5 Aug 2019

BE NOT CONFORMED TO THIS WORLD


கிறிஸ்துவுக்குள் பிரியமான யாவருக்கும் வாழ்த்துக்கள்!
"நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2)
மேலே உள்ள வசனத்தை இங்குள்ள சபைகள் நீங்கள் அணிகின்ற ஆடைகளைப் பற்றி போதிக்கின்றன. ஏனெனில் வேஷம் என்ற வார்த்தையை வைத்து போதிக்கின்றார்கள். ஆனால் வசனத்தின் பிற்பகுதியில் உங்கள் மனம் புதிதாகிறதினாலே என்று இருக்கின்றது. ஒத்த வேஷத்துக்கும், மனம் புதிதாவதற்கும் சம்பந்தம் இருக்கின்றது. உங்கள் சரீரத்தில் அணிகின்ற உடைகளில் இல்லை ஒத்தவேஷம்! வேத வசனத்துக்கு புறம்பானவைகளில் மனதை செலுத்தி,  அதையே பேசிக்கொண்டு இருந்தால் வருவதுதான் ஒத்தவேஷம்! 
உதாரணத்துக்கு, உங்கள் நண்பர் வேதவசனத்துக்கு புறம்பான செய்தியை உங்களிடம் பேசினால், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு அதையே நீங்களும் பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம்  தரிக்கிண்றீர்கள்! 
அண்மையில், ஒரு சபையில் தேவ செய்தியளிக்கச் சென்றிருந்தேன். ஆராதனை முடிந்தவுடன் முன் வருபவர்களுக்கு ஜெபம் செய்யுங்கள் என சபையின் போதகர் கூறவே அநேகர் என்னிடம் வந்து ஜெபித்தார்கள்! அதில் ஒரு வயதான அம்மா, தனக்கு சுகர் இருப்பதாகவும், கை, கால்கள் நோவெடுப்பதாகவும் சொல்லி ஜெபிக்க சொன்னார்கள்! உங்களுக்கு சுகர் இருப்பதாக யார் சொன்னார்கள்? எனக் கேட்டேன். அதற்க்கு டாக்டர்தான் கூறினார்கள் எனக் கூறினார்கள் என்று சொன்னார்கள்! டாக்டர் அவர் படித்ததைக் கூறுவார், ஆனால் வேதம் இயேசுவின் தழும்புகளால் குணமானீர்கள் என்று கூறுகின்றது. நீங்கள் எதை விசுவாசிக்கிண்றீர்களோ அதைத்தான் நீங்கள் சந்திப்பீர்கள்! உங்களுக்கு சுகம் வேண்டுமானால் வேதவசனம் கூறுவதை விசுவாசியுங்கள்! எதை விசுவாசிக்கிண்றீர்கள்? டாக்டரா? பைபிளா? எனக் கேட்டேன். உங்கள் மனம் புதிதாக வேண்டும். 
மேலும் பெண்களின் ஆடை அணிகலன்களைப் பற்றி பேசும்போது, வேதாகமம் 1தீமோ.2:9ல்,
"ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது, தங்களை அலங்கரியாமல், 
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்" 
இந்த வசனங்கள் பெண்களை நான்கு விடயங்களை செய்யக்கூடாது எனக் கூறிவிட்டு, அதற்க்கு பதிலாக, மூன்று மனம் சம்பத்தப் பட்ட விடயங்களையும், நான்காவதாக செயலை சார்ந்ததாகவும் இருக்கின்ற விடயங்களை செய்யவேண்டும் என போதிக்கின்றது. புதிய ஏற்பாட்டில் எல்லாமே மனம் சார்ந்ததாகவே இருக்கின்றது. எனவே மனம் புதிதாக வேண்டும். இந்த சத்தியத்தை நீங்கள் அறியும்போதே உங்கள் மனம் புதிதாகின்றது. உங்கள் மனதை வசனங்கள்தான் புதிதாக்குகின்றது! இப்பொழுது உங்கள் வாழ்க்கையிலே தேவனுடைய பரிபூரண சித்தம் என்ன என்பதை நீங்கள் பகுத்தறிய முடியும்!  இதைப்போல இன்னும் இரண்டு விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்! உங்கள் விசுவாசம் கட்டி எழுப்பப்பட ஜெபிக்கின்றேன்!!
இப்பொழுது வயதான பெரியவர்களைக் குறித்த ஒரு விடயம்! 'எனக்கு வயதாகிவிட்டது, சீனியர் சிட்டிசன் ஆகிவிட்டேன். எனக்கு பலவீனமாக இருக்கின்றது, மூட்டு வலி கடுமையாக இருக்கின்றது, பல் கூசுகின்றது, கை நடுங்குகின்றது, வயசானா எல்லாம் வரத்தான் செய்யும் (வேத வசனத்தில் கவனத்தை செலுத்தாமல்  மருத்துவத்தில், கவனம் செலுத்தினீர்கள் எனில், மூப்பியல் என்ற ஒரு பிரிவே இருக்கின்றது!!) என்று உங்கள் மனதை உங்கள் அனுபவத்திற்குள்ளாக பக்குவப்படுத்தி விடுகிண்றீர்கள்! இதன் பலன் மனச்சோர்வுதான்! 
ஆனால் வசனம் என்ன சொல்லுகின்றது? சங்கீதம் 103:6ல், 
"கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது"
விசுவாசியுங்கள்! மேலே உள்ள சோர்வுகள், மற்றும் உங்கள் சரீரம் உங்களுக்கு சொல்லும் செய்திகள் எல்லாமே மாறும். உங்கள் மனம் மேலே உள்ள வசனத்தை விசுவாசிக்கும் பொழுது, புதிதாகும், மறுரூபமாகும்.  அடுத்த விடயம்!! 
உங்களில் எத்தனை பேர் சாவதற்கு ஆயத்தம்? அல்லது சாக விருப்பமில்லை? இன்றைய உலகத்திலே குடும்பத்தாராலே, (உறவுகளாலே) கடன் பிரச்சனையினாலே, வியாதி முற்றியதால் என் பிள்ளைகளுக்கு அதிகம் செலவாகின்றதே, என்ற நெருக்கடிகளினாலே, செத்துப் போனால், நலம் என்று சாவை விரும்புகின்றவர்கள் அநேகர் உண்டு. இன்னொரு பக்கம், என் பிள்ளைகளுக்கு கலியாணம் செய்துவிட்டால் நிம்மதியாக செத்துவிடுவேன், பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டு செத்துவிடுவேன், பேரப்பிள்ளைகளின் கலியாணத்தைப் பார்த்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூடுவேன்! என்று சாவை தள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள்! இங்கே எபிரேயர் 11:5ல், 
"விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்...." 
இதைப் படிக்கின்ற உங்களுக்கு ஏனோக்குக்கு ஏற்பட்ட அனுபவம் காத்திருக்கின்றது!! எப்படி இந்த அனுபவத்தைப் பெற்று கொள்ளுவது? ஏனோக்கு ஏன் எடுத்துக்கொள்ளப்பட்டான்? வசனத்தைத் தொடர்ந்து படித்து, 'அவன் தேவனுக்கு பிரியமானவனென்று அவன் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னே சாட்சி பெற்றான்' இதைப் படித்துவிட்டு, தேவனுக்கு இதெல்லாம் பிரியம் என்று ஒத்த வசனங்களைத் தேடியெடுத்து, அதன்படி கிரியை செய்யாதிருங்கள்! அடுத்த வசனமாகிய 6ம் வசனத்தைப் படித்துப் பாருங்கள்! அது விசுவாசத்தையே வலியுறுத்துகின்றது! 
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கின்றவரென்றும் விசுவாசிக்க வேண்டும்" 
உங்களது கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கைக்கே இதுதான் அடிப்படை வசனம். உங்கள் விசுவாசம் பிதாவின் உள்ளத்தை குதூகமடைய செய்யட்டும்! உங்கள் மனம் புதிதாகட்டும்! உங்கள் வாழ்வு ஒளிரும்! மிளிரும்!! 
வேத வசனத்தை விசுவாசிக்கிற உங்களுக்கு ஆண்டவர் என்னவெல்லாம் செய்யமுடியும் என்ற நினைவுகளால் உங்கள் மனம் நிரம்பி வழிவதாக. கடைசியாக,
ஒரே ஒரு எச்சரிக்கை!
உங்கள் விசுவாசத்தை, உங்கள் விசுவாசத்தின் மீதே வைத்துவிடாதிருங்கள்! என்றுமே மாறாத நான் குறிப்பிடும் வசனத்தின் மீது வைத்துவிடுங்கள்!! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!!! 
ஜெபிப்போம்!
அன்புள்ள பரலோகப்பிதாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக! விசுவாசிக்க வேண்டிய வசனங்களை விசுவாசித்து, உமது உள்ளத்தைக் குளிர்விக்க உதவி செய்ததற்க்காய் நன்றி! நாங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல், எங்கள் வாழ்க்கையிலே தேவ சித்தம் என்ன என்பதை பகுத்தறிய வழி நடத்துவதற்காய் நன்றி! எங்கள் விசுவாச வாழ்க்கையின் மூலமாய், புறஜாதியினர் மத்தியிலே சாட்சிகளை ஏற்படுத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் பிதாவே! ஆமென், ஆமென்.
பின் குறிப்பு: உங்கள் மின் அஞ்சல் முகவரியினால் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்! இதில் வெளியிடும் பதிவுகள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்! பகிருங்கள்!! 

No comments:

Post a Comment