28 Aug 2014

COMPASSION

மனதுருக்கம் (மத்தேயு 18:11-20)
பிறருடைய தேவைகளை உணர்ந்து இறக்கங்கொள்ளுவதுதான் மனதுருக்கம். உண்மைக் கிறிஸ்தவன் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலையில் இருப்பவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பான். ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு பெண், தன் அம்மா இறந்ததின் நிமித்தம் ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. பின்பு அந்தப் பெண் முதல் நாள் பள்ளிக்கு வந்தபோது, அந்த நாள் முழுவதும் தன் அம்மாவை நினைத்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். அந்த நாளின் மலையில், அவளுடைய நெருங்கிய தோழி, தன் அம்மாவிடம் மீண்டும் பள்ளிக்கு வந்த தன்  தோழியின் கடினமான சூழ்நிலையைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். அதற்கு அவளுடைய அம்மா, "கிரேஸ் நீ என்ன சொல்லி உன் தோழியைத் தேற்றினாய்?" எனக் கேட்க, அவள், "நான் எதுவுமே சொல்லவில்லை, அவளோடு சேர்ந்து நானும் அழுதேன்". இது தான் மனதுருக்கம். பிறர் தங்கள் வாழ்க்கைப் பாதையில் கடினமான சூழ்நிலையைச் சந்திக்கும்போது, அவர்களது உணர்வுகளில் நுழைவதுதான் மனதுருக்கம். மத்தேயு 18ம் அதிகாரத்தை நாம் படிக்கும் பொழுது மனதுருக்கத்தில் சிலவற்றைக் கண்டு பிடித்தோம்.
1. சாத்தானின் வலையிலே சிக்கியிருக்கிறவர்களை விடுவிக்கத் தேடுகிறது, மனதுருக்கம்:
தொலைந்து போன ஆட்டைக் குறித்த விளக்கத்தின் மூலமாக, இயேசு கிறிஸ்து ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய மதிப்பும், கடவுளுடைய பார்வையில் எப்படி இருக்கிறது? எனக் காட்டுகின்றார். ஒரு ஆடு காணாமல் போனாலும் (வ 12) மேய்ப்பன் ஆட்டைத் தேடுகின்றார். பெரும்பாலும், இஸ்ரவேல் தேச மேய்ப்பர்கள், சிறிய மந்தையையே வைத்திருப்பர். ஒவ்வொரு ஆட்டின் பெயரையும் அறிந்து வைத்திருப்பர். அது போல ஆண்டவரும் தனிப்பட்ட மனிதர்களோடு இடைபடுகின்றார். ஒருவர்....... ஒருவர் கூட கேட்டுப் போவது ஆண்டவருக்குச் சித்தமல்ல. எனவே நம் உள்ளத்தில் இயேசுவை நேசிப்போமானால், நாம் ஆண்டவரை அறியாதவர்களோடு அன்புடன் பழகி, நண்பராக்கி ஆண்டவருக்குள்ளாக வழி நடத்த வேண்டும். குறிப்பாக இயேசு இந்த உவமையில், முன்பு இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள், இப்பொழுதோ சுய சித்தத்தோடு கூடிய நோக்கமில்லாத வாழ்க்கை வாழுபவர்களைக் குறித்துக் கூறுகின்றார்.
பொதுவாக ஆடுகள் முட்டாள்தனமானவை, சாய்கின்ற பக்கமே சாயும். அவைகள் நோக்கமில்லாமல், எல்லாக் கடினமான சூழ்நிளைகளுக்குள்ளாக செல்லும். சில நேரங்களில் பாறை இடுக்குகளிலும், குகைக்குள்ளேயும் விழுந்துவிடும். சில வேளைகளில் புதர்களுக்கிடையே சென்று மாட்டிக் கொள்ளும். மனிதர்களும் இதைப் போலவே.
ஆனால் இயேசுகிறிஸ்து, பாலஸ்தீனிய மலைப் பகுதிகளிலே வாழுகின்ற மேய்பர்களைப் போலவே, மனிதர்கள் மேல் மனதுருக்கம் உடையவராக இருக்கிறார். தொலைந்து போன ஆட்டைத் தேடிக் கண்டு பிடித்தவுடன் அவன் மகிழ்ந்து களிகூருகின்றான்.  நம்மில் ஒவ்வொருவரும், மேலும் ஒரு ஆத்துமா கிறிஸ்துவிடம் வரும்பொழுது ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்க்க வேண்டும்.
2. மனதுருக்கம் சபையின் மற்ற அங்கத்தினரோடு இசைந்து வேலை செய்ய முயற்ச்சிக்கும்: (18:15-20)
சக கிறிஸ்தவரோடு கருத்து வேறுபாடு உண்டாகும் என்பதை இயேசு அறிந்திருந்தார். இந்த வேதபகுதியில், கருத்து வேறுபாடுகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதைக் குறித்து கோடிட்டுக் காட்டுகின்றார். தனக்கு விரோதமாக தவறிழைத்த  சகோதரன் அல்லது சகோதரியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
அ) அந்த சகோதரனோ, சகோதரியோ தனித்திருக்கும் போது நேராகச் சென்று தவறை எடுத்துச் சொல்ல வேண்டும். (வ 15) பிரச்சனைகளை பிறரிடம் கூறாமல் சம்பந்தப் பட்டவரை நேர்மையுடனும், இரக்க மனோபாவத்துடனும் தனியாக சந்தித்துப் பேசினால் பத்துக்கு ஒன்பது பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து விடலாம். சம்பந்தப்பட்டவர் தவறாக நடந்து கொண்டதே தெரியாமல் இருக்கலாம்.
) தவறு செய்தவர் செவி கொடுக்கவில்லையானால், மேலும் ஒன்று அல்லது இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு மீண்டும் செல்ல வேண்டும்(16). சில நேரங்களில் மற்ற கிறிஸ்தவர்களின் வருகை, தவறிழைத்தவர்களுக்கு, தங்களின் சமரசமாகாத தவறு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றதை உணருவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
இ) தவறிழைத்தவர் அதற்கும் செவிகொடுக்கவில்லைஎனில் இப்பொழுது பிரச்னையை சபைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.(வ17). சபை அந்த பிரச்னையை நிதானிக்க வேண்டும். இப்பொழுதும் அந்த சகோதரனோ, சகோதரியோ சபையின் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், சபையின் ஐக்கியத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும். மேலும் அவிசுவாசியைப் போல நடத்த வேண்டும். வெளியேற்றப் பட்டவர்சபையின் முடிவை ஏளனம் செய்யக் கூடும். ஆனால் தொடர்ந்து சபையானது அவரின் மீது அன்பையும் மதிப்பையும் வைக்கும் போது, பின்னொரு நாளில் தவறை உணர்ந்து கொள்ளுவார். 'அவன் உனக்கு அஞ்ஞனியைப் போலவும், ஆயக் காரனைப் போலவும் இருப்பானாக' என்பது அந்த நபரைக் கைவிடுதல் அல்லது புறக்கணித்தல் அல்ல. மீண்டும், அந்த கடினப்பட்டுப்போன ஆத்துமாவை இரட்சிக்க காட்டக் கூடிய மனதுருக்கம். இது சபைக்கு மிகப் பெரிய சவாலாக அமையும்.
சனம் 18ல், இயேசு கூறுகின்றார்: 'சபைக்கூடுகை உள்ளான நிர்வாக அதிகாரமுள்ளதாய் இருக்கிறது. மேலும் அது ஆண்டவருடைய வார்த்தையின்படி நேர்மையான முடிவெடுத்தால், அது ஏற்கனவே ஆண்டவரது சித்தமாயும் இருக்கும்.
கட்டுவது என்பது, 'கட்டுப்படுத்துவது' எனவும், கட்டவிழ்ப்பது என்பது 'போக விட்டுவிடுதல்' எனவும் பொருள் படும். இந்தப் பூமியிலே சபைக் கூடுகை ஜெபத்தோடு கூட பரிசுத்த ஆவியானவரது வழி நடத்துதலைத் தேடி, எடுக்கின்ற நடவடிக்கையை, பரலோகத்தில் ஏற்கனவே ஆண்டவர் எடுத்துவிடுகின்றார். ஆண்டவரை ஆராதிக்கக் கூடுகின்ற சபையில் அங்கத்தினர் என்பதை மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இது ஜெபத்துடனும், கவனத்துடனும் செய்யப்பட வேண்டும்.
சனம் 20 மிகத் தெளிவாகக் கூறுகின்றது, சபை கூடி வரும்போது இயேசு சபையின் நடுவிலே இருக்கிறார். எனவே எடுக்கின்ற முடிவு, மிகுந்த பனுள்ளதாய் இருக்கும். 19ம் வசனம், குறிப்பாக ஒழுக்கம் மற்றும் கட்டுப் பாட்டுக்குத் தேவையான ஞானத்தைத் தேடும் ஜெபமாகும். இந்தக் கருத்திலிருந்து நாம் இந்தப் பகுதியை வெளியே எடுத்துவிடாமல், மக்களை விசுவாசிக்கத்தக்கதாக தைரியப் படுத்தி - உற்சாகப் படித்தி ஜெபிக்கச் செய்ய வேண்டும். வசனம் 19,20 அழுத்தமாக கூறுகின்றது: ஒரு நபர் மட்டுமே சபைக் கட்டுப்பாட்டை நடைமுறைப் படுத்தக் கூடாது. ஆராதிக்கக் கூடிவருகின்ற  விசுவாசிகளால் சேர்ந்து எடுக்கின்ற முடிவாக இருக்கவேண்டும். ஒரு பிஷப்புக்கோ, போதகருக்கோ அல்லது மூப்பருக்கோ சுயமாக முடிவெடுக்கும் அதிகாரமில்லை.
ழுக்கக்குறைவிலே சபை இரக்கமுடன் இருக்க முடியாது. எந்த சபையும் அப்படி இருப்பது ஒரு சாபமாகும். புதிய ஏற்பாட்டின் போதனைகளை சபையில் உள்ள விசுவாசிகள், தங்கள் அனுதின வாழ்க்கையில் பயிற்ச்சிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து ஆண்டவருடைய திருச் சட்டத்தை மீறுவது, மனந்திரும்பாமல் இருப்பது போன்றவைகளை திருசபை சகித்துக் கொள்ளக் கூடாது.
முதிர்ச்சி அடையாத சபை அங்கத்தினர்களின் பார்வையில், இதைப் போன்ற நடவடிக்கைகள் - ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது, கட்டுப்படுத்துவது, போக விட்டுவிடுவது, இவையெல்லாம் அன்பற்றவைகளாக தெரியலாம். கவனமாக எடுக்கின்ற, வலி தருகின்ற, முடிவுகள் எல்லாம் உண்மையிலேயே ஆழமான அன்பின் அடையாளங்களாகும். இவையெல்லாம் தவறான / நேர்மையற்ற நபர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்ளவும், ஆண்டவருக்கு கணக்கு கொடுக்கக் கூடியவர்களாகவும் மாற்றும். இது சபையின் ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கின்றது. இதன் மூலம் சபையானது சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கும்.
ஜெபிப்போம்!!
ங்களை நேசிக்கின்ற அன்பின் பிதாவே, சபைக்குத் தலையான  இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே உம்மிடத்திலே வருகின்றோம். அழிந்து போகின்ற ஆத்துமாக்களின் மீது உமக்கிருக்கும் மனதுருக்கத்திற்காய் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். அதே மனதுருக்கத்தோடே நாங்கள் ஆத்தும ஆதாயம் செய்ய கிருபை தாரும். உமது வருகைக்குள்ளாக ஒரு கூட்ட ஆத்துமாக்களைக்  கூட்டிச் சேர்த்து உம்மைச் சந்திக்க இதைப் படிக்கின்ற எங்களுக்கு கிருபை செய்யும். சபையின் சட்ட திட்டத்தின் ஒரு பகுதியை இந்த நாளில் தெரிந்தது கொள்ளக் கிருபை தந்ததற்க்காய் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் நல்ல பிதாவே. ஆமென்.
மேலே உள்ள இந்த வசனம் நமது ஊழியத்துக்கு ஆண்டவர் கொடுத்த மூலைக்கல் வசனமாகும்
உங்களது மேலான கருத்துக்களை பிறருக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி கீழே பதிவு செய்யும்படி வேண்டுகின்றேன். நன்றி ஆண்டவர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பார்.

24 Aug 2014

CHILDLIKENESS

சிறு பிள்ளையைப் போன்று (அ) மனத்தாழ்மை
கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்!
இந்தப் பகுதியிலே மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றேன். சிறுபிள்ளைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு. இந்தப் பகுதி உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள். மத்தேயு 18:1-10 வசனங்களை வாசித்துப் பாருங்கள். இந்தப் பகுதியையே நாம் தியானிக்கப் போகின்றோம். ஆண்டவருடைய சீடர்களில் சிலர் தங்களில் யார் தேவனுடைய ராஜ்யத்தில் பெரியவனாய் இருப்பான் என அறிய விரும்பினர். மாற்கு9:33,34ல்,
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக் குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம் பண்ணினார்கள்."
யேசு அவர்களுக்கு ஒரு சிறு பிள்ளையை உபயோகித்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். என்னவெனில், அவர் தமது சீடர்களைப் பார்த்து பரலோகத்துகுள் செல்ல வேண்டுமானால், சிறுபிள்ளையைப் போல மனந்திரும்ப வேண்டும் என்றார்.
பரிசுத்த வேதாகமம், தேவ ஜனங்களை பல்வேறு பெயர்களில் அழைக்கின்றது. அதிகமாக 'பிள்ளைகள்' என அழைக்கிறது. நாம், வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்,வெளிச்சத்தின் பிள்ளைகள், அன்பான பிள்ளைகள், தேவ பிள்ளைகள் என அழைக்கப்படுகின்றோம்.
சிறுபிள்ளையைப் போல (மத்தேயு 18:1-10): இயேசு கிறிஸ்து தமது இராஜியத்தை ஸ்தாபிக்கும் பொழுது தங்களில் யார் பெரியவனாய் (Greatest) இருப்பான்? என விவாதித்தார்கள். (நான் சிறுவனாய் இருந்த பொழுது அமெரிக்காவை சேர்ந்த முகமது அலி என்ற குத்துச் சண்டை வீரர் தனது உலக சாம்பியன் போட்டியில் ஜெயித்தபின் நான்தான் பெரியவன் (I am the Greatest) எனக் கூறியது நினைவுக்கு வருகின்றது).  மாற்கு 9:33,34ல் அமைதியாய் இருந்தவர்கள், மத்தேயு 18:1ல், பரலோகத்தில் எவன் பெரியவனாய் இருப்பான்? எனக் கேட்டார்கள்.
யேசு ஒரு சிறு பிள்ளையை முன் நிறுத்தி மனத்தாழ்மையைக் குறித்து, ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். இந்த விஷயத்தைக் குறித்து தனது சொந்த ஊரிலே முந்திரிக் கொட்டையான பேதுருதான் கேட்டிருக்க வேண்டும். எப்படியாயினும் 3ம் வசனத்தில்,
"நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்".
'னந்திரும்புதல்' என்றால் 'எதிர் திசைக்குத் திரும்புதல்' எனப் பொருள். நாம் கடவுளை விட்டு எதிர் திசையில் சென்றோம், இப்பொழுதோ ஆண்டவருடைய வார்த்தைகளைக் கவனமாய் பின்பற்ற ஆவலாய் இருக்கிறோம்.
'சிறுபிள்ளையைப் போலாக வேண்டும்' என்ற பதம், நாம் வழக்கமாக கூறுகிற புத்திமதிக்கு எதிரானது. நாம் சிறு பிள்ளைகளைக் கூப்பிட்டு முதியவர்களைப் போல உதாரண புருஷர்களாய் மாற வேண்டும் எனக் கூறுவது வழக்கமான ஒன்றாகும். நான் சிறு வயதாய் இருந்தபொழுது, வீட்டிலிருந்த பெரிய நேரு படத்தைக் காட்டி நீயும் நேருவைப் போல வரவேண்டும் என என்னைப் பார்த்து எனது அப்பா சொன்னது எனக்கு நினைவுக்கு வருகின்றது. ஆனால் இயேசுவோ நேர்மாறாக கூறினார். அவர், சிறுபிள்ளையை அழைத்து, "பேதுருவைப் பார்; எவ்வளவு நல்ல மீனவன். நீயும் ஒருநாள் அதைப் போல வரவேண்டும் என நான் விரும்புகின்றேன்" எனக் கூறாமல், சிறுபிள்ளையை சுட்டிக் காட்டி பெரியவர்களைப் பார்த்து, "நீங்கள் இந்த சிறுபிள்ளையைப் போல மாறவேண்டும்" என்றார். சிறுபிள்ளைகளிடம் நாம் கற்றுக் கொள்ள என்ன இருக்கின்றது எனப் பார்ப்போமா?
1. நம்பும் தன்மை (அ) சார்ந்துகொள்ளும் தன்மை: குழந்தைகள் இயல்பாகவே பெற்றோர் தங்கள் தேவைகளையெல்லாம் சந்திப்பார்கள் என நம்புகின்றார்கள். தங்கள் பெற்றோரோடு வெளியூர்களுக்குச் செல்லும் பொழுது, அவர்களுக்கு வழி தெரியாது. டிக்கெட்டுக்கு பணமும் கிடையாது, எனினும் பாதுகாப்பாக ஊர் போய் சேருவோம் என நம்புகின்றனர். பெற்றோரை சார்ந்து வாழுகின்றனர்.
2. கற்றுக் கொள்ளும் விருப்பம்: சாதாரணமாக பிள்ளைகள் புதிய கருத்துக்களை உடையவர்கள். மேலும் புதியவற்றைக் கற்றுக் கொள்ள தம் பெற்றோரைத் தம் கேள்விகளால் துளைக்கின்றனர். தங்களுக்கு தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் செய்வார்கள்.
3. வேகமாக மன்னித்து மறந்தும் விடுவார்கள்: சிறு பிள்ளைகள் அடிக்கடி தங்களுக்குள் சண்டை போடுவார்கள்; நிமிஷத்திலே ஒன்றுமே நடக்காததைப் போல, கூடி விளையாடுவார்கள். பெற்றோர்கள் அவர்களைத் தவறாக கண்டித்தால் கூட மன்னித்து மறந்து விடுவார்கள். 
இயேசு சிறு பிள்ளையைப் போன்ற தன்மைதான் பெரியது (GREATNESS) எனக் கூறினார்.(வ 4) இந்த அடிப்படைத் தன்மைகள்  ஆண்டவரோடு நாம், நடக்கும் போது  நமக்குத் தேவை. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தது இப்படித்தான். ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நம் வாழ்வில் நிறைவேற வேண்டுமானால் நாம் இப்படித்தான் வாழவேண்டும்.
வசனம் 5ல், 'ஏற்றுக் கொள்ளுகிறவன்' என்பதற்கு, அன்பு செலுத்துதல் - இரக்கத்தோடு நடந்துகொள்ளுதல் எனப் பொருள்படும். ஒரு சிறு பிள்ளையின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பது களைப்பை ஏற்படுத்தும் ஒரு வேலையாகும். துணிகளைத் துவைத்தல், காயம் பட்டால் கட்டுதல், உணவு தயாரித்தல், ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தல், என களைப்பை ஏற்படுத்தும். இவைகள் அனைத்தும் அன்புடனும், பொறுமையுடனும் செய்யப் படவேண்டும்.
'ந்த சிறியரில் ஒருவனுக்கு' (வ 6) என்ற சொற்றொடர் சிறுவரைக் குறித்தாலும், இங்கே இயேசு கிறிஸ்து, கிறிஸ்துவில் சிறுபிள்ளைகளைக் குறிப்பிடுகிறார். அதாவது புது விசுவாசிகள். இப்பொழுதுதான் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள். நீடிய பொறுமையுள்ள வழி நடத்துதலும், நல்ல முன் மாதிரியான வாழ்க்கையும், அன்பும் தேவையாய் இருக்கும், ஆண்டவருடைய பிள்ளைகளை இயேசு இங்கே குறிப்பிடுகின்றார்.
வசனங்கள் 6- 10 ல், இயேசு பிறருக்கு இடறல் உண்டாக்குகின்ற தன்மையின் எச்சரிப்பைக் குறித்து கூறுகின்றார். பாவம் மோசமானது. பிறரைப் பாவஞ்செய்யத் தூண்டுவது அதைவிட மோசமானது.
தவறானவற்றை கற்றுக் கொடுப்பது, தவறான உதாரணங்களைக் கூறி பிறரைப் பாவத்துகுட்படுத்துவது, சபையை குற்றஞ்சாட்டுவது, பிறருடைய உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் உணர்வில்லாதவர்களாய் இருப்பது, (கண்களை மூடிக் கொள்ளுவது) இவைகளெல்லாம் மோசமான உதாரணத்தைக் காட்டுகின்றது. இவைகள் எளிதாக பாவஞ்செய்யத் தூண்டுகின்றது.
னந்திரும்பாமல் இறப்பவர்கள் போகும் இடத்தை (வார்த்தையினால் விவரிக்க முடியாத இடத்தை) குறித்து, இயேசு மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார். நரகம் என்பது மிகக் கொடுமையான இடம்.8ம் வசனத்தின் பிற்பகுதியிலே 'நித்திய அக்கினி' என்றும் 9ம் வசனத்தின் மையப் பகுதியிலே 'எரி நரகம்' எனவும் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே மிக இரக்கமுடையவரான இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் தான் இது.
நேக வேதாகம வல்லுனர்கள், கையை வெட்டுவதும், கண்களைப் பிடுங்குவதும் உதாரணமாகத்தான் கூறப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். ஏனெனில் கையை வெட்டுவதால் திருட்டை சரி செய்ய முடியாது, காலை வெட்டுவதால் தவறான இடத்துக்கு செல்லுவதைத் தடுக்க முடியாது, கண்களைப் பிடுங்குவதால், இச்சை, பாலியல் குற்றங்களுக்கு விலக்க முடியாது எனவும் கூறுகின்றனர். இந்தப் பாடங்கள் அனைத்தும் மனதிற்கான (உள்ளத்திற்கான) பாடங்கள் ஆகும்.
1. வாழ்க்கையில் உனக்கு மிகவும் பிடித்த பொருட்கள் உன்னைப் பாவஞ்செய்யத் தூண்டினால் வெட்டு.
2. பாவஞ் செய்ய ஒத்துப் போகின்ற தொடர்புகள், ஒருவேளை உன் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் வெட்டிவிடு.
3. எந்த தியாகமும் (கையை வெட்டுவது கூட) மிகச் சரியானது. காரணம் கடவுளிடமிருந்து வரும் தண்டனைக்குத் தப்பிக் கொள்ளுவதால்.
ரு கையை வெட்டுவது சரி என நாம் சொல்லக் கூடாது; இயேசு கிறிஸ் துவும் அந்தப் பொருளிலே கூறவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்துவுக்குள்ளான புது விசுவாசிகளை தவறாக நடத்தினால் அவர்களுக்குரிய தேவ தூதர்கள் அவர்களைப் பாதுகாப்பார்கள் என இயேசு கூறுகின்றார். (வ 1௦)
வேதாகமம் நமக்கு / ஒவ்வொரு பிள்ளைக்கும், ஒவ்வொரு விசுவாசிக்கும் இரட்சிப்பின் அனுபவத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவ தூதர்கள் இரவு பகலாக ஊழியம் செய்கின்றனர் என கூறுகின்றது. எபிரெயர் 1:14 ல்,
"இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களின்நிமித்தமாக ஊழியஞ் செய்யும்படிக்கு, அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?"
சிங்கத்தின் கெபியிலே ஓர் இரவைக் கழித்த தானியேல் காக்கப்பட்டது தேவதூதனால். சிறை சாலையில் பேதுரு அடைக்கப் பட்டிருந்த பொழுது, விடுவித்தது தேவ தூதன்,  பிலிப்புவை கந்தாகே மந்திரிக்கு நற்செய்தியை அறிவிக்க வழி நடத்தியது தேவதூதன். இயேசுவின் பிறப்பை மரியாளுக்கு அறிவித்தது தேவ தூதன். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். நாமனைவருமே தேவதூதர்களின் மேற்ப்பார்வையில் இருக்கின்றோம். நாம் அடிக்கடி கனவு காண்பதைவிட பரலோகத்திற்கு மிக அருகில் நாம் இருக்கிறோம். சிறு பிள்ளைகளுக்கும், கிரிஸ்துவில் புது விசுவாசிகளுக்கும் நல்ல உதாரணமாக நாம் இருக்க வேண்டும். காரணம் தேவ தூதர்கள் நம்மைக் கண் காணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இறுதியாக,
'சிறு பிள்ளையைப்போல' என்றால், நம்பிக்கை கொள்ளுவது, அல்லது சார்ந்து கொள்ளுவது, கற்றுக் கொள்ள ஆர்வம், வேகமாக மன்னித்தல் மறத்தல் - இவைகளை உள்ளடக்கியது. இவைகள் தான் பெரிய மனிதத்தன்மை. இந்த தன்மையை உடைக்கக் கொடுக்கப்படும் ஆதரவு, மனிதர்களைக் குறை கூற முடியாதபடி  பரத்திலிருந்து தண்டனையைப் பெற்றுத் தரும்.
நாம் சிறு பிள்ளையப் போன்று வாழ ஒப்புக் கொடுப்போம். ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவோம்.
வாழ்த்துக்கள்! உங்கள் மேலான கருத்துக்களை பிறருக்கு பிரயோஜனம் உண்டாகும்படி கீழே பதிவு செய்யுங்கள்.
 

23 Aug 2014

YOU ARE THE LIGHT OF THE WORLD

கிறிஸ்துவுக்குள்  அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
 
 
 இமயமலைத் தொடர்(மணாலி)
 
இந்த புதிய  தளத்திலே உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி  அடைகிறேன்!! வாருங்கள் நாம் இணைந்து இயேசுவின் நாமத்தை மகிமைப் படுத்துவோம்!!!.
இப்பொழுது  நாம் இந்த வசனத்தை தியானிப்போம்: இந்த இடத்திலே உங்களைச் சந்திப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி! நீங்கள் போகுமிடமெல்லாம் ஆண்டவர் உங்களை பிரகாசிக்கச் செய்வார்! ஆண்டவர் ஒரு ஆசீர்வாதமான காரியத்தைச் சொன்னால் சொன்னதுதான். அதை அவர் மாற்றுவதில்லை. இந்த செய்தியைப் படிக்கின்ற  நாம் அனைவருமே உலகத்திற்கு வெளிச்சமாயிருக்க அழைக்கப்பட்டுருக்கிறோம்.
  ".....மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.(மத்தேயு 5:6) 
 நம்முடைய செயல்களில் பிதாவாகிய தேவன் மகிமைப்படுவாரா? இன்றைய சூழலிலே கிறிஸ்தவர்களில் பலர், ஆண்டவரை அறியாத   மக்களிடம்  இருந்துதான் நற்கிரியைகளை கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இது தவறல்ல. நம்முடைய நற்கிரியைகளின் மூலமாக  பிதாவாகிய தேவன்  மகிமைப்பட வேண்டும்.
நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் வர வர வெளிச்சம் அதிகமாகிக் கொண்டே போகும்.
 "நீதிமான்களுடைய பாதை  நடுப் பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம் போலிருக்கும்" (நீதி. 4:18)
எனவே பிலி. 2:15,16ன் படி,
"ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு, உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும்  கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற  பிள்ளைகளுமாய்  இருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுபில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்".
குறைநத சத்தத்தில் முணு முணு  என குற்றஞ் சுமத்திக் கொண்டு, அருகில் இருப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்ப்படும் வகையில் பேசிக் கொண்டு  இருத்தல் தான் முறுமுறுத்தல் என்பது. தர்க்கிப்பு என்பது, உண்மையை அல்லது மதிப்பைக்  கேள்வி  கேட்டுக் கொண்டிருப்பது, (இப்படித் தான் செய்யனுமாக்கும்..... ஏன் அப்படி செய்யக் கூடாது? என்று) ஏட்டிக்குப்  போட்டியாக  செயல்படுவது. இந்த இரண்டும் நமது வேலையில் இல்லாமலிருந்தால், நாம் ஆட்டோமேட்டிக்காகவே குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும்  தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாகி விடுகின்றோம். எனவே செய்கின்ற வேளையில் உற்சாகத்தைக் கூட்டுங்கள்.
மேலும் இதைப் போன்ற வசனங்களுக்கு கீழ்ப்படியும் போது நம்முடைய வாழ்க்கை ஒளிர ஆரம்பிக்கிறது. ஆண்டவர் கூறியவற்றை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளாமல், கட்டளையாக எடுத்துக் கொண்டு கீழ்ப்படியும் போது, நாம் சுடர்களைப் போல பிரகாசிக்க ஆரம்பிக்கிறோம். ஆண்டவரை நாம் போதிக்கிறவராக   காணும் பொழுது நாம் நம் வாழ்க்கையில் அநேகத்தைக் கற்றுக் கொண்டு முன்னேறுகின்றோம்.
அப்படி முறுமுறுப்பில்லாமல், தர்கிப்பில்லாமல் நற்கிரியைகளைச் (வேலை) செய்யும் போது, நாம் 3 விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1. நமது நற்கிரியைகள் ஒளிர வேண்டுமே  தவிர, அது பிறரை எரித்து அழித்து விடக் கூடாது. 2. நம்முடைய நற்கிரியைகளை மனிதர்கள்  பார்க்க வேண்டுமே ஒழிய, மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செய்யப் படக் கூடாது. 3. நாம் செய்கின்ற நற் கிரியைகள், ஆண்டவருக்கு மகிமையையும், மனுக்குலத்துக்கு  நன்மையையும் கொண்டு வர வேண்டும். இறுதியாக, 
"செம்மை யானவர்களுக கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன்  இறக்கமும்   மன உருக்கமும் நீதியுமுள்ளவன்." (சங்.112:4)
நீங்கள் இருளிலே இருக்கிறவனைப் போல இருக்கின்றீர்களோ? ஆண்டவர் கூறுகின்றார்: உங்கள் வெளிச்சம் இருளிலே உதிக்கும். ஆண்டவர் உங்களை வழி நடத்தி வெளிச்சத்துக்கு கொண்டு வருவார். பிறரிடம் மன உருக்கமும், இரக்கமுமாக நடந்து கொள்ளுங்கள். கர்த்தர்  உங்களை ஆசீர்வதிப்பார்.
 
ஜெபிப்போமா?
எங்களை அதிகமாய் நேசித்து வழி நடத் தி  வருகின்ற அன்பின் தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகிறேன்.  உமது வேதம் என் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறபடியால் நன்றி செலுத்துகின்றேன்.  நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும்  தப்புவித்து  வழி நடத்தும்படியாய் ஜெபிக்கிறேன். முற்காலத்தில் நாங்கள் அந்தகாரமாய் இருந்தோம், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாய் இருக்கிறோம்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ள கிருபை செய்யும். மெய்யான ஒளியாகிய இயேசுவே! எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே! என்னையும்  பிரகாசிக்கப் பண்ணும். இந்த செய்தியின்படி நற்கிரியைகளை நடப்பிதது, அநேகர், பிதாவே உம்மை மகிமைப்படுத்தும்படியாக, வாழ ஒப்புக் கொடுக்கிறேன். கர்த்தராகிய நீர் நீதியின் நீதியின்படி என்னை அழைத்து, என்னுடைய கையைப் பிடித்து, என்னை தற்காத்து, என்னை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிற  தயவுக்காய் நன்றியும் துதியும் கனமும் மகிமையும் செலுத்துகின்றேன். இயேசுவின்  மூலம்  பிதாவே. 
உங்களது மேலான கருத்துக்களை கீழே பதிவு செய்யும்படி வேண்டுகின்றேன். இந்தப் பக்கத்திற்கு வருபவர்களுக்கு உங்கள் பதிவு ஆசீர்வாதமாக இருக்கும்!!