இஸ்ரவேல் அடிமைத்தனத்துக்குள்ளாக எடுத்து செல்லப்பட்டது
2 இராஜாக்கள் 17ல், இஸ்ரவேல் தேசத்தின் மீது திரை விழுந்து கொண்டிருக்கின்றது. ஆண்டவருடைய பொறுமை போய்விட்டது, எனவே கொடிய அசீரிய இராணுவத்துக்கு சமாரியாவை (வட இஸ்ரவேலின் தலைநகர்) பிடிக்க அனுமதியளித்தார்.
ஓசெயா ஒன்பது வருடம் அரசாண்டான். அவனுடைய ஆட்சியில் தென்பகுதியில் அசீரியர்களை முறியடிக்கும்படி எகிப்தின் அரசனோடு கூட்டுச் சேரவும் முயற்சித்தான். ஆனால் அது மிகவும் பிந்தி போய்விட்டது. அசீரியாவை ஆண்டவர், தமது மக்களை நியாயந்தீர்க்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். ஒரு தனிப்பட்ட மனிதனைப்போல மனந்திரும்ப மிகவும் பிந்திப்போய் விட்டது. ஆண்டவர் பொறுமையாகவே காத்திருந்தார்; ஆனால் தேசத்தின் பாவம் அதிகமாகி, அளவைக் கடந்துவிட்டது. ஆண்டவருடைய தீர்க்கத்தரிசிகளின் கடுமையான எச்சரிப்புக்கள் யாவும் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டன. நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகியது.
2இராஜாக்கள் 17ல், உள்ள 3 பெரிய பகுதிகள்:
1. இஸ்ரவேல் அடிமைத்தனத்தின் உண்மை நிலவரம். (வ.1-6)
2. இஸ்ரவேல் நாடு விழுகைக்கான காரணங்கள் (வ.7-12)
3. இஸ்ரவேல் தீர்க்கத்தரிசிகளின் எச்சரிப்புக்கள் (வ.13-18)
1. இஸ்ரவேல் அடிமைத்தனத்தின் உண்மை நிலவரம். (வ.1-6): ஒரு தேசமாக உருப்பெற்று 200 ஆண்டுகளுக்குப் பின், வடக்கிலுள்ள 10 கோத்திரத்தைக் கொண்ட இஸ்ரவேல், அசீரியர்களால் மேற்கொள்ளப்பட்டு அடிமைத்தனத்துக்குள்ளாகியது. (சில நேரங்களில் இஸ்ரவேல், எப்பிராயீம் என்ற பெரிய கோத்திரத்தை வைத்து எப்பிராயீம் என்றும், சில நேரங்களில் தலைநகரத்தின் பெயரில் சமாரியா என்றும் அழைக்கப்பட்டது. இஸ்ரவேல், ஓசெயாவின் ஆட்சி காலத்தில் அடிமைத்தனத்துக்குள்ளாக செல்ல ஆரம்பித்தது. அவனது 9 வருட ஆட்சியிலே அசீரியர்கள் தலைநகர் அசீரியாவைப் பிடித்தனர். அசீரியாவின் பல்வேறு பகுதிகளுக்கு, இஸ்ரவேல் மக்களை அடிமைகளாக கொண்டு சென்றனர். அவர்கள் மொசப்பட்டோமியா குறிப்பாக யூப்ரடீஸ் நதிக்கரைகளில் சிதறடிக்கப்பட்டனர். (சதாம் ஹுசைன் ஆட்சி செய்த ஈராக்) வசனம் ஆறு இஸ்ரவேல் மக்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட நகரங்களைக் குறிப்பிடுகின்றது.
இஸ்ரவேல் கோத்திரங்களின் வட பகுதியின் கடைசி அரசன் ஓசெயா, பொல்லாத மன்னனாக இருந்தான். ஆனால் அவனுக்கு முன்பாக இருந்த மன்னர்களைப்போல் அல்ல. வசனம் 2ல், "கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் இராஜாக்களைப்போல் செய்யவில்லை" கி.மு. 722ல், அசீரியர்களின் அடிமையாக அவன் கொண்டு செல்லப்பட்டான். அப்பொழுது தென் பகுதியான யூதாவை ஆகாஸ் ஆண்டு வந்தான். கொஞ்சம் இஸ்ரவேலர்களை அங்கேயே விட்டு விட்டும், மீதியானவர்களை வெளிநாடுகளிலே குடியமர்த்தியும், அசீரியர்கள் ஒரு புதிய இனத்தை (கலப்பு திருமணத்தின் மூலம்) நமக்குத் தெரிந்தபடி சமாரியர்களை உருவாக்கினார்கள்.
200 வருடங்களுக்கு மேலாக வட பகுதியில் இருந்த இஸ்ரவேல் கோத்திரங்கள், ஒன்றன்பின் ஒன்றாக பத்தொன்பது தீய, விக்கிரக வணக்கத்துக்குட் பட்ட மன்னர்களால் ஆளுகை செய்யப்பட்டது. சிலர் கொஞ்ச காலம் ஆண்டாலும், கலகங்களும், கொலைகளும் (மத, ஆளும் தலைவர்களை) குரூர குணங்களும் அனைத்து வருடங்களும் தொடர்ந்தன. இந்த நாட்களில் சாதாரண நாடாக இருந்த அசீரியா சாம்ராஜ்யமாக, உலகின் வல்லரசாக வளர்ந்தது. அதன் தலை நகரம் நினிவே. அதன் பெரும் இராணுவம், வடசமவெளியையும், பின்பு மேற்கு, மற்றும் தென் பகுதிகளையும் அசீரிய மன்னரின் ஆளுகைக்குள் கொண்டுவந்தது. டமாஸ்கஸ்சை ஜெயித்து கலிலேயாவுக்குள் வந்தார்கள். சல்மானாசாருக்குப் பின் டிகலாத்-பிலேசர் என்ற அசீரிய அரசன், இஸ்ரவேல் பட்டணமான சமாரியாவை முற்றுகையிட ஆரம்பித்தான்.
ஓசெயா அவனுக்கு பணிந்து கப்பம் (பகுதி) கட்டினான். (வசனம் 3ன், பிற்பகுதி). பின்பு ஓசெயா எகிப்தின் அரசனோடு கூட்டுச் சேர்ந்தான்; அசீரியா இராஜாவுக்கு கப்பங்கட்டியத்தை நிறுத்தினான். இந்த அணுகுமுறை ஓசேயாவுக்கு பின்விழைவுகளை ஏற்ப்படுத்தியது. அசீரியர்கள் ஒசேயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு அசீரியா இராஜா தேசமெங்கும் போய் சமாரியாவுக்கும் வந்து மூன்று வருடம் அதை முற்றுகையிட்டான். (வ 3-5) முற்றுகைப் போர் என்பது காத்திருக்கும் விளையாட்டு; தாக்குபவர்களின் பொறுமையான விளையாட்டு; தாக்குவதற்கு அது நம்பிக்கையின் நேரத்தைத் தருகின்றது.
இந்த பின்புலம் நம்மை 2 இராஜா.17:6ம் வசனத்துக்கு கொண்டு வருகின்றது.
"ஓசெயாவின் ஒன்பதாம் வருடத்தில் அசீரியா இராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்கு சிறையாக கொண்டுபோய் அவர்களை கொசோன் நதி ஓரமான ஆலாகிலும், ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்"இது இஸ்ரவேலின் (சில நேரங்களில் இது எப்பிராயீம்) வடபகுதி அடிமைத்தனத்துக்குளானதைத் தெரிவிக்கின்றது.
வேதாகமத்தில், அசீரியரின் முற்றுகையும், இஸ்ரவேலைப்பிடித்த செய்தியும் விரிவாக பதிவு செய்யப் படவில்லை; வேதாகமம் இஸ்ரவேலரின் இராணுவத்தையும், அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலைமையையும் மையப்படுத்தாமல், இஸ்ரவேலரின் ஆவிக்குரிய நம்பிக்கையை மட்டுமே மையப்படுத்துகின்றது.இஸ்ரவேலர் தோற்றதுக்கான பொதுவான காரணம் வசனம் 7ல், இருக்கின்றது.
"எகிப்தின் இராஜாவாகிய பார்வோனுடைய கையின் கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ் செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,...."
வட திசையிலிருந்த இஸ்ரவேலின் கோத்திரங்கள் தங்கள் கிருபை நிறைந்த கர்த்தர் செய்த அனைத்தையும் புறக்கணித்தார்கள்.
2. இஸ்ரவேல் நாடு விழுகைக்கான காரணங்கள் (வ.7-12):
10 கோத்திரங்களின் அடிமைத்தனம் (இஸ்ரவேல் இராஜ்ஜியம்) அவர்களது ஒழுக்கக் கேட்டின் விழைவே ஆகும். ஓசியா தீர்கத்தரிசி ஓசியா 1:6ல், "........ நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்" என முன்னறிவித்தார். இஸ்ரவேலரின் ஒவ்வொரு கோத்திரத்திலும் மிச்ச மீதியாயிருந்த மக்கள் யூதாவிலே தஞ்சமடைந்தார்கள். (மேலும் அவர்களுடைய அடையாளம் நீடித்து நிலைத்திருந்தது அங்கே) வடக்கு இராஜியமான இஸ்ரவேல் ஒரு நாடாக மீண்டும் எழும்பவே இல்லை.
வசனம் 7, இஸ்ரவேலின் அடிமைத்தனத்தைக் குறித்து பொதுவான காரணத்தை விவரிக்கின்றது. இஸ்ரவேல் மக்கள் ஆண்டவருக்கு விரோதமாக பாவஞ் செய்தபடியால், இது நடந்தது. கர்த்தர், அவர்களது அனுதின வாழ்க்கையில், உன்னமையான ஆராதனை, கீழ்படிதல், ஊழியம் ஆகியவைகளை செய்ய சொல்லியிருந்தார். கீழ்படிந்திருந்தால் அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்களாக, ஆசீர்வதிக்கப் பட்டவர்களாக (ஆவிக்குரிய, பொருளாதார) இருந்திருப்பார்கள். தேசத்தின் சரித்திரம், ஆண்டவருடைய திரு சட்டத்தை மீறிய செயல்களால் நிறைந்திருந்தது.
வசனங்கள் 8-12ல், சில குறிப்பிட்ட குற்றங்கள் அவர்களை அடிமைத்தனத்துக்குள்ளாக வழி நடத்தியது என பெயரிடுகின்றது. வசனம் 8ல்,
"கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் இராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்து கொண்டிருந்தார்கள்"
கர்த்தரின் ஜனங்கள் இந்த உலக ஜனங்களிலும் வித்தியாசமானவர்கள். விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்ட தங்களை சுற்றிலும் இருந்த ஜனங்களிலும் வேறுபட்டவர்கள். "விபசாரரே, விபசாரிகளே உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்கு சினேகிதனாக இருக்க விரும்புகின்றவன் தேவனுக்கு பகைஞனாகிறான்" உலக வழி நம்மை விபசார காரராகவும், விபச்சாரிகளாகவும் செய்கிறது. நமது வாழ்க்கைமுறை, நமது மனோபாவம், நமது உடை அனைத்தும் இறுமாப்பு, திமிர், ஒழுக்கங்கெட்ட தன்மை, சுயத்தை மையப்படுத்தி வாழாமல், எளிமையாக, மனத்தாழ்மையாக, சுத்தமாக, தன்னடக்கமுடையதாக இருக்க வேண்டும்;
மேலும் வசனம் 8ல், குறிப்பிட்டுள்ளதைப்போல, இஸ்ரவேல் இராஜாக்கள் அறிமுகம் செய்த வழிகளில் நடந்தார்கள். அநேக தேவனற்ற இஸ்ரவேல் அரசர்கள் (ஆகாப், அவன் மனைவி யேசபேல்) வெளிநாட்டு கடவுள்களை இறக்குமதி செய்ததுமல்லாமல், அவர்களது பாவம் நிறைந்த பாதைகளில் நடக்கும்படியாக தைரியப்படுத்தினர். 1இராஜா. 16:33ல்,
"ஆகாப் ஒரு விக்கிரக தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் இராஜாக்கள்ளெல்லாம் செய்ததைப் பார்க்கிலும் அதிகமானதை செய்து வந்தான்"
2இராஜா. 17:19ல்,
"செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள் மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையுங் கட்டி," நாடு முழுவதும் ஒழுக்கமில்லாத செயல்கள் நடந்தது.
சில பாவங்கள் வெளிப்படையாக, எல்லோருக்கும் முன்பாக, மற்றவை மறைமுகமாக. நமது நாட்களில் அநேக வெளிப்படையான பாவங்களுக்கும், மறைவான பாவங்களுக்கும் வாய்ப்பு வசதிகளும் இருக்கின்றன. இன்றைய மிகவும் அபாயகரமான இன்டர்நெட் ஒரு மனிதனை தன வீட்டிலேயே, கீழ்த்தரமான, இழிவான படங்களை சுலமாக மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி வழிநடத்துகின்றது. இதனால் அநேகர் சிற்றின்ப வெறி என்ற பாவத்துக்கு அடிமையாகிவிட்டனர்.
வ10ல்,
"உயரமான சகல மேட்டின் மீதும் பச்சையான சகல மரத்தின் கீழும் தங்களுக்கு சிலைகளையும், விக்கிரக தோப்புக்களையும் நிறுத்தி,"
உயரமான சகல மேடு - குன்றுகளின் உச்சியில் பாகால்களுக்கு கோபுரங்கள், செழுமையான கடவுள்களுக்கு கல் பலிபீடங்கள். குறி சொல்லுதல், விபச்சாரம், குழந்தைகளை பலி செலுத்துதல் என்று பல குற்றங்கள் இந்த இடத்திலே நடைபெற்று வந்தது. இது 11,12ம், வசனங்களில் விளக்கப்படுகின்றது.
"கர்த்தர் தங்களை விட்டு குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்கு கோபமுண்டாக்க துர்கிரியைகளை செய்து, இப்படி செய்யத்தகாது என்று கர்த்தர் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்து வந்தார்கள்"
பத்து கற்பனைகளில் முதலிரண்டு கற்பனைகள் வேற்றுக் கடவுள்களை ஆராதிப்பதைப் பற்றியது. மற்றும் கல்லினாலும், மரத்தினாலும், விக்கிரகத்தை சொரூபத்தை செய்வதைப் பற்றியது. யாத்.20:2-6ல், யேகோவா தேவன் சொல்லுகிறார், தனது முதல் கட்டளையில், 'உன் தேவன் நானே; எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்தது நானே' என அறிவித்தார். மேலும் அவர் - என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். (எனக்கு முன்பாக, அருகிலே, என்னோடுகூட) வேதம் கூறுகின்ற யேகோவா தேவனுக்கு பதிலாக வேறொரு கடவுள் இல்லை. அவர் மட்டுமே ஒப்புயர்வு அற்றவர். அவர் போட்டி கடவுள்களை அனுமதிப்பதில்லை!
இஸ்ரவேல் மக்கள் செய்த பாவங்கள்:
உருவ வழிபாடு (வ7)
யெகோவாவின் கொள்கைகளை ஒத்துக்கொள்ளாமை (வ8)
மாய்மாலம் (வ9)
விக்கிரக வணக்கம் (வ10)
துர்கிரியைகள்
தீர்கதரிசிகளை ஏளனம் செய்தல் (வ13,14)
குறி கேட்டல், நிமித்தங்கள் பார்த்தல் (வ 17)
இந்தப்பகுதியில் ஒவ்வொன்றாய் சொல்லப்பட்ட பாவங்கள் நிமித்தம், கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தை மேற்கொள்ள அசீரியர்களை அனுமதித்தார். அசீரியர்களாகிய சத்துருக்களிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற முடியாதவராக அல்ல, உண்மையை சொன்னால் அவர் சத்துருக்களை எழும்பப்பண்ணி, அவர்களை பாலஸ்தீனத்துக்குள் கொண்டு வந்து, அழித்தார்.
3. இஸ்ரவேல் தீர்க்கத்தரிசிகளின் எச்சரிப்புக்கள் (வ.13-18):
ஆண்டவருடைய வழிகளை விட்டு இஸ்ரவேலர் விலகிய பொழுது, எண்ணற்ற எச்சரிப்புகளை பெற்றனர். ஆனால் விளைவு ஊழ்வழி கேட்டுக்கு ஆளாகி வெளிநாட்டிலே அடிமைகளானார்கள். அநேக தீர்கத்தரிசிகள் இஸ்ரவேல் மக்களை, மனந் திரும்ப மறுத்தீர்களானால் அழிவு வரும் என எச்சரித்தனர். ஓசியா, மீகா, ஏசாயா ஆகியோர் உருவ வழிபாடு, நெறிதவறின ஒழுக்கக்கேடு, ஏழைகளை ஒடுக்கியது எல்லாம் தெய்வீக தீர்ப்பை கொண்டுவரும் என எச்சரித்தனர்.
ஆண்டவருடைய தீர்க்கத்தரிசிகளை இஸ்ரவேல் மக்கள் கேலி செய்தனர். வசனம் 13 சொல்லுகின்றது,
ஆண்டவரிடமிருந்து திரும்பத் திரும்ப தீர்க்கதரிசிகள் மூலமாய் எச்சரிப்புக்கள் வந்துகொண்டிருந்தும், இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களை விட்டுவிடாமல் இருந்தனர். வசனம் 14, அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசியாமற்போன, கடின கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி" தீர்கத்தரிசிகளின் வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலானது. மக்கள் தங்கள் பாவ வாழ்க்கையையே பின்பற்றினர். தங்கள் பிதாக்களைப்போல தங்கள் கழுத்தை கடினப்படுத்தியே வாழ்ந்தனர். தங்கள் பாவங்களை அவர்கள் விட்டுவிடவில்லை.
"நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்கு கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கத்தரிசிகளைக்கொண்டு உங்களுக்கு சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமானத்தின்படி எல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக் கொள்ளுங்கள் என்று தீர்கத்தரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர் எல்லாரையுங் கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திட சாட்சியாய் எச்சரித்துக் கொண்டிருந்தும்"
ஆண்டவரிடமிருந்து திரும்பத் திரும்ப தீர்க்கதரிசிகள் மூலமாய் எச்சரிப்புக்கள் வந்துகொண்டிருந்தும், இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களை விட்டுவிடாமல் இருந்தனர். வசனம் 14, அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசியாமற்போன, கடின கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி" தீர்கத்தரிசிகளின் வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலானது. மக்கள் தங்கள் பாவ வாழ்க்கையையே பின்பற்றினர். தங்கள் பிதாக்களைப்போல தங்கள் கழுத்தை கடினப்படுத்தியே வாழ்ந்தனர். தங்கள் பாவங்களை அவர்கள் விட்டுவிடவில்லை.
வசனங்கள் 15,16,17ல்,
"அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்கு திட சாட்ச்யாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்கு கட்டளையிட்ட, விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று,
தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டு விட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரக தோப்புக்களை நாட்டி, வானத்தின் சேனைகளைஎல்லாம் பணிந்து கொண்டு பாகாலை சேவித்தார்கள்.
அவர்கள் தங்கள் குமாரரையும், குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறி கேட்டு, நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்கு கோபமுண்டாக்க அவர் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்ய அவர்களை விற்றுப் போட்டார்கள்."
இந்த அத்தியாயத்தில் நாம் முதலில் பார்த்த பாவங்கள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவருடைய நிரந்தர விதிகளையும், அவர்களுடைய முற்பிதாக்களோடு ஆண்டவா செய்த உடன்படிக்கையையும் அவர்கள் ஏற்க மறுத்தனர்.(வசனம் 15அ) ஆண்டவருடைய கட்டளைகளுக்கு குறைந்த அளவே மதிப்பளித்தனர். எதை விலக்கவேண்டும் என சொல்லியிருந்தாரோ அதையே செய்தனர், .(வசனம் 15ஆ) அவர்கள் எல்லாக் கட்டளைகளையும் விட்டு விலகி, இரண்டு கன்று குட்டிகளை வார்ப்பித்தனர். (வசனம் 16) இதன் அர்த்தம், விலையேறப்பெற்ற உலோகங்களை உருக்கி அதை அச்சுக்களில் ஊற்றினார்கள். இதை எழுதியவர், இஸ்ரவேல் பிரிந்த ஆரம்ப நாட்களிலேயே, ஜெரோபெயாம் இந்த இரு கன்றுக் குட்டிகளையும் உருவாக்கினான் எனக் குறிப்பாக குறிப்பிடுகின்றார். இதோடு கூட தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் தீக்கடக்கப் பண்ணினார்கள். (வசனம் 17) இதன் பொருள் என்னவெனில், பாகாலின் தேவனுக்கு தங்கள் பிள்ளைகளை சில நேரங்களில் எரித்தார்கள். நமது நாட்களில் அபார்சன் மூலமாக பல லட்சக்கணக்கான பிள்ளைகளை கருவிலே அழிக்கின்ற இந்த காலத்தின் மக்கள் மீது ஆண்டவர் குறைவாகவா கோபங்கொள்ளூவார்?
குறி கேட்டு என்ற இந்த வார்த்தைக்கு (வசனம் 17) மாந்திரீகம் செய்து எதிர் காலத்தை அறிந்து கொள்ளுதல் என பொருள்படும். நிமித்தங்கள் பார்த்து... என்றால், மந்திரவாதிகள், மந்திரங்களை உச்சரித்து தீய ஆவிகளின் உதவியால் மனிதர்களின் நடவடிக்கையில் செல்வாக்கு பெரும் முயற்சி. இஸ்ரவேலின் ஆராதனை பயனற்றதும், வெறுமையுமாய் இருந்தது. அவர்கள் ஒன்றுமில்லாததை பணிந்து கொண்டார்கள்; வாழ்க்கையில் ஸ்திரமில்லாத தன்மையை சந்திக்க அவர்களிடத்தில் ஆவிக்குரிய வல்லமை இல்லாமல் போனது. விக்கிரக வணக்க மதம், சூடான காற்றைத் தவிர ஒன்றுமில்லை. வாழ்க்கை, உப்பு சப்பற்ற வாழ்க்கையானது. விக்கிரக வணக்கம் என்பது 15ம் வசனத்தின்படி, தற்பெருமையை பின்பற்றுவதால் வாழ்க்கையின் ஆழமான பிரச்சனைகளுக்கு ஒரு பதிலும் இல்லாமையாகும்.
அவமானகரமான உருவ வழிபாடு, வீண் பிடிவாதமான கீழ்படியாமை, வெட்கக்கேடு நிறைந்த மாயவித்தை சார்ந்தவர்களுடைய பழக்கவழக்கங்களில் காட்டும் ஒத்துணர்வு திறம், இவைகளாலே இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவர் தங்களுக்கு கொடுத்திருந்த நாட்டைவிட்டு, நாடு கடத்தப்பட்டு அசீரியாவிலே சிதறடிக்கப்பட்டனர். வசனம் 18 சொல்லுகிறது, "ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமடைந்து, அவர்களை தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; ......" இந்த 2 இராஜாக்கள் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர், தோல் சுருளின்மேல் எழுதியபொழுது, கண்ணீர் விட்டிருப்பார் என்பதில் ஐயம்மில்லை.
நாமனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய சில நடைமுறைகள் இதில் இருக்கின்றது.
அ. 1985ல், 'சாவதற்கு நமக்கு நாமே மனமகிழ்ச்சி உண்டாக்குதல்' என்ற புத்தகத்தை ஒருவர் எழுதினர். அதில் நமது (அமெரிக்க) கலாசாரத்தை அளிக்க கூடிய எதுவும் கொடுமையான பகைவர் நாட்டிலிருந்து வர முடியாது. ஆனால் ஆழமற்றதை பதிலாக வைப்பதாலும், பகுத்தறிவுக்குப் பதிலாய் நன்னெறிக்கு புறம்பான கேளிக்கை களியாட்டங்களை வைப்பதாலுமே அழிவு வரும்.' என எழுதினர். இந்த கருத்து எல்லா நாட்டுக்கும் பொருந்தும் என நான் நினைக்கின்றேன். கி.பி. 1787ல், எட்கிப்பன் என்பவர், 'ரோமபேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும்' என்ற புத்தகத்தில் ரோம பேரரசு வீழ, 5 முக்கிய காரணங்களை பட்டியலிட்டார். அவை,
1. விவாக ரத்து மற்றும் மறு விவாகத்தின் எண்ணிக்கை அதிகரிப்பு.
2. வரிக்குமேல் வரிகள்.
3. சிற்றின்பத்தின் மீது வெறியார்வம்.
4. போருக்குத் தேவையான மிகப் பெரிய ஆயுதங்களை தயாரித்தது.
5. மத கோட்பாடுகள் வீழ்ச்சியுற்றது.
இன்று அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நாடுகளின் நிலைமை இதுதான். நாடுகள் மனந்திரும்பாவிடில், பேரழிவிற்கு இப்படிப்பட்ட நாடுகளே தலைமை ஏற்கும். (இந்திய தேச நிலைமையும் இதை நோக்கியே வேகமாக முன்னேறுகின்றது என்பதை நாம் அன்றாடம் படிக்கும் செய்தி தாள்களும் பார்க்கும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் நேரடியாகவும் பார்க்கிறோம்)
ஆ. ஒரு செய்தியாளர் தனியுரைகளையும், பாடல்களையும் பாடி மக்களை மகிழ்விக்கும், பாடற்க் கலைஞர் ஒருவரை, அவருடைய விபச்சாரத்தையும், ஒழுக்கமற்ற நடவடிக்கையைப் பற்றி கேட்ட பொழுது, 'நான் ஏன் அதை செய்யக்கூடாது? இது எனது வாழ்க்கை, எல்லா விளையாட்டையும் விளையாடுவதற்கு நான் தகுதி உள்ளவன்தான்' என பதிலளித்தார். ஒரு கருத்து இப்படி சொல்லுகிறது, 'ஒரு நடத்தை சரியா தவறா? என்னும் கொள்கைகள் பற்றி எந்த கட்டுப்பாடும் இல்லை. நமது நடத்தையைப் பற்றி எந்த பொறுப்பும் கொள்ளத் தேவை இல்லை'. நாட்கள் செல்ல செல்ல இப்படிப்பட்ட கருத்துக்கள் நமது சமுதாயத்தை ஊடுருவி செல்லுகின்றது. கடவுள், நம்மை அவருக்கு கீழ்படிய பலவந்தம் பண்ண மாட்டார், ஒவ்வொரு நாளும் கடைசியில் அவர் தண்டிக்க மாட்டார், ஆனால் கடைசியில் தண்டிப்பார்.
இ. மார்க் டுவைன் தன்னுடைய 'Huckleberry Finn' என்னும் புத்தகத்தில் ஹக் என்பவருடைய கருத்து: நாம் சரியானவற்றைக் கற்றுக்கொள்ள ரொம்ப கஷ்டப்பட தேவை இல்லை. சரியானவற்றை செய்யும் பொழுதுதான் மிகுந்த பிரச்சனை வருகின்றது. தவறு செய்யும் பொழுது கொஞ்ச பிரச்சனைதான். எனவே நாம் தவறே செய்வோம். ஆனால் இங்கு வேதாகமம் தருகின்ற உற்ச்சாக மிக்க அறிவுத்தல் என்னவெனில், தவறுக்கு கடைசியில் நாம் கிரயம் செலுத்தவேண்டியது வரும்! முதல் மற்றும் இரண்டாம் இராஜக்களின் புத்தகத்தின் இறுதியான முடிவு என்னவெனில் ஆண்டவருடைய சட்ட திட்டங்களுக்கு நாம் கீழ்படியவில்லையானால், தவிர்க்க இயலாத தண்டனையைப் பெற்றுத்தரும் என காட்டுவதாகும்.
சமாரியா (வட இராஜியத்தின் தலை நகரம்) விழுந்த போது, மீதியுள்ள இஸ்ரவேல் இராஜியமும் எதிரியின் ஆழுகைக்குள் விழுந்தது. அந்த நாட்களில் இருந்த தீர்க்கத்தரிசிகள் (ஓசியா, மீகா, ஏசாயா) ஆண்டவரின் நியாய தீர்ப்பு வரும் என்று எச்சரித்தனர். பத்தொன்பது இராஜாக்களும் ஜெரோபெயாமின் பாவத்திலேயே நடந்தனர், ஜெரோபெயாம் வட இஸ்ரவேல் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவன். அவன்தான், தான் உருவாக்கிய இரண்டு பொன் கன்றுக்குட்டிகளையும் வணங்க செய்தவன். (1இராஜாக்கள் 12:28) தேசம் தனது பாவத்திலிருந்து திரும்ப வேண்டும் என தீர்க்கத்தரிசிகள் திரும்ப திரும்ப எச்சரித்தனர். ஆனால் இஸ்ரவேல் விக்கிரக வணக்கத்தில் உறுதியாய் இருந்தது. வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலையில், ஆண்டவர் இஸ்ரவேல் மக்களை அந்த தேசத்திலிருந்து அகற்றினார் - சிதறடித்தார். வட தேசத்தின் மக்கள் இஸ்ரவேலில் இருந்து அசீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்த தேசத்தின் தனித் தன்மை அழிந்தது. காட்சியிலிருந்து இஸ்ரவேல் மறைந்தது.
சமாரியாவின் வீழ்ச்சிக்குப் பின், பாபிலோனைச் சுற்றிலுமிருந்த பகுதியிலிருந்து வந்த மக்கள் சமாரியாவில் குடியேறினர். இந்த மக்கள் அங்கு மிச்ச மீதி இருந்த மக்களோடு வாழ்ந்தனர், கலப்பு திருமணம் புரிந்தனர். அது சமாரியர்கள் என்ற ஒரு புதிய இனத்துக்கு வழிகோலியது. சமாரியர்கள் என்பவர்கள், இஸ்ரவேல் என்ற வடக்கு இராஜிய வீழ்ச்சிக்குப் பிறகு, அசீரிய மன்னர்களால் பாலஸ்தீனத்திலே குடியேற்றப் பட்டவர்களின் வழித்தோன்றல்கள். இப் புதிய மக்கள் தங்களது சொந்த இராஜ்யத்திலிருந்து தங்கள் கடவுள்களை கொண்டுவந்து குழந்தைகளை தீக் கடக்கப் பண்ணுவதையும் சேர்த்து வழிபட்டனர். (2இராஜாக்கள் 17:31) அவர்களது கடவுள் வெளிப்படையாக தெரிகிறபடி மோளேகு ஆகும். இந்த வருடங்களில் இஸ்ரவேலின் வடபகுதியிலே சிங்கங்களின் இனப்பெருக்கம் கட்டுப்பாடில்லாமல் மிக அதிகமாக இருந்தது. (வசனம் 26)
"அப்பொழுது ஜனங்கள் அசீரிய ராஜாவை நோக்கி: நீர் இங்கே இருந்து அனுப்பி சமாரியப் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாத படியினால், அவர், அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார். அவைகள் அவர்களை கொன்று போடுகின்றது என்று சொன்னார்கள்"
அதற்கு அசீரிய இராஜா, நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கெ அழைத்துக் கொண்டு போங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அந்த தேசத்துத் தேவனுடைய காரியத்தைப் போதிக்கக் கடவன் என்று ஆணையிட்டான். அந்த படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டு போயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலில் குடியிருந்து கர்த்தருக்கு பயந்து நடக்க வேண்டிய விதத்தைப் போதித்தான். (2இராஜா.17:26,27,28) இப்பொழுது மக்கள் யெஹோவா தேவனோடு தங்கள் கடவுள்களையும் சேர்த்து வணங்கினார்கள். ஆண்டவருடைய கட்டளைகளுக்கு கீழ்படியாததால் தேவ பயமும் அற்றுப் போயிற்று.
அதன் பின்பு 150 ஆண்டுகளுக்குப் பின் தெற்கில் இருந்த யூதா (இஸ்ரவேலின் தெற்கு இராஜ்ஜியம்) பாபிலோனியர்களால் சிறைபிடித்து கொண்டு செல்லப்பட்டது. வடக்கில் இருந்த மக்களைப்போலல்லாமல், யூதாவின் குடிமக்கள் 70 வருடங்களுக்குப் பின் மீண்டு வந்து எருசலேமையும், தங்கள் யூத தேவாலயத்தையும் திரும்ப எடுத்து கட்டினார்கள்.
சமாரியர்கள் (வடக்கே கலிலேயாவுக்கும் தெற்கே யூதாவுக்கும் இடையில் இருந்த பகுதியில் தங்கியிருந்தவர்கள்) அந்நிய இரத்தத்தோடு கலந்தவர்கள் என்பதால் யூதர்களால் ஏளனமாகவும் வெறுப்பாகவும் நடத்தப்பட்டார்கள். யோவான் 8:48ல், யூதர்களின் எதிரிகளாகிய இயேசுவை, இழிவு படுத்தும் வகையில் சமாரியன் என்று அழைத்தார்கள்.
"அப்பொழுது யூதர்கள் அவருக்கு பிரதியுத்திரமாக: உன்னை சமாரியன் என்றும் பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுவது சரிதானே என்றார்கள்"
இராஜாக்களின் புத்தகங்களில் (தீர்க்கத்தரிசிகளின் புத்தகங்களில் சில) இருக்கின்ற இந்த பாடங்கள், புதிய ஏற்பாட்டின் புத்தகங்களைப் போல கற்றுக் கொள்ளுவது அவ்வளவு எளிது கிடையாது. எனினும் இந்த வேத பாடம் மிகக் கவனமாக, கடும் முயற்ச்சியில் எழுதப்படுகின்றது. மேலும் வேதாகமத்தின் முழு செய்திகளையும் கற்றுக் கொடுப்பதற்கு, இது ஒரு நல்ல அடித்தளமாக இருக்கிறது என நீங்கள் நம்பலாம். ஆண்டவருடைய வார்த்தைகளில் தோண்டி எடுத்து படிப்பது எப்பொழுதுமே சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. உங்களுக்கும் மகிழ்ச்சி தானே!! பழைய ஏற்பாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நமக்கு முன் மாதிரிகளாக கொடுக்கப் பட்டுள்ளது என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். அவைகள் நமக்கு கற்றுக் கொடுப்பதற்காக எழுதப்பட்டுள்ளது.
ஆண்டவர் இந்த பாடத்தின் மூலம் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் என நான் விசுவாசிக்கின்றேன்!