4 Nov 2020

SIN CONSCIOUS MIND

 கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்கள் யாவருககும் வாழ்த்துக்கள்!

காலையில் எழும்போதே தலைப்பு எமது எண்ணத்திலே அலைமோதிக் கொண்டு இருந்தது. இதைத்தவிற்க எவ்வளவோ முயற்சித்தேன். போகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பிடித்தது. எனவே இந்தச் செய்தி எப்படி ஈஸ்கடோஸ் பத்திரிக்கைக் குடும்பத்துக்கு ஆசீர்வாதமாய் இருந்ததோ, அதைப் போல இப்பொழுது உங்களுக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் என விசுவாசிக்கின்றேன். 

சென்ற வருட இறுதியில், எனது மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்று இருந்தபோது, பல்வேறு விடயங்களைக் குறித்து பேசினோம். அவள் கேட்ட கேள்விகளில் ஒன்று, பாவம் என்றால் என்ன? உங்களுக்குத் தெரிந்திருக்கின்றபடி,  நமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட துண்டுப்பிரதியில், பாவம் என்றால் என்ன? தலைப்பிலே அனேக வசனங்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவற்றில் சில இங்கேயும்.

"அநீதியெல்லாம் பாவந்தான்." (1யோவான்5:17)

"சொற்களின் மிகுதியில் பாவம் இல்லாமல் போகாது" (நீதி. 10:19)

"தீய நோக்கம் பாவமாம்" (நீதி. 24:9)

"ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாய் இருக்கும்" (யாக்கோபு 4:17)

இதை எல்லாம் கூறியும் எடுபடவில்லை. அதாவது இதெல்லாம் விளக்கமே ஒழிய மிகச் சரியான பதில் இல்லை. ஆனால் காருண்யா எதிற்பார்த்தது, இதுவல்ல. இப்பொழுது விசுவாசம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டால், நீங்கள் எபிரேயர் 1:1ஐக் கூறுவீர்கள். ஆனால் காருண்யா எதிற்பார்த்தது இதுவல்ல, விசுவாசமானது இயற்கை விதிகளை உடைத்தெறியும், கடவுளின் உண்மைத் தன்மை இப்படிப்பட்டதைப் போல. சரி! இங்கே பாவத்துக்கு வருவோம்.... இந்தப் பகுதி கடைசியாக நான் செய்தியளித்த ஊழியர் ஐக்கியத்தில் பகிறப்பட்ட ஒன்று. இப்பொழுது உங்களுக்கு,

ஆண்டவர், மனிதன். மனிதன் கடவுளுடைய உள்ளத்தை உடைக்க முயற்ச்சிக்கின்றான், தன் செயல்களால்.... (விலக்கப்பட்ட கனியைப் புசித்து) ஆனாலும் ஆண்டவர் அவன் மீதிருந்த அன்பினால் அவனைத் தேடி வந்தாரே! ஆதாம் ஆண்டவருடைய உள்ளத்தைத் தன் செயல்களினால் உடைத்தாலும், ஆண்டவர் அவனைத் தேடி வந்தாரே.... ஆண்டவருடைய அன்பு அவனுடைய பாவத்தை மேற்கொள்ளுகின்றதே! பாவத்தின் சம்பளம் மரணத்தின்படி இங்கே மனிதனுக்கும் ஆண்டவருக்கும் இடையே பிளவு வர முடியாதே. இங்கே நீங்கள் கற்றுக் கொள்ளுவது, உன்னுடைய செயலினால் அதாவது, பீடி குடித்தல், சிகரெட் அடித்தல், மதுக்குடித்தல், விபச்சாரம், வேசித்தனம் மற்றும் நீ செய்கின்ற அத்தனை அழிச்சாட்டியங்களையும் ஆண்டவருடைய அன்பு மேற்கொண்டுவிடுகின்றது! ஆண்டவரிடமிருந்து மனுக்குலத்தைப் பிரித்துவிட வேண்டும் என்ற சாத்தானின் சதி தோல்வியில் தானே முடிகின்றது. இங்கே நீங்கள் செய்கின்ற செயல் அல்ல. உள்ளம், மனம், MIND SETTING. பிசாசு தன் தந்திரத்தினாலே, ஏவாளின் உள்ளத்திலே ஆண்டவரைக் குறித்த தவறான படத்தை வைத்தான். பூமியிலே அனைத்து உயிரினங்களின் மீதும் அதிகாரத்தைப் பெற்ற மனிதன், பெற்றுக் கொண்ட அதிகாரத்தைப் பற்றி நினைக்காமல், சிந்திக்காமல், யோசிக்காமல் ஆண்டவருக்கும் தனக்கும் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி யோசித்தான். உண்மையில் பாவம் என்பது உள்ளம் அழுக்கடைவதுதானே ஒழிய, உங்கள் செயல் அல்ல. ஆண்டவரின் அன்பு, கருணை ஆகியவற்றை அறியாததுதான் பாவம். ஆண்டவரை எரிச்சல் உள்ளவர் என்றும், பழிக்குப் பழி வாங்குபவர் என்றும் பார்த்துக் கொண்டிருத்தலே பாவம். 

இன்றைய சபைகள் ஆண்டவரைக் குறித்த எந்தப் படத்தை விசுவாசிகள் உள்ளத்திலே வைக்கின்றன. ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு, ஆண்டவருக்குப் பிரியமாய், சாட்சியாய் வாழ வேண்டும் என்ற உற்சாக மனதோடு வருகின்ற விசுவாசிகளுக்குப் பாவத்தையும், அதன் ஆழத்தையும் பற்றிப் போதித்துக் கொண்டிருக்கின்றன. ஆவிக்குறிய வாழ்க்கையின் முன்னேற்றத்தைத் தடை செய்துகொண்டு இருக்கின்றன. 

வேதாகமத்தின் இன்னொறு பகுதிக்குள்ளாக உங்களை அழைத்துச் செல்லவிருக்கின்றேன்....

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலே அடிமைகளாய் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். வெளிப்படுத்தல் 11:8ல், வாசிக்கிறபடி, 

"...அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொலலப்படும்;...."

 சோதோமையும் எகிப்தையும் இணைத்துக் கூறியிருப்பதின் பொருள், சோதோம் எப்படி பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும் நிறைந்திருந்ததோ அதைப் போலவே எகிப்தும் இருந்தது. எகிப்தின் வாழ்க்கை பாவத்தின் வாழ்க்கை, அடிமைத்தனத்தின் வாழ்க்கை. இங்கே பாவத்துக்கு, வறுமைக்கு இஸ்ரவேல் மக்கள் அடிமைகளாக இருந்தார்கள். பாவத்துக்கு அடிமைகள் எப்படி பிசாசுக்கும் அடிமைகளாவார்களோ, அதைப் போல இந்த மக்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள். (உபா. 6:21) இதன்படி பார்வோன் பிசாசுக்கு ஒப்பாகின்றான். சுருக்கமாக, பாவத்துக்குள் மூழ்கி, பிசாசுக்கு அடிமைகளாய் இருந்த மக்களை ஆண்டவர் விடுவித்தார். உபா.7:8ல், "....அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் (பாவத்திலிருந்தும்) அதன் ராஜாவாகிய பார்வோனின் (பிசாசின்) கையிலிருந்தும் உங்களை மீட்டுக் கொண்டார்"

மனந்திரும்பிய  (எகிப்திலிருந்து கிளம்பிய)  உடனே ஞானஸ்நானம். இங்கே 1கொரி. 10:2ன்படி, 

"எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்." 

இதற்கு முன்பாக ஒரு வசனம், யாத். 14:13ன்படி, 

"அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காண்பதில்லை". இதன் பொருள்,

கர்த்தருக்குள் நித்திரை அடைந்தவரைப் பெட்டிக்குள் வைத்து ஆனி அடித்துக் குழிக்குள் இறக்குவதற்கு முன், கடைசியில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். இனி உங்கள் வாழ்க்கையில், பார்க்கப் போவதே இல்லை என்று சொல்லுவதைப் போல, எல்லோரும் திரும்பி ஒரு முறை பார்வோனைப் (பிசாசைப்) பார்த்துக் கொள்ளுங்கள்; இனி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பிசாசைப் பார்க்கப்போவதே இல்லை. இப்பொழுது ஞானஸ்நானம். சிவந்த சமுத்திரம் வழியாக வனாந்திர வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கின்றீர்கள். இங்கேதான் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பமாகின்றது. மீண்டும் பார்வோனை - பிசாசை அவர்கள் சந்திக்காததைப் போல நீங்களும் பிசாசைச் சந்திக்கப்போவதே இல்லை.  

உங்கள்  வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைக்குப் பாவந்தான் காரணம் என்று எண்ணாதிருங்கள். விடுதலையாவீர்கள்! இயேசு என்ற பெயரின் அர்த்தமே அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார். (மத்தேயு 1:21)

பாவம் உங்களை ஆளுகை செய்ய முடியாது என்பதை வேதாகமத்தின் இன்னொரு பகுதியிலிருந்து பார்க்கலாம். அது ரோமர் 6:1-7. வரையுள்ள வசனங்கள்.

"ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே."

இந்த வசனத்தின் பொருள், பாவம் அதிகமாகப் பெருகியிருக்கின்ற இடங்களில் கிருபை பெருகுகின்றது.  காரணம், பாவத்திலே வாழுகின்றவர்கள் அழிந்து போகக் கூடாது என்றுதான், ஆண்டவர் கிருபையைப் பெருக்கித் தருகின்றார். இங்கே கிருபை என்பது, சிறிதும் தகுதியற்றவர்கள் மேல் ஆண்டவர் வைக்கின்ற இரக்கம்.  இங்கே இது கேள்வி வடிவத்தில் கேட்கப்படுகின்றது. கிருபை பெருகும்படிக்கு நீங்கள் பாவத்தில் நிலைத்து நிற்கலாமா? கூடாதே அல்ல, முடியாதே. உதாரணமாக, 

நீங்கள் ௹10,000/-ஐ எடுத்துக் கொண்டு, உங்கள் மனைவி, பிள்ளைகளோடு ஒரு பொருட்காட்சிக்குச் செல்லுகின்றீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், மனைவிக்கு, பிள்ளைகளுக்கு எனப் பொருட்களை வாங்குகின்றீர்கள். மீதி இப்பொழுது உங்கள் மனைவி கையில் ௹1,000/- இருக்கின்றது என வைத்துக் கொள்ளுவோம். பொருட்காட்சியை விட்டு வெளியேரும்போது, கடைசியாக ஒரு கடைக்குள் செல்லுகின்றீர்கள். அது ஒரு மீன் காட்சியகம். அதில் உள்ள ஒரு கண்ணாடித்தொட்டி உங்கள் கவனத்தைக் அதிகமாகக் கவருகின்றது. நம்ம வீட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றீர்கள். விலை ௹3,500/- உடனே மனைவியிடம் பணத்தை எடு என்று கூறுகின்றீர்கள். என்னிடம் ௹1,000/-தான் இருக்கின்றது என்கின்றார்கள். இப்பொழுது உங்களுக்கு விருப்பமான மீனை வாங்க முடியுமா? கூடாதா? பதில் கூடாது அல்ல, முடியாது என்பதுதான். இதைப்போலத்தான் பாவத்தில் நிலைத்து நிற்க முடியாது. வசனம் 3ல், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? ஞானஸ்நான ஆராதனை என்றாலே அடக்க ஆராதனைதான். தண்ணீருக்குள் மூழ்கும்போது, பாவத்துக்கு மரித்தவர்களாக அடக்கம் பண்ணப்படுகின்றீர்கள். எனவே மரணத்தின் சாயல் உங்களிடத்தில் இருக்கின்றது. மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருகிறானே. 

இதைப் படிக்கிற நீங்கள் யாவரும், அதாவது ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் பாவத்துக்கு மரித்திருக்கின்றீர்கள். எனவே பாவம் உங்களை ஆளுகை செய்ய முடியாது. ஆகையால் இன்னும் நீங்கள் பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும் என்று ஜெபித்துக் கொண்டிருப்பீர்களெனில், நீங்கள் எகிப்திலே, பாவத்துக்கு அடிமையாக, பிசாசின் ஆளுகைக்குள்ளாக, மனந்திரும்பியதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட நிகழ்வுக்கு முன்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்றுதான் பொருள். இறுதியாக,

ஏற்கனவே எங்கள் ஈஸ்கடோஸ் பத்திரிக்கைக் குடும்பத்தார் அனைவருக்கும் தெரிந்த சத்தியம், தேவன் தனது உறவின் அடிப்படையிலேயேதான் ஆசீர்வதிக்கிறார் என்பது. இந்த உறவுக்கும் பாவத்துக்கும் கூடச் சம்பந்தம் இருக்கின்றது. அடிப்படை வசனத்திலிருந்து வருவோம்!

யோவான் 1:12ல், 

"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்."

இயேசு என்ற பெயரை விசுவாசித்து, இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் அத்துனைபேரும் தேவ பிள்ளைகள்தான். இதன்படி நீங்கள் ஆண்டவருடைய பிள்ளைகளாய் இருக்கின்றீர்கள். 1யோவான் 3:19ல்,

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்."

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யக் கூடாது என்று இல்லை. செய்யான் என்று இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ளுவதில் உங்களுக்கு ஏதுவும் சிரமம் இருக்காது என நினைக்கிறேன். ஏன் பாவஞ்செய்வதில்லை? நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனது வித்து (விதை/வசனம்/மனதில் இருந்த வரைபடம்) அவனுக்குள் இருக்கிறது. அவனது வாழ்க்கை தேவனால் டிஸைன் பண்ணப்பட்டிருக்கிறது. எனவே அவன் பாவஞ்செய்யமாட்டான். மேலும் 1யோவான்5:18ல்,

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்."

தேவனால் பிறந்த பிற கிறிஸ்தவர்களைப் பார்க்கும்போது, பாவஞ்செய்யான் என்று நீங்கள் அறிந்திருக்கிறபடி பாருங்கள். அவன் தன்னை பாவத்துக்கு விலக்கிக் காத்துக் கொள்ளுகின்றான். அந்த உள்ளுணர்வை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். 

என்ன நண்பர்களே! இங்கே கூறப்பட்டுள்ள செய்தியைக் கவனமாகப் படித்தீர்களா? சத்தியத்தைக் குறித்து எவ்வளவாய் நீங்கள் அறிந்திருக்கின்றீர்களோ, அவ்வளவாய் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இப்பொழுது பாவத்தைக் குறித்த உங்கள் மனதில் உள்ள படம் மாற்றப்பட்டு, புதிய படத்தைப் பெற்றிருக்கின்றீர்கள்! இச்செய்தியின் மூலம் உங்கள் உள்ளம் புதியதாக்கப்பட்டுள்ளது. நீங்கள் மறுரூபமாகி இருக்கின்றீர்கள்! 

GOD BLESS YOU! 

HAVE A NICE AND WONDERFUL CHRISTIAN LIFE AHEAD OF YOU!!

No comments:

Post a Comment