பேதுரு : திரும்பவும் நிறுவப்பட்ட ஒரு தலைவர்
வேதத்தில் சீமோன் பேதுரு 12 அப்போஸ்தலரிலும் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். புதிய ஏற்பாட்டில் உங்களுக்கு இயேசுகிறிஸ்துவின் மற்ற சீடர்களைவிட (அப்போஸ்தலர் பவுலைத் தவிர) இவரைப் பற்றிய தகவல்களை அதிகமாக நாம் பார்க்கலாம். 12 சீடர்களிலேயே முதலாவது பெயர் இவருக்குத்தான்.
சில நேரங்களில் பேதுரு, முட்டாள்தனமாக தவறுகள் இழைக்கும் மீனவனாக கொள்ளப்பட்டான். ஆனால் உண்மையாகவே பேதுரு ஆதி சபைக்கு முன் மாதிரியானவன். அவனுக்கு சீமோன் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. அவனுடைய தகப்பன் பெயர் யோனா (யோவான் 1:42). இவனது சகோதரன் அந்திரேயாவும் இயேசு கிறிஸ்துவின் சீடனாய் இருந்தான் (மாற்கு 1:16). பேதுரு திருமணமானவன். ஏனெனில்ஒரு முறை வேதாகமம் இயேசு, பேதுருவின் மாமியாரை சுகப்படுத்தியதாக குறிப்பிடுகின்றது (மத்தேயு 8:14,15)
கலிலேயாக் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களாக பேதுருவும், அந்திரேயாவும் இருந்தனர். ஒருவேளை யாக்கோபு மற்றும் யோவானோடு கூட சேர்ந்து மீன் பிடித்திருக்கலாம் (லூக்கா 5:10). இயேசு தன்னைப் பின்தொடரும்படி அழைப்பு விடுக்கும் முன்னே அவர்கள் யோவான் ஸ்நானகனின் சீடர்களாக இருந்தனர். இயேசுதான் மேசியா என அந்திரேயா முதன் முதல் அறிந்து கொண்டதின் மூலம், அந்திரேயாதான் பேதுருவை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தினான் (யோவான் 1:35-42).
இப்பொழுது நாம், பேதுரு இயேசுவை மறுதலித்தது, பாவத்தை அறிக்கை செய்தது, தேவனோடுள்ள ஐக்கியத்தை மீண்டும் பெற்றுக்கொண்டதைக் குறித்து நாம் பார்க்கப் போகிறோம்.
1) இயேசு கிறிஸ்து, பேதுரு தம்மை மறுதலிக்கப் போவதை முன்னறிவித்தது (லூக்கா 22:31-34)
2) பேதுரு இயேசுவை மறுதலித்தது, பின்பு மனங்கசந்து அழுதது (லூக்கா 22:54-62)
3) பேதுரு, இயேசு கிறிஸ்துவோடு கூட உள்ள ஐக்கியத்துக்குள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டான் (யோவான் 21: 1-23)
1) இயேசு கிறிஸ்து, பேதுரு தம்மை மறுதலிக்கப் போவதை முன்னறிவித்தது (லூக்கா 22:31-34):
இயேசு கிறிஸ்துவை பேதுரு மறுதலித்ததை வேதத்தில் உள்ள நான்கு சுவிஷேசங்களும் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) அறிவிக்கின்றன. ஆனால் லூக்கா மட்டுமே, பேதுரு எதிர்கொண்ட இந்த சோதனையில், பிசாசின் பங்கும் இருக்கிறது என்று விவரிக்கின்றார்.
சீமோனே, சீமோனே கோதுமையை சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான் (வசனம் 31) உங்களை வீழ்ச்சியுறச் செய்வதற்கு சாத்தான் எவ்வளவாய் விரும்புகிறான் என்பதை இந்த வசனத்திலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் அவன் கண்களுக்குப் புலப்படாதவன். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கே தெரியாமல் செல்வாக்குப் பெற அவனால் முடியும்.
சுளகினால் (உங்கள அப்பா, அம்மா காலத்திலே பயன்படுத்திய ஒரு கருவி) புடைப்பது என்றால், அதிலே தானியத்தைப் போட்டு மேலே தூக்கித் தூக்கிப் போடுவார்கள். பக்கவாட்டிலே வேகமாக அசைப்பார்கள். அப்பொழுதுதான் தானியத்தில் உள்ள பதர் மற்றும் சிறு சிறு கற்கள்தனியாக பிரியும். ஆண்டவரின் கோதுமை மணியிலிருந்து நம்மைப் பிரித்தெடுப்பதற்க்காக (நீக்குவதற்காக) சோதனைகள் மூலமாக உங்களை பிசாசானவன் புடைதேடுக்கிறான்.
உங்கள் அனுபவங்களில் இருந்து சோதனையிலிருந்து, சோதனைகளை ஜெயிப்பதென்பது அடிக்கடி கடினமாகத் தோன்றுகின்றது. சோதனை வழக்கமாகவே கவர்ச்சியானது. சொதனையான் கவர்ச்சிக்கு விட்டுக்கொடுக்கும்போது, அது பாவமாகின்றது. ஒருவேளை பாவத்தின் கவர்ச்சிக்கு திரும்பத் திரும்ப விட்டுக் கொடுத்தால், அதன் பலன் ஆண்டவரின் வழியிலிருந்து விழுவதாகிவிடும். எபிரெயர் 4:6-8ல்,
"ஏனெனில் ஒருதரம் பிரகாசிக்கப்பட்டு பரம் ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
ேவனுடைய நல் வார்த்தையையும் இனி வரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும்
மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து, அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற்க்கேதுவாய் அவர்கள் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.
எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும், சபிக்கப்படுகிறதற்க்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு"
மேலே உள்ள வசனங்களின்படி, சோதனைக்கு விட்டுக்கொடுக்கும்போது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்திர்க்குள்ளாக மீண்டும் வரும் விருப்பத்தையே அது இழக்கச் செய்துவிடும்.
ஒரு நற்செய்தி (வசனம் 32ல்) இயேசு பேதுருவைப்பார்த்து, அவனுடைய விசுவாசத்தில் அவன் இடறினாலும், அது முழுமையாக ஒழிந்து போகாது என உறுதியளிக்கின்றார். ஏனெனில் பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு, இயேசு ஜெபித்திருந்தார் (வ.32அ). பேதுருவுக்கு எதைச் செய்தாரோ அதையே அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைக்கும் எல்லோருக்கும் தினமும் செய்கிறார்.
மேலும் இயேசு கூறுகின்றார் (வ. 32ஆ), "நீ குணமாக்கப்பட்ட பின்பு உன் சகோதரரைக் குணப்படுத்து". 'குணமாக்கப்பட்ட பின்பு என்றால்' மீண்டும் மனந்திரும்பிய பின்பு எனக் கொள்ளலாம். சீடர்களின் பெயர்கள் எல்லாம் ஏற்கனவே பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கிறது (லூக்கா 10:20) 'நீ குணமாக்கப்பட்ட பின்பு' என்ற இந்த வார்த்தையைக் கூறினார். "நீ பழையபடி மனந்திரும்பியபின்பு, உன் சகோதரரை ஸ்திரப்படுத்து". இதுதான், இந்த அனுபவந்தான், பேதுருவை ஞானமுள்ளவனாக்கிற்று. அவன் இந்த ஞானத்தைக் கொண்டு, தனது சகோதரர்கள் முகஸ்துதி என்ற குழியில் விழாதபடி தவிர்க்க உதவிற்று.
சாத்தானின் சோதனை என்ற இயேசு கிறிஸ்துவின் எச்சரிப்புக்கு பின்பு, பேதுரு, "ஆண்டவரே, காவலிலும், சாவிலும், உம்மைப் பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன்" என்று பதிலளித்தான் (வ.33). மாற்க்கின் கணக்குப்படி, "இயேசுவின் நிமித்தம்,எல்லா சீடர்களும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என பேதுரு கூறுகின்றான் (மாற்கு 14:29) இது சுய நம்பிக்கை. அனுபவமில்லாத சீடத்துவம். (தனது சொந்த விசுவாசத்தின் பலவீனத்தை உணராத, அவனது இருதயமே வஞ்சிக்கப்பட்ட நிலைமை. இதிலிருந்து பிறந்ததுதான் மேலே மாற்கு 14:29ல், உள்ள வார்த்தைகள்.
வசனம் 22:34ல், இயேசு மிகச் சரியாக வருவதுரைத்தார்: பேதுருவே, இன்றைக்கு சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்" இது மிகச் சிறந்த முன்னுரைத்தல், இயேசுவின் முன்னறிதலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். பேதுரு தன்னை விட்டு ஓடிப் போகமாட்டான் என்பதையும், ஆனால் அவன் தன்னை மூன்று தரம் மறுதளிப்பான் என்பதையும் இயேசு நன்கு அறிந்திருந்தார்!
இயேசு விடிவதற்குள் (ஒரு சில மணி நேரத்துக்குள்ளேயே) அவன் மறுதலிப்பான் எனக் கூறினார்.
2) பேதுரு இயேசுவை மறுதலித்தது, பின்பு மனங்கசந்து அழுதது (லூக்கா 22:54-62)
லூக்கா 22ல், 34 முதல் 54 வரையுள்ள வசனங்களில், யூதாஸ் காரியோத்து, ரோம போர் சேவகர்களை கெத்சமனே தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, இயேசுவைக் காட்டிக் கொடுத்தது, பின்பு விசாரிக்க யூத பிரதான ஆசாரியன் வீட்டுக்கு இயேசுவை இழுத்துச் சென்றது என்ற நிகழ்வுகள் அடங்கியுள்ளன. இயேசுவை கேத்சமெனே தோட்டத்திலிருந்து இழுத்துக் கொண்டுவரும் பொழுது எல்லா சீடர்களும், ஓடிப்போய் விட்டார்கள். ஆனால் பேதுரு தூரத்திலே பின் சென்றான் (வசனம் 54).
ரொம்ப நேரத்துக்குப் பின் அல்ல எல்லாம் சிறிது நேரத்திலேயே நடந்தது. பேதுருவும் பிரதான ஆசாரியனுடைய முற்றத்திலே, நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தவர்கள் நடுவே உட்கார்ந்தான் (வ.55) அந்த பின்னிரவு நேரத்திலே அந்த நெருப்பின் அருகிலே இரகசிய கூட்டம் கூடிற்று. அவர்கள் அனைவரும் சுவிஷேசத்தை அலட்சியப்படுத்துகின்றவர்கள் - கிறிஸ்தவ விசுவாசத்துக்கு விரோதமானவர்கள் - அது இயேசுவுக்காகஉறுதியாக நிற்க முடியாத இடம். கொஞ்ச நேரத்திலே" ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக் கண்டு, உற்றுப் பார்த்து; இவனும் அவனோடிருந்தான்" என்றாள் (வ.56). அடுத்த வசனம் சொல்லுகிறது, "ஸ்திரியே அவனை அறியேன் என்று மறுதளித்தான்" பேதுரு இயேசுவை எளிதாக மறுதலித்தான்.
சற்று நேரத்துக்குப் பின்பு, வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்க்கு பேதுரு, மனுஷனே, நான் அல்ல என்றான்" (வசனம் 58)
ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பின்பு, மற்றொரு மனிதன் பேதுருவை கலிலேயன் என்று அறிந்து, சொன்னான்: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான். இவன் கலிலேயன்தான் என சாதித்தான். கலிலேயர்கள் அராமைக் மொழி பேசும் பொழுது சற்று வித்தியாசமாக உச்சரிப்பார்கள். வசனம் 60 பேதுருவின் பதிலை பதிவு செய்கின்றது, "மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன்" இதன் பொருள் நீ எதைப்பற்றிப் பேசுகின்றாய்! என்பதுதான்.
ஒவ்வொரு முறையும் பேதுருவைக் கேள்வி கேட்டபொழுது, அவன் உறுதியாக மறுத்தான். முதல் முறை நான் இயேசுவோடு கூட உள்ளவன் அல்ல (வ. 57); இரண்டாவது் முறை இயேசுவின் சீடர்களில் ஒருவன் அல்ல (வ. 58); மூன்றாவது முறை, மூர்க்கமாக இயேசுவையே தெரியாது (வ. 60)
அந்த நேரமே, பேதுரு இயேசுவை மூன்றாவது முறையாக மறுதலித்துப் பேசிக்கொண்டுருந்த பொழுதே, சேவல் கூவ ஆரம்பித்தது (வ. 60ஆ)
"அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்......" அவருடைய பார்வை, "நான் அப்பவே சொன்னேன்" என்று இல்லாமல், அன்பும், மன்னிப்பும் நிரம்பியதாய் இருந்தது. அது பேதுருவின் உள்ளத்தை உடைத்தது.
இயேசு கிறிஸ்துவின் பார்வையில் சீமோன் பேதுரு, வாடி வதங்கிவிட்டான். இயேசு கூறியதை, சேவல் கூவுவதற்க்குமுன் நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் எனக் கூறியதை நினைவு கூர்ந்தான் - தான் செய்ததின் தாக்கத்தை உணர்ந்தான். பொறுக்க இயலாத மன வேதனைக்குள்ளானான். அது அதிகாலை மூன்று மணி. சேவல் கூவுவது என்பது ரோமானியர்களுக்கு மூன்றாம் மணி வேளையின் முடிவு.
இந்த கவலைக்குரிய கதையின் நல்ல பகுதி என்பது, இந்த அதிகாரம் 61ம் வசனத்தோடு முடிவடையவில்லை. பேதுரு மனந்திரும்பினான்; கர்த்தருக்குள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டான்; அவனது மீதியுள்ள வாழ்க்கையில் இந்த தவறுக்காக மனம் வருந்தியதே இல்லை. "வெளியே போய் மனங்கசந்து அழுதான்" (வசனம் 62) இங்கே மனங்கசந்து அழுதான் என்பது இயேசுவை மறுதலித்ததால் மனமுடைந்து போனான் எனக் குறிப்பிடுகிறது. அவனது மென்மையான மனசாட்சி அவனை அழுகைக்கு நேராக நடத்தியது. இந்த நாட்களில் உங்களுக்கு பாவத்தின் மீது, மனமுடைந்த மனந்திரும்புதல் தேவை.
பேதுரு, ஆண்டவரை மறுதலித்தது, அவன் தனிமையாய் இருந்தபோது - மற்ற சீடர்களிடமிருந்து தனிமைப்பட்டிருந்த போது என்பதை அறிந்து கொள்ளுவது நல்லது. அந்த இரவிலே பேதுரு, யோவானுடன் அந்த முற்றத்துக்குள் பிரவேசித்தான். பின்பு அவன் தனிமைப்படுத்தப் பட்டான். (யோவானிடமிருந்து) மேலும் ஆண்டவரின் எதிரிகளின் மத்தியில் தனிமையில் நின்றிருந்தான்.
நீங்கள் தனியாக ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முயற்ச்சிக்கும்போழுது, நீங்கள் பலகீனமானவர்கள் என்பதை சாத்தான் நன்கு அறிந்திருக்கிறான். இயேசு கிறிஸ்து தமது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது தனியாக அனுப்பாமல், இரண்டு இரண்டு பேராக அனுப்ப இதுவும் ஒரு காரணம். புதிய ஏற்பாடு, விசுவாசிகள் ஒன்றாக கூடிவருதலை உற்சாகப் படுத்துகிறது (எபிரேயர் 10:25) விசுவாசிகளுக்கு, சக கிறிஸ்தவர்களின் தைரியப்படுத்துதலும், உதவியும் தேவையாய் இருக்கிறது. ஒரு சபையில் (விசுவாசிகளின் கூட்டம் - ஐக்கியம்) ஐக்கியம் இல்லாமல், ஒரு கிறிஸ்தவன் உச்ச நிலைக்குச் செல்ல முடியாது.
தேவ ஜனங்கள் ஒன்றாக ஜெபிப்பதற்கும், ஒன்றாக போட்டியிடுவதற்கும், ஒன்றாக ஆராதிப்பதர்க்கும் கூடி வருகின்றனர். நீங்கள் உங்கள் கூட இருக்கும் கிறிஸ்தவர்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போதும், அவர்களின் சாட்சியைக் கேட்க்கும்போதும், அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு பெறும்போதும் - ஆவிக்குரிய இருளில் தேவனற்ற சமுதாயத்தில் வாழும் நமக்கு, புதிய உற்சாகத்தையும், ஊழியம் செய்ய தைரியத்தையும், தருகின்றது. (பிலிப்பியர் 2:15)
3) பேதுரு, இயேசு கிறிஸ்துவோடு கூட உள்ள ஐக்கியத்துக்குள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டான் (யோவான் 21: 1-23)
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த பின்பு, கலிலேயாவில் தமது சீடர்களுக்கு தரிசனமானார். யோவான் எழுதிய சுவிஷேசம் 21ம் அதிகாரத்திலே இது விவரிக்கப்பட்டுள்ளது. சீடர்கள் வடக்கே இருந்த தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். ஒரு மாலைப் பொழுதில் பேதுரு மீன் பிடிக்கச் செல்லலாம் என முடிவெடுத்தார். மற்ற சீடர்களில் சிலர் பேதுருவோடு கூட சேர்ந்துகொண்டனர்.
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை. அவர்கள் கரைக்கு வந்தபொழுது, இயேசு (அப்பொழுது அது அவர்களுக்கு தெரியவில்லை) படகின் மறு பக்கத்தில் வலையைப் போடச்சொன்னார். வலை கிழிந்து போகத்தக்கதாக மீன்கள் அவர்களின் வலையில் அகப்பட்டது. சிறிது நேரத்திலேயே 153 பெரிய மீன்களால் நிறைந்த வலையை கரையிலே இழுத்தார்கள் (யோவான் 21:11)
பின்பு அவரை இயேசு என்று அறிந்து கொண்டார்கள். அவர் கரி தழலிலே காலை உணவை தயார் செய்திருந்தார் - சீடர்களை காலை உணவைத் தன்னுடன் சாப்பிடும்படி அழைத்தார்.
காலை சூரியோதயத்திலே கலிலேயாக்கடல் மின்னிக்கொண்டிருந்ததின் பின்னணியிலே, பேதுருவின் மேலிருந்து தண்ணீர் துளித்துளியாக சொட்டிக்கொண்டிருந்தது. மற்றவர்களும் நனைந்தபடியே தங்கள் படகில் கரைக்கு வந்தனர். அவர்கள் மிகவும் களைப்பாய் இருந்தனர். அவர்கள் தங்களுக்குள்ளே குசுகுசுவென்று பேசிக்கொண்டனர். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த அமைதி வேளையிலே, கரி தழல், பேதுருவுக்கு, சில நாட்களுக்குமுன் பிரதான ஆசாரியன் வீட்டு முற்றத்திலே குளிர் காய்ந்த நெருப்புத் தழலை நினைவு படுத்தியது. ஆண்டவரை அறிந்தும் மறுதலித்த நினைவும், சேர்ந்தே ஞாபகத்துக்கு வந்தது.
காலை உணவை முடித்தவுடன் இயேசு பேதுருவின் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தார். இவர்களிலும் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? (மற்ற சீடர்களைக் காட்டி) மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப்பற்றி பேதுருவுக்கு கவலையில்லை. ஆனால் மீண்டும் பிரச்சனைக்குள் போகாமலிருக்க அவன் விழிப்பாய் இருந்தான் (மாற்கு 14:29). "ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றான் (யோவான் 21:15) இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்க்கு அவன், ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிரத்தை நீர் அறிவீர் என்றான் (வ.21:16) மீண்டும் அதே கேள்வியை சீமோன் பேதுருவிடம் கேட்டார் (வ. 21:17).
இயேசு கேள்வி கேட்டபொழுது, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? (இங்கு அன்பு என்பதற்குகிரேக்க மொழியிலே அகாப்பே என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார் - அது ஆண்டவரைப் போல அன்பு செலுத்துவது, இது 1 கொரிந்தியர் 13 ம் அதிகாரத்திலே சொல்லப்பட்டுள்ளது. பேதுரு ஒவ்வொரு முறையும் பதிலளிக்கும்போது, பிலியோ என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். பிலியோ என்றால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையிலே உள்ள அன்பு, நண்பர்களிடையே உள்ள அன்பைக் குறிக்கின்றது. முன்பு மூன்று முறை மறுதலித்த போது, பேதுருவின் தன்னம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே அவன் மன உறுதியற்ற நிலையிலே தயக்கத்துடன் தேவ அன்பு என பொருள் கொள்ளுகிற அகாப்பே என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், பிலியோ என்ற சொல்லையே பயன்படுத்தினான். மேலும் பேதுரு சொல்லுகிறான், ஆண்டவரே நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் (வசனம் 17)
முன்பு கரி நெருப்புக்கு அருகில், பிரதான ஆசாரியன் வீட்டு முற்றத்தில் பேதுரு இயேசுவை மறுதலித்தான். இப்பொழுதோ, மற்ற சீடர்களுக்கு மத்தியில் வேறொரு கரி நெருப்புக்கு அருகில் பேதுரு ஸ்தாபிக்கப் படுகிறான். முன்பு ஆண்டவரை அறியேன் என்று மூன்று முறை மறுதலித்தான். இப்பொழுது மூன்று முறை ஆண்டவரிடத்தில் அன்பாயிருகிறேன்!
இந்த சிறிய நேருக்கு நேர் நிகழ்ச்சியை யோவான் 21ம் அதிகாரம் பதிவு செய்கிறது. இயேசு கிறிஸ்துவோடு கூட உள்ள உறவை உறுதி செய்கிறது. இது 'உன்னுடைய முந்தைய தவறுகளெல்லாம் வருத்தத்துக்குரியதுதான் - ஆனால் அது நேற்றைக்குள்ளது, இப்பொழுதோ நீ உன் கண்களை நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து எடுத்து, நாளைக்கு வரப்போகிற நிகழ்சிகளின் மீது பதிக்கவேண்டும். நாளைக்கு கர்த்தருடைய வசனத்தைக் கேட்க பல்லாயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டிருக்கின்றனர். நீதான் அதைக் கொடுக்க வேண்டும்! இயேசு, பேதுருவிடம் சொன்னார், "என் ஆடுகளை மேய்ப்பாயாக"
நேற்றைய தினம் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாதபடி போய்விட்டது. நாளைய தினம் இயேசுவின் மீதுள்ள உன் அன்பை நிரூபிக்க, தொடர்ந்து உண்மையுள்ளவனாக ஊழியம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறது. பேதுரு மெய்யாகவே மனந்திரும்பினான். இயேசு முழுமையாக மன்னித்துவிட்டார். பின்பு பேதுரு கிறிஸ்துவுக்குள்ளாக ஸ்தாபிக்கப்பட்டான், ஆண்டவரால் அதிகமாக உபயோகிக்கப்பட்டான். ஒரு சில வாரங்களிலேயே, பெந்தெகொஸ்தே நாளில் மிக வல்லமையாக பிரசங்கித்தான்!
இது எதைப் போன்றது என்பது நம்மில் அநேகருக்குத் தெரியும். ஏதோ ஓரிடத்தில் ஒரு சம்பவம் நடந்து, குற்றமுணர்ந்து வெட்கப்பட்டோம், மனப்பூர்வமாக தவறை நினைத்து வருந்தினோம். சில நேரங்களில் மன சாட்சி உறுத்துகின்றது. ஆனால் பேதுருவைப் போல, வரம்பு மீறி செயல்பட்டவைகளை உண்மை என்று ஒத்துக்கொள்ளும் சாத்தியம் உண்டு - நாமும் கூட ஆண்டவரோடுள்ள உறவை மீண்டும் ஸ்தாபிக்கமுடியும்.
இந்த பகுதியில் இருந்து நீங்கள் நடைமுறைப் படுத்த வேண்டிய விஷயங்கள் அநேகம் உண்டு
1) விசுவாசிகளுக்கு மிகப் பெரிய எதிரி பிசாசு என்று பார்த்தோம். சாத்தான் விசுவாசிகளை கோதுமையை சுளகினால் புடைப்பது போன்று புடைக்க விரும்புகிறான். நாம், பிசாசின் வல்லமை, அவனது செயல்கள், அவனது தன்மை ஆகியவைகளைக் குறித்து யோசிக்க, அக்கறை கொள்ளாத தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இயேசு பிசாசை, 'இந்த உலகின் அதிபதி', 'பொய்யும் பொய்க்குப் பிதாவும்' 'கொலைகாரன்' என்றும் கூறுகின்றார். பேதுருவும் தன் வாழ்நாளின் கடைசியில், 'கர்ச்சிக்கிற சிங்கம் போல, யாரை விழுங்கலாம் என வகைதேடி சுற்றித் திரிகிறான்' எனக் கூறுகிறான். யோவான் தன் கடிதத்தில் 'சகோதரர்களைக் குற்றஞ்சாட்டும் பிசாசு' எனக் கூறுகிறான். பிசாசு உண்மையிலேயே இருக்கிறான் எனக் கூற நாம் தயங்கக் கூடாது.
2) நாம் எப்பொழுதும் இயேசுவுக்கு ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர் நமக்கு வல்லமையுள்ள நண்பராக, தேவனுடைய வலது பாரிசத்திலிருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறபடியால். இயேசு பேதுருவைப்பார்த்து, உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டுதல் செய்திருக்கிறேன் எனக் கூறினார். உங்கள் எதிரிகள் வல்லமையானவர்கள். உங்கள் பலம் குறுகினது; இந்த உலகம் கண்ணிகள் நிறைந்தது; உங்கள் இருதயம் பலவீனமானது; இயேசு தேவனுடைய முன்னிலையில் உங்களுக்காக வேண்டுதல் செய்யாவிடில், (பேதுருவுக்கு செய்ததைப்போல) நீங்கள் பரலோகத்துக்கு செல்ல முடியாது.
3) பொதுவாக விசுவாசிகள் பாவத்தில் விழுவது என்பது மிகச் சிறிதாக ஆரம்பிக்கும். பின்பு ஒரே சீராக வளரும். பேதுரு, இயேசுவை மறுதலித்ததுக்கான ஒரு முக்கியமான முதற்படி தற்பெருமை பேசுவதால் வரும் சுய நம்பிக்கைதான். அதை தொடர்ந்து கெட்டவர்களோடு கலப்பது. அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முன் கோழையாவது. ஒன்றை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்! அது என்னவெனில், உலகத்தினால் கேலிக்குரியவராவது, நியாயத்தீர்ப்பு நாளிலே ஆண்டவரால் வெறுக்கப் படுகிற நிகழ்ச்சிக்கு நிகரானதல்ல!
4) சாத்தானின் சுளகில் புடைப்பதற்கு வி ட்டுக் கொடுப்பது, என்பது எப்பொழுதுமே சிறிய தவறுகளில் ஆரம்பிக்கிறது. பாபி லீச் ஸ்டார்லெட் என்பவர் பயங்கரமான துணிகரமான சாகசங்களை செய்கின்ற ஒரு சாகச வீரர். உலகப் புகழ் பெற்றவர். ஒருமுறை அமெரிக்க தேசத்தில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் மேலிருந்து ஒரு உடைந்துபோன மர பீப்பாய்க்குள் இருந்து குதித்தவர். சில வருடங்களுக்குப் பின் ஒரு ஆரஞ்சு பழ தோலில் மிதித்து சறுக்கி தரையில் விழுந்து கால் உடைந்து கஷ்ட்டப்பட்டார். அடிக்கடி ஒரு சிறிய அற்பமான சூழ்நிலை பெரிய விழுதலுக்கு காரணமாகி விடுகின்றது.
5) நாமும், பேதுரு இயேசுவை மறுதலித்ததைப் போல மறுதலிக்க முடியும்:
- நேர்மையில்லாத வியாபாரத்துக்கு உடன்படும்போது.....
- சரியான மற்றும் நல்லவைகளின் பக்கம் நீங்கள் நிற்காமல் போகும்போது.....
- அல்லது ஒழுக்கத்தைப் பற்றி நீங்கள் பேச வாய்ப்பு வரும்போது, யாரும் எப்படியும் போகட்டும் என பேசாமல் அமைதி காக்கும் பொழுது.....
நீங்கள் இயேசுவுக்காக நிற்க முடியும்:
- கர்த்தரின் நாளை நீங்கள் ஆராதனைக்கு, ஓய்விற்கும் ஒதுக்கும் பொழுது,
- உங்களைத் தவறாக உபயோகிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்க மறுக்கும் போது.......
- நீங்கள் இழிவான, கேவலமான பேச்சில் பங்கு பெறாமல் விலகும்போது.....
6) வேதாகமானது பேதுருவின் பண்பில் காணப்பட்ட பலவீனத்தை மறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்தான், குணப்பட்டபின் இரு மாதங்களுக்குள் பெந்தேகோஸ்தே நாளில் பிரசங்கித்த பொழுது 3,000 பேர் மனந்திரும்பினர். பேதுருவினுடைய வாழ்க்கையிலே, ஆண்டவருடைய கிருபை, அவனை மறுரூபப்படுத்தியத்தைத் தொடர்ந்து, தைரியமுள்ள தலைவனாக, வல்லமையுள்ள சாட்சியாக, அப்போஸ்தலர் நடப்படிகள் புத்தகம் அவனைக்குறித்து அறிவிக்கின்றது. கர்த்தர் மற்றவர்களுக்கு என்ன செய்தாரோ அதையே உனக்கும் செய்ய முடியும்!
கர்த்தர் பேதுருவை மீண்டும் நிறுவிய அனுபவத்துக்குப் பின், அவனுடைய சாவை அவன் நினைவு படுத்திக்க கொண்டான். (நம் எல்லாருக்கும் வரும் சாவைப்போல) அது நம்மை உண்டாக்கினவரின் கரங்கள்! (யோவான் 21:18-23)
இந்த வேத பகுதியில், அவன் இரத்த சாட்சியாக மரிக்கப் போவதை தீர்க்கத்தரிசனமாகக் காண்கிறோம். ஆனால் பேதுருவின் கடைசி நாட்களில் அவனுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை அவன் அறிந்த பொழுது, அவனுக்கு யோவானுக்கு என்ன நடக்கும் என்பதைக் குறித்து அறிந்துகொள்ள ஆவல் உண்டாயிற்று - எனவே யோவானுக்கு என்ன நடக்கும் என்பதை ஆண்டவரிடம் கேட்டான்.
அதற்கு இயேசு மிகச் சரியாக - யோவானுக்கு நான் என்ன தெரிந்தெடுத்திருக்கிறேன் என்பதை அறிவது உன் வேலையல்ல என்றார். எந்த மாதிரியான சாவு ஆண்டவருக்கு அதிக மகிமையைக் கொண்டுவரும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
சரித்திர பின்னணியின் வெளிச்சத்திலே நீங்கள் 12 அப்போஸ்தலர்களின் முடிவைப் பார்க்கும்போது நீங்கள் சொல்லலாம்: யோவான் மரித்ததை போலஇயற்கையாக - முதிர் வயதில் மரிப்பவர்கள் - மகிழ்ச்சிக்குறியவர்கள். பேதுருவைப்போல இயற்க்கைக்கு அப்பாற்பட்டு சிலுவையில் அடிக்கப்பட்டு மரிப்பவர்கள் - மதிப்பு மிக்கவர்கள். ஒரு வேளை இப்போதிருப்பவர்கள் அதை போன்றதொரு மரணத்தை அனுபவிக்க மாட்டார்கள். யோவான் 21:22ல், உள்ள வார்த்தை, நம்புவதற்கு ஒரு பாடத்தை நோக்கமாக கொண்டிருக்கிறது. அது மன நிறைவுள்ள ஆண்டவரின் திட்டம் ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்கும் உண்டு என்பதுதான்.
வாழ்க்கையின் சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, கிறிஸ்தவ விசுவாசிகளாக உங்களுக்கு அழைப்பு விடுப்பது என்னவெனில் 'நீ என்னைப் பின் பற்றி வா' - சாராம்சம் என்னவெனில் இந்த அழைப்புதான் யோவான் 21:22ல், பேதுருவும் கொடுக்கப்பட்டது. 'என்னைப் பின் பற்றி வா' என்பதின் சரியான அர்த்தம் என்னவெனில் நீ எண்ணெய் பின்பற்றிக் கொண்டே இரு என்பதுதான்!
"இயேசுவை பின்பற்றிக் கொண்டே இரு" என்பது,
வேதவசனத்தின் அதிகாரத்தைப் பற்றிய இயேசுவின் பார்வையை ஏற்றுக்கொள்ளுவது (மத்தேயு 22:31ஆ)
இயேசு மட்டுமே இரட்சிப்புக்கு வழி என்பதை ஏற்றுக்கொள்ளுவது (யோவான் 14:6)
இயேசு பாவிகளுக்கு விலகினர் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளுவது (எபிரேயர் 7:26)
குற்றஞ்செய்தவர்களுக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளுவது (மத்தேயு 6:14,15)
மேலும் இதற்குப் பின் வரும் வாழ்க்கையின் இயற்கைத் தன்மையை ஏற்றுக்கொள்ளுவது (யோவான் 5:28, 29)
இவைகளை அப்படியே ஏற்றுப் பின்பற்றுவதுதான் இதன் பொருள்.
"நான் வருமளவும் இவனிருக்கஎனக்குச் சித்தமானால் உனக்கென்ன நீ என்னைப் பின்பற்றி வா" (வ.22) மிகச் சிறந்த வேத விளக்கங்களில் ஒன்று, இந்த வசனம் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிக் குறிப்பிடுவதாக கூறுகின்றது. வேறு ஒரு வேத விளக்கம், இயேசுவின் வருகையைப் பற்றி யோவான் 14: 1-3ல், விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிடுகின்றது. எது எப்படி இருந்தாலும் இருக்காவிட்டாலும், இயேசு திரும்பவும் எந்த வினாடியிலும் வருவார் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இயேசு திரும்ப வரும் வரை தொடர்ந்து வாழ வேண்டும். உண்மையாக ஊழியம் செய்யவேண்டும்- வாழ்வதற்கு வேலை செய்ய வேண்டும்.
ஜெபிப்போம்!
அன்பின் பிதாவே! பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அனைத்துப் பாடங்களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.... பேதுருவை மீண்டும் நேர்த்தியாக நிலைநிறுத்திய உமது அன்புக்காக, உமது ஜெபத்துக்காக, ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்தியமைக்காக, இந்த பாடத்தின் மூலமாக நாங்கள் மனந்திரும்பவும், ஊழியத்தை வல்லமையாய் செய்ய கொடுக்கிற உற்சாகத்திற்காகவும் பிதாவே உமக்கு நன்றியும், துதியும், கனத்தையும், மகிமையையும் இயேசுவின் நாமத்தில் செலுத்துகிறோம் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென், ஆமென்.
இந்த செய்தி தமிழைத் தாய் மொழியாக கொண்டுள்ள தமிழர்களை சந்திக்க “Bible helps” நிறுவனத்தாரின் Peter: A Restored Leader (A Study of Luke 22:31-34; 54-62; John 21:1-23) Booklet No: 418 என்ற சிறு நூலை மையமாகக் கொண்டு எழுதி வெளியிடப் படுகின்றது.
வெளியிடுபவர்: சகோ. செல்வின் துரை.
No comments:
Post a Comment