில் நாம் வாழ்ந்துவந்தாலும் நாம் தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். (பிரத்தியேகப்படுத்தப்பட்டவர்கள்) 1கொரிந்தியர் 6:11ல்,
உங்களில் சிலர் இப்படிப்பட்டவர் களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப் பட்டீர்கள், நீதிமான்களாக்கப் பட்டீர்கள்.
இரண்டாவதாக,
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் யோவான் 17:17
மேலே உள்ள வசனம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஜெபித்த ஜெபம்! வேத வசனத்தை நாம் பரிசுத்த ஆவியானவருடைய ஒத்துழைப்போடு படிக்கும்போது, நம் எல்லாரையுமே பரிசுத்தமாக்குகிறது. பேதுரு 1:16ல்,
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
மேலே உள்ள வசனம் எங்கே எழுதியிருக்கிறது?
லேவியராகமம் 11:45ல்,
நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
லேவியராகமம் 11:41-44 வரை வாசிப்பீர்களானால், தரையில் ஊருகின்ற சகலபிராணிகளையும் புசிக்கலாகாது என அறிகின்றீர்கள். அதாவது பாம்பு, பல்லி, பூரான், ரயில் பூச்சி இப்படிப்பட்ட தரையில் ஊருகின்ற சகலபிராணிகளையும் புசிக்கலாகாது என அறிகின்றீர்கள். புசித்தால் தீட்டு, புசிக்காவிட்டால் பரிசுத்தர். இதன்படி பார்த்தால் சீனாக்காரன் ஒருவனும் பரிசுத்தமாகவே முடியாது. மேலும் பாவத்துக்கு எதிர்ச்சொல் நித்திய ஜீவன் என்பதைப் போல, பரிசுத்தத்திற்கு எதிர் சொல் தீட்டு எனவும் அறிகின்றீர்கள். பழைய ஏற்பாடு சரீரத்தைக் குறிப்பது, புதிய ஏற்பாடு மனம், ஆத்துமாவைக் குறிக்கின்றது என்பது நம் அனைவருக்குமே நன்கு தெரியும். சரி புதிய ஏற்பாட்டில் இந்த வசனம் கையாளப்படுவதற்குக் காரணம்? இங்கே எதன் அடிப்படையில் கூறப்படுகின்றது? 1பேதுரு 1:14-16ஐ வாசித்துப்பார்த்தால்,
நீங்கள் உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
இங்கே பரிசுத்தர்.... பரிசுத்தராயிருங்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் HOLY இதுதான் உண்மைப் பரிசுத்தம்!! (பிரத்தியேகப்படுத்தப்படுதல்)
மூன்றாவதாக,
யோவான் 13:19ல்,
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக என்னை நானே பரிசுத்தமாக்குகின்றேன்.
என ஜெபிக்கின்றார். பரிசுத்தரே பரிசுத்தத்திற்காக ஜெபிக்கின்றாறா? அல்லது தன்னைத் தானே பரிசுத்தமாக்குகின்றாறா? தமிழில் எல்லாவற்றுக்குமே பரிசுத்தந்தான். மேலே உள்ள வசனத்தில் முதலில் வருகின்ற பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி.... இந்த இடத்தில் HOLY. என்னை நானே பரிசுத்தமாக்குகின்றேன் என்ற இடத்தில் CONSECRATE பண்ணுகின்றேன். அதாவது அற்பணிக்கின்றேன். அதாவது நாமெல்லாரும் பரிசுத்தவான்களாய் வாழும்படிக்கு பிதாவுக்குத் தம்மைத் தாமே அர்பணித்தார்!
பரிசுத்தத்தைக் குறித்த சத்தியத்திலே உங்கள் மனம் புதிதாகியிருக்கின்றது, நீங்கள் மருரூபமாயிருக்கின்றீர்கள்!! ஜெபிப்போம் !!!
எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே, இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம், இதைப் படிக்கின்ற ஒவ்வொருவரையும் நீர் பரிசுத்தப்படுத்தியிருக்கின்றீர்! பிரத்தியேகப் படுத்தியிருக்கின்றீர்!! அதற்காக நன்றி! சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற வசனத்தின்படி எங்களை விடுதலையாக்கியிருப்பதனால் நன்றி! எங்களைப் போன்று சத்தியத்தை சரியாக அறியாத சகோதர, சகோதரிகளுக்காய் ஜெபிக்கின்றோம்! இந்தச் சத்தியம், உலகெங்கும் இருக்கின்ற தமிழ்தாய் உறவுகளைச் சென்றடைய கிருபை செய்வீராக. இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென்.
பின் குறிப்பு: நண்பர்கள் யாவரோடும் இந்த வலைத் தளத்தைப் பகிருங்கள்! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்துபோல, அவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்!! நன்றி, நன்றி.....