25 Jul 2021

KEYS OF KINGDOM OF HEAVEN - TO YOU

அன்பு தமிழ்த்தாய் உறவுகள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!!!

பரலோகராஜ்யத்தைப் பற்றிய செய்திகள்  மத்தேயு எழுதிய சுவிஷேசபுத்தகத்தில் மட்டுந்தான் இருக்கின்றது. முதன்முதலாக யோவான்ஸ்நானகன் பிரசங்கித்தபொழுது, மத்தேயு 3:2ல், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கம் பண்ணினான். இயேசுவும் கூட முதல் பிரசங்கத்தில் மத்தேயு 4:17ன்படி, "அதுமுதல் இயேசு மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்." தமது சீடர்களுக்கும் பரலோகராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிக்க சொன்னார். இதை மத்தேயு 10:7ல் பார்க்கலாம். இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில், மத்தேயு5:3ல், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." மத்தேயு 5:10ல், நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்திலிருந்து, பரலோகராஜ்யம் உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது எனப் பார்க்கின்றோம். இதிலிருந்து பரலோகம் வேறு; பரலோகராஜ்யம் வேறு என்றும் அறிகின்றோம். பரலோக இராஜ்யம் இந்தப் பூமிக்கு உரியது.

 யாருக்கெல்லாம் பரலோகராஜ்யம் சொந்தம்? ஆவியில் எளிமையுள்ளவர்கள், நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்கள் (கிறிஸ்தவர்கள்) மற்றும், மனந்திரும்பியவர்கள் (இயேசுவை ஏற்றுக் கொள்ளும்போது) பரலோகராஜ்யத்தை விளக்கும் விதமாக ஆண்டவர் 9 உவமைகளைக் கூறியிருக்கிறார்.

உவமை 1. மத்தேயு 13:24-30வரை வாசித்துப் பாருங்கள். இந்த வசனங்களின்படி, பரலோகராஜ்யம் ஒரு விவசாயிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இவன் கோதுமை எது களைகள் எது என்பதைக் குறித்த சரியான அறிவுடையவனாய் இருந்தான். களைகளுக்கு நெருப்பையும், கோதுமைக்கு களஞ்சியத்தையும் ஆயத்தம்பண்ணி வைத்திருந்தான்.

உவமை 2. மத்தேயு 13: 31,32. கடுகு விதைக்கு ஒப்பானது. பரலோகராஜ்யத்தின் சுவிஷேசத்தை விதைக்கும்பொழுது, அது முளைத்து, வளர்ந்து ஆகாயத்துப் பறவைகள் வந்து அடையத்தக்கதான விருட்சமாகின்றது. மிகப்பெரிய ஆசீர்வாதமாக அனேகருக்கு மாறுகின்றது. 

உவமை 3. மத்தேயு 13:33 இங்கே புளித்த மாவு.... கொஞ்சம் புளித்த மாவு, எப்படி 3படி மாவிலே அடக்கி வைக்கும்போது, எல்லா மாவையும் புளிக்க வைக்கின்றதோ, அதைப் போல இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் (வேத வசனங்கள்) தேசங்கள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும். உப்பப்பண்ணும், மனந்திருப்பும்படி செய்யும்.

உவமை 4. மத்தேயு 13:44 இங்கே பொக்கிஷம். இந்தப் பொக்கிஷத்தைக் கண்டு, தனக்குள்ளான எல்லாவற்றையும் விற்று அதைக் கொள்ளுகின்றான். பரலோகத்தின் மேன்மையை அறிந்தவனுக்கு எல்லாமே தூசிக்கு சமமாகின்றது.

உவமை. 5 மத்தேயு 13:45 வியாபாரிக்குச் சமம். நல்ல முத்தைப் பார்த்தவுடன் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று முத்தை வாங்குகின்றான். மற்ற எதுவுமே இவன் கண்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சுவிஷேசத்தைக் கேட்பவர்கள் இனிமேல் இப்படிப்பட்ட முடிவை எடுப்பார்கள். (குலப்பெருமை, கோத்திரப்பெருமை, ஆண்ட பரம்பரை இப்படி எந்த ஒன்றும் தடையாக இருக்காது) விசுவாசிக்கிற ஊழியர்கள் பாக்கியவான்கள்.

உவமை 6. மத்தேயு 13:47 வலைக்கு ஒப்பானது. இது சகலவிதமான மீன்களையும் பிடிக்கும். நல்லவை மட்டும் சேர்க்கப்படும். ஆகாதவை எறிந்து போடப்படும். களைகள் எப்படி நெருப்பிலே போடப்பட்டதோ, அதைப் போல. இது உலகத்தின் முடிவிலே நடக்கும்.

உவமை 7. மத்தேயு 18:23-35 ராஜாவுக்கு ஒப்பானது. விசாலமான மனம். மனதுருக்கம். மன்னித்தான். பரலோக ராஜ்யத்தில் மன்னிக்கிறவர்கள்தான் இருப்பார்கள். 

பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்கு எது தடையாக இருக்கின்றது?

மத்தேயு 19:20-23. இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். அந்த வாலிபன் கேட்ட கேள்வி, இன்னும் என்னிடத்தில் என்ன குறைவு உள்ளது எனக் கேட்டான். இதைப் போல அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் ஜெபத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இடியெனப் பதில் வருகின்றது, நீ பூரண சற்குணனாய் இருக்க விரும்பினால், ..... பண ஆசை ஒரு காரணம், ஒரு தடை.

மத்தேயு 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. இங்கே பரலோகராஜ்யத்திற்குள் போகத் தடையாய் இருப்பது, நியாயப்பிரமாணம்.

உவமை 8. மத்தேயு 25:1-13 பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பானது. இந்தப் பத்துபேருமே கிறிஸ்தவர்கள்தான். மணவாளன் இயேசுவின் வருகையைக் குறித்து போதிக்கப்பட்டவர்கள்தான்.  5 கன்னிகைகளைக் குறித்த கவலை இல்லை. எனென்றால் அவர்கள் மணவாளனோடு மகிழ்ச்சிக்குள்ளாகப் போய்விட்டார்கள். மற்ற 5 கன்னிகை களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவைளை முக்கியப் படுத்துகிறோம்: 1. பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மணவாளன் வரத் தாமதித்தபொழுது, அனைவரும் தூங்கிவிட்டனர். இதிலிருந்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு நேரம் இருந்தது. அப்பொழுது எண்ணெயைக் குறித்துக் கேட்டிருக்கலாம். ஏன் எண்ணெயை எடுத்துவந்தீர்கள்? ஒருவேளை மணவாளன் வரத் தாமதமாகிவிட்டால், தீவட்டி அணைந்து போய்விடக் கூடாது என நினைத்து எண்ணெயைக் கொண்டுவந்தோம் எனக் கூறி இருக்கலாம். உடனே இவர்களும் எண்ணெயை ஆயத்தப்படுததி இருக்க முடியும். இங்கே சபைக்கு வருகின்ற பிற விசுவாசிகளோடு பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வழி பிறக்கும். 

என்ன புடவை? நகை? சுடிதாரா? சல்வார் கம்மீஸா? எந்தக் கடை? என்பதில் கவனத்தைச் செலுத்தினாலும், அவர்களது விசுவாசத்தையும், வாழ்க்கை முறையையும் கவனியுங்கள். 

2. கவனம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். மணவாளன் வரத் தாமதமானால் இந்த எண்ணெய் போதுமா? தன்னுடைய வேலையில் கவனம். நீதிமொழிகள் 31:27ல், ".....தன் வீட்டுக் காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்." தன் வேலையில் ஜாக்கிறதையாய் (கவனமுள்ளவனாய்) இருப்பவன், நீசருக்கு முன்பாக நில்லாமல், இராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். விழிப்புள்ளவர்களாய் இருந்தால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். 

உவமை 9. மத்தேயு 25:14-30 இங்குப் பிரயாணமாய் போகின்ற ஒரு மனுஷன். தாலந்துகளைப் பெற்ற வேலைக்காரர்கள். உங்களுக்கு ஆண்டவர் கொடுத்து இருக்கின்ற திறமைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் தொழிலிலே, ஊழியத்திலே, வேலையிலே, பிறருக்கு உதவி செய்வதிலே பயன்படுத்துங்கள். அப்பொழுது நீங்கள் பரலோக ராஜ்யத்துக்குள் இருப்பீர்கள், அல்லது பரலோக ராஜ்யம் உங்களுக்குள் இருக்கும். 

யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்? அல்லது பெரியவனாயிருப்பான்?

மத்தேயு 18:1,3,4 மனந்திரும்பி சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிக்க மாட்டீர்கள். பரலோகராஜ்யத்தின் ENTRY TICKET சிறுபிள்ளைப்போலாகுதல். மத்தேயு 19:14ல்,

இயேசுவோ: சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி.....

நான் ஏற்கனவே மனந்திரும்பி இருக்கின்றேன். எனவே பரலோகராஜ்யத்துக்குள் இருக்கின்றேன் என விசுவாசிக்கின்றேன். பரலோகராஜ்யத்துக்கு உள்ளே இருப்பதற்கும், வெளியே இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

வேதம் உங்களுக்குப் பல்வேறு இராஜ்யங்களைக் குறித்து பேசுகின்றது. இங்கே பரலோகராஜ்யம், தேவனுடைய ராஜ்யம் இவைகளை மட்டும் பார்க்கலாம். பரலோகராஜ்யம் - KINGDOM OF HEAVEN, தேவனுடைய ராஜ்யம் - KINGDOM OF GOD. பரலோக ராஜ்யத்தைப்போலவே தேவனுடைய ராஜ்யமும் இங்குதான் இருக்கின்றது. இதை லூக்கா 17:20,21ல், 

"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

இதோ இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்லப்படுவதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம்  உங்களுக்குள் இருக்கிறதே என்றார்."

ரோமர் 14:17ல், தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. புசிப்பும் குடிப்பும் சரீரத்தைச் சார்ந்தது. நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமும் உள்ளத்தைச் சார்ந்தது. தேவனுடைய ராஜ்யத்தின் ஒரு பகுதிதான், பரலோகராஜ்யம். உங்கள் உள்ளத்திலே மேலே உள்ள மூன்றும் இருந்தால் நீங்கள் பரலோகராஜ்யத்தில் இருக்கின்றீர்கள். இறுதியாக,

மத்தேயு 16:19ல், 

"பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்."

இந்த வசனத்தில் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் எனக் கூறுகின்றார். திறவுகோல் எதற்குப் பயன்படும்? பூட்டைத் திறக்கவும், பூட்டவுமே பயன்படும். நிச்சயமாகக் கட்டுவதற்கும் கட்டவிழ்ப்பதற்கும் பயன்படாது. இந்த வசனத்தின் முதல் பகுதி வேறு; இரண்டாம் பகுதி வேறு.

இயேசு, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்ற வெளிப்பாட்டைக் கூறியவுடன், இதை நீ உன்னுடைய யோசனையினாலும், அறிவினாலும் நீ பெற்றுக் கொள்ளவில்லை, பரலோகத்தில் உள்ள பிதாவே உனக்கு வெளிப்படுத்தினார் என்று கூறி, பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் என வாக்குக் கொடுக்கின்றார். மத்தேயு 13:52ல் எழுதியிருப்பதைப் போல, பரலோகராஜ்யத்துக் கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகனைப் போல, பொக்கிஷத்தை எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனாக ஊழியம் செய்யும்படிக்கு திறவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் செய்தியைக் கேட்க, வருகின்ற ஆத்துமாக்களை சமாதானத்தினாலும், நீதியினாலும், பரிசுத்த ஆவியால் உண்டாகும் மகிழ்ச்சியினாலும் நிறப்புவார். அதாவது பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிப்பார்கள்.  

ஜெபிப்போம்!

அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம்! மனந்திரும்பாமல் போனால், வருகின்ற ஆபத்தை விவசாயின் மூலமாகவும், மீன்பிடி வலையின் மூலமாகவும் கற்றுத் தந்ததற்காக நன்றி! சுவிஷேசத்தை அறிவிக்கும்பொழுது, நற்செய்தியைக் கேட்கின்ற யாவரும் மற்ற எதுவும் எனக்குத் தேவையில்லையென, பொக்கிஷத்தைக் கண்ட மனிதனைப் போல இயேசுவை ஏற்றுக் கொள்ள கிருபை செய்யும். கொஞ்சம் புளித்த  மா, மாவனைத்தையும் உப்பப்பண்ணும் என எழுதியிருக்கிறபடி, ஊழியத்திலே விதைக்கின்ற சத்தியம் சபையினிலே, மாகானங்களிலே, ஊரிலே, பரலோகராஜ்யம் விரிவடைவதாக. கேட்கின் அனைத்துக் குடும்பங்களிலும், சமாதானமும், நீதியும், பரிசுத்த ஆவியினால் உண்டான சந்தோஷமும் நிறம்பி வழிவதாக. பண ஆசையில்லாதவர்களாய் கிருபைக்குள்ளாக வாழ உதவி செய்யும். இருக்கின்ற திறமைகளைப் பயன்படுத்தவும், பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளுபவர்களாய் இருக்கவும், கவனமுள்ளவர்களாய் இருக்கவும் வழி நடத்தும். சிறுபிள்ளைகளைப் போல உம்மைச் சார்ந்து வாழக் கிருபை செய்வீராக. இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென், ஆமென்.  

அன்பு சகோதர, சகோதரிகளே மேலே உள்ள செய்தி, நாங்கள் வெளியிடும் "ஈஸ்கடோஸ்" என்ற மாதப் பத்திரிக்கையிலிருந்து வெளியிடப்படுகின்றது. எமது மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியை அனுப்பினால், அல்லது கமென்ட் பகுதியில் உங்கள் முகவரியைப் பதிவிட்டால், உலகின் எந்தப்பகுதிக்கும், அது அலாஸ்காவாக இருந்தாலும் சரி..... முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாகப் பத்திரிக்கை அனுப்பி வைக்கப்படும்.  ஆண்டவர் இந்தப் பத்திரிக்கை மூலமாக உங்களையும், உங்கள் குடும்பத்தையும், தொழிலையும், ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக. 


25 Mar 2021

CAST YOUR VOTE, DON'T COST YOUR VOTE

அன்பான, அறிவார்ந்த தமிழ்நாடு, புதுச்சேரி வாக்காளப் பெருமக்களே!

6ந் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக இந்த இடத்தில் உங்களைச் சந்திக்கின்றேன்.

இந்திய தேசத்துக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனப் பிரிட்டன் முடிவெடுத்தபொழுது, சர். வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார், 

இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காதீர்கள்! பின்னாட்களில் சுதந்திரம் என்றால் என்ன என்பதை அறியாதவர்களின் இந்தியாவின் ஜனநாயகம் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. அது சர்வாதிகாரத்துக்கு வழிகோலும்

இப்பொழுதிருக்கின்ற இந்தியாவின் நிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள்! விலைவாசி விண்ணைத் தொடுகின்றது!! அதைக் குறித்து யாரும் கவலைப் பட்டதாகக்கூட தெரியவில்லை. மக்களை ஆடு மாடுகளைப் போல நடத்துகின்ற ஆளும் கட்சி. எதிர்க்கட்சிகூட இதில் ஏதாவது செய்கிறதா என்றால் அதுவும் இல்லை. முன்பெல்லாம் விலைவாசி சிறிது ஏறினால்கூட நாட்டில் ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெறும். அரசாங்கமும் இறங்கிவந்து, சிறிது இறங்கிவந்து சிறிது வரியைக் குறைத்து, மக்களைத் திருப்திபடுத்த முயற்சிக்கும். இப்பொழுதோ, இவை எதுவும் நிகழவில்லை.

காரணம் மிகச் சிறியதுதான். முன்பு மக்களுக்கு ஆட்சியின்மீது சலிப்பு வந்தால், ஆளும் கட்சியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. இப்பொழுதோ பணத்தைக் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாமென நினைத்து, ஆளும் பொழுதே எப்படியெல்லாம் ஊழல் பண்ணமுடியுமென ஆராய்ச்சி செய்து, அரசாங்க வேலை எல்லாவற்றிலும் ஊழல் செய்கின்றனர். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் ஒரு மாபெரும் வியாபாரமாகிவிட்டது. 

இப்பொழுதுள்ள நிலையைப் பார்த்து, நீங்கள் சலிப்போ சோர்வோ அடையத்தேவையில்லை. உங்கள் கைகளில் ஒரு வலிமையான ஆயுதம் இருக்கின்றது. அதுதான் ஓட்டு! எவன் வந்தாலும் நடப்பதுதான் நடக்கும் என நினைக்காமல், வீட்டில் இருந்துவிடாமல் உங்கள் ஓட்டைப் பதிவு செய்யுங்கள். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கூட, பல ஆயிரங்களைச் செலவு செய்து, தமிழ்நாட்டுக்கு வந்து, வாக்குப்பதிவு தினத்தன்று ஓட்டளிக்கின்றர். ஓட்டு அவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை அவர்கள் வெளிநாட்டில் போய்தான் கற்றுக் கொள்ளுகின்றார்கள். உள்ளூரிலிருந்து கொண்டு, வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்! வாக்களியுங்கள்!!

இதை நீங்கள் செய்வீர்கள் என்ற முழு நிச்சயத்தோடு நாம் அடுத்த பகுதிக்குள் செல்லுவோம்! வாருங்கள்!! நீங்கள் ஏற்கனவே ஓட்டளிக்க முடிவு செய்து, எந்தக்கட்சிக்கு அளிக்கலாமென முடிவு செய்திருந்தால் மிகவும் நல்லது, அப்படியே செய்யுங்கள்..... இந்தக் குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் எனக் கூற நாங்கள் வரவில்லை.

ஓட்டளிக்க முடிவு செய்து யாருக்கு வாக்களிக்கலாம் என்ற கேள்விகளோடு நீங்கள் இருப்பீர்கள் எனில், இந்தப் பகுதி உங்களுக்கானதுதான். முதலாவது,

நான் யாருக்கு வாக்களிக்கக் கூடாது? 

1. ஜாதி, மதத்தைக் கூறிக் கொண்டு வருகின்ற வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது.

2. உங்கள் வீட்டில் எத்தனை வாக்குகள் இருக்கின்றது? ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் தருகின்றேன் எனக் கூறி வருபவர்க்கு ஓட்டளிக்கக் கூடாது. இப்படி வருபவர்கள், தங்கள் பொறுப்புகளில் உண்மையில்லாதவர்களாய் இருப்பார்கள். இப்படிப்பட்ட வேட்பாளர்களுக்குத் தேர்தல் என்பது சூதாட்டம். சிறிய மீனைப்போட்டு, பெரிய மீனைப் பிடிக்க நினைக்கும் வியாபாரிகள்.  

3. உங்கள் பகுதியைப் பற்றி, தெருவைப் பற்றி, கிராமத்தைப்  பற்றி அதன் பிரச்சனைகளைப் பற்றித் தெரியாதவருக்கு நீங்கள் ஓட்டளிக்கக் கூடாது. 

4. சட்டமன்றத்தில் உள்ளூர் பிரச்சனைகளைப் பற்றிப் பேசமாட்டாரென நீங்கள் நினைத்தால் ஓட்டளிக்க வேண்டாம்.

5. ஒருவேளை கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்திருப்பார் என்றால், அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த 5 வருடங்களில் எவ்வாறு இயங்கியது? என்பதைக் கவனியுங்கள். திருப்தி இல்லையெனில், மக்களுக்கு எந்த உயர்வும், ஆதரவும் இருக்காது.

6. கட்சிக்கு என ஓட்டளிக்க வேண்டாம். இப்போது,

நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

1. உங்களுக்கு நன்கு பழக்கமானவராக, அறிமுகமானவராக இருந்தால், வாக்களிக்கலாம். அவர் சரியில்லையெனில், சரி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. 

2. தேர்தல் பரப்புரையைக் கேட்கும்போதே இவர் உண்மையானவரா? எனத் தெரிந்துவிடும். தாராளமாக வாக்களிக்கலாம்.

3. ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது, ஏரியாவுக்கு, கிராமத்துக்கு வந்து நேரடியாக மக்களை, பஞ்சாயத்துத் தலைவரை, உறுப்பினர்களைச் சந்திப்பாரெனில் தாராளமாக வாக்களிக்கலாம்.

4. பிரச்சனைகளைத் திறமையாகக் கையாளுபவர்களுக்கு தாராளமாக வாக்களிக்கலாம். 

5. எப்பொழுதுமே சேவை மனப்பான்மையுடன் இருப்பவருக்கு வாக்களியுங்கள்.

மேலே உள்ளது அனைத்தும் வேட்பாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது வாக்காளரை மையமாக வைத்து, அதாவது உங்களை மையமாக வைத்து,

1. தேர்தல் என்றாலே நீங்கள், உங்களுக்கு உதவி செய்கிற, உங்களுக்காகப் பேசுகின்றவர்களை, சேவை செய்கின்வர்களை, அரசாங்க திட்டங்களை உங்கள் பகுதிக்குக் கொண்டு வருகின்றவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கின்றீர்கள்.  

2. பணக்காரர் என்ற அடிப்படையில் நீங்கள் வேட்பாளர்களைப் பார்க்க வேண்டாம். 

3. எனது ஜாதி, எனது மதம் என்ற அடிப்படையில் நீங்கள் வேட்பாளர்களைப் பார்க்க வேண்டாம். 

4. தேர்தல் என்றால் எனக்கு என்ற அடிப்படையில் பார்க்காமல், நமக்கு என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும்.

5. எங்கள் பகுதி, எங்கள் ஊர் மக்களின் வாழ்வாதாரம் உயருமா? எனப் பாருங்கள். 

6. உங்கள் பகுதி, ஊரின் நீண்டகால தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்துத் தேர்தலைப்  பாருங்கள்.

மேலே உள்ளவைகளின் அடிப்படையில் நீங்கள் இந்தத் தேர்தலை அனுகினால், நிச்சயமாகவே உயர்வு அடைவீர்கள். 

7. நீங்கள் ஜெயிப்பவருக்குத்தான் எனது வாக்கு என்ற அடிப்படையில் வாக்களிக்காதிருங்கள். இப்படிப்பட்டவர்களைப் பிடிப்பதற்காகவே அரசியல் கட்சிகள் தங்களுக்கு மக்களின் செல்வாக்கு இருக்கிறது என்ற மனநிலையை வாக்காளர்களின் உள்ளத்திலே பதிப்பதற்காக ஊடகங்களின் துணையோடு, தவறான காட்சிகளை வெளியிடுகின்றன. ஒரு நல்லவருக்குத்தான் ஒட்டளிப்பேன் என்ற மன நிறைவோடு இருங்கள்.

8. ஓட்டுப் போடும் நாளன்று, உங்கள் வீட்டிலேயே இந்தச் சின்னத்துக்குத்தான் ஓட்டளிப்பேன் என்று முடிவெடுத்தபின் வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள். ஏனெனில் ஒரு கணிப்பு, ஏறக்குறைய 48% பேர், எந்தச் சின்னத்துக்கு வாக்களிப்பது என்பதை, வாக்குச் சாவடியில்தான் முடிவெடுக்கின்றார்கள் எனக் கூறுகின்றது.

அறிவார்ந்த வாக்காளப் பெருமக்களே!

இதிலே குறிப்படப்பட்டவைகளை நீங்கள் சிந்தித்துப் பார்த்து, வாக்களியுங்கள்! உங்கள் எதிற்காலம் மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளின் எதிற்காலம்கூட உங்கள் கைகளில் உள்ள ஓட்டில்தான் இருக்கின்றது. 

அமைதியாகத் தேர்தல் நடக்க அதிகாரிகளுக்கு உதவி செய்யுங்கள்! சுவர்களில் விளம்பரம் எழுதும்போதும், தேர்தல் பரப்புரை தட்டிகளை வைக்கும் போதும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதபடி, மற்றவர்களோடு இனக்கமாக ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள்!

உங்கள் பகுதியில் பரப்புரையின் போதும், தேர்தல் நாளிலும் அமைதி காக்கப்பட வாழ்த்துக்கள்!!!.

உங்கள் நண்பர்களோடு இந்த வலைத்தளத்தைப் பகிறுங்கள்! ஆண்டவர்தாமே இந்தத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க உதவி செய்வாராக. உங்களை ஆசீர்வதிப்பாராக.

8 Feb 2021

RIP

 அன்பு நண்பர்கள் யாவரோடும் இந்தச் செய்தியை வருத்தத்தோடு பகிற்ந்து கொள்ளுகின்றோம்!

அன்பான சகோதரர் அப்பாத்துரை அவர்களின் மறைவு குறித்து பெருந் துயருருகின்றோம். எனக்கும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கும் 1983, 4ல், முதல் தொடற்பு ஏற்ப்பட்டது. அன்புச் சகோதரர் மங்களராஜ் என்பவர் நான் கடையிலிருந்து வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தபொழுது,  எனக்கு இரண்டு ஒலி நாடாக்களைக் என் கைகளில் கொடுத்து, இதைப் போட்டுக் கேளுங்கள் என்று கூறினார். சரியென வாங்கிவைத்தேன். அதில் அன்புச் சகோதரர் மோகன்.சி. லாசரஸ் அவர்களின் சாட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலாவது அவருடைய சாட்சியைக் கேட்டபொழுது, இவர் ஏதாவது கூட்டம் நடத்துகின்றாறா? என்ற எண்ணம் எனக்கு ஏற்ப்பட்டது. தினந்தோறும் இரவு அந்த ஒலிநாடாவைக் கேட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன்.  அடுத்த முறை அந்த ஊழியர் வரும்போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென முடிவு செய்தேன். 10 நாள் கழித்து வந்தார். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் வாகைத்தாவு என்ற கிறாமத்தில் ஊழியம் செய்து வந்தார். அவர்தான் திறப்பின் வாசல் ஜெபத்தை அறிமுகப்படுத்தினார். மாசக் கடைசிக்காகக் காத்திருந்தேன். நாள் வந்தது. போனேன். அப்பொழுது ரோட்டு மேல இருக்கின்ற வானத்தின் வாசல் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் இருந்த பந்தலிலே கூட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தது. செய்தியைக் கேட்டேன். மனதிற்கு இதமாக இருந்தது. எனவே தொடற்ந்து ஒவ்வொறு மாதமும் செல்ல ஆரம்பித்தேன்.  

வானத்தின் வாசல் திறந்த மாதமா, அல்லது அடுத்த மாதமா என எனக்குச் சரியாக நினைவில் இல்லை. எனக்குப் பால்கனியில் இடம் கிடைத்தது. அந்த ஜெப வேளையில் இயேசு எனக்கு முன்பாக வந்து நின்று சற்று குனிந்து, என் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். உடனே நான் கண்களைத் திறந்து பார்த்தேன். உண்மையிலேயே இயேசுவா? அப்பொழுது எனது இடது பக்கம் ஜெபித்துக் கொண்டிருந்த சகோதரன் பார்த்தால் எப்படித் தெரியுமோ அதைப் போல, என்னை ஆசீர்வதிக்கும் காட்சி எனக்குத்  தென்பட்டது. ஊர் திரும்பும் வரை அதையே மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.  அந்த நாள் இரவு நான் வழக்கமாக ஜெபிக்கும் இடத்தில், நான் முழங்காலிட்டு ஜெபிக்க ஆரம்பித்தபொழுது ஒரு ஒளிப்புள்ளியை சற்று தூரத்தில் பார்த்தேன். அந்த ஒளிப்புள்ளி முதலாவது, சிறிதாகவும் பின்பு வரவர பெரிதாகவும் மாறியது. நான் என் கைகளைப் பார்த்தேன், அந்த வெளிச்சத்தில், எனது கைகள், எனது சட்டை எல்லாமே பளீரென்ற வெண்மை. எப்பொழுது தூங்கினேன் எப்பொழுது விழித்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. காலையில் எழுந்தவுடன் எனது உள்ளத்தில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அப்படியே பொங்கிப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதுவரை நான் செய்த குற்றங்களை நினைத்துப் பார்த்தேன். அது கோழியின் இறகுபோல மிகவும் இலேசாக எனது உள்ளத்தில் உணர்ந்தேன். இதற்கு முன் நினைத்துப் பார்த்தேன் என்றால் உள்ளமெல்லாம் கனத்து இருக்கும்.  உடனே அப்போதிருந்த ஊழியரிடம் சென்று இது என்ன? என்று கேட்டேன். இதுதான் பாவ மன்னிப்பின் நிச்சயம் என்றார். பின்பு சென்னையில்தான் பாவமன்னிப்பு என்பது மூன்று காலத்துக்கும் சேர்ந்தது எனத் தெரிந்து கொண்டேன்.  

1989ல், நானும் எனது மனைவியும் திறப்பில் வாசல் ஜெபத்துக்கு சென்றிருந்தபொழுது, ஜெபத்துக்கு முன்னால் வந்தவர்களுக்கு ஜெபித்துக் கொண்டிருந்த நான்கைந்து பேரில் ஒருவராக இருந்தார். நான் சென்னைக்கு வந்தபின் நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை திறப்பின் வாசல் ஜெபத்துக்குச் சென்றிருக்கின்றேன். ஒரு முறை நாசரேத் வழியாக மெஞ்ஞானபுரம் சென்றபொழுது, வானத்தின் வாசலில் இறங்கி, ஊழியத்தில் விதைக்கவும் ஆண்டவர் வழி நடத்தினார். கடைசியாகத் திறப்பின் வாசல் ஜெபத்திற்கு நான் மட்டும் சென்றபொழுது, தேன் என்ற வீடியோ சிடியை வெளியிட்டார்கள். அந்த நேரத்தில் நான் திரைப்பட ஊழியத்தைச் செய்து வந்தபடியால், ஒரு சிடியை வாங்கி வந்தேன். பல்வேறு இடங்களில் ஊழியத்திலே திரையிட்டிருக்கின்றேன்.

மேலே உள்ள அனைத்தும் எனக்கும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கும் உள்ள தொடற்புகள். இந்த ஊழியத்தின் மூலமாகவே ஆண்டவர் என்னை இரட்சிக்கச் சித்தமாய் இருந்தார் போலும்.

இப்பொழுது சகோ.அப்பாதுரை அவர்களைப் பற்றி: 

இங்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் உள்ள ஒருவரோடும் எனக்குத் தனிப்பட்ட பழக்கம் இருந்ததில்லை. அன்பு சகோதரன் சொன்ன தகவலிலிருந்து இருவரும் இணைந்து 35ஆண்டுகாலமாக தேவபணி செய்தார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் காலத்திலும் இப்படியா..... வாவ்..... 😯😯😯😯

1, 2, 5, 10 வருடங்களாக இனைந்து ஊழியம் செய்தாலே மிகப் பெரிய சாதனை. வேதத்திலே கூடப் பிரிந்து போன ஊழியர்களை வாசிக்கின்றோம். ஒரு மனப்பட்டு இவ்வளவு காலம் நீங்கள் உழைத்தீர்கள் என்றால், எங்களைப் போன்ற ஊழியர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தீர்கள்!ஒரு சவாலாக இருக்கின்றீர்கள். பாத்தியா ஊழியத்தை எப்படி ஒருமனமாச் செய்தோம் என்று  என்னிடம் கேட்பதுபோல இருக்கிறது. ஈடு செய்ய முடியாத இழப்புதான். சகோதரரை உடல் நலமிலலாமல் வைத்திய சாலையில் சேர்த்திருப்பதாகவும் அவருக்காக ஜெபிக்கவும் எனக் குறிப்பைப் பார்த்தபொழுது ஜெபித்தேன் விசுவாசித்தேன்! வீடு திரும்பிவிட்டாரெனச் செய்தி வந்தபொழுது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் இப்படி பொசுக்கென்று போய்விட்டாரேயென நினைத்து, உலகம் ஒரு ஊழியரை இழந்துவிட்டதே என்று நினைத்து வருந்துகின்றேன். இயேசு அழைக்கிறார் ஊழியக் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். எங்கள் இதயம் உங்களோடு இருக்கின்றது. 

எனது அம்மா இந்த உலகத்தை விட்டுச் சென்றபோது, எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. செய்வதரியாது அப்படியே உட்கார்ந்துவிட்டேன். இப்படியொரு பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.  திடீரென வீட்டு காலிங் பெல் ஒலித்தது. எனது மனைவியின் தம்பி உள்ளே நுழைந்தார். அடுத்த நொடி எனது சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. ஒரு புத்துணர்வு என் உள்ளத்தை ஆட்கொண்டது. உடனே ஆக வேண்டியதைக் கவனிப்போம் என அடுத்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். பின்பு அந்தச் சூழலை நினைவு கூர்ந்தபொழுது, தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் என அறிந்து கொண்டேன். அதைப் போல ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் துக்கம் நிவர்த்தியாக ஒருவரை அனுப்புவார். மனங்கலங்காதிருங்கள். இதுவரை உங்களை உங்கள் ஊழியத்தை நடத்தி வந்தவர், மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்னவர், இனிமேலும் உங்களை, ஊழியத்தை நடத்துவார். 

அன்புச் சகோதரர் விட்டுச் சென்ற அவரது மனைவி மற்றும் மகள் குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாவதாக.

கொலோசேயர் 1:12"ஒளியில் உள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, உங்களைத் தகுதியானவருக்கு," சகல துதியும் கனமும் உண்டாவதாக. ஆமென்.

1 Feb 2021

AN APPEAL TO Bro. PAUL DHINAKARAN.....

ன்பு தமிழ்தாய்  உறவுகள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துகள்!!

சமீபத்தில் நீங்கள் தொலைக்காட்சி, செய்திப்பத்திரிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் சகோதரர் பால்தினகரன் அவர்களைப் பற்றிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். பல்வேறு விமரிசனங்களைப் படித்ததினால் எனக்கு ஆவியானவர் உணர்த்துகின்ற விடயங்களை உங்களிடம் பகிற்ந்து கொள்ளுகின்றேன். நான் பார்த்த, படித்த பதிவுகளில் யாரும் மத்திய ஆளும் கட்சியைக் குறை கூறவிலலை. இது ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக நான் பார்க்கின்றேன். 

முதலாவது, எதிற்புக் குரல் எழுப்பியவர்களின் பதிவுகள்: (ஏறக்குறைய 97% கிறிஸ்தவர்கள்) 5கிலோ தங்கம், 500 கோடி பணம். இது ஒருவரின் விமரிசனம். 

இவர் செய்வது ஊழியமா? அட்டூழியமா?

அத்தனையும் ஏழை மக்களின் பணம்..... இப்படி செய்துவிட்டாரே!

பண ஆசை எங்கே கொண்டுபோய் இவரை நிறுத்திவிட்டது.....

வெளிநாடுகளிலே உல்லாசமாக வாழ்ந்துவருகின்றார். 

இவரெல்லாம் நிச்சயமாக நரகத்துக்குத்தான் போவார்.....

இப்படி பல விமரிசனங்கள்.....

தமிழீழத்திலிருந்து .....

இவருடைய அப்பா காலத்தில், அவருடைய ஊழியத்தில் என்னைப் பெயர் சொல்லி அழைத்து, எனது இரண்டு மார்பகங்களில் இருந்த கேன்சரை இயேசு குணமாக்குகின்றாரெனக் கூறினார்.

அறுவைச் சிகிச்சைக்கு நாட்குறித்திருந்த எனக்கு இயேசு பூரண சுகம் தந்தார். அவர் மகன் எவ்வளவு சம்பாதித்தால் என்ன? போவியா?.....

சகோதரர் பால் தினகரன் செய்ய வேண்டியது: 

எப்பொழுதுமே நடந்தது, நடந்து முடிந்துவிட்டது. இனிமேல், 

முதலாவது, உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ள முயற்சிக்காதிருங்கள்.

இப்பொழுதுள்ள விமரிசனங்களுக்கு எந்தப் பதிலும் வேண்டாம். உங்களது கானொளிக்காட்சியைப் பார்க்க நேர்ந்தது, அது போதும்.

மேலும் மக்கள் முன்னால் நான் நின்று எப்படி ஊழியம் செய்வது என அங்கலாய்க்க வாய்ப்புள்ளது.💔💔💔 

இதற்கு 'நான்' ஐ எடுத்துவிட்டால் சரியாகிவிடும். 

உங்கள் உண்மை ஊழியத்தில் வேலை செய்யாது, உங்களை அழைத்தவரின் உண்மையின் மீது நின்று ஊழியம் செய்யுங்கள்! 

உங்கள் தவறு என்ன?

கணக்கு காட்டாதது.

இதைச் சரி செய்ய விசாரனைக்கு உட்படுங்கள்! அரசியல்வாதிகளின் துணையை நாடாதிருங்கள்! அப்படிச் செய்தால், தேவனுக்கு முன்பாக, கணக்குக் காட்டாததைவிட மிகப்பெரிய குற்றம் புரிந்தவர்களாவீர்கள். இயேசுவின் நாமத்துக்கு அபகீர்த்தி உண்டு பண்ணினவர்களாவீர்கள்.

எனவே விசாரணையைச் சந்திக்கும்போது உண்மையைத் தவிற வேறு எதையும் பேசாதிருங்கள். பிறர் மீது குற்றஞ்சுமத்த வாய்ப்பு வந்தால், அமைதியாகிவிடுங்கள். உங்களின் இந்த நடவடிக்கை உங்களை விசாரிக்கின்ற அதிகாரிகளையும் இயேசுவுக்குள்ளாக, மனந்திரும்புவதற்கேதுவாக வழி நடத்திவிடும். 

இப்பொழுது உங்கள் விசுவாசத்தை வேதவசனத்தைக் கொண்டு வெளிப்படுத்தினீர்கள் எனில், குற்றம் சுமத்துகின்றவர்களின் குற்றச் சாட்டு அதற்கு மேலாக நிற்க வாய்ப்பிருக்கின்றது. எனவே நீங்களும் இயேசுவும் மட்டும்.

எப்படியும் விசாரணை முடிய 3 மாதங்களாவது ஆகும்.  அபராதம் விதித்தால், மேல் முறையீடு செய்யாமல் பணத்தைக் கட்டிவிடுங்கள். விசாரணை அனைத்தும் முடிந்தபின்,

உங்களைக் கேள்வி கேட்டவர்களின் கேள்விகளை அலசி ஆராய்ந்து, முடிவெடுங்கள். இப்பொழுது எந்த மாற்றமும் வேண்டாம்.

மேலும் உங்களை விமரிசித்த பதிவுகளைப் பாருங்கள். அவைகளில் உண்மையிருக்குமானால், சரி செய்வேணடியதைச் சரிசெய்யுங்கள். உண்மையில்லாதவற்றை ஒதுக்கிவிடுங்கள். உங்களுக்கு வருகின்ற காணிக்கைப் பணத்தில் இவ்வளவுதான் குடும்பச் செலவுக்கு என முடிவெடுங்கள். உதாரணமாக 10%, 20%. 

வாழ்த்துக்களுடன்..... 

உங்கள் சகோதரன்,

கா. செல்வின்துரை

செல்லிடப்பேசி எண்: 9840836690

என்ன நண்பர்களே! உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே கமென்ட் பண்ணுங்கள். வேறு ஏதாவது தலைப்பிலே எழுத வேண்டும் என்றால் அதையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்! எங்கள் பதிவுகள் உடனுக்குடனே உங்களை வந்தடைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்! ந‍ன்றி !