25 Jul 2021

KEYS OF KINGDOM OF HEAVEN - TO YOU

அன்பு தமிழ்த்தாய் உறவுகள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!!!

பரலோகராஜ்யத்தைப் பற்றிய செய்திகள்  மத்தேயு எழுதிய சுவிஷேசபுத்தகத்தில் மட்டுந்தான் இருக்கின்றது. முதன்முதலாக யோவான்ஸ்நானகன் பிரசங்கித்தபொழுது, மத்தேயு 3:2ல், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கம் பண்ணினான். இயேசுவும் கூட முதல் பிரசங்கத்தில் மத்தேயு 4:17ன்படி, "அதுமுதல் இயேசு மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்." தமது சீடர்களுக்கும் பரலோகராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிக்க சொன்னார். இதை மத்தேயு 10:7ல் பார்க்கலாம். இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில், மத்தேயு5:3ல், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." மத்தேயு 5:10ல், நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்திலிருந்து, பரலோகராஜ்யம் உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது எனப் பார்க்கின்றோம். இதிலிருந்து பரலோகம் வேறு; பரலோகராஜ்யம் வேறு என்றும் அறிகின்றோம். பரலோக இராஜ்யம் இந்தப் பூமிக்கு உரியது.

 யாருக்கெல்லாம் பரலோகராஜ்யம் சொந்தம்? ஆவியில் எளிமையுள்ளவர்கள், நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்கள் (கிறிஸ்தவர்கள்) மற்றும், மனந்திரும்பியவர்கள் (இயேசுவை ஏற்றுக் கொள்ளும்போது) பரலோகராஜ்யத்தை விளக்கும் விதமாக ஆண்டவர் 9 உவமைகளைக் கூறியிருக்கிறார்.

உவமை 1. மத்தேயு 13:24-30வரை வாசித்துப் பாருங்கள். இந்த வசனங்களின்படி, பரலோகராஜ்யம் ஒரு விவசாயிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இவன் கோதுமை எது களைகள் எது என்பதைக் குறித்த சரியான அறிவுடையவனாய் இருந்தான். களைகளுக்கு நெருப்பையும், கோதுமைக்கு களஞ்சியத்தையும் ஆயத்தம்பண்ணி வைத்திருந்தான்.

உவமை 2. மத்தேயு 13: 31,32. கடுகு விதைக்கு ஒப்பானது. பரலோகராஜ்யத்தின் சுவிஷேசத்தை விதைக்கும்பொழுது, அது முளைத்து, வளர்ந்து ஆகாயத்துப் பறவைகள் வந்து அடையத்தக்கதான விருட்சமாகின்றது. மிகப்பெரிய ஆசீர்வாதமாக அனேகருக்கு மாறுகின்றது. 

உவமை 3. மத்தேயு 13:33 இங்கே புளித்த மாவு.... கொஞ்சம் புளித்த மாவு, எப்படி 3படி மாவிலே அடக்கி வைக்கும்போது, எல்லா மாவையும் புளிக்க வைக்கின்றதோ, அதைப் போல இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் (வேத வசனங்கள்) தேசங்கள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும். உப்பப்பண்ணும், மனந்திருப்பும்படி செய்யும்.

உவமை 4. மத்தேயு 13:44 இங்கே பொக்கிஷம். இந்தப் பொக்கிஷத்தைக் கண்டு, தனக்குள்ளான எல்லாவற்றையும் விற்று அதைக் கொள்ளுகின்றான். பரலோகத்தின் மேன்மையை அறிந்தவனுக்கு எல்லாமே தூசிக்கு சமமாகின்றது.

உவமை. 5 மத்தேயு 13:45 வியாபாரிக்குச் சமம். நல்ல முத்தைப் பார்த்தவுடன் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று முத்தை வாங்குகின்றான். மற்ற எதுவுமே இவன் கண்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சுவிஷேசத்தைக் கேட்பவர்கள் இனிமேல் இப்படிப்பட்ட முடிவை எடுப்பார்கள். (குலப்பெருமை, கோத்திரப்பெருமை, ஆண்ட பரம்பரை இப்படி எந்த ஒன்றும் தடையாக இருக்காது) விசுவாசிக்கிற ஊழியர்கள் பாக்கியவான்கள்.

உவமை 6. மத்தேயு 13:47 வலைக்கு ஒப்பானது. இது சகலவிதமான மீன்களையும் பிடிக்கும். நல்லவை மட்டும் சேர்க்கப்படும். ஆகாதவை எறிந்து போடப்படும். களைகள் எப்படி நெருப்பிலே போடப்பட்டதோ, அதைப் போல. இது உலகத்தின் முடிவிலே நடக்கும்.

உவமை 7. மத்தேயு 18:23-35 ராஜாவுக்கு ஒப்பானது. விசாலமான மனம். மனதுருக்கம். மன்னித்தான். பரலோக ராஜ்யத்தில் மன்னிக்கிறவர்கள்தான் இருப்பார்கள். 

பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்கு எது தடையாக இருக்கின்றது?

மத்தேயு 19:20-23. இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். அந்த வாலிபன் கேட்ட கேள்வி, இன்னும் என்னிடத்தில் என்ன குறைவு உள்ளது எனக் கேட்டான். இதைப் போல அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் ஜெபத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இடியெனப் பதில் வருகின்றது, நீ பூரண சற்குணனாய் இருக்க விரும்பினால், ..... பண ஆசை ஒரு காரணம், ஒரு தடை.

மத்தேயு 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. இங்கே பரலோகராஜ்யத்திற்குள் போகத் தடையாய் இருப்பது, நியாயப்பிரமாணம்.

உவமை 8. மத்தேயு 25:1-13 பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பானது. இந்தப் பத்துபேருமே கிறிஸ்தவர்கள்தான். மணவாளன் இயேசுவின் வருகையைக் குறித்து போதிக்கப்பட்டவர்கள்தான்.  5 கன்னிகைகளைக் குறித்த கவலை இல்லை. எனென்றால் அவர்கள் மணவாளனோடு மகிழ்ச்சிக்குள்ளாகப் போய்விட்டார்கள். மற்ற 5 கன்னிகை களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவைளை முக்கியப் படுத்துகிறோம்: 1. பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மணவாளன் வரத் தாமதித்தபொழுது, அனைவரும் தூங்கிவிட்டனர். இதிலிருந்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு நேரம் இருந்தது. அப்பொழுது எண்ணெயைக் குறித்துக் கேட்டிருக்கலாம். ஏன் எண்ணெயை எடுத்துவந்தீர்கள்? ஒருவேளை மணவாளன் வரத் தாமதமாகிவிட்டால், தீவட்டி அணைந்து போய்விடக் கூடாது என நினைத்து எண்ணெயைக் கொண்டுவந்தோம் எனக் கூறி இருக்கலாம். உடனே இவர்களும் எண்ணெயை ஆயத்தப்படுததி இருக்க முடியும். இங்கே சபைக்கு வருகின்ற பிற விசுவாசிகளோடு பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வழி பிறக்கும். 

என்ன புடவை? நகை? சுடிதாரா? சல்வார் கம்மீஸா? எந்தக் கடை? என்பதில் கவனத்தைச் செலுத்தினாலும், அவர்களது விசுவாசத்தையும், வாழ்க்கை முறையையும் கவனியுங்கள். 

2. கவனம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். மணவாளன் வரத் தாமதமானால் இந்த எண்ணெய் போதுமா? தன்னுடைய வேலையில் கவனம். நீதிமொழிகள் 31:27ல், ".....தன் வீட்டுக் காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்." தன் வேலையில் ஜாக்கிறதையாய் (கவனமுள்ளவனாய்) இருப்பவன், நீசருக்கு முன்பாக நில்லாமல், இராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். விழிப்புள்ளவர்களாய் இருந்தால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். 

உவமை 9. மத்தேயு 25:14-30 இங்குப் பிரயாணமாய் போகின்ற ஒரு மனுஷன். தாலந்துகளைப் பெற்ற வேலைக்காரர்கள். உங்களுக்கு ஆண்டவர் கொடுத்து இருக்கின்ற திறமைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் தொழிலிலே, ஊழியத்திலே, வேலையிலே, பிறருக்கு உதவி செய்வதிலே பயன்படுத்துங்கள். அப்பொழுது நீங்கள் பரலோக ராஜ்யத்துக்குள் இருப்பீர்கள், அல்லது பரலோக ராஜ்யம் உங்களுக்குள் இருக்கும். 

யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்? அல்லது பெரியவனாயிருப்பான்?

மத்தேயு 18:1,3,4 மனந்திரும்பி சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிக்க மாட்டீர்கள். பரலோகராஜ்யத்தின் ENTRY TICKET சிறுபிள்ளைப்போலாகுதல். மத்தேயு 19:14ல்,

இயேசுவோ: சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி.....

நான் ஏற்கனவே மனந்திரும்பி இருக்கின்றேன். எனவே பரலோகராஜ்யத்துக்குள் இருக்கின்றேன் என விசுவாசிக்கின்றேன். பரலோகராஜ்யத்துக்கு உள்ளே இருப்பதற்கும், வெளியே இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

வேதம் உங்களுக்குப் பல்வேறு இராஜ்யங்களைக் குறித்து பேசுகின்றது. இங்கே பரலோகராஜ்யம், தேவனுடைய ராஜ்யம் இவைகளை மட்டும் பார்க்கலாம். பரலோகராஜ்யம் - KINGDOM OF HEAVEN, தேவனுடைய ராஜ்யம் - KINGDOM OF GOD. பரலோக ராஜ்யத்தைப்போலவே தேவனுடைய ராஜ்யமும் இங்குதான் இருக்கின்றது. இதை லூக்கா 17:20,21ல், 

"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

இதோ இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்லப்படுவதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம்  உங்களுக்குள் இருக்கிறதே என்றார்."

ரோமர் 14:17ல், தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. புசிப்பும் குடிப்பும் சரீரத்தைச் சார்ந்தது. நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமும் உள்ளத்தைச் சார்ந்தது. தேவனுடைய ராஜ்யத்தின் ஒரு பகுதிதான், பரலோகராஜ்யம். உங்கள் உள்ளத்திலே மேலே உள்ள மூன்றும் இருந்தால் நீங்கள் பரலோகராஜ்யத்தில் இருக்கின்றீர்கள். இறுதியாக,

மத்தேயு 16:19ல், 

"பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்."

இந்த வசனத்தில் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் எனக் கூறுகின்றார். திறவுகோல் எதற்குப் பயன்படும்? பூட்டைத் திறக்கவும், பூட்டவுமே பயன்படும். நிச்சயமாகக் கட்டுவதற்கும் கட்டவிழ்ப்பதற்கும் பயன்படாது. இந்த வசனத்தின் முதல் பகுதி வேறு; இரண்டாம் பகுதி வேறு.

இயேசு, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்ற வெளிப்பாட்டைக் கூறியவுடன், இதை நீ உன்னுடைய யோசனையினாலும், அறிவினாலும் நீ பெற்றுக் கொள்ளவில்லை, பரலோகத்தில் உள்ள பிதாவே உனக்கு வெளிப்படுத்தினார் என்று கூறி, பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் என வாக்குக் கொடுக்கின்றார். மத்தேயு 13:52ல் எழுதியிருப்பதைப் போல, பரலோகராஜ்யத்துக் கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகனைப் போல, பொக்கிஷத்தை எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனாக ஊழியம் செய்யும்படிக்கு திறவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் செய்தியைக் கேட்க, வருகின்ற ஆத்துமாக்களை சமாதானத்தினாலும், நீதியினாலும், பரிசுத்த ஆவியால் உண்டாகும் மகிழ்ச்சியினாலும் நிறப்புவார். அதாவது பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிப்பார்கள்.  

ஜெபிப்போம்!

அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம்! மனந்திரும்பாமல் போனால், வருகின்ற ஆபத்தை விவசாயின் மூலமாகவும், மீன்பிடி வலையின் மூலமாகவும் கற்றுத் தந்ததற்காக நன்றி! சுவிஷேசத்தை அறிவிக்கும்பொழுது, நற்செய்தியைக் கேட்கின்ற யாவரும் மற்ற எதுவும் எனக்குத் தேவையில்லையென, பொக்கிஷத்தைக் கண்ட மனிதனைப் போல இயேசுவை ஏற்றுக் கொள்ள கிருபை செய்யும். கொஞ்சம் புளித்த  மா, மாவனைத்தையும் உப்பப்பண்ணும் என எழுதியிருக்கிறபடி, ஊழியத்திலே விதைக்கின்ற சத்தியம் சபையினிலே, மாகானங்களிலே, ஊரிலே, பரலோகராஜ்யம் விரிவடைவதாக. கேட்கின் அனைத்துக் குடும்பங்களிலும், சமாதானமும், நீதியும், பரிசுத்த ஆவியினால் உண்டான சந்தோஷமும் நிறம்பி வழிவதாக. பண ஆசையில்லாதவர்களாய் கிருபைக்குள்ளாக வாழ உதவி செய்யும். இருக்கின்ற திறமைகளைப் பயன்படுத்தவும், பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளுபவர்களாய் இருக்கவும், கவனமுள்ளவர்களாய் இருக்கவும் வழி நடத்தும். சிறுபிள்ளைகளைப் போல உம்மைச் சார்ந்து வாழக் கிருபை செய்வீராக. இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென், ஆமென்.  

அன்பு சகோதர, சகோதரிகளே மேலே உள்ள செய்தி, நாங்கள் வெளியிடும் "ஈஸ்கடோஸ்" என்ற மாதப் பத்திரிக்கையிலிருந்து வெளியிடப்படுகின்றது. எமது மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியை அனுப்பினால், அல்லது கமென்ட் பகுதியில் உங்கள் முகவரியைப் பதிவிட்டால், உலகின் எந்தப்பகுதிக்கும், அது அலாஸ்காவாக இருந்தாலும் சரி..... முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாகப் பத்திரிக்கை அனுப்பி வைக்கப்படும்.  ஆண்டவர் இந்தப் பத்திரிக்கை மூலமாக உங்களையும், உங்கள் குடும்பத்தையும், தொழிலையும், ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக. 


No comments:

Post a Comment