12 Feb 2022

YOU ARE FREE UNDER GOD'S FAVOR AND MERCY


 கிறிஸ்துவில் பிரியமானவர்களே!

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!!

ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பாவத்தைக் குறித்து பதிவிட்டுள்ளோம்!! அதைவிட சற்று விளக்கமாக இந்தப் பதிவில் பார்க்கலாம். உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்துச் சந்தாக்  கட்டவும். எப்பொழுதெல்லாம் இங்கே தேவச்செய்தியைப் பதிவிடுகின்றோமோ, அப்பொழுதெல்லாம் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும். ஏசாயா59:1ல்,

"இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கைக்குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை". 

ஏசாயா 59:2ல்,

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது". 

மேலே உள்ள வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, தடாக்குப்பத்திலே, ஒரு கிறிஸ்மஸ்க்கு முந்தைய வாரத்திலே தெருமுனைக்கூட்டத்தில் செய்தியளித்து ஜெபித்தபோது, அனேக மக்கள் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டார்கள். அந்த நினைவுகளோடு தொடர்ந்து, 

பாவம் என்றால் என்ன?

ஆதியாகமம் 3:1-7 வசனங்களை வாசித்துப்பாருங்கள். ஆதாம் ஆண்டவரின் சொல்லை மீறினான். மீறுதல், பாவம், கண்கள் திறக்கப்பட்டது. கீழ்படியாமை வேறு, பாவம் வேறு. அறிவு வந்தபின்தான் தாங்கள் நிர்வாணிகள் என்பதை அறிந்துகொண்டார்கள். எனவே அறிவே பாவம் எனத்தீர்கிறோம். யோவான் 9:41ல்,

"இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

இரண்டாவதாக, இவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்கள் என்று அறிந்தும், ஆண்டவர் தேடிவந்தாரே!  அதுதானே ஆண்டவரின் அன்பு!! அன்பு சகல பாவங்களையும் மூடும் அல்லவா! பின் எப்படி பாவம்????.....

ஆண்டவர் கூறியதை எல்லாம் மறுத்து ஏவாளிடம் கூறிய சாத்தானால் வந்தது. பழத்தைச் சாப்பிடக் கூடாது..... சாப்பிடலாம். நீங்கள் அவரைப் போலாவீர்கள். ஏவாளின் உள்ளம் கறைபட்டுப்போயிற்று. ஆண்டவரைக் குறித்த தவறான எண்ணங்கள்தான் பாவம்.

பாவத்தின் விளைவு? ஆதி. 3:14-17 வாசித்துப்பாருங்கள்! சாபம். அதிலும் ஆண்டவர் ஆதாமை நேரடியாகச் சபிக்கவில்லை. பூமியைச் சபித்தார். இப்பொழுது மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணம் வருகின்றது. ரோமர்5:14 ல்,

"அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் (பாவம்) ஆண்டுகொண்டது. (அதாவது பாவஞ்செய்யாத உங்களையும் ஆண்டுகொண்டது) மோசேக்குப் பின் நிலைமை இன்னும் மோசமாகப் போய்விட்டது. மோசேயினால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபடியினால், ரோமர் 7:9ல்,

"முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை (நியாயப்பிரமாணம்) வந்தபோது பாவம் உயிர்கொண்டது. நான் மரித்தவனானேன்".

ரோமர் 5:19ல்,

"அன்றியும் ஒரே மனுஷனுடைய (ஆதாம்) கீழ்ப்படியாமையினாலே அனேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய (இயேசுவின்) கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்".

மேலே உள்ள மூன்று வசனங்களின் மூலமாக நீங்கள் குற்றமனசாட்சியிலிருந்து விடுவிக்கப்படுகின்றீர்கள். 

பாவம் எப்படி மன்னிக்கப்படுகின்றது? லேவியராகமம் 4ம் அதிகாரத்தில், பாவம் எப்படி மன்னிக்கப்பட்டது என்பதைக் குறித்து அறியலாம். ஒரே குற்றத்தைத் தெரிந்து செய்தால், தெரியாமல் செய்தால், சாதாரணமனிதர்கள் செய்தால், பணம் படைத்தவர்கள் செய்தால், ஆசாரியன் செய்தால் என்று பல்வேறு பலிகளை பாவ நிவாரணபலியாகச் செலுத்த வேண்டும். ஆனால் புதிய ஏற்பாட்டில்,1யோவான் 1:7ல்,

".....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

1யோவான் 1:9

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்".

நீங்கள் இயேசுவிடம் எதையும் மறைக்காமல் அறிக்கையிட்டால், எல்லா அநியாயத்தையும் மன்னித்துத் தமது இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்க அவர் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். இப்படித்தான் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. இதன் பின்தான் உண்மையான சத்தியம் தொடங்குகிறது.

பாவத்துக்குச் சாகுதல்: 1பேதுரு2:24ல்,

"நாம் பாவத்துக்குச் செத்து, நீதிக்குப்பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்".

பாவத்துக்கு நீங்கள் எப்போது செத்தீர்கள்?  ரோமர் 6:2-5 வசனங்களை வாசித்தீர்களானால் இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றபொழுது அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, இயேசுவின் மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட ஆடக்கம்பண்ணப்பட்டோம்.

அதாவது, ஞானஸ்நான ஆராதனை என்றாலே அடக்க ஆராதனைதான். தண்ணீரில் மூழ்கும்போது, பாவத்துக்குச் சாகின்றீர்கள். தண்ணீரிலிருந்து மேலே வரும்போது புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு பிழைக்கின்றீர்கள் எனப் பொருள்படும். ஞானஸ்நானம் பெற்றவர்கள் அனைவரும் பாவத்திற்கு செத்திருக்கின்றார்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்குகின்றது.

இதே வாசிக்கின்ற யாராவது இன்னும் ஞானஸ்நானம் எடுக்காதிருந்தால் ஞானஸ்நானம் எடுக்க ஒப்புக் கொடுங்கள். பாவத்துக்குச் செத்ததற்கு அதுதான் அடையாளம். உங்களில் சுகவீனர் யாவரும் குணமாவீர்கள். 1கொரி.10:2ல்,

"எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்".

இஸ்ரவேல் ஜனங்கள் யாவரும் எகிப்தாகிய பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, சிவந்த சமுத்திரத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். கிறிஸ்தவ வாழ்க்கை அதன் பிறகுதான் வனாந்திரத்தில் ஆரம்பமாகின்றது. மேலே உள்ள வசனங்கள் இரண்டும் பாவத்துக்கு நீங்கள் செத்ததைக் குறிப்பிடுகின்றது.

பாவத்தின் எதிர்சொல் என்ன? ரோமர் 6:23ல்,

"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடையகிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்".

இதிலிருந்து பாவத்தின் எதிர்ச் சொல் பரிசுத்தமல்ல; நித்திய ஜீவன் என்று அறிந்துகொள்ளுகின்றீர்கள். யோவான் 3:16ல்,

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

யோவான் 3:18ல்,

"அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று".

மேலே உள்ள வசனங்களை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களெனில், ஒரு சத்தியத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியும். எப்பொழுது இயேசு என்ற நாமத்தின்மீது விசுவாசமுள்ளவர்களானீர்களோ அப்பொழுதே பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுபட்டு, நித்திய ஜீவனின் ஆளுகைக்குள் வந்துவிட்டீர்கள். 

நாமத்தின் மீது (இயேசு என்ற பெயரில்) விசுவாசம் வைக்கும்போது, பிள்ளைகள் ஆகின்றீர்கள், பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுபட்டு, நித்திய ஜீவனின் ஆளுகைக்குள் வந்துவிட்டீர்கள். (யோவான்3:16)

பாவத்தின் வல்லமை உங்களிடத்தில் செயலிழக்கிறது: ரோமர்8;2ல்

"கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

பாவம்=>மரணம், பாவம்=>மரணம், பாவம்=>மரணம் இப்படியே போய்க்கொண்டிருந்த உங்கள் வாழ்க்கையில், கிறிஸ்துவின் ஜீ்வனின் பிரமாணம் இந்தச் சுற்றுவட்டத்திலிருந்து உங்களை வெளியே எடுத்துவிட்டது. இப்பொழுது பாவமும் இல்லை, மரணமும் இல்லை. ரோமர் 6:14ல்,

"நீங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது"

பாவம் உங்களிடத்தில் தோற்றுப்போகின்றது.

1யோவான்3:9ல், 

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவதஞ்செய்ய மாட்டான்".

யோவான் 1:12ன்படி நீங்கள் தேவனால் பிறந்திருக்கின்றீர்கள். அவருடைய வித்து, வசனம் உங்களுக்குள் இருக்கிறபடியால் உங்களால் பாவஞ்செய்ய முடியாது. தலைகீழாக நின்றாலும் முடியாது. இதையே சங்கீதக்காரன் தாவீது, சங்கீதம் 119:11ல்,

"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன்".

மேலே உள்ள வசனங்களின்படி பாவம் உங்களிடத்தில் தனது வல்லமையை இழந்துவிட்டது. 

அமெரிக்க தேசத்திலே, நியூயார்க் பட்டணத்திலே, அதிகாலையில் அநேகர் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதிலே வில்சன் என்ற நபரும் ஒருவர். இவர் ஒரு தெருவிலே திரும்பும்போது, சிலர் ஒரு திருடனை துரத்திக் கொண்டு ஓடிவந்தனர். பிடியுங்கள், பிடியுங்கள்..... இவர் விழிப்படைவதற்குள் திருடன் இவரைத் தாண்டி ஓடினான். இவரும் துரத்த ஆரம்பித்தார். திருடன் துரிதமாக ஓடவே இவர் ஓட்டத்தில் பின்தங்கினார். தனது கோட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியால் காலை நோக்கிச் சுடவே தவறுதலாகத் திருடனது இடுப்பிலே பட்டுச் சுருண்டுவிழுந்து செத்தான். போலீஸ் இவரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். தீர்ப்பில் நீதிபதி, வில்சனைக் குற்றவாளி எனத்தீர்த்து, தூக்குத் தண்டனை விதித்தார். இவர் சிறையிலே அடைக்கப்பட்டார். இவருக்காக வாதாடிய வக்கீல், இவரது சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தார். வழக்குச் செய்திகளை, செய்தித்தாளில் வாசித்திருந்த ஜனாதிபதி உடனே இவரை விடுதலை செய்து, சிறைச் சாலை அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். கடிதம் சிறைச்சாலை வார்டனுக்கு வந்து சேர்ந்த உடனே, கடிதத்தை எடுத்துக்கொண்டு, வில்சன் இருந்த செல்லுக்குச் சென்று விடுதலையை அறிவித்தார். ஆனால் வில்சனோ ஜனாதிபதியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். மீண்டும் வழக்கு, நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த மன்னிப்புக் கடிதம், வில்சன் ஜனாதிபதி அருளிய மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், விடுதலைப் பத்திரமாகி விடுதலையைக் கொடுத்திருக்கும். ஏற்றுக் கொள்ளாதததினால், இக்கடிதம் சாதாரணகடிதமாகக் கருதப்பட்டு, வில்சனுக்கு இந்த நீதிமன்றம் தூக்குத்தண்டனையை அளிக்கின்றது எனத் தீர்ப்பளித்தது.

தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் நாளிலே, வில்சனைப் பார்த்துசொல்லப்பட்டதுதான் அனைவருக்குமான செய்தி. 

'நீ செய்த குற்றத்திற்காகத் தண்டனையை அடையவில்லை, ஜனாதிபதி அருளிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாததினால் தண்டனை அடைகின்றாய்'

நீங்கள் கிறிஸ்தவர் அல்லாத பட்சத்தில், உங்களுக்கு ஒரு நற்செய்தி! உங்கள் தவறுகள்/குற்றங்கள்/பாவங்களுக்கான தண்டனையை இயேசு ஏற்கனவே சிலுவையில் ஏற்றுக் கொண்டு, உங்களை விடுதலையாக்கி இருக்கின்றார். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டு முன்வருவீர்களானால், நீங்கள் மன்னிக்கப்படுகின்றீர்கள், விடுதலையாக்கப்படுகின்றீர்கள். 

ஜெபிப்போம்!

எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே! இயேசுவின் நாமத்தினாலே உமது சமூகத்தில் வருகின்றோம்! எங்கள் பாவங்களை எல்லாம் நீர் ஏற்றுக் கொண்டு, தண்டனையை நீர் சிலுவையிலே பெற்று எங்களைப் பாவத்திலிருந்தும், அதனால் வந்த சாபத்திலிருந்தும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவி, மீட்டுக் கொண்டீரே நன்றி ஐயா! இந்த உலகத்தில் இன்னும் கோடிக்கணக்கானபேர் பாவநிவர்த்திக்காகப் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்களே, அவர்களுக்கெல்லாம் இந்த நற்செய்தி போய்ச் சேருவதாக. அவர் தமது ஆத்துமவருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார் என்று எழுதியிருக்கிறபடி நடைபெறுவதாக. இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென்.

9 Feb 2022

VICTORIOUS CHRISTIAN LIFE

 கிறிஸ்துவில் பிரியமான நண்பர்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!!

வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை:

முதலாவது உங்களுக்குப் பின்னால் இருக்கும் மரப்பாலத்தை எரித்துவிட வேண்டும். இதிலே நீங்கள் 50% வெற்றியடைகின்றீர்கள். உங்கள் பழைய பாவ வாழ்க்கைக்கு இருக்கும் தொடர்பை /நினைவை, மரபாலத்தை எரி்த்துவிட வேண்டும். நீங்கள் தொடர்ந்து இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படுகின்ற செய்திகளை வாசித்திருப்பீர்கள் எனில், ஒரு சத்தியத்தை அறிந்திருப்பீர்கள்! உங்களது கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். வாக்குத்தத்தத்தை அடிப்படையாக வைத்து வாழும் வாழ்க்கை வாழும்போது, நீங்கள் நடந்தாலும் சோர்ந்துபோகமாட்டீர்கள், ஓடினாலும் இளைப்படைய மாட்டீர்கள்!! பொருள் என்னவெனில், நீங்கள் எதிற்கொள்ளும் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியை ருசிப்பீர்கள்!! 

வெற்றியை ருசித்த சில பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலிருந்து அவர்களின் குணாதியத்திலிருந்து ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம். உங்கள் மனம் புதிதாகும், மருரூபமாவீர்கள், வாழ்த்துக்கள்!

முதலாவது நமது விசுவாசிகளின் தகப்பன் ஆபிராமின் வாழ்க்கை. ஆண்டவர் ஆபிராமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நீங்கள் ஆதியாகமம் 12:1-3வசனங்களில் இருந்து அறியலாம். 'நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ' இப்படி கட்டளையிட்ட ஆண்டவர், வசனம் 7ல், 

"கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார்...."

ஆபிராமின் முதல் மீறுதல். வ8ல், அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய்....."

இரண்டாவது மீறுதல். பின்பு பஞ்சம் பிழைக்க எகிப்துக்குப் புறப்பட்டுப் போனான். 

குற்றம் - 1: ஆபிராம் ஒரு பயந்தாங்கொள்ளி. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மனைவியாகிய சாராயை தனது சகோதரி என்று சொல்லச் சொன்னான். இப்பொழுது இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இதை இப்பொழுள்ள சூழ்நிலையில் இதைத் தன் மனைவியிடம் கூறியிருந்தால் அவள் என்ன சொல்லியிருப்பாள்? 'நீ என்ன பொட்ட மாதிரி பேசுர..... அறிவில்ல..... கொல்லுவான்  என்றால் சாவு..... நான் நிச்சயமாக உடன்பட மாட்டேன்..... பொசகெட்டவன்..... என்று திட்டியிருப்பாள். 

ஆபிராம், பார்வோனிடத்தில் தனியாக இவள் என் சகோதரியெனக் கூறியிருக்கலாம். ஆனால் தன் மனைவியிடமே கூறுகிறான் பாருங்கள். தன்னுடைய பொய்யிக்குத் தன் மனைவியை உடந்தையாக்கினான் பாருங்கள்! உயிருக்குப் பயந்தவன்.

குற்றம்:2. தவறாக வந்த சம்பாத்தியம் (வ16).

இப்பொழுது ஆண்டவர் செயல்படுகின்றார்..... அதாவது வாக்குத்தத்தம் செயல்படுகின்றது. (ஆண்டவர், வாக்குத்தத்தம், வார்த்தை, வசனம் எல்லாமே ஒன்றுதான்) பார்வோன் செயல்பட்டிருந்தால் வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும்? மாகா வாதை..... பார்வோன் நினைத்தாலும் செயல்படமுடியாதபடி. இதோ உன் மனைவி இவளை அழைத்துக் கொண்டுபோ.... 

வாக்குத்தத்தமானது, உங்கள் தவறுகள், மீறுதல்கள், பாவங்கள் இவைகளில் இருந்தெல்லாம் தூக்கி எடுத்து, வெளியேற்றித் தான் இருக்கிற இடத்துக்கு உங்களை ஈர்த்துக் கொள்ளும்.

மீண்டும் ஆபிராமுக்குப் பிரச்சனை, ஐசுவரியத்தினால் வருகின்றது. லோத்துவுக்கும் ஆபிராமுக்கும் இடையில். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆபிராம் என்ன சொல்லுகிறார் பாருங்கள்! ஆதியாகமம் 13:9ல்,

".....நீ என்னைவிட்டுப் பிரிந்து போகலாம்; நீ இடது புறம் போனால் நான் வலது புறம் போகிறேன்; நீ வலது புறம் போனால், நான் இடது புறம் போகிறேன் என்றான்".

இப்படி ஆபிராம் விட்டுக் கொடுக்க என்ன காரணம் என்று நினைக்கின்றீர்கள்? வாக்குத்தத்தம், ஆபிராமுக்குக் கொடுக்கப்பட்டதே ஒழிய லோத்துவுக்கு அல்ல. எந்தப் பக்கத்தைத் தெரிந்து கொண்டாலும், வாக்குத்தத்தம் வழிநடத்தும் என்ற விசுவாசத்தின் அடிப்படையிலேயே லோத்துவுக்கு விட்டுக் கொடுத்தான். இப்படிப்பட்ட ஆபிராமைத்தான் ஆண்டவர் விசுவாசிகளின் தகப்பனாக்கினார். இன்றும் இயேசுவை ஏற்றுக் கொண்டு வருகிறவர்கள் கூட ஆபிரகாமின் சந்ததியாகின்றார்கள். ஆபிராமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் இன்றுவரை செய்ல்படுகின்றது, இன்னும் வேகமாகச் செயல்படும். உங்கள் வாழ்க்கையிலும் பல தலைமுறை கடந்து செயல்படும். என்ன முடிவெடுக்க வேண்டும் எனத் திகைத்துப் போய் இருக்கின்றீர்களா? இதற்காக எந்த வசனத்தை விசுவாசிப்பது எனத் தேடிக்கொண்டு இருக்கின்றீர்களா? உங்கள் வாழ்க்கை வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தால், ஏதாவது ஒரு முடிவெடுங்கள்! வாக்குத்தத்தம் இரும்பைக் காந்தம் கவருவதுபோல உங்களைத் தன்னிடத்தில் (தேவசித்தத்துக்கு) இழுத்துக் கொள்ளும். தைரியமாக முடிவெடுங்கள்.

இதுவரை ஆபிராமின் மீறுதல்கள், குற்றங்கள், முடிவெடுத்தமை குறித்து தியானித்தோம். உங்கள் மனம் புதிதாகியிருக்கிறது. மருரூபமாகி இருக்கின்றீர்கள்!! 

இனிமேல் பிறரால் வந்த பிரச்சனையில் வாக்குத்தத்தம் எவ்வாறு செயல்பட்டது எனப் பார்க்கலாம். 

இதற்கு யோசேப்பின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுவோம். யோசேப்பின் 17 வயதிலேயே, அவனது வாழ்க்கையில் தேவன், தான் நடத்தப்போகும் விஷயங்களைச் சொப்பனங்கள் மூலமாக வெளிப்படுத்தினார்.  

முதல் சொப்பனத்தைக் கூறியபொழுதே, அவனது சகோதரர்கள் பகைத்தார்கள், அடுத்த சொப்பனத்தை தனது தகப்பனுக்கும் சேர்த்து அறிவித்தான். அவனது சகோதரர்கள் அதிகமாய் பகைத்தார்கள், பொறாமை கொண்டார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வாலிபனாய் இருந்தான். அவன் கூறியதே அவனுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுத்தது. 

தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்கள். குழியில் தூக்கிப் போட்டார்கள். பின்பு மீதியானியர் கையிலே 20 வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள். மீதியானியர் அவனை எகிப்தின் அரசன் பார்வோனின் பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். பார்க்கிற வேலை அடிமை வேலை, ஆனாலும் கூட இருந்ததோ கர்த்தர் (ஆதியாகமம் 39:2) சொப்பனங்களைக் (வாக்குத்தத்தத்தை) கொடுத்த கர்த்தர். எனவே அந்த அடிமை வேலையையும் ஆசீர்வதித்தார். இவன் செய்வதெல்லாவற்றையும் ஆண்டவர் வாய்க்கப்பண்ணினார் என்று அறிந்த எஜமானனான போத்திபார், தன் வீட்டுக்கு விசாரனைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் யோசேப்பின் கையில் ஒப்புவித்தான். 

யோசேப்பின் அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் அவனுக்குப் பிரச்சனையைக் கொண்டுவந்தது. போத்திபாரின் மனைவி யோசேப்போடு கள்ளத்தொடற்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாள். ரொம்ப நாளாக யோசேப்பிடம் பேசினாள். இவனோ எஜமான விசுவாசம் உடையவனாகவும், தேவபயம் நிறைந்தவனாகவும் இருந்தான். இதையும் அவனிடம் தினமும் கூறிக்கொண்டே வந்தாள். ஒரு நாள் வற்புறுத்தவே, தன் ஆடையைக் கூட அவளது கையில் விட்டுவிட்டு ஓடிப்போனான். என்னைப் பலவந்தம் செய்தான் என்று போத்திபாரிடம் யோசேப்பைக் குற்றஞ்சாட்டினாள். கோபமடைந்த போத்திபார் யோசேப்பை சிறையில் வைத்தான். ஆதியாகமம்39:21, "கர்த்தர் யோசேப்போடே இருந்து....." யோசேப்பு உண்மையாய் இருந்தான் என்பதனால் அல்ல, கர்த்தரிடத்தில் வாக்குத்தத்தம் பெற்றவனாய் இருந்தான். ஆகவே சிறைச்சாலையிலும் கர்த்தர் யோசேப்போடே இருந்தார். கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் மூலமாகக் கர்த்தரு அவனோடே கூட இருந்தார். கர்த்தர் கூட இருந்தால், மனிதர் கண்களிலே தயவு கிடைக்கும். சிறைச் சாலையிலும் அதே நடந்தது.  

யோசேப்பினுடைய விசுவாசத்தைப் பாருங்கள்! (வ.40:8) 

".....அதற்கு யோசேப்பு சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குறியதல்லவா?....." 

தேவனுடைய ஊழியமாகப் பார்த்தான். சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும் என விரும்பினான். எனவேதான் பானபாத்திரக்காரரிடம் என்னுடைய நிலைமையை அரசனுக்கு எடுத்துச் சொல்லி, என்னை விடுதலையாக்குங்கள் என்றான். 

ஒருவேளை அந்தப் பானபாத்திரக்காரன், பார்வோனிடம் சொல்லி யோசேப்பை விடுதலையாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும். ஆண்டவருக்கு நன்றி சொல்லி, 'விட்டதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம்' என்றபடி ஒரே ஓட்டமாய் தன் தகப்பனைத் தேடி ஓடியிருப்பான். ஆண்டவரால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்னவாகியிருக்கும்?.....

மேலும் இரண்டு வருடங்கள் சிறை. ஏற்ற வேளை வந்தது. முந்தைய நாள் இரவு காவற்கிடங்கில் தூங்கியவன், இன்று அரண்மனையில் தூக்கம். மேலும் ஒன்பது வருடங்கள் சென்றன. வயலில் அறுத்த அரிக்கட்டுக்கள் யோசேப்பின் அரிக்கட்டை வணங்கியது, சூரியனும், சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் யோசேப்பை வணங்கியது. யோசேப்பின் எல்லாச் சூழ்நிலையிலும், வாக்குத்தத்தம் நிலைத்து நின்று செயல்பட்டது.

யோசேப்பின் வாழ்க்கையில் தனது சகோதரர்களால், போத்திபாரின் மனைவியால் வந்த துன்பங்கள், அநியாயங்கள் எத்தனை எத்தனை. எல்லாவற்றிலும் ஆண்டவருடைய வாக்கு வெற்றியைக் கொடுத்து, தான் இருந்த இடத்துக்குக் கவர்ந்து கொண்டது. எனக்கன்பானவர்களே! பிரியமான நண்பர்களே!! உங்களுக்கு என்ன கொடுமைகள், துன்பங்கள் பிறரால் நிகழ்த்தப்பட்டாலும், அல்லது நீங்களே தவறான முடிவுகளை எடுத்துச் செயல்பட்டாலும், அல்லது நீங்களே தவறான முடிவுகள் எடுத்துச் செயல்பட்டாலும் ஆண்டவருடைய வாக்குத்தத்தம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறியே தீரும்!! பிரச்சனைகளின் மத்தியில் யோசேப்பைப் போலப் பொறுமையாய் இருங்கள்!! வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போலப் பிரகாசியுங்கள்!! சிறையிலிருந்து சிங்காசனத்துக்குச் செல்லுவீர்கள்!! இயேசுவின் நாமம் உங்களின் மூலமாக மகிமைப்படும்!!!

பிரச்சனையைச் சந்திக்கும்போது உங்கள் உள்ளம்/மனம் எங்கே செல்லுகின்றது என்பது மிக முக்கியம். அவராலதான் இந்தப் பிரச்சனை, இவராலதான் இந்தப்பிரச்சனை அல்லது என்னாலதான் இந்தப்பிரச்சனை என்று என் நினைத்தால் நீங்கள் OUT. பிரச்சனை எதுவானாலும் வாக்குத்தத்தம் நிறைவேற இவைகளெல்லாம் உங்கள் வாழ்க்கையில் சம்பவிக்கின்றது என நீ்ங்கள் நினைத்தீர்களானால், உங்கள் வாழ்க்கை ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையாக அமையும், இனி உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது வேத வசனத்தின் மீது நில்லுங்கள்!!

மேலும் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்! ஆண்டவர் வாக்குத்தத்தம் கொடுக்கும்போது, இவன் படித்தவன், இவன் படிக்காதவன், இவன் ஏழை, இவன் பணக்காரன், இவன் பட்டணத்தில் வசிக்கின்றான், இவன் குக்கிராமத்தில் வசிக்கின்றான், இவன் பயப்படுகின்றவன், இவன் தைரியசாலி, இவன் பலமுள்வன், இவன் பலவீனன், இவன் பாவி, இவன் பரிசுத்தவான், இவன் தகுதியில்லாதவன், இவன் தகுதியானவன் என்றெல்லாம் பார்க்காமல், ஈசாயின் கடைசி மகனான தாவீதை, (முகத்தைப் பார்க்காமல் உள்ளத்தைப் பார்த்து) சாமுவேலைக் கொண்டு இஸ்ரவேலின் மன்னனாக அபிஷேகித்தாரோ அதைப் போல, தேவனால் வாக்குத்தத்தமானது தமது பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. ஊழியத்துக்கு ஆண்டவர் தகுதியைப் பார்த்து அழைப்பதில்லை, அழைத்துத் தகுதிப்படுத்துகிறார். 

ஜெபிப்போம்!

எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே! இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்!! ஆபிரகாமின் தவறான முடிவுகளிலிருந்து உமது வாக்குத்தத்தம் அவனை வெளியேற்றி மிகச் சரியான உயர்வுக்குள் நடத்தியதைப் போல, நாங்கள் எடுத்த தவறான முடிவுகளிலிருந்து நீர் எங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் எங்களை மீட்டு வழிநடத்தி ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். இந்த நாளிலே இதைப் படிக்கிற யாவரையும் இப்பொழுதே வழிநடத்துவதாக. எங்கள் நீர் எங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போலப் பிரகாசிக்கக் கிருபை செய்யும். எங்கள் வாழ்நாளெல்லாம் வாக்குத்தத்த வழிகாட்டுதலில் நிலைத்து நிற்கக் கிருபை செய்யும். பிறரால் இழைக்கப்பட்ட அநீதியிலும், இழிவாக நடத்தப்பட்டபோதிலும் யோசேப்போடே வாக்கை நிறைவேற்றினீர். எங்களைத் தவறாக நடத்தியவர்களை இயேசு எங்களை மன்னித்ததைப் போல மனதார மன்னிக்கின்றோம். ஆபிரகாம், யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வழிகாட்டினீர் நன்றி இயேசுவே! வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழும்படியாக எங்களை அழைத்த நீர் உண்மையுள்ளவர்! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே, ஆமென், ஆமென்.