18 Aug 2019

VICTORY IN THE NAME OF JESUS



புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய யாவருக்கும் எமது வாழ்த்த்துக்களும், வணக்கங்களும்!
 இந்தச் செய்தியின் மூலம்  உங்கள் ஜெபவாழ்க்கை ஒரு பெரிய மாற்றமடைந்து, பல்வேறு எல்லைகளைத் தொட ஆண்டவர் கிருபை தருவார்!  நீங்கள், இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுபவர்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் மிகவும் பெலப்படுவார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்! இனி வசனத்துக்குள் செல்லுவோம்!
"என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:14)
நல்லவர்களுக்குத் தீமை நிகழும்போது, அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது நிலைமை என்ன? பழைய ஏற்பாட்டு சன்மார்க்கனாகிய யோபுவின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கவிருக்கின்றோம்! முதலாவதாக அவன் நாட்களில் வாழ்ந்த எல்லாரைக் காட்டிலும் மிகப் பெரிய செல்வந்தனாக இருந்தான். (அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருக ஜீவன்களும் இருந்தது) ஆண்டவரும் அவனைக் குறித்து மிக உயரிய சாட்சி பகர்ந்தார். 
இப்படி பட்ட நிலைமையை ஒருவர் சந்தித்தால் என்ன சொல்லுவார்கள்? சற்று யோசித்து பாருங்கள். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவுக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு பெரியவரை அடிக்கடி சந்திப்பதுண்டு. அவர் இந்தியன் வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மனைவி இல்லை. மகளது ஆதரவில், தனக்கு வரும் ஓய்வூதியத்தில் வாழ்ந்து வருபவர். அவருக்குத் தெரிந்த ஒருவருக்கு, அவர் ஆட்டோ வாங்க வங்கியில் கடன் பத்திரத்தில் பொறுப்பாளியாகக் கையெழுத்திட்டார். ஆட்டோ வாங்கியவன் ஒருவருடம் ஒழுங்காகக் கடனைக் கட்டி வந்தான். பின்பு ஆட்டோவை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை வாங்கி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டான். பணம் கட்டப்படவில்லை. இவர் மனைவி பெயரில் இவர் வாங்கிய கடனை மறைத்துவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின் ஆடிட்டில் பிடிபட்டார். இப்பொழுது பல ஆண்டுகளுக்கு முன்பாக இவர் வாங்கிய கடன், ஆட்டோ கடன் இரண்டையும் கட்டும்படி வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தது. 
இவர் வங்கியில் வேலைபார்த்தபொழுது புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள், இப்பொழுது இவரது கடனை வசூலிக்க வேண்டிய இடத்தில். எனவே அவர்கள், இவர்மேல் மனது வைத்து, வழக்கு போடப்போவதில்லை. நீங்கள் பணத்தை கட்டி முடிக்கும் வரை, உங்கள் ஓய்வூதியத்திலிருந்து பணம் பிடித்தம் செய்து விடுகின்றோம் எனக் கூறிவிட்டனர். ஊரில் உள்ள சொத்தை விற்று கடனை அடைந்துவிடலாம் என்றால், இவரது மகன் கார் வாங்குவதற்காகச் சொத்தை அடமானம் வைத்துக் கார் வாங்கி விட்டான். அதற்கும் இவர்தான் கையெழுத்திட்டிருந்தார். இதெல்லாம் நடந்து முடிந்த பின்தான் மேலே உள்ள கடன் பிடிபட்டது எல்லாம். 
அவருடைய நிலைமையைப் பாருங்கள்! ஊரில் உள்ள ஆட்டோ வாங்கினவனுடைய மனைவியைப் பார்த்து, பணத்தை கட்ட சொல்ல வேண்டும். கையில் தேநீருக்கு கூடக் காசில்லை என்பார், நான் பணம் கொடுத்து உதவி செய்தேன். உற்சாகமாகப் போய்ச் சோகமாகத் திரும்பி வருவார். ஒருநாள் அவருடைய இந்தச் சூழ்நிலைக்கான காரணம் என்ன? என்று கேட்டேன். எல்லாவற்றுக்கும் பாப்பான்தான் காரணம் என்றார். அவன்தான் என் மனைவி பெயரில் இருந்த கடனைக் கண்டுபிடித்தவன். கண்டுபிடித்தவன் கண்டுக்காமல் விட்டிருக்கலாம், வசூலிக்கச் சொல்லிக் குறிப்பு எழுதிவைத்துவிட்டான். மேலும் இவரோடு வேலை பார்த்த சில பிராமணர்கள் இவருக்கு இழைத்த தீமைகளையெல்லாம் சொல்லி, பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடிக்க வேண்டும் என்று கூறிய பெரியாரின் மொழிகளையெல்லாம் கூறி பிராமணர்களைத் திட்டித் தீர்த்தார். 
நான் எவ்வளவு நல்லவன், நான் வேலை பார்த்தபொழுது, ஒரு பைசா கூட இலஞ்சம் வாங்கியதே இல்லை. இலஞ்சம் வாங்கியவன் எல்லாம் நல்லா இருக்கின்றான். உண்மையாய் இருந்த என்னைக் கடவுள் சோதிக்கிறான். பலருக்கு உதவி செய்த எனக்கேன் இந்த நிலை? என அங்கலாய்த்தார். இப்பொழுது எனக்குச் சத்தியத்தை கூறவேண்டிய நிலை. எனவே யோபுவின் நண்பர்களைப் போலப் பேச ஆரம்பித்தேன். இந்தப் பிரச்சனை தீர வேண்டுமானால், நீங்கள் சொல்லுகின்ற அந்தப் பார்ப்பனரை மன்னியுங்கள் என்றேன். உடனே வந்தது பாருங்கள் கோபம்! எந்தக் கடவுளும் கிடையாது என்று அவர் வணங்கிய கடவுள்களின் பெயரை எல்லாம் சொல்லி அவர் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கிய கடவுளையும் சேர்த்து கெட்டவார்த்தையால்  திட்டித் தீர்த்தார். 
இந்தப் பெரியவரின் நிலைமையைப் பாருங்கள்! ஆண்டவருடைய வழி எவ்வளவு மேன்மையானது.  ஆண்டவரின் வழியில் செல்லுபவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! இன்று ஆண்டவரை அறியாத மக்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி சீரழிகின்றார்கள்! ஆனாலும் ஆண்டவருடைய வழிகளை வேண்டாமென ஒதுக்கித் தள்ளுகின்றார்கள்! இப்படிப்பட்டவர்கள் சுவிஷேசத்தை ஏற்றுக்கொள்ளும்படியாய் கிருஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டியது மிக அவசியம். அந்தப் பெரியவரின் தவறுகள் என்ன என்ன என்பதை நீங்கள் அறிகிண்றீர்களா? மென்மையான, நெருக்கடியிலிருந்து விலகி வாழ அந்தப் பெரியவருக்கு ஆண்டவரின் வழியில் வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிகிறீர்களா? 
உங்களுடைய கடன் பிரச்சனை எப்படி இருக்கின்றது? மாறும் என நம்புகின்றீர்களா? உங்களிலே ஒரே ஒரு மாற்றத்தை நீங்கள் செய்ய வேண்டும், அது உங்கள் விசுவாசத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
யோபு தான் சந்தித்த பிரச்சனைகளில் எவ்விதத்திலும் ஆண்டவரை குற்றம் சுமத்தவில்லை. அவனுக்கு இது ஏன் வந்தது? எப்படி சரியாகும்? என்பதும்  தெரியவில்லை. நன்றாக இருந்த வாழ்க்கையில் குறைவுகளை சந்தித்தால், எலிபாஸ் போன்றவர்கள், நீர் ஏதோ தப்பு செய்திருக்கின்ரீர்! அதனாலதான் இப்படியெல்லாம் நடக்கின்றது எனக்கூறி வெந்த புண்ணில் வேலைப்பாச்சுவார்கள்!
இதில் யோபுவினுடைய நிலைமையைப் பார்ப்போமா? தனது நீதியை சொல்லி இவன் ஜெபித்ததை தொடர்ந்து பார்ப்போம். 30:23-25ல்,
"சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக் கொடுப்பீர் என்று அறிவேன். 
ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,
துன்னாளை (துக்கநாளை) கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய் தன் கைகளை நீட்டுவாராக" 31:5-10ல், 
"நான் மாயையில் நடந்தேனோ, என் கால் கபடு செய்ய தீவிரித்ததோ என்று,
சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
என் நடைகள் வழியைவிட்டு விலகியதும், என் இதயம் என் கண்களை பின் தொடர்ந்தும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக் கொண்டதும் உண்டானால்,
அப்பொழுது நான் அறுத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப் போகக்கடவது. என் மனம் யாதொரு ஸ்திரியின் மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப் பாத்ததும் உண்டானால்,
அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனித அவள் மேல் சாய்வாளாக. 31:13-22ல், 
"என் வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும் என்னோடு வழக்காடும் போது, அவர்கள் வழக்கை நான் அசட்டை பண்ணியிருந்தால்,
தேவன் எழும்பும் போது நான் என்ன செய்வேன்; (இந்த இடம் யோபுவின் தேவ பக்தி) அவர் விசாரிக்கும் போது, அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்.
தாயின் கர்ப்பத்தில் உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவா? ஒரே விதமான கர்ப்பத்தில் உண்டுபண்ணினார் அல்லவோ?
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களை பூத்துப் போகப்பண்ணி,
தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய் சாப்பிட்டதுண்டோ?
என் சிறு வயது முதல் அவன் தகப்பனிடத்தில் வளருவதுபோல என்னிடத்தில் வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்தது முதல்,அப்படிப்பட்டவர்களைக் கைலாகு கொடுத்து நடத்தினேன்.
ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்து போகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,
அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல் கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,
ஒளிமுக வாசலிலே எனக்கு செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
என் கைப்பட்டை என் தோளில் இருந்து சரிந்து என் புயத்து எலும்பு முறிந்து போவதாக" 
யோபுவினுடைய நீதி எப்படி இருக்கிறது? தேவ பயம் எப்படிப்பட்டது? உங்கள் சுய நீதியோடு நீங்கள் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்! யோபுவின் பக்கத்திலேயே நிற்க முடியாது. சரி இதெல்லாம் இதுவரை கடவுளை அவன் நேருக்கு நேர் சந்திக்கும் வரை. 
"....இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகின்றேன் என்றான்" (42:5,6)
பொதுவாகப் பழையேற்பாட்டு பரிசுத்தவான்கள் அனைவருமே தங்கள் சுயநீதியை வைத்து ஆண்டவரை அணுகினர் அல்லது தங்கள் அழைப்பை வைத்து அணுகினர். இனிமேல்,
புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய உங்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகின்றது? இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்குப் பின் எல்லாவற்றிலும் மாற்றம் வந்தது. 
இப்பொழுது எல்லாமே விசுவாசன்தான். மேலே உள்ள வசனங்களை விசுவாசிக்கிண்றீர்களா? நீங்கள் நீதிமானாவதற்கு எந்தச் செயலையுமே செய்ய வேண்டாம். இயேசு சிலுவையில் சிந்திய இரத்தமே உங்களை நீதிமானாக்குகின்றது என்பதை விசுவாசித்தாலே போதும். நீதிமானாவது எல்லாமே Free! Free!! Free!!! அனால் இயேசு கொடுத்த விலைக் கிரயம் மிகப்பெரியது.
எனவேதான் நீங்கள் ஜெபத்திலே பிதாவிடம் வரும்பொழுது, பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும், என ஜெபிக்க தேவை இல்லை. அது மனத்தாழ்மையும் இல்லை. 
பிள்ளைகள் தனது தந்தையிடம் பழகுவதைப் போலத் தேவ சமூகத்திற்கு செல்ல வேண்டும். 
மனத்தாழ்மை சோதிக்கப்படுகின்ற இடங்களை உங்களுக்குச் சொல்லுகின்றேன். 
1. நீங்கள் தவறாக நடத்தபடும்பொழுது, 
(misguide, ill-treat) உங்கள் எதிர் செயல் என்ன? 
2. பிறர் உங்களைத் தவறாகக் குற்றஞ்சாட்டும்பொழுது. 
3. பிறர் உங்களைப் புகழ்ந்து பேசும்பொழுது.
உதாரணத்துக்கு ஒரு முழு இரவு ஜெபத்தில் நான் கலந்து கொண்டபொழுது நடந்த ஒரு சம்பவம். அதில் அநேகமாக 70% ஊழியர்கள், ஒரு ஊழியர், என்னைப் பார்த்து, நீங்கள் யாரெனக் கேட்டார். நான் சுவிஷேசகர் எனப் பதிலளித்தேன். நீங்கள் சபைக்குத்தான் நற்செய்தியை கூறுவீர்களா எனக் கிண்டலாகக் கேட்டார். அதாவது நீங்கள் ஆத்தும ஆதாயம் செய்யமாட்டீர்கள், சபைகளில் பேசுவீர்கள், இது அவர் கேட்டதின் பொருள். எனக்குள்ளே இருந்த ஆவியானவர், ஊழியத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவில் கொண்டுவந்தார். அது, 
ஓரிடத்தில் கைப்பிரதி கொடுத்துக் கொண்டிருந்தேன். அதை மேலோட்டமாகப் படித்த ஒருவர் சொன்னார், 'இதை முதல்ல கிறிஸ்தவர்களுக்குச் சொல்லு'   அதனாலதான் சபைகளிலே பேச ஆண்டவர் வழிகளைத் திறந்திருக்கின்றாரென நினைத்துக் கொண்டேன். 
தேவனுக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள். நீங்கள் இருக்கின்ற வண்ணமாகவே இருங்கள். பிறரை துச்சமாக எண்ணாதிருங்கள். 
உங்கள் ஜெபம் உற்சாகம் நிறைந்ததாய், பிதாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றீர்கள் என விசுவாசிக்கும்போதுதான், ஆண்டவரால் உங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என விசுவாசிக்கிண்றீர்கள்! சரி, விடயத்துக்கு வருவோம்.  
"என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:14)
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு இல்லாத ஒரு பெரிய சிலாக்கியம் உங்களுக்கு இருக்கின்றது. அது, இயேசு என்ற  வல்லமையுள்ள நாமம். அல்லேலூயா! இதை உணர்ந்து நீங்கள் ஏசுவின் நாமத்தில் ஜெபிக்கும்பொழுது, உங்கள் ஜெபத்துக்கான பதிலை நீங்கள் பெற்றுக்கொள்ளுகிண்றீர்கள்!
இயேசு என்றத் திரு நாமத்துக்கு 
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
வானிலும் பூவிலும் மேலான நாமம் 
வல்லமையுள்ள நாமமது 
துயர் சொல்லித்துதித்திடும் நாமமிது - இயேசு 
வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த 
வீரமுள்ள திருநாமமது,
நாமும் வென்றிடுவோ மிந்த நாமத்திலே - இயேசு என்ற 
பாவத்திலே மாளும் பாவியை மீட்க 
பாரினில் வந்த மெய் நாமமிது 
பரலோகத்தில் சேர்க்கும் நாமமிது - இயேசு... 
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும் 
உன்னத தேவனின் நாமமிது 
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமிது - இயேசு..
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் 
தாங்கி நடத்திடும் நாமமிது,
தடை முற்றும் அகற்றிடும் நாமமிது - இயேசு...
ஜெபிப்போம்!
பரலோக பிதாவே உமக்குக் கோடானுகோடி ஸ்தோத்திரங்களையும், துதிகளை ஏறெடுக்கின்றோம். உமது குமாரனாகிய இயேசுவினாலே எங்களை நீதிமான்களாக்கியதற்காய் நன்றி! இயேசு என்ற வல்லமையுள்ள நாமத்தை எங்களுக்குத் தந்ததற்காய் நன்றி! இந்த ஜெபத்துக்கு பதில் தருவதற்காய் நன்றி! என்னோடு கூடச் சேர்ந்து ஜெபிக்கிறவர்களுடைய கடன் பிரச்சனை மாறுவதாக. குடும்பத்தின் தேவைகள் எல்லாவற்றையும் சந்தியும். வேலைகளில் இருக்கின்ற பிரச்சனைகள் இப்பொழுதே நீங்குவதாக. வியாதிப் படுக்கை மாறுவதாக. பலவீனத்தில் உள்ளவர்களின் பலவீனங்களை நீக்கிப் பலத்தினால் இடைகாட்டுவீராக. பிரசவிக்கப் பண்ணுகிற நான் பிரசவத்தை தடுப்பேனோ என்ற வாக்கின்படி பிள்ளைச்செல்வங்களை அருளிச்செய்யும். இயேசுவின் பெயரில் ஜெபிக்கின்றோம் பிதாவே. ஆமென், ஆமென்.
பின்குறிப்பு: உங்களுக்கு இந்தச் செய்தி ஆசீர்வாதமாய் இருந்தால், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்! நீங்களும் உங்கள் மின் அஞ்சல் முகவரியின் மூலம் பதிவு செய்துகொள்ளுங்கள்! வாழ்த்துக்களுடன்... செல்வின். என்னைத் தொடர்பு கொள்ள நினைப்பவர்கள், 9840836690 மற்றும் 9839018488  மேலும் இந்த ஊழியத்துக்கு உதவி செய்ய விரும்பினால் GPAY: 9840836690 

11 Aug 2019

LOVE OF MONEY


அன்பு நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
இந்தப் பகுதியில் பணத்தைப் பற்றிப் பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகின்றது? என்று பார்க்கப்போகின்றோம்! தேவனுக்கு மகிமையை செலுத்துங்கள்! உங்கள் அயலாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்! விவாதியுங்கள்!! விதண்டாவாதம் பண்ணாதீர்கள்! (அதாவது நான் சொல்லுவதுதான் சரி என்று நண்பர்களோடு வாதாடாதீர்கள்) இந்தச் சத்தியத்துக்கு மாறாக அவர்கள் பேசினால், பொறுமையாகக் கேளுங்கள்! ஆண்டவரிடம் அவர்கள் கூறுவதை விளக்கித் தர கேளுங்கள்! உங்கள் ஜெபத்துக்கு ஆண்டவர் உறுதியாகப் பதிலளிப்பார்!! 
1. பண ஆசை:
"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னை விட்டு விலக்குவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" (எபி.13:5) 
"பண ஆசை எல்லாத்தீமைக்கும் வேறாயிருக்கிறது...."
நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கின்றபடி, பணத்தில் பிரச்சனை இல்லை; பண ஆசைதான் பிரச்சனை. இந்த உலகில் நடக்கின்ற எந்தத் தீமையாய் இருந்தாலும் அதன் காரணம் பண ஆசைதான் காரணம். தீமை என்று ஒரு செடி இருக்கின்றது என வைத்துக்கொள்ளுவோம்; அதைப் பிடுங்கி பார்த்தீர்களானால், அதின் வேர்கள் அனைத்தும் பண ஆசை என்றிருக்கும். நீங்கள் பணத்தின் மீது ஆசை வைத்தீர்களானால் அது நீங்கள் தேவன் மீது வைக்கும் விசுவாசத்தை கெடுத்து விடுகின்றது. உங்களுக்கு நீங்களே தீமையை இழைத்துக் கொல்லுகிண்றீர்கள் என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. 
எனக்குக் கடன் பிரச்சனை இருக்கின்றது நான் எப்படி பண ஆசை இல்லாதவனாக இருக்க முடியும் என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது. கடன் பிரச்சனை வேறு; பண ஆசை வேறு. பண ஆசை இருந்தால்தான் கடன் பிரச்னையைத் தீர்க்க முடியும் என நினைப்பதே தவறு; நேர்மையாகவே சம்பாதித்து கடன் பிரச்னையைத் தீர்க்க முடியும். இங்கேதான் உக்கிரணத்துவம் வருகின்றது.
உக்கிராணத்துவம் என்றால் என்ன?
உங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் அனைத்துமே தேவனுக்கு சொந்தமானது. உங்கள் கடனும் கூட! நீங்கள் அதை நிர்வகிக்கிண்றீர்கள்!! ஆகவே கடன் இருப்பவர்கள், கவலைகளை ஆண்டவர் மீது வைத்துவிடுங்கள்! எனவே நிர்வாகம் செய்ய வேண்டிய அறிவுக்காக நீங்கள் வேத வசனத்தைத் தேடி வாசித்து விசுவாசிக்க வேண்டும்! ஈசாக்கோடு தேவன் இருந்ததை போல என்னோடும் இருக்கின்றார்!எனவே எனது கையின் பிரயாசம் 100% ஆசீர்வதிக்கப்படும், என்ற விசுவாசத்தோடு நீங்கள் பிரயாசப்பட வேண்டும். அதன் பலனைப் பெற்று கடனைத் திரும்ப எளிதாகக் கட்டிவிடலாம்.
உங்களுக்குக் கடன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி உக்கிரணத்துவத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்! அப்பொழுது வேதம் கூறுகின்ற பண ஆசையிலிருந்து விடுபட்டவர்கள் ஆவீர்கள்! 
2. ஐசுவரியவான்கள்: 
"அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகின்றேன்.
மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்"
வசனம் 25ல்,
"அவருடைய சீஷர்கள் அதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்பட கூடும் என்றார்கள்" 
மிகவும் ஆச்சரியப்பட்டார்கள் எனில் அவர்களுக்குள் ஐசுவரியாவான் அல்லது ஐசுவரியவாட்டி இயேசுவின் குழுவில் இருந்தார்கள் என்றுதானே பொருள்!
இயேசுவின் கூற்றுப்படி, யார் யாரெல்லாம் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்பதையும் பார்க்கலாம்! ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே தவிர ஐசுவரியாவான் நுழைவதில்லை என்பதை வைத்துப் பார்த்தோமானால், முதலாவது பரலோகத்துக்கு வெளியே நிற்பது ஆபிராம்தான்! ஆதி. 13:2ல்,
"ஆபிராம் மிருக ஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாய் இருந்தான்" 
வசனம் 6ல்,
"ஆபிராமும், லோத்தும் ஒருமித்து குடியிருக்கக் கூடாதபடிக்கு, அந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாய் இருந்தது"
இந்த ஐசுவரியவானாகிய ஆபிராம் பரலோகத்துக்குள்ளே பிரவேசிக்க முடியாது.
ஈசாக்கை நீங்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதி. 26:13ல்,
"அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்" ஈசாக்கும் வெளியேதான்!!
யாக்கோபுவை பார்ப்போம். ஆதி. கடைசி வசனம், 
"இவ்விதமாய் அந்த புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும் ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்"
யாக்கோபும் தேவனுடைய இராஜ்யத்துக்கு வெளியேதான்!! கடைசியாக யோபு, அவனது செல்வச் செழிப்பை அவன் விவரிக்கும் போது, யோபு 29:6ல்,
"என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்;...."
அவ்வளவு செழிப்பு! அவனது நாட்களில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு மக்கள், ஒட்டகங்களைப் பயன்படுத்தினர். இப்பொழுதோ, மக்கள் மகிழுந்தை (car)  பயன் படுத்துகின்றார்கள். அப்படியானால் ஆண்டவரின் ஆசீர்வாதத்துக்குப் பின் அவனிடம் 6,000 மகிழுந்துகள்!! வாவ்.... பக்கத்திலே செல்லுவதற்கு அதாவது 70கி.மீ. வரை அந்தக் காலத்திலே கழுதையை பயன்படுத்தினர். இப்பொழுதோ, இரு சக்கர வாகனங்களை  (bike) பயன் படுத்துகின்றார்கள்! ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தபின் அவனுக்கு 1,000 இரு சக்கர வாகனங்கள்! நிலத்தை உழுவதற்கு அந்நாட்களில் ஏர்களை மக்கள் பயன்படுத்தினர். இப்பொழுதோ, இயந்திர கலப்பைகள், (tractor) ஆண்டவருடைய ஆசீர்வாதத்துக்குப் பின், அவனுக்கு 1,000 இயந்திர கலப்பைகள்! (Tractors) ஒரு tractor ஒரு நாளைக்கு, 10 ஏக்கர் நிலத்தை உழும். வருடத்துக்கு 3 மாதங்கள் நிலத்தை உழப் பருவம் இருக்கும். இதன்படி கணக்குப் போட்டால், 1,000*10*90=9,00,000 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தகாரன் யோபு. அதாவது இன்றய நாளின் கணக்குப்படி மல்டி பில்லியன் $. அவன் வாழ்ந்த நாட்களில் மட்டுமல்ல இன்றய பெருஞ் செல்வந்தரான பில் கேட்ஸ் ஐ விட மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான். இந்த யோபுவும் பரலோகத்துக்கு வெளியேதான் நிற்க வேண்டும். 
ஆண்டவர், தன்னை மோசேக்கு முட்ச்செடியில் காட்சியருளி அறிமுகப்படுத்தியபோது, யாத். 3:6ல், 
".....நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார்..."
இப்படி தன்னை பணம்படைத்தவர்களின் தேவன் என்று தன்னை அழைத்துக்கொண்டார். இவர்களை எப்படி பரலோகத்துக்குள் அனுமதியாமல் இருப்பார்? 
இவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் நுணுக்கமாக ஆய்ந்து பார்ப்பீர்களெனில், ஒரு விடயத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும். அது தீமோ.6:17-19 வரையுள்ள வசனங்கள்தான். அதைப் பார்ப்போம்!
"இவ்வுலகில் ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கின்றவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், 
நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்கு கட்டளையிடு"
மேலும் ஒரு இடத்தில் இயேசு கூறியதையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அது மாற்கு 10:23,24. 
"அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியவான்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.
சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!"
ஆதலால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு அனைவரும் பரலோகத்திற்குள் நுழைய மிக மிகச் சரியானவர்கள்! உங்களில் செல்வந்தர்கள் இருப்பீர்களெனில் நிச்சயமாகவே வேதவசனத்தின்படி பரலோகத்தில் உங்களுக்கு ஓர் இடம் உண்டு. இறுதியாக, 1தீமோ. 6:6ல், 
"போதுமென்கிற, மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்"
எனக்கன்பான வாலிப, தம்பி தங்கையரே! உங்கள் அண்ணனது ஆலோசனைக்குச் சற்று செவி கொடுங்கள்! உங்கள் வாழ்நாளில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? என ஜெபத்துடன் திட்டமிடுங்கள்! அதில் உறுதியாக இருங்கள்! அந்த எல்லையை எட்டிவிட்ட பின்பும் ஓடிக்கொண்டிருக்காதீர்கள்! போதும்!! உங்கள் வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! அப்படிப்பட்ட மனதும் வாழ்க்கையும் தேவபக்தியுமே உங்களுக்கு மிகுந்த ஆதாயமாகும்!!
ஓரிரு மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தியை நீங்கள் வாசித்திருப்பீர்கள்! அது, கூகிள் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அவர்கள், தனக்கு தனது நிறுவனம் வழங்கிய சுமார் 450கோடி ரூபாயை இது தனக்கு வேண்டாம், என்னிடம் நிறைய பணம் இருக்கின்றது எனக் கூறி வாங்க மறுத்துவிட்டார்.  இதை வாசிக்கின்ற உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? இந்தச் சத்தியத்தில் உங்களுக்கான கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்!! 
ஜெபிப்போம்!!
எங்களை நேசிக்கின்ற அன்பின் பரலோக தகப்பனே! ஏசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம்! பணத்தைக் குறித்து உமது வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியத்தைக் காண கிடைத்த வாய்ப்புகளுக்காக நன்றி! நாங்களும் எங்கள் பிள்ளைகளும் விசுவாசத்தில் முன்னேறிச் செல்லக் கிருபை தருவதற்காய் நன்றி! எங்கள் மன விருப்பத்தை நிறைவேற்றுவதற்காய் நன்றி! இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென், ஆமென்.
அன்பு நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!! இந்த வலைத்தளத்தை உங்கள் நண்பர்களுக்கு, 
முகநூல், சுட்டுரை, வாட்ஸ்-அப்  ஆகியவற்றின் மூலமாக உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிர உங்களை அழைக்கின்றேன்! வாழ்த்துக்களுடன்...

5 Aug 2019

BE NOT CONFORMED TO THIS WORLD


கிறிஸ்துவுக்குள் பிரியமான யாவருக்கும் வாழ்த்துக்கள்!
"நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2)
மேலே உள்ள வசனத்தை இங்குள்ள சபைகள் நீங்கள் அணிகின்ற ஆடைகளைப் பற்றி போதிக்கின்றன. ஏனெனில் வேஷம் என்ற வார்த்தையை வைத்து போதிக்கின்றார்கள். ஆனால் வசனத்தின் பிற்பகுதியில் உங்கள் மனம் புதிதாகிறதினாலே என்று இருக்கின்றது. ஒத்த வேஷத்துக்கும், மனம் புதிதாவதற்கும் சம்பந்தம் இருக்கின்றது. உங்கள் சரீரத்தில் அணிகின்ற உடைகளில் இல்லை ஒத்தவேஷம்! வேத வசனத்துக்கு புறம்பானவைகளில் மனதை செலுத்தி,  அதையே பேசிக்கொண்டு இருந்தால் வருவதுதான் ஒத்தவேஷம்! 
உதாரணத்துக்கு, உங்கள் நண்பர் வேதவசனத்துக்கு புறம்பான செய்தியை உங்களிடம் பேசினால், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு அதையே நீங்களும் பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம்  தரிக்கிண்றீர்கள்! 
அண்மையில், ஒரு சபையில் தேவ செய்தியளிக்கச் சென்றிருந்தேன். ஆராதனை முடிந்தவுடன் முன் வருபவர்களுக்கு ஜெபம் செய்யுங்கள் என சபையின் போதகர் கூறவே அநேகர் என்னிடம் வந்து ஜெபித்தார்கள்! அதில் ஒரு வயதான அம்மா, தனக்கு சுகர் இருப்பதாகவும், கை, கால்கள் நோவெடுப்பதாகவும் சொல்லி ஜெபிக்க சொன்னார்கள்! உங்களுக்கு சுகர் இருப்பதாக யார் சொன்னார்கள்? எனக் கேட்டேன். அதற்க்கு டாக்டர்தான் கூறினார்கள் எனக் கூறினார்கள் என்று சொன்னார்கள்! டாக்டர் அவர் படித்ததைக் கூறுவார், ஆனால் வேதம் இயேசுவின் தழும்புகளால் குணமானீர்கள் என்று கூறுகின்றது. நீங்கள் எதை விசுவாசிக்கிண்றீர்களோ அதைத்தான் நீங்கள் சந்திப்பீர்கள்! உங்களுக்கு சுகம் வேண்டுமானால் வேதவசனம் கூறுவதை விசுவாசியுங்கள்! எதை விசுவாசிக்கிண்றீர்கள்? டாக்டரா? பைபிளா? எனக் கேட்டேன். உங்கள் மனம் புதிதாக வேண்டும். 
மேலும் பெண்களின் ஆடை அணிகலன்களைப் பற்றி பேசும்போது, வேதாகமம் 1தீமோ.2:9ல்,
"ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது, தங்களை அலங்கரியாமல், 
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்" 
இந்த வசனங்கள் பெண்களை நான்கு விடயங்களை செய்யக்கூடாது எனக் கூறிவிட்டு, அதற்க்கு பதிலாக, மூன்று மனம் சம்பத்தப் பட்ட விடயங்களையும், நான்காவதாக செயலை சார்ந்ததாகவும் இருக்கின்ற விடயங்களை செய்யவேண்டும் என போதிக்கின்றது. புதிய ஏற்பாட்டில் எல்லாமே மனம் சார்ந்ததாகவே இருக்கின்றது. எனவே மனம் புதிதாக வேண்டும். இந்த சத்தியத்தை நீங்கள் அறியும்போதே உங்கள் மனம் புதிதாகின்றது. உங்கள் மனதை வசனங்கள்தான் புதிதாக்குகின்றது! இப்பொழுது உங்கள் வாழ்க்கையிலே தேவனுடைய பரிபூரண சித்தம் என்ன என்பதை நீங்கள் பகுத்தறிய முடியும்!  இதைப்போல இன்னும் இரண்டு விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்! உங்கள் விசுவாசம் கட்டி எழுப்பப்பட ஜெபிக்கின்றேன்!!
இப்பொழுது வயதான பெரியவர்களைக் குறித்த ஒரு விடயம்! 'எனக்கு வயதாகிவிட்டது, சீனியர் சிட்டிசன் ஆகிவிட்டேன். எனக்கு பலவீனமாக இருக்கின்றது, மூட்டு வலி கடுமையாக இருக்கின்றது, பல் கூசுகின்றது, கை நடுங்குகின்றது, வயசானா எல்லாம் வரத்தான் செய்யும் (வேத வசனத்தில் கவனத்தை செலுத்தாமல்  மருத்துவத்தில், கவனம் செலுத்தினீர்கள் எனில், மூப்பியல் என்ற ஒரு பிரிவே இருக்கின்றது!!) என்று உங்கள் மனதை உங்கள் அனுபவத்திற்குள்ளாக பக்குவப்படுத்தி விடுகிண்றீர்கள்! இதன் பலன் மனச்சோர்வுதான்! 
ஆனால் வசனம் என்ன சொல்லுகின்றது? சங்கீதம் 103:6ல், 
"கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது"
விசுவாசியுங்கள்! மேலே உள்ள சோர்வுகள், மற்றும் உங்கள் சரீரம் உங்களுக்கு சொல்லும் செய்திகள் எல்லாமே மாறும். உங்கள் மனம் மேலே உள்ள வசனத்தை விசுவாசிக்கும் பொழுது, புதிதாகும், மறுரூபமாகும்.  அடுத்த விடயம்!! 
உங்களில் எத்தனை பேர் சாவதற்கு ஆயத்தம்? அல்லது சாக விருப்பமில்லை? இன்றைய உலகத்திலே குடும்பத்தாராலே, (உறவுகளாலே) கடன் பிரச்சனையினாலே, வியாதி முற்றியதால் என் பிள்ளைகளுக்கு அதிகம் செலவாகின்றதே, என்ற நெருக்கடிகளினாலே, செத்துப் போனால், நலம் என்று சாவை விரும்புகின்றவர்கள் அநேகர் உண்டு. இன்னொரு பக்கம், என் பிள்ளைகளுக்கு கலியாணம் செய்துவிட்டால் நிம்மதியாக செத்துவிடுவேன், பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டு செத்துவிடுவேன், பேரப்பிள்ளைகளின் கலியாணத்தைப் பார்த்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூடுவேன்! என்று சாவை தள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள்! இங்கே எபிரேயர் 11:5ல், 
"விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்...." 
இதைப் படிக்கின்ற உங்களுக்கு ஏனோக்குக்கு ஏற்பட்ட அனுபவம் காத்திருக்கின்றது!! எப்படி இந்த அனுபவத்தைப் பெற்று கொள்ளுவது? ஏனோக்கு ஏன் எடுத்துக்கொள்ளப்பட்டான்? வசனத்தைத் தொடர்ந்து படித்து, 'அவன் தேவனுக்கு பிரியமானவனென்று அவன் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னே சாட்சி பெற்றான்' இதைப் படித்துவிட்டு, தேவனுக்கு இதெல்லாம் பிரியம் என்று ஒத்த வசனங்களைத் தேடியெடுத்து, அதன்படி கிரியை செய்யாதிருங்கள்! அடுத்த வசனமாகிய 6ம் வசனத்தைப் படித்துப் பாருங்கள்! அது விசுவாசத்தையே வலியுறுத்துகின்றது! 
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கின்றவரென்றும் விசுவாசிக்க வேண்டும்" 
உங்களது கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கைக்கே இதுதான் அடிப்படை வசனம். உங்கள் விசுவாசம் பிதாவின் உள்ளத்தை குதூகமடைய செய்யட்டும்! உங்கள் மனம் புதிதாகட்டும்! உங்கள் வாழ்வு ஒளிரும்! மிளிரும்!! 
வேத வசனத்தை விசுவாசிக்கிற உங்களுக்கு ஆண்டவர் என்னவெல்லாம் செய்யமுடியும் என்ற நினைவுகளால் உங்கள் மனம் நிரம்பி வழிவதாக. கடைசியாக,
ஒரே ஒரு எச்சரிக்கை!
உங்கள் விசுவாசத்தை, உங்கள் விசுவாசத்தின் மீதே வைத்துவிடாதிருங்கள்! என்றுமே மாறாத நான் குறிப்பிடும் வசனத்தின் மீது வைத்துவிடுங்கள்!! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!!! 
ஜெபிப்போம்!
அன்புள்ள பரலோகப்பிதாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக! விசுவாசிக்க வேண்டிய வசனங்களை விசுவாசித்து, உமது உள்ளத்தைக் குளிர்விக்க உதவி செய்ததற்க்காய் நன்றி! நாங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல், எங்கள் வாழ்க்கையிலே தேவ சித்தம் என்ன என்பதை பகுத்தறிய வழி நடத்துவதற்காய் நன்றி! எங்கள் விசுவாச வாழ்க்கையின் மூலமாய், புறஜாதியினர் மத்தியிலே சாட்சிகளை ஏற்படுத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் பிதாவே! ஆமென், ஆமென்.
பின் குறிப்பு: உங்கள் மின் அஞ்சல் முகவரியினால் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்! இதில் வெளியிடும் பதிவுகள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்! பகிருங்கள்!!