27 Oct 2015

SUBMIT YOURSELF TO THE LORD

குட்டீஸ் பக்கம்...

"நீ உன் புத்திரன் என்றும் உன் ஏக சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக் கொடுத்து இந்தக் காரியத்தை செய்தபடியால், நான் உன்னை ஆசீவதிக்கவே ஆசீர்வதித்து...... " ஆதியாகமம் 22:16,17

12 வயது நிரம்பிய மரியா தன்னுடைய வீட்டின் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து இருந்தாள். அவளுடைய தாயார் மேல் கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தாள். அவளுடைய 3 சிநேகிதிகளும் உள்ளூரில் நடைபெறுகின்ற பொருட்காட்சியை பார்க்கப் போய் கொண்டிருந்தார்கள். மரியாவின் தாயார் அவளைப் பார்க்கப் போக அனுமதிக்க வில்லை. "அம்மா எனது எல்லா சிநேகிதிகளும் போகிறார்கள், அவர்களுடைய பெற்றோர் எல்லாம் அவர்கள் போகிறதற்கு அனுமதி தருகின்றார்கள்." என்று மரியாள் கெஞ்சினாள். அதற்க்கு அவளுடைய தாயார், "மரியா நான் வருத்தப் படுகிறேன், நான் உன்னை போவதற்கு அனுமதிக்க முடியாது. உன் வயது பெண்கள் பொருட்காட்சி போவது பாதுகாப்பானது அல்ல" என்று கூறிவிட்டார்கள். "என்னை ஒருபோதும் வேடிக்கை விளையாட்டிற்கு அம்மா அனுமதிப்பதில்லை." என்று மரியா அழுது கொண்டே தனக்குள் சொல்லிக்கொண்டாள். 

தெருவின் இன்னொரு பக்கத்திலிருந்து 'மரியா' என்று ராணி அக்கா அழைத்து கையசைத்தார்கள். எதிர் பக்கத்தில் இருக்கும் ராணி அக்காவை மரியாளுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி. மரியா ஒன்றும் பேசாமல் ராணி அக்கா தன்  கண்ணீரை பார்த்துவிடக் கூடாது என்று எண்ணி, கீழே பார்த்துக் கொண்டிருந்தாள். 'மரியா ஏன் வருத்தமாய் இருக்கிறாய் சொல்' எனக் கூறிக்கொண்டே அவள் பக்கத்தில் உட்கார்ந்தார்கள்.

மரியா நடந்ததை எல்லாம் கூறுவதைக் கவனமாக கேட்டாள். "அக்கா, அம்மா என்னை பொருட்காட்சிக்கு அனுப்பவேண்டும் என்று ஜெபம் பண்ணித்தான் கேட்டேன். என் ஜெபத்தை கடவுளும் கேட்கவில்லை" என்றாள். 

ராணி அக்கா அன்புடன் சொன்னாள், "மரியா இப்பொழுதும் என் அம்மா என்னை என் சிநேகிதிகளுடன் பொருட்காட்சிக்கு அனுப்ப மாட்டார்கள் தெரியுமா? பொருட்காட்சிக்கு போவது எவ்வளவு பாதுகாப்பற்றது தெரியுமா? நீ காணாமல் போய்விடக் கூடும், உனது பணத்தை யாராவது திருடிவிடக்கூடும், உன்னைத் தனிமையாக பார்க்கின்ற அன்னியர்கள் உன்னை கேலி செய்யக்கூடும். உன் அம்மா உன்னை அதிகமாக நேசிக்கிறார்கள். ஆகையால் உனக்கு ஒரு கெடுதியும் நேர்ந்து விடக்கூடாது என்றுதான் உன்னை உன் அம்மா அனுமதிக்கவில்லை. உன் பெற்றோரை விட ஆண்டவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார்.... அவர் உன்னைப் படைத்தவர். எனவே நீ ஆண்டவருக்கு உன் விருப்பத்தை நிறைவேற்றும்படியாய் ஒப்புக் கொடுக்க வேண்டும். உன் பெற்றோருக்கு செவி கொடுப்பதின் மூலம் இப்பொழுதே நீ அதைச் செய்யலாம்" என்றார்கள். 

மரியா, 'சரியக்கா, நான் போய்  அம்மாவிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்" என்று சொன்னாள். அன்று மாலையில் அவள் அம்மாவிடம் "அம்மா, நான் முன்பு கோபமாய் இருந்ததற்காக நான் வருத்தப்படுகின்றேன். ராணி அக்கா பொருள்காட்சிக்கு போவது அவ்வளவு பாதுகாப்பாக இராது என விளக்கமாக கூறினார்கள்" என்றாள்.

அன்று இரவு மரியாவின் குடும்பத்தைப் பார்ப்பதற்காக அவளுடைய அத்தை கிராமத்திலிருந்து தன் பிள்ளைகள் துரை, வெங்கிட்டோடு   வந்திருந்தார்கள். நலபுலம் விசாரித்தபின்பு மரியாளைப் பார்த்து அவளது அத்தை, "மரியா நாங்கள் உன் மாமாவோடு நாளைக்கு பொருள்காட்சிக்கு போகப் போகிறோம், நீயும் வருகிறாயா?"  மரியா தன் தாயைப் பார்த்தாள், அவர்கள் புன்னகையோடு தலையை அசைத்தார்கள். 'ஓ நன்றி அத்தை நான் உங்களோடு வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி' என்று மரியா மகிழ்ச்சியுடன் கூறினாள். 

பொருள்காட்சிக்கு போவதைக் குறித்து மறுநாள் காலையிலேயே ராணி அக்காவிடம் கூறினாள். ராணி அக்கா சிரித்துக்கொண்டே, "பார்த்தாயா மரியா, கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவருக்கும் பெற்றோருக்கும் கீழ்படிந்தால் நிச்சயமாக அதற்கு பலன் உண்டு" என்றாள்.

இதை வாசிக்கிற குட்டீஸ் நீங்களும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கீழ்படிய வேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கின்றார். மரியாவைப் போல நாம் விரும்புகிறபடியே காரியங்கள் நமக்கு நடைபெற வேண்டும் என நாம் விரும்புகிறோம். தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து, தேவனுடைய வழிகளிலே நாம் நடந்தால், உள்ளத்தில் சமாதானமும் பெருமகிழ்ச்சியும் உண்டாகும். 

எனவே வேத வசனத்துக்கு கீழ்படிவீர்களா? இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்!
             

No comments:

Post a Comment