30 Sept 2017

DEBT PART - 3

கடன் - பகுதி 3

பிரியமான நண்பர்களே! 

விளம்பரங்கள் எப்படி மனிதனை கடனுக்குள்ளாக கொண்டு செல்லுகிறது? என பகுதி - 2ல் பார்த்தோம். உதாரணத்துக்கு, சண்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் (சென்னை பதிப்பு) கடந்த ஜூலை 30ம் தேதி வெளியான ஒரு விளம்பரத்தை இங்கு நாம் காணலாம். இது ஒரு தனியார் வங்கியின் விளம்பரம். இது பத்திரிக்கையின் முதல் பக்கத்திலே வந்த அரைப் பக்க விளம்பரம்! விளம்பரம் இதோ!

ஆகஸ்டு ஒன்று முதல் பதினைந்து வரை தினந்தோறும் அந்த வங்கியின் ரொக்க அட்டை அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்தி அதிக பட்சம் பொருள் வாங்குபவர்களுக்கு, 100 கிராம் தங்கம் இலவசம்! ஒருவேளை அந்த வங்கியின் கடன் அட்டையோ, ரொக்க அட்டையோ இல்லாவிடில் அதை பெற்றுக்கொள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைக்க வேண்டும். புதிய அட்டைக்கு பதிவு செய்தாலே போதும், ரூபாய் 500 மதிப்புள்ள பணக்குறிப்பு சீட்டு (வவுச்சர்) குரோமா பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்க கொடுக்கப்படும்! மேலும் ரூபாய் 15,000 மதிப்புள்ள பொருட்களை அவர்கள் அட்டையைப் பயன்படுத்தி பொருள் வாங்கினால், ரூபாய் 1,000 மதிப்புள்ள பிணக்குறிப்பு சீட்டு வழங்கப்படும். அவர்களுடைய அட்டையைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்குங்கள், சாப்பிடுங்கள், பயணம் செய்யுங்கள், பில் கட்டுங்கள் - இப்படியெல்லாம் செலவழிக்கலாம்! இப்படிப்பட்ட விளம்பரங்கள் மக்கள் மனதை மயக்கி விரைவாக கடனுக்குள் தள்ளிவிடுகின்றது. அதிகமான விளம்பரங்களை பார்த்தாலே, அவை உங்களை அதிகம் செலவளிப்பவராக மாற்றி கடனுக்குள்ளாக கொண்டு சென்றுவிடும். 

கடன் இனிமேல் வாங்க வேண்டியது இருந்தால், என்ன என்ன கோட்ப்பாடுகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்? என்பதைக் குறித்து பார்ப்போம். 
1. கடன் தொகையோ, திரும்பிச் செலுத்தும் தவனையோ உங்களை, உங்கள் மனநிலையை இப்போதிருக்கின்ற உங்கள் வாழ்க்கைத்தரத்தைப் பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். 
2. நீக்கள் வாங்கும் கடன், உங்களுக்கு வருமானத்தைத் தருவதாக இருக்க வேண்டும். (திருமணத்துக்காக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இயேசுவை அறியாதவர்கள், கடன் வாங்கி கோவில் குளங்களுக்கு தங்கள் நேர்த்திக் கடனை முடிப்பதற்காக செல்லுகின்றனர்) வருமானம் வராத எதற்காகவும் கடன் வாங்கக் கூடாது. 
3. திரும்பிச் செலுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் அளவிற்கு கடன் தொகை அதிகமாக இருக்கக் கூடாது. 

எப்படி திருப்பி செலுத்துவது என்பது மிகவும் முக்கியம். கடன் வாங்கும் முன்பே இதைக் கணக்கு பார்க்க வேண்டும். தொழிலிலே முதலீட்டு கடன் வாங்கலாமா? கடனைத் திருப்பி செலுத்துவதற்கு தனிப்பட்ட முறையில் உங்கள் மேல் நிர்பந்தம் இல்லையெனில் வாங்கலாம்.

வீட்டுக் கடனைப் பொறுத்த அளவில், உங்களுக்கு இரண்டு குடும்பங்கள் நடந்து கொண்ட முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுவோம். (பெரு நகரங்களில் இருக்கும் குடும்பங்களுக்கு இது மிகவும் பொருந்தி வரும்.

குடும்பம் எண் 1: இந்த குடும்பம் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தது. வாடகை வீட்டில் இருந்ததால் வீட்டுச் சொந்தக்காரருடைய தொல்லைகள் மிக அதிகம். மின்சாரக் கட்டணம் ஒரு அலகுக்கு 3 முதல் 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியதிருந்தது. வீட்டுக்கு விருந்தினர் அடிக்கடி வரக்கூடாது. (தண்ணீர் அதிகமாக செலவளியுமாம்) இன்னும் நிறைய கட்டுப்பாடுகள். அந்த நேரத்தில் வேலை செய்துவந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஊரின் ஓரத்தில் உள்ள இடத்தில் வீடு கட்டுவதற்கு நிலம் வாங்கிப்போட்டனர். உடனே கட்ட பணம் இல்லாதபடியால் நாட்கள் தள்ளிப்போனது. இதற்கிடையில் பல்வேறு அடுக்ககங்களில் வீடுகள் விலைக்கு வந்தது. குடும்பத்தில் ஒருவர் ஓரளவு நன்கு சம்பாதித்ததால், ஒரு வீடு வாங்கிவிடலாம் என முடிவெடுத்து பல்வேறு வீடு கட்டுவோரிடம் சென்று வீடுகளை பார்த்தனர். இப்போது இருக்கும் வீட்டு வாடகை ரூ.600/-, மின்சாரக் கட்டணமாக 200 செலவாகியது. முறைவாசல் ரூ.20 என மாதம் ரூ.820 செலவாகியது. 
கடைசியில் ரூ. 3 லட்ச ரூபாயில் வீடு ஒன்று பிடித்துப் போனது. வீடு வாங்க கடன் கொடுத்த நிறுவனம் மாதம் செலுத்து தொகையாக, ரூ.805 என 25 வருடங்களுக்கு நிர்ணயித்தது. (கடன் கொடுத்த நிறுவனத்தில் வேலை செய்தபடியால் வட்டித் தொகை மிகவும் குறைவாக இருந்தது) வருமான வரியிலிருந்து கட்டுகின்ற செலுத்து தொகைக்கு, அரசாங்கம் வரிவிலக்கு அளித்தது. (அரசாங்கமும் கடன் வாங்க மக்களை ஒருவிதத்தில் ஊக்குவிக்கிறது) வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்படுவதைவிட அதே தொகையை நிதி நிறுவனத்துக்கு செலுத்தி சொந்த வீட்டில் குடியிருக்கலாம் என மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு வீட்டை வாங்கி குடியேறினர். வருடங்கள் உருண்டோடின. குடும்ப வருமானம் அதிகரித்தது. வங்கியில் கையிருப்பு கூடியது. வேறு எதிலாவது முதலீடு செய்யலாம் என முடிவெடுத்த பொழுது, மிகவும் அறிந்த ஒருவர், வீடு கட்டி விற்கும் தொழிலை புதிதாக தொடங்கினார். தனது திட்டத்தில் ஒரு வீட்டை வாங்குங்கள் என உற்ச்சாகப் படுத்தினார். சரி என ஒப்புக்கொண்டு 10 லட்ச ரூபாயில் ஒரு வீட்டை வாங்க ஒப்புக்கொண்டனர். இப்பொழுது இருக்கிற வீட்டைவிட்டு பெரிய வீடு. திட்டம் மிகவும் பிடித்துப் போனது. 10 வருடத்தில் கடன் தொகையை கட்டிவிடலாம் என முடிவெடுத்து அந்த திட்டத்தில் சேர்ந்தனர். கடன் கொடுத்த நிறுவனத்துக்கு மாதம் ரூ.12,000 கட்டவேண்டும். இருக்கின்ற வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, புதிய வீட்டில் குடியேறினர். பழைய வீட்டு வாடகை ரூ.6,000/-. மீதி பணத்துக்காக தங்கள் அன்றாட செலவுகளைக் குறைத்தனர். பிள்ளைகளுக்கு கூட செலவழிக்க கனக்குப் பார்த்தனர். மிகச் சிக்கனமாக 2 வருடங்கள் குடும்பம் நடத்தினர். கடன் கொடுத்த நிறுவனத்தைக் காட்டிலும், குறைந்த வட்டி வாங்கும் வேறொரு நிறுவனத்துக்கு தங்கள் கடனை மாற்றினார். இவர்கள் வாழ்ந்த சிக்கன வாழ்க்கையில், பள்ளியில் இவர்கள் பிள்ளைகளை மிகவும் ஏழைகளாக பார்த்தனர். இது பிள்ளைகளை பாதித்தது. ஆனாலும் வேறு வழி இல்லை. (பணத்தின் அருமையை பிள்ளைகள் கற்றுக் கொண்டார்கள் என்பது வேறு செய்தி) பணமதிப்பு இழந்தது. வருமானம் கூடியது. இப்பொழுது தங்களது வாழ்க்கையில் ஓரளவு சாதாரணமாக செலவழிக்க முடிந்தது. 

இப்பொழுது, முன்பு வாங்கிப் போட்ட இடத்தில் வீடுகட்ட முடிவெடுத்தனர். மதிப்பு 16 லட்சம். மிகப்பெரிய வீடு. 8 வருடத்தில் கடனைக் கட்டி முடிக்க வேண்டும். இரண்டு வீட்டு வாடகை, மற்றும் சிக்கன வாழ்க்கை தொடருகின்றது. இப்பொழுது பிள்ளைகளும் வளர்ந்து வேலைக்கு செல்ல, சம்பாதிக்க  ஆரம்பித்து விட்டனர். இனிமேல், இரண்டாவது குடும்பத்தைப் பார்ப்போம்.

குடும்பம் எண் 2: இவர்கள் நடுத்தர குடும்பம். கணவன், மனைவி இருவரும் வேலை செய்தனர். வாடகை வீட்டில் வாழ்ந்தனர். ஒரு வீடு குத்தகைக்கு (லீஸ்) வந்தது. 1.5 லட்ச ரூபாய். கையில் கொஞ்சம் பணம் இருந்தது. மீதிக்கு நகையை அடகு வைத்து, பி.எப். ல், கடன் வாங்கி, லீஸ் வீட்டில் குடியேறினர். இப்பொழுது முன்பு வாடகை கொடுத்துக் கொண்டிருந்த பணத்தில், நகைக்கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து, பி.எப். கடன்  சம்பளத்தில் பிடித்தம் செய்ததால், மிக சிக்கனமாக வாழ்ந்து, மீதி பணத்தை சேர்த்து வந்தனர். வீட்டுச் சொந்தக்காரர் 2 வருடங்களுக்குப் பின், மேலும் ரூ. 50,000/- கொடுங்கள் என்றார். சரியென பணத்தைப் புரட்டிக் கொடுத்தனர். மேலும் இரு வருடங்கள் சென்றது, சொந்த நிலத்தில் வீடு கட்டவேண்டும்; மதிப்பு ரூ.10,00,000/- வங்கிக்கடன். மாதம் ரூ.12,000 கட்டவேண்டும். வீட்டைக் காலி செய்த பொழுது, கொடுத்த ரூ. 2,00,000 ஐ  வாங்கிக்கொண்டார். இப்பொழுது சிக்கனமாக வாழ்ந்து, பணத்தை வங்கிக்கு கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

கடனைக் குறித்த இக்கட்டுரை இத்துடன் முடிவடைகின்றது. இது உங்களுக்குத் பிடித்திருந்தால் இந்த வலைத்தளத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். நன்றி! 

        

29 Sept 2017

YOU ARE THE CHILDREN OF GOD!

 நீங்கள் கடவுளின் பிள்ளைகள்!!

நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துங்களுடன் வணக்கங்கள்!

"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12)

வெகு நாட்களுக்கு முன்  நகைக்கடை ஒன்றில்   வாலிபன் ஒருவன் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தான். அவன் தனது வேலையில் அர்ப்பணிப்பினாலும், உண்மையினாலும் படிப்படியாக உயர்ந்து, அந்த கிளையின் மேலாளர் ஆனான். மேலும் தனது திறமையைப் பயன்படுத்தி அந்த கிளையின் விற்பனையை இருமடங்காக்கினான். இதை பார்த்த அந்த கடையின் நிர்வாகம் அவனை இன்னும் 2 கிளைகளுக்கு சேர்த்து மேலாளர் ஆக்கியது. அந்த கிளைகளும் விற்பனையின் உச்சகட்டத்தை எட்டியது. எனவே தனது எல்லாக் கிளைகளுக்கு சேர்த்து பொது மேலாளர் ஆக்கியது நிர்வாகம். நல்ல சம்பளம், இதர வசதிகள்....... இப்பொழுது அக்கடையின் முதலாளி சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதை அறிந்த அந்த பொது மேலாளர், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில் எனது நிர்வாகத்தில்தான் எங்கள் கடை பல்வேறு கிளைகளாகப் பிரிந்து விரிந்து, நல்ல வருமானத்தை ஈட்டியது. எனவே சொத்தில் ஒரு பங்கை எனக்கு கொடுக்க உத்திரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

சற்று யோசித்துப் பாருங்கள்! நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்திருக்கும். நீதிமன்றம் நீர் எவ்வளவுதான் இந்த கடைக்காக உழைத்து இதின் வளர்ச்சிக்கு பாடுபட்டிருந்தாலும், நீர் சம்பளம் வாங்குகிற வேலைக்காரன்தான்! இந்த சொத்துக்கள் அவருடைய பிள்ளைகளுக்கே சேரும், சந்ததிதான்  சொத்துக்களை அனுபவிக்க முடியும் என தீர்ப்பளித்தது.

இதேதான் மேலே நீங்கள் வாசித்த வசனமும் கூறுகின்றது. ஆண்டவருக்கு உரியதெல்லாம், உங்களுக்குத்தான், (அதிகாரத்தோடுகூட) நீங்கள்தான் அனுபவிக்க முடியும். இயேசு சிலுவையில் சம்பாதித்து வைத்திருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களும் உங்களை சேர்ந்தது! 

ஒருவேளை அந்த நகைக்கடைக்காரரின் பிள்ளைகள் துன்மார்க்கமாக ஜீவித்தாலும் அனுபவ பாத்தியதை அனைத்தும் பிள்ளைகளுக்குத்தான்.  காரணம் பிள்ளைகள் என்ற மாறாத, உரிமையான உறவுதான்! 

ஒருவேளை நீங்கள் ஆண்டவரைப் பார்த்து நான் தகுதி இல்லாதவன் (ள்), குப்பை, புழு, ஒன்றுக்கும் உதவாதவள் (ன்) என்றெல்லாம் ஜெபித்திருந்தாலும், (ஆண்டவருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள் என்பது இப்படிக்கு கூறுவது அல்ல, நீங்கள் இப்போதிருக்கும் நிலைமையை அப்படியே ஆண்டவரிடம் ஒத்துக்கொள்ளுவதும், ஆண்டவருடைய மகிமையை-வல்லமையை-அன்பை உயர்த்திப் புகழுவதும்தான்) ஆண்டவர் என்னவோ உங்களை தனது மகளாக, மகனாகத்தான் பார்க்கின்றார். அவர் வானத்தையும், பூமியையும் படைத்தவர். அவர் உங்கள் சொந்த தகப்பன் என்ற உரிமையின் அடிப்படையில் கெட்டப் பெற்று கொள்ளவேண்டும்! இயேசு சிலுவையில் சம்பாதித்த அனைத்தும் பாவமன்னிப்பு (முக்காலத்துக்கும்), சுகம், சாபத்திலிருந்து விடுதலை உங்களுக்கு சொந்தமானது. இதில் ஏதாவது ஒன்றில் நெருடல் வந்தால், கடவுளுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்தவேண்டும். நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள்! 

உங்கள் பிள்ளைகள் உங்கள் விருப்பத்தினாலோ, செயல்களினாலோ பிறவாமல் தேவனால் பிறந்தவர்கள். மேலும் 1பேதுரு 1:23ன் படி,
"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கின்றீர்களே" (பிறப்பிக்கப் பட்டிருக்கின்றீர்களே ) 

இங்கே நான் குறிப்பிடுவது உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் சேர்த்து. இதை நீங்கள் விசுவாசிக்கிண்றீர்களா? 

விசுவாசித்தால் வரும் பலன்:
"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான்" (1யோவான் 3:9). 

மேலும், இந்த வசனம் உங்களை உற்ச்சாகப்படுத்துகின்றது. 1யோவான் 5:18ல்,
"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான். பொல்லாங்கன் அவனைத் தொடான்"
உங்கள் பிள்ளைகள் பாவஞ்செய்ய மாட்டார்கள் என நீங்கள் அறிந்திருக்கின்ரீகளா? 

எனவே பிள்ளைகளைக் குறித்த பயம், கவலைகளை விட்டொழியுங்கள். பிள்ளைகளைக் குறித்த பயம் அல்லது கவலை வந்தால் இந்த வசனங்களை, (உங்களுக்கு ஆண்டவர் அதிகாரம் கொடுத்திருக்கின்றார்) பயன்படுத்துங்கள், அறிக்கை செய்யுங்கள். சமாதானத்தைப் பெற்று கொள்ளுவீர்கள்! அறிக்கை செய்ததின் பலனைப் பெற்று கொள்ளுங்கள்! 

உன் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களுடைய சமாதானம் பெரிதாய் இருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, தமது பிள்ளைகளான உங்களுக்கு பரிசுத்த ஆவியை-நன்மைகளை வழங்காதிருப்பாரோ? நிச்சயமாகவே கொடுப்பார். 

இயேசு கிறிஸ்து, கூனியை சுகப்படுத்தியதை நீங்கள் அறிவீர்கள், சகேயு வீட்டுக்கு இரட்சிப்பு வழங்கியதையும் அறிவீர்கள்! இந்த இரு நபர்களிடமும் ஆண்டவர் பார்த்தது என்ன தெரியுமா? கூனியைப் பார்த்து, இவளும் ஆபிரகாமின் குமாரத்தியாய் இருக்கிறாள் என்றும், சகேயுவை பார்த்து, இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாய் இருக்கிறானே என்றும் கூறினார். ஆண்டவர் பார்த்த தகுதி இதுதான். 
"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராகவும் இருக்கின்ரீர்கள்" (கலா.3:29)

உங்களை ஆசீர்வதிக்க ஆண்டவர் உங்களிடம் பார்க்கும் ஒரே தகுதி, நீங்கள் தேவனுடைய பிள்ளைகள்; ஆபிரகாமின் சந்ததியார். எனவே தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே நெருங்கிச் சேருங்கள்!  

ஜெபிப்போம்!

எங்களை நேசிக்கின்ற அன்பின் பிதாவே! இயேசுவின் நாமத்தில் உமக்கு துதி, கணம், மகிமையை செலுத்துகிறோம்! இதை படிக்கின்ற அன்பு நண்பர்கள் யாவரையும் விசுவாசத்தின்  மூலமாக, உமது பிள்ளைகளாக தெரிந்து உமது அதிகாரத்தை தந்திருப்பதற்காய் உமக்கு நன்றி! உமது பிள்ளைகள் என்ற சுதந்திரத்தினால் வரும் அத்தனை ஆசீர்வாதத்தையும் பெற்று அனுபவிக்கவும், பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும், எங்களை இந்த செய்தியின் மூலமாய் நடத்தியதற்காய் நன்றி!! நாங்களும் எங்கள் சந்ததியும் இயேசுவின் நாம மகிமைக்காக வாழ ஒப்புக்கொடுக்கின்றோம்! நாங்கள் பெற்று இருக்கிற இந்த பேற்றை எமது இரட்சிக்கப்படாத நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளோர் அனைவரும் பெற்றுக்கொள்ள ஜெபிக்கிறோம்! அதற்கான பிரயாசங்களை ஆசீர்வதியும்! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.