கடன் - பகுதி எண் 4
நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
இந்த பகுதியின் தலைப்பு, ஆலோசனை. இந்த தலைப்பு கடனுக்கு கீழ் வந்தாலும், உங்களுக்கு எந்த பிரச்சனைக்கும் ஆலோசனை பெற்று செயல்படுவது மிக நல்லது.
ஆலோசனை: பொதுவாக இக்காலத்தில், ஆலோசனை மற்றும் அறிவுரையை யாருமே ஏற்றுக் கொள்ளுவதில்லை. சொன்னால் அது அவர்களுக்குத்தான் எனக்கில்லை என்ற மனப்பான்மைதான் காரணம். ஆனால் வேதாகமம் உங்களுக்கு நீதி. 19:20ல்,
"உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு புத்திமதியை ஏற்றுக்கொள்"
ஆங்கில வேதாகமத்தில் இதே வசனம், உன்னால் முடிந்த அளவுக்கு புத்திமதியைக் கேட்டுக்கொள். அதனால் உன் எஞ்சிய காலத்துக்கும் சமாதானத்தோடு இருப்பாய், என வருகின்றது.
முதலாவது, முடிவெடுப்பது ஆலோசகரின் வேலையில்லை, நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். மேலும் நீங்கள் முடிவெடுத்தபின் ஆலோசனைக்குச் சென்றால், ஆலோசகர் கூறுவது எதுவும் உங்கள் மண்டையில் ஏறாது. ஏற்கனவே நீங்கள் முடிவெடுத்துவிட்டபடியினால், ஆலோசனை கசப்பாக தெரியும். இதற்கடுத்து என்னசெய்வதென்றே தெரியவில்லை, என்ற சூழ்நிலையில் இருந்தால், ஆலோசனையை கவனமாக கேட்பீர்கள், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யமுடியும். ஒரு தீர்க்கமான முடிவிற்கு நீங்கள் வரமுடியும். ஏதாவது ஒன்றை செய்ய முடிவெடுத்தால், (கடன் வாங்குவது அல்லது அடைப்பது உட்பட) அதைக் குறித்ததான அனைத்து தகவல்களையும் சேகரியுங்கள். ஆனால் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்காதீர்கள். உங்களுக்கு அதைக்குறித்து விசுவாசம் இருந்தால் செயல்படுத்துங்கள்! எல்லா விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
இஸ்ரவேல் மக்கள், விசுவாசத்தில் செயல்படுவதற்குப் பதிலாக தங்கள் கண்களால் காணும் தகவலின் அடிப்படையில் செயல்பட்டதால், ஒரு சந்ததியே இல்லாமல் போகும் அளவிற்கு 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் சுற்றித்திரிந்ததை நீங்கள், எண்ணாகமம் 13,14ம், அதிகாரங்களில் இந்த சம்பவத்தை வாசிக்கலாம். ஆண்டவர் செய்ய சொல்லிவிட்டார் என்றால், தைரியமாக விசுவாசத்தில் முன்னேறிச்செல்ல முடியும்.
ஆலோசனையை எதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
1. வேதாகமம் தரும் ஆலோசனை: சங்கீதம் 119:24ல்,
"உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது."
இங்கே சாட்சி என்பது வசனத்தைக் குறிக்கின்றது. வசனம் உங்களது நல்ல ஆலோசனைக்காரர்.
யார் பணம் சம்பத்தப்பட்ட தீர்மானங்களை திறனுடன் எடுப்பார்கள்? என யோசிக்கும்போது, முதியவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனுபவசாலிகள் உங்கள் மனதிலே வருவார்கள். வேதாகமத்தில் நீங்கள் தேடினால் உங்களுக்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆலோசனையைவிட, அதிக அறிவும், ஞானமும் கிடைக்குமென்று வேதவசனம் கூறுகின்றது.
வேதாகமம் உங்களுக்கு தெளிவான பாதையைக் காட்டும்போது, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவீர்கள். ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைக் குறித்து, வேதாகமத்திலிருந்து நேரடியாக பதிலைப் பெற்று கொள்ளமுடியாத பட்சத்தில், தேவனுடைய பிள்ளைகளிடத்தில் இருந்து ஆலோசனையை பெற்றுக் கொள்ளமுடியும்.
2. தேவனுடைய பிள்ளைகளிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை:
"நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது, அவன் கடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை" சங்கீதம் 37:30,31
நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாயிருக்கிறீர்கள். அவயவங்கள்
ஒன்றை ஒன்று சார்ந்து வாழுகின்றது. ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் சில வரங்களையும் திறன்களையும் கொடுத்திருக்கிறார். அனைவருக்கும் எல்லா வரங்களும், திறன்களும் கொடுக்கப்படுவதில்லை.
தம்பதியினர்: உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால், நீங்கள் ஆலோசனை கேட்க வேண்டிய நபர், உங்கள் வாழ்க்கைத்துணை. ஒருமுறை தொடர்ந்து 3 வருடங்கள், மழை, தண்ணீர் இல்லை. ஒரு குடும்பத்தின் தலைவர் தனது மனைவியிடம், வருமான குறைவை எடுத்து கூறினார். இன்னும் ஒரு சிறிய வருமானமாவது இருந்தால் குடும்பத்தைக் குறைவின்றி (கடனின்றி) நடத்தலாம் என்ற சூழல். மனைவி தனது கணவரைப் பார்த்து, எனக்கு சௌமிட்டாய் போடத்தெரியும், (தாய் வீட்டில் கற்றது) மிட்டாய் போட்டு, பக்கத்தில் இருந்த வீட்டில் உள்ள ஒருவரை விற்கும்படி அனுப்புவோம் என சொன்னார்கள். கணவன் மனைவி ஒத்திசைவினால், குடும்பத்தின் வறுமை நீங்கியது. இதைப்போல உங்கள் குறைவில் அல்லது நிறைவில் கூட உங்கள் மனைவியிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இங்கே கணவர் குடும்பத்தின் தலைவராய் இருந்தாலும் மனைவியின் யோசனை மிக முக்கியம். உனக்கு ஒன்னும் தெரியாது எனக்கூறி உங்கள் மனைவியின் ஆலோசனையை தள்ளிவிடாதீர்கள்.
அது குடும்பத்தில் ஒற்றுமையை கொண்டுவரும். இருவரும் சேர்ந்து முடிவெடுக்கும்போது அது குடும்பத்தில் ஒரு மனத்தைக் கொண்டுவரும். உறவில் பாதிப்பு ஏற்படாது. "நான்தான் சொன்னேனே" என்னும் பேச்சுக்கே இடமில்லை. அது உங்கள் மனைவியை கனப்படுத்தி எதிர் கால வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். ஆலோசனை கேட்கும்போது மனைவிக்கு சுயமதிப்பு உண்டாகும்.
பெற்றோர்: ஆலோசனை தருவதில் பெற்றோர் இரண்டாம் இடத்தில் வருகின்றனர். உடனே மனைவி, எனது பெற்றோரிடம் ஆலோசனை கேட்ப்போம் என்றும், கணவர் எனது பெற்றோரிடம் ஆலோசனை கேட்போம் என்றும் கேட்கலாம். அதில் தவறில்லை. (அநேக குடும்பங்களில் இங்கேதான் சண்டைகள் வருகின்றது) கணவன் மனைவியும் சேர்ந்து எடுக்கும் முடிவுக்கு உதவியாகத்தான் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், ஆதி.2:24ல்,
"இதினிமித்தம் புருஷன் தன தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" எனக் கூறுகின்றது.
அனுபவசாலிகள்: எந்த துறையில் மனிதர்கள் அனுபவசாலிகளாக இருக்கின்றார்களோ அவர்களுடைய ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளவேண்டும்.
வாலிபன் ஒருவன் சென்னைக்கு கடையில் வேலை பார்ப்பதற்காக சென்றான். வருடங்கள் பல கடந்தோடின, வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைத்தது. திருமணமானது. தனது சொந்த கிராமத்திலே ஒரு கடை ஆரம்பிக்கவேண்டும் என்று, தன் கிராமத்துக்கு திரும்பினார். வந்து அங்கே கடைவைத்திருந்த சொந்தக்காரரிடம் ஆலோசனைகேட்டார். (இது நடந்து 50 வருடங்களாகின்றது) கிராமங்கள் தேய்ந்து கொண்டு வருகின்றது, நீ சென்னைக்கே சென்று கடைவைத்து சம்பாதி; எனக்கு போட்டியாக கடைவைக்க வந்ததினால் இப்படி சொல்லுகிறேன் என்று நினைக்காதே, இங்கே உள்ள சாதக பாதகங்கள் எனக்கு நன்றாக தெரியும் எனக் கூறினார். அந்த யோசனையின்படியே சென்னையில் கடைவைத்து, பல லட்சக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியானார்.
கிராமத்துக்கு போகும்போதெல்லாம், என் அத்தான் சொன்ன யோசனையில்தான் இன்று நன்றாக இருக்கிறேன் என அடிக்கடி தனக்கு தெரிந்தவர்களிடத்திலெல்லாம் சொல்லுவார். அனுபவசாலிகளின் யோசனையும் தேவை. நீதி.15:22ல்,
"ஆலோசனையில்லாமல் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்" நீதி.11:14ல்,
"ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்"
நீங்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு ஒரு பகுதியாக இப்படிப்பட்ட யோசனைகளை ஏற்றுக்கொள்ளலாம்.
மீண்டும் ஆலோசனை பகுதி எண்: 5ல், உங்களை சந்திக்கும் வரை வணக்கம் நண்பர்களே!!
இணையத்தில் நீங்கள் சம்பாதிக்க எளிய வழி, கீழே உள்ள தட்டியை சொடுக்கவும்: பிட் காயின் ல், சம்பாதிக்கலாம்!!
No comments:
Post a Comment