30 Dec 2018

TRIALS AND SORROWS

நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

மீண்டும் இந்த மாதத்தில் இதே பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!

"என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தைஜெயித்தேன்" (யோவா.16:33) 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! 
உங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்து களிகூரும்படியான ஒரு சத்தியமாக இதை நீங்கள் பார்க்கலாம்! அன்மையில் ஒரு சபையில் இதைக்குறித்து பேசலாம் என்று நன்கு ஆயத்தப்படுத்தி, குறிப்புகளை எழுதிக்கொண்டு சென்றேன்; ஆனால் ஆவியானவர் வேறுஒரு செய்தியை கொடுக்க வழிநடத்தினார்! அந்த செய்திதான் இப்பொழுது உங்களுக்கு ஆசீர்வாதத்தை கொண்டுவரப்போகின்றது. 
"பிரதர்...... நாம அநேக உபத்திரவங்கள் வழியாகத்தான் பரலோக ராஜ்யத்துக்குள் போகமுடியும் பிரதர்"
"இயேசுவே சொல்லிட்டார், உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று எனவே உபத்திரவப்படனும் பிரதர்"
உபத்திரவம் இல்ல என்று சொல்லுகிற பிரசங்கிமாரெல்லாரும் சுகபோக பிரசங்கி பிரதர்...
ஆண்டவரே உபத்திரவப்பட்டார், நீ என்ன பெரிய பிஸ்தாவா?
ஆண்டவருடைய வழியை பின்பற்றுகிறவர்களுக்கு கண்டிப்பா உபத்திரவம் உண்டு பிரதர்......
உபத்திரவப்பட்டது நல்லது அதனாலே நான் கர்த்தருடைய பிரமாணங்களை கற்றுக்கொண்டேன் என தாவீதே சொல்லியிருக்கிறார் புரோ.....
உபத்திரவத்தைப் பற்றி ஆண்டவருடைய அணுகுமுறை என்ன? என்பதை குறித்தும், அவர் தமது உள்ளத்திலே என்ன நினைக்கின்றார் என்பதைக்குறித்தும் நாம் இப்பொழுது பார்க்கலாம். இந்த செய்தி இந்த புதிய வருடத்தில் மட்டுமல்ல, உங்கள் உயிருள்ள நாளெல்லாம் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரப்போகிறது. உங்கள் தலைமுறைக்கும் இந்த சத்தியத்தைக் கடத்துங்கள்! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! 
முதலாவது, தேவ ஜனங்கள் உபத்திரவப்பட்டபொழுது, தேவன் என்ன செய்தார் என்று பார்ப்போம்! அப்போஸ்தலர் 7:34ல், (மோசேயிடம் ஆண்டவர் பேசியது இது)
"எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால் நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்"
தேவ ஜனங்களின் உபத்திரவத்தைப் பார்த்து, பிதா இரக்கம் கொண்டார். இன்று நீங்கள் உபத்திரவத்தின் பாதையிலே இருக்கிண்றீர்களோ? பிதாவாகிய தேவன்  இஸ்ரவேலரை விடுவிக்க ஒரு மோசேயை தெரிந்து கொண்டு அனுப்பியதை போல, உங்களுக்கு உதவி செய்ய ஒருவரை இன்று அனுப்புவார். பொதுவாக விசுவாசிகள் எல்லோருமே தாங்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு தகுந்த வசனத்தைத் தெரிந்து கொண்டு, அதை விசுவாசிக்கின்றார்கள். உதாரணமாக நான் யோபுவைப்போல பாடு அனுபவிக்கின்றேன்...... சிலுவை மரணத்தினால் வந்த பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுவார்கள், அதே சிலுவையில் ஏற்றுக்கொண்ட காயங்கள் சுகமாக்குகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். இப்படி பல...... ஆனால் தேவ சித்தம் வேறாக இருக்கின்றது...... 
"நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்" (சங்கீதங்கள் 34:17)
"உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்"
ஆண்டவர் எப்பொழுதுமே உபத்திரவப்படுகின்ற நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்டு அவர்களை    விடுவிக்கிறவர். உங்களைப்பற்றித்தான் நான் இங்கு எழுதுகின்றேன். 
யோசேப்பின் வாழ்க்கையைக் குறித்து வேதம் கூறும்போது, அப்போஸ்தலர் 7:10ல், 
"தேவனோ அவனுடனே கூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து....." 
இந்த வசனங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுவது, ஆண்டவர் உபத்திரவப்படுகிறவர்களை விடுவிக்கிறவர் என அறிகிண்றீர்கள். சிலர், ப்ரோ... தேவன் உபத்திரவ படுத்துவார், இயேசு விடுவிப்பார்.. என கூறுகின்றனர். அதாவது பிள்ளையையும் கிள்ளிவிட்டு  தொட்டிலையும் ஆட்டுகின்றவர் ஆண்டவர் என்கின்றனர். அப்படிப்பட்ட ஆளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். சினிமா வில்லனைவிட மோசமான ஆள்தான் அப்படி செய்வார். same side goal அடிக்காதே..... இங்கே பிதாவுக்கு சித்தமானத்தையே நான் செய்கிறேன் என்று இயேசு கூறுவதை நினைவில் கொள்ளவேண்டும். அடுத்து,
"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கியவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது"
(எபிரேயர் 2:10) 
பிதாவாகிய தேவன் உங்களையெல்லாம் பரலோகத்தில் கொண்டுபோய் சேர்க்க, இரட்சிப்பின் அதிபதியை அதாவது இயேசுவை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது, அவருக்கு மிகவும் சரியாகப்பட்டது. உங்களையெல்லாம் பரலோகத்தில் கொண்டுபோய் சேர்க்க, உங்கள் இரட்சிப்பின் அதிபதியான இயேசுவை உபத்திரவப்படுத்துவது, தேவ சித்தமானது. நீங்கள் உபத்திரவப்படுவது தேவ சித்தமுமல்ல, நோக்கமுமல்ல. அடுத்து,
"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமானத்தைக் கற்றுக்கொள்ளுகின்றேன்" (சங்கீதங்கள் 119:71) 
இது டேவிட்டின் சாட்சி, நீங்கள் சாட்சியை விசுவாசிப்பதைவிட ஆண்டவர் உங்களுக்கென்று கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என விசுவாசிக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் இருந்த சபை ஒன்றில் உபதேசியாராய் இருந்த எனக்கன்பான ஊழியர் ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு விசுவாசி தன் கையில் 5 வயது மதிக்கத்தக்க குழந்தையோடு அந்த ஊழியரைப் பார்க்க வந்திருந்தார். அந்த குழந்தை கண் பார்வையற்ற குழந்தை. அந்த குழந்தை பார்வை அடையும்படி ஜெபியுங்கள் என்று கூறினார். நான் ஜெபித்தேன். ஜெபித்து முடித்தபின் அவர் பெற்றி பாக்ஸ்டரின் சாட்சியைக் கூறி அதை போல இவளுக்கும் ஆண்டவர் சுகம் தருவார் எனக் கூறினார். அவர் சொன்ன விடயத்தை வேத வசனத்தோடு ஒட்டிப் பார்த்தேன், ஒட்டவில்லை. அந்த இடத்தில் நான் அவருக்கு போதிக்கவில்லை. அவர் நம்புகின்ற சாட்சியின்படி அந்த குழந்தைக்கு ஆகட்டும் என உள்ளத்தில் நினைத்துக்கொண்டேன். 
தேவன் தன் பிள்ளைகளுக்கு உபத்திரவத்தின் மூலமாக அல்லாமல், ஆலோசனையின் மூலமாகவே கற்றுக்கொடுக்கின்றார். இதே டேவிட் இதை வேறுஒரு  இடத்தில் கூறியிருக்கின்றான். சங். 32:9ல், 
"வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்ட சேராத புத்தியில்லாத குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்க வேண்டாம்"
சொன்னா கேளு; அடிவாங்கி ஒன்றைக் கற்றுக் கொள்ளாதே. 32:8ல், 
"நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" 
புத்தியில்லாத கழுதையைத்தான் வாயைக் கட்டி, கடிவாளத்தைப் போட்டு இறுக்கி உபத்திரவப்படுத்துவார்கள். பிதாவாகிய தேவன் தன் பிள்ளைகளுக்கு, போதித்தும், ஆலோசனை கொடுத்தும்தான் கற்றுத்தருகின்றார். அல்லேலூயா!! எவ்வளவு அன்பான பிதா உங்களுக்கும் எனக்கும் இருக்கின்றார்!!
பொதுவாக, மூன்று வகை உபத்திரவங்கள் இந்த பூமியில் உள்ளது. இதிலே ஒன்றிலும் பிதாவாகிய தேவன் இல்லை. 
1. பிசாசிடமிருந்து வரும் உபத்திரவம்: "பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்" (மாற்கு 1:34)
2. மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் உபத்திரவம்: 
".....நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்;...." (சங்கீதம் 35:13)

3. மத கோட்பாடுகளினால் வரும் உபத்திரவம்: 
இன்னும் சில வேத வசனங்களை பார்ப்போம்! 
"இதோ நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்" (ஏசாயா 48:10) 
இந்த இடத்திலும் நான் உன்னை உபத்திரவப்படுத்தினேன் எனக் கர்த்தர்  கூறவில்லை. 2தெசலோனிக்கேயர் 1:6ல், 
"உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாக கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே" 
இங்கே தேவ பிள்ளைகளாகிய உங்களுக்கு, மனிதர்களால் உபத்திரவம் வந்தால், தேவ நீதி வெளிப்படும். 
ஊழியர்களுக்கு வரும் உபத்திரவம்: 
"....நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்" (அப். 14:22) 

இங்கே ஆண்டவர் எங்கே வருகின்றார் என்றால், வசனம் 20ல், சீஷர்கள் சூழ்ந்து நிற்க்கையில், அவன் (மரித்து போனான் என்று போட்டுவிட்டுப் போன அவன், எதுவுமே நடக்காதது போல தேவ வல்லமையினால்  எழுந்து) பட்டணத்துக்குள் பிரவேசித்தான்.....

இயேசுவின் நாமத்தினால் வந்த உபத்திரவத்தை அனுபவித்த நான் உங்களுக்கு இதை விளக்குவது எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்! சிறிய வித்தியாசங்கள் இதிலே உண்டு. நான் ஊழியம் செய்த இடத்துக்கு வெளியே தாக்கப்பட்டேன்.  தாக்கியது, கும்பல் அல்ல, ஒரே நபர். எனக்கு கொஞ்சம் பெலன் இருந்தது, எழுந்து எனது வீட்டுக்கு சென்றேன். இந்த சம்பவம் இரவு  11 மணிக்கு நடந்தது. நான் தாக்கப்பட்ட பொழுது என்னைச் சுற்றிலும் யாரும் இல்லை. "இயேசுவை எங்க ஏரியாவிலே சொல்லாதே, சொல்லாதே எனக் கூறியே அடித்தான். 
பின்பு அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் கேள்விப்பட்டிருந்தார்கள். வேத பகுதியில் பர்னபாவைக் கூட்டிக்கொண்டு, அடுத்த ஊர்களுக்குச் சென்று ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்தபின்பு, மீண்டும் அந்தியோக்கியாவுக்குத் திரும்பி வந்து அங்குள்ள சீஷருடைய மனதை திடப்படுத்தி, சொன்னதுதான் மேலே உள்ள வசனம்! இது சுவிஷேசத்தினால் வரும் உபத்திரவம்! நானும் பிற பகுதிகளில் ஊழியம் செய்துவிட்டு அடுத்தவாரம் அங்கு சென்றபொழுது, யாருமே நான் தாக்கப்பட்டதைக் குறித்து என்னிடம் கேட்கவில்லை. அப்படி விசாரித்து இருந்தால் நான் என்ன கூறியிருப்பேன்? ".....நம்ம அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்" என்ற வசனத்தைத்தான் சொல்லியிருப்பேன். இதிலிருந்து ஊழியர்களுக்கு உபத்திரவம் இயேசு என்ற நாமத்தின் மகிமைக்காக வருகின்றது! என்பதை நீங்கள் அறிய வேண்டும். அப்.20:23,24ல், 
"கட்டுக்களும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிரதை மாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றைக் குறித்தாகிலும் கவலைப்படேன்...." 

பவுலின் ஊழியத்தில் ஆவியானவர் முன்னமேயே அறிவிக்கின்றார், தெரியாத்தனமாக போய் மாட்டிக்கொண்டார் என்றல்ல, தெரிந்தே போய் ஊழியம் செய்தார் என்பதை நீங்கள் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்....... ஆகவேதான் ஊழியருக்காக ஜெபிக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. மறக்காமல் உங்கள் ஜெபங்களில் என்னையும் நினைத்துக்கொள்ளுங்கள்! 
"......உபத்திரவத்திலே பொறுமையாய் இருங்கள்...." (ரோமர் 12:12) 
"உபத்திரவம் பொறுமையையும்...... உண்டாக்குகிறது" (ரோமர் 5:3) 
இந்த செய்தியில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுவது, பிதாவாகிய தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய உங்களை உபத்திரவ படுத்த மாட்டார். 
கடைசியாக,
"என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குத் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33) 
இயேசு கூறியது இதுதான்: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; என்னிடத்தில் இல்லை. அனைவரும் இயேசுவினிடத்தில் வாருங்கள்!

No comments:

Post a Comment