கிறிஸ்துவில் பிரியமான நண்பர்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!!
வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை:
முதலாவது உங்களுக்குப் பின்னால் இருக்கும் மரப்பாலத்தை எரித்துவிட வேண்டும். இதிலே நீங்கள் 50% வெற்றியடைகின்றீர்கள். உங்கள் பழைய பாவ வாழ்க்கைக்கு இருக்கும் தொடர்பை /நினைவை, மரபாலத்தை எரி்த்துவிட வேண்டும். நீங்கள் தொடர்ந்து இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படுகின்ற செய்திகளை வாசித்திருப்பீர்கள் எனில், ஒரு சத்தியத்தை அறிந்திருப்பீர்கள்! உங்களது கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். வாக்குத்தத்தத்தை அடிப்படையாக வைத்து வாழும் வாழ்க்கை வாழும்போது, நீங்கள் நடந்தாலும் சோர்ந்துபோகமாட்டீர்கள், ஓடினாலும் இளைப்படைய மாட்டீர்கள்!! பொருள் என்னவெனில், நீங்கள் எதிற்கொள்ளும் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியை ருசிப்பீர்கள்!!
வெற்றியை ருசித்த சில பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலிருந்து அவர்களின் குணாதியத்திலிருந்து ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம். உங்கள் மனம் புதிதாகும், மருரூபமாவீர்கள், வாழ்த்துக்கள்!
முதலாவது நமது விசுவாசிகளின் தகப்பன் ஆபிராமின் வாழ்க்கை. ஆண்டவர் ஆபிராமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நீங்கள் ஆதியாகமம் 12:1-3வசனங்களில் இருந்து அறியலாம். 'நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ' இப்படி கட்டளையிட்ட ஆண்டவர், வசனம் 7ல்,
"கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார்...."
ஆபிராமின் முதல் மீறுதல். வ8ல், அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய்....."
இரண்டாவது மீறுதல். பின்பு பஞ்சம் பிழைக்க எகிப்துக்குப் புறப்பட்டுப் போனான்.
குற்றம் - 1: ஆபிராம் ஒரு பயந்தாங்கொள்ளி. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மனைவியாகிய சாராயை தனது சகோதரி என்று சொல்லச் சொன்னான். இப்பொழுது இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இதை இப்பொழுள்ள சூழ்நிலையில் இதைத் தன் மனைவியிடம் கூறியிருந்தால் அவள் என்ன சொல்லியிருப்பாள்? 'நீ என்ன பொட்ட மாதிரி பேசுர..... அறிவில்ல..... கொல்லுவான் என்றால் சாவு..... நான் நிச்சயமாக உடன்பட மாட்டேன்..... பொசகெட்டவன்..... என்று திட்டியிருப்பாள்.
ஆபிராம், பார்வோனிடத்தில் தனியாக இவள் என் சகோதரியெனக் கூறியிருக்கலாம். ஆனால் தன் மனைவியிடமே கூறுகிறான் பாருங்கள். தன்னுடைய பொய்யிக்குத் தன் மனைவியை உடந்தையாக்கினான் பாருங்கள்! உயிருக்குப் பயந்தவன்.
குற்றம்:2. தவறாக வந்த சம்பாத்தியம் (வ16).
இப்பொழுது ஆண்டவர் செயல்படுகின்றார்..... அதாவது வாக்குத்தத்தம் செயல்படுகின்றது. (ஆண்டவர், வாக்குத்தத்தம், வார்த்தை, வசனம் எல்லாமே ஒன்றுதான்) பார்வோன் செயல்பட்டிருந்தால் வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும்? மாகா வாதை..... பார்வோன் நினைத்தாலும் செயல்படமுடியாதபடி. இதோ உன் மனைவி இவளை அழைத்துக் கொண்டுபோ....
வாக்குத்தத்தமானது, உங்கள் தவறுகள், மீறுதல்கள், பாவங்கள் இவைகளில் இருந்தெல்லாம் தூக்கி எடுத்து, வெளியேற்றித் தான் இருக்கிற இடத்துக்கு உங்களை ஈர்த்துக் கொள்ளும்.
மீண்டும் ஆபிராமுக்குப் பிரச்சனை, ஐசுவரியத்தினால் வருகின்றது. லோத்துவுக்கும் ஆபிராமுக்கும் இடையில். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆபிராம் என்ன சொல்லுகிறார் பாருங்கள்! ஆதியாகமம் 13:9ல்,
".....நீ என்னைவிட்டுப் பிரிந்து போகலாம்; நீ இடது புறம் போனால் நான் வலது புறம் போகிறேன்; நீ வலது புறம் போனால், நான் இடது புறம் போகிறேன் என்றான்".
இப்படி ஆபிராம் விட்டுக் கொடுக்க என்ன காரணம் என்று நினைக்கின்றீர்கள்? வாக்குத்தத்தம், ஆபிராமுக்குக் கொடுக்கப்பட்டதே ஒழிய லோத்துவுக்கு அல்ல. எந்தப் பக்கத்தைத் தெரிந்து கொண்டாலும், வாக்குத்தத்தம் வழிநடத்தும் என்ற விசுவாசத்தின் அடிப்படையிலேயே லோத்துவுக்கு விட்டுக் கொடுத்தான். இப்படிப்பட்ட ஆபிராமைத்தான் ஆண்டவர் விசுவாசிகளின் தகப்பனாக்கினார். இன்றும் இயேசுவை ஏற்றுக் கொண்டு வருகிறவர்கள் கூட ஆபிரகாமின் சந்ததியாகின்றார்கள். ஆபிராமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் இன்றுவரை செய்ல்படுகின்றது, இன்னும் வேகமாகச் செயல்படும். உங்கள் வாழ்க்கையிலும் பல தலைமுறை கடந்து செயல்படும். என்ன முடிவெடுக்க வேண்டும் எனத் திகைத்துப் போய் இருக்கின்றீர்களா? இதற்காக எந்த வசனத்தை விசுவாசிப்பது எனத் தேடிக்கொண்டு இருக்கின்றீர்களா? உங்கள் வாழ்க்கை வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தால், ஏதாவது ஒரு முடிவெடுங்கள்! வாக்குத்தத்தம் இரும்பைக் காந்தம் கவருவதுபோல உங்களைத் தன்னிடத்தில் (தேவசித்தத்துக்கு) இழுத்துக் கொள்ளும். தைரியமாக முடிவெடுங்கள்.
இதுவரை ஆபிராமின் மீறுதல்கள், குற்றங்கள், முடிவெடுத்தமை குறித்து தியானித்தோம். உங்கள் மனம் புதிதாகியிருக்கிறது. மருரூபமாகி இருக்கின்றீர்கள்!!
இனிமேல் பிறரால் வந்த பிரச்சனையில் வாக்குத்தத்தம் எவ்வாறு செயல்பட்டது எனப் பார்க்கலாம்.
இதற்கு யோசேப்பின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுவோம். யோசேப்பின் 17 வயதிலேயே, அவனது வாழ்க்கையில் தேவன், தான் நடத்தப்போகும் விஷயங்களைச் சொப்பனங்கள் மூலமாக வெளிப்படுத்தினார்.
முதல் சொப்பனத்தைக் கூறியபொழுதே, அவனது சகோதரர்கள் பகைத்தார்கள், அடுத்த சொப்பனத்தை தனது தகப்பனுக்கும் சேர்த்து அறிவித்தான். அவனது சகோதரர்கள் அதிகமாய் பகைத்தார்கள், பொறாமை கொண்டார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வாலிபனாய் இருந்தான். அவன் கூறியதே அவனுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுத்தது.
தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்கள். குழியில் தூக்கிப் போட்டார்கள். பின்பு மீதியானியர் கையிலே 20 வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள். மீதியானியர் அவனை எகிப்தின் அரசன் பார்வோனின் பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். பார்க்கிற வேலை அடிமை வேலை, ஆனாலும் கூட இருந்ததோ கர்த்தர் (ஆதியாகமம் 39:2) சொப்பனங்களைக் (வாக்குத்தத்தத்தை) கொடுத்த கர்த்தர். எனவே அந்த அடிமை வேலையையும் ஆசீர்வதித்தார். இவன் செய்வதெல்லாவற்றையும் ஆண்டவர் வாய்க்கப்பண்ணினார் என்று அறிந்த எஜமானனான போத்திபார், தன் வீட்டுக்கு விசாரனைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் யோசேப்பின் கையில் ஒப்புவித்தான்.
யோசேப்பின் அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் அவனுக்குப் பிரச்சனையைக் கொண்டுவந்தது. போத்திபாரின் மனைவி யோசேப்போடு கள்ளத்தொடற்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாள். ரொம்ப நாளாக யோசேப்பிடம் பேசினாள். இவனோ எஜமான விசுவாசம் உடையவனாகவும், தேவபயம் நிறைந்தவனாகவும் இருந்தான். இதையும் அவனிடம் தினமும் கூறிக்கொண்டே வந்தாள். ஒரு நாள் வற்புறுத்தவே, தன் ஆடையைக் கூட அவளது கையில் விட்டுவிட்டு ஓடிப்போனான். என்னைப் பலவந்தம் செய்தான் என்று போத்திபாரிடம் யோசேப்பைக் குற்றஞ்சாட்டினாள். கோபமடைந்த போத்திபார் யோசேப்பை சிறையில் வைத்தான். ஆதியாகமம்39:21, "கர்த்தர் யோசேப்போடே இருந்து....." யோசேப்பு உண்மையாய் இருந்தான் என்பதனால் அல்ல, கர்த்தரிடத்தில் வாக்குத்தத்தம் பெற்றவனாய் இருந்தான். ஆகவே சிறைச்சாலையிலும் கர்த்தர் யோசேப்போடே இருந்தார். கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் மூலமாகக் கர்த்தரு அவனோடே கூட இருந்தார். கர்த்தர் கூட இருந்தால், மனிதர் கண்களிலே தயவு கிடைக்கும். சிறைச் சாலையிலும் அதே நடந்தது.
யோசேப்பினுடைய விசுவாசத்தைப் பாருங்கள்! (வ.40:8)
".....அதற்கு யோசேப்பு சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குறியதல்லவா?....."
தேவனுடைய ஊழியமாகப் பார்த்தான். சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும் என விரும்பினான். எனவேதான் பானபாத்திரக்காரரிடம் என்னுடைய நிலைமையை அரசனுக்கு எடுத்துச் சொல்லி, என்னை விடுதலையாக்குங்கள் என்றான்.
ஒருவேளை அந்தப் பானபாத்திரக்காரன், பார்வோனிடம் சொல்லி யோசேப்பை விடுதலையாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும். ஆண்டவருக்கு நன்றி சொல்லி, 'விட்டதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம்' என்றபடி ஒரே ஓட்டமாய் தன் தகப்பனைத் தேடி ஓடியிருப்பான். ஆண்டவரால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்னவாகியிருக்கும்?.....
மேலும் இரண்டு வருடங்கள் சிறை. ஏற்ற வேளை வந்தது. முந்தைய நாள் இரவு காவற்கிடங்கில் தூங்கியவன், இன்று அரண்மனையில் தூக்கம். மேலும் ஒன்பது வருடங்கள் சென்றன. வயலில் அறுத்த அரிக்கட்டுக்கள் யோசேப்பின் அரிக்கட்டை வணங்கியது, சூரியனும், சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் யோசேப்பை வணங்கியது. யோசேப்பின் எல்லாச் சூழ்நிலையிலும், வாக்குத்தத்தம் நிலைத்து நின்று செயல்பட்டது.
யோசேப்பின் வாழ்க்கையில் தனது சகோதரர்களால், போத்திபாரின் மனைவியால் வந்த துன்பங்கள், அநியாயங்கள் எத்தனை எத்தனை. எல்லாவற்றிலும் ஆண்டவருடைய வாக்கு வெற்றியைக் கொடுத்து, தான் இருந்த இடத்துக்குக் கவர்ந்து கொண்டது. எனக்கன்பானவர்களே! பிரியமான நண்பர்களே!! உங்களுக்கு என்ன கொடுமைகள், துன்பங்கள் பிறரால் நிகழ்த்தப்பட்டாலும், அல்லது நீங்களே தவறான முடிவுகளை எடுத்துச் செயல்பட்டாலும், அல்லது நீங்களே தவறான முடிவுகள் எடுத்துச் செயல்பட்டாலும் ஆண்டவருடைய வாக்குத்தத்தம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறியே தீரும்!! பிரச்சனைகளின் மத்தியில் யோசேப்பைப் போலப் பொறுமையாய் இருங்கள்!! வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போலப் பிரகாசியுங்கள்!! சிறையிலிருந்து சிங்காசனத்துக்குச் செல்லுவீர்கள்!! இயேசுவின் நாமம் உங்களின் மூலமாக மகிமைப்படும்!!!
பிரச்சனையைச் சந்திக்கும்போது உங்கள் உள்ளம்/மனம் எங்கே செல்லுகின்றது என்பது மிக முக்கியம். அவராலதான் இந்தப் பிரச்சனை, இவராலதான் இந்தப்பிரச்சனை அல்லது என்னாலதான் இந்தப்பிரச்சனை என்று என் நினைத்தால் நீங்கள் OUT. பிரச்சனை எதுவானாலும் வாக்குத்தத்தம் நிறைவேற இவைகளெல்லாம் உங்கள் வாழ்க்கையில் சம்பவிக்கின்றது என நீ்ங்கள் நினைத்தீர்களானால், உங்கள் வாழ்க்கை ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையாக அமையும், இனி உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது வேத வசனத்தின் மீது நில்லுங்கள்!!
மேலும் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்! ஆண்டவர் வாக்குத்தத்தம் கொடுக்கும்போது, இவன் படித்தவன், இவன் படிக்காதவன், இவன் ஏழை, இவன் பணக்காரன், இவன் பட்டணத்தில் வசிக்கின்றான், இவன் குக்கிராமத்தில் வசிக்கின்றான், இவன் பயப்படுகின்றவன், இவன் தைரியசாலி, இவன் பலமுள்வன், இவன் பலவீனன், இவன் பாவி, இவன் பரிசுத்தவான், இவன் தகுதியில்லாதவன், இவன் தகுதியானவன் என்றெல்லாம் பார்க்காமல், ஈசாயின் கடைசி மகனான தாவீதை, (முகத்தைப் பார்க்காமல் உள்ளத்தைப் பார்த்து) சாமுவேலைக் கொண்டு இஸ்ரவேலின் மன்னனாக அபிஷேகித்தாரோ அதைப் போல, தேவனால் வாக்குத்தத்தமானது தமது பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. ஊழியத்துக்கு ஆண்டவர் தகுதியைப் பார்த்து அழைப்பதில்லை, அழைத்துத் தகுதிப்படுத்துகிறார்.
ஜெபிப்போம்!
எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே! இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்!! ஆபிரகாமின் தவறான முடிவுகளிலிருந்து உமது வாக்குத்தத்தம் அவனை வெளியேற்றி மிகச் சரியான உயர்வுக்குள் நடத்தியதைப் போல, நாங்கள் எடுத்த தவறான முடிவுகளிலிருந்து நீர் எங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் எங்களை மீட்டு வழிநடத்தி ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். இந்த நாளிலே இதைப் படிக்கிற யாவரையும் இப்பொழுதே வழிநடத்துவதாக. எங்கள் நீர் எங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போலப் பிரகாசிக்கக் கிருபை செய்யும். எங்கள் வாழ்நாளெல்லாம் வாக்குத்தத்த வழிகாட்டுதலில் நிலைத்து நிற்கக் கிருபை செய்யும். பிறரால் இழைக்கப்பட்ட அநீதியிலும், இழிவாக நடத்தப்பட்டபோதிலும் யோசேப்போடே வாக்கை நிறைவேற்றினீர். எங்களைத் தவறாக நடத்தியவர்களை இயேசு எங்களை மன்னித்ததைப் போல மனதார மன்னிக்கின்றோம். ஆபிரகாம், யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வழிகாட்டினீர் நன்றி இயேசுவே! வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழும்படியாக எங்களை அழைத்த நீர் உண்மையுள்ளவர்! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே, ஆமென், ஆமென்.
No comments:
Post a Comment