சிறு பிள்ளையைப் போன்று (அ) மனத்தாழ்மை
கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்!
இந்தப் பகுதியிலே மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றேன். சிறுபிள்ளைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு. இந்தப் பகுதி உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள். மத்தேயு 18:1-10 வசனங்களை வாசித்துப் பாருங்கள். இந்தப் பகுதியையே நாம் தியானிக்கப் போகின்றோம். ஆண்டவருடைய சீடர்களில் சிலர் தங்களில் யார் தேவனுடைய ராஜ்யத்தில் பெரியவனாய் இருப்பான் என அறிய விரும்பினர். மாற்கு9:33,34ல்,
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக் குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம் பண்ணினார்கள்."
இயேசு அவர்களுக்கு ஒரு சிறு பிள்ளையை உபயோகித்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். என்னவெனில், அவர் தமது சீடர்களைப் பார்த்து பரலோகத்துகுள் செல்ல வேண்டுமானால், சிறுபிள்ளையைப் போல மனந்திரும்ப வேண்டும் என்றார்.
பரிசுத்த வேதாகமம், தேவ ஜனங்களை பல்வேறு பெயர்களில் அழைக்கின்றது. அதிகமாக 'பிள்ளைகள்' என அழைக்கிறது. நாம், வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்,வெளிச்சத்தின் பிள்ளைகள், அன்பான பிள்ளைகள், தேவ பிள்ளைகள் என அழைக்கப்படுகின்றோம்.
சிறுபிள்ளையைப் போல (மத்தேயு 18:1-10): இயேசு கிறிஸ்து தமது இராஜியத்தை ஸ்தாபிக்கும் பொழுது தங்களில் யார் பெரியவனாய் (Greatest) இருப்பான்? என விவாதித்தார்கள். (நான் சிறுவனாய் இருந்த பொழுது அமெரிக்காவை சேர்ந்த முகமது அலி என்ற குத்துச் சண்டை வீரர் தனது உலக சாம்பியன் போட்டியில் ஜெயித்தபின் நான்தான் பெரியவன் (I am the Greatest) எனக் கூறியது நினைவுக்கு வருகின்றது). மாற்கு 9:33,34ல் அமைதியாய் இருந்தவர்கள், மத்தேயு 18:1ல், பரலோகத்தில் எவன் பெரியவனாய் இருப்பான்? எனக் கேட்டார்கள்.
இயேசு ஒரு சிறு பிள்ளையை முன் நிறுத்தி மனத்தாழ்மையைக் குறித்து, ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். இந்த விஷயத்தைக் குறித்து தனது சொந்த ஊரிலே முந்திரிக் கொட்டையான பேதுருதான் கேட்டிருக்க வேண்டும். எப்படியாயினும் 3ம் வசனத்தில்,
"நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்".
'மனந்திரும்புதல்' என்றால் 'எதிர் திசைக்குத் திரும்புதல்' எனப் பொருள். நாம் கடவுளை விட்டு எதிர் திசையில் சென்றோம், இப்பொழுதோ ஆண்டவருடைய வார்த்தைகளைக் கவனமாய் பின்பற்ற ஆவலாய் இருக்கிறோம்.
'சிறுபிள்ளையைப் போலாக வேண்டும்' என்ற பதம், நாம் வழக்கமாக கூறுகிற புத்திமதிக்கு எதிரானது. நாம் சிறு பிள்ளைகளைக் கூப்பிட்டு முதியவர்களைப் போல உதாரண புருஷர்களாய் மாற வேண்டும் எனக் கூறுவது வழக்கமான ஒன்றாகும். நான் சிறு வயதாய் இருந்தபொழுது, வீட்டிலிருந்த பெரிய நேரு படத்தைக் காட்டி நீயும் நேருவைப் போல வரவேண்டும் என என்னைப் பார்த்து எனது அப்பா சொன்னது எனக்கு நினைவுக்கு வருகின்றது. ஆனால் இயேசுவோ நேர்மாறாக கூறினார். அவர், சிறுபிள்ளையை அழைத்து, "பேதுருவைப் பார்; எவ்வளவு நல்ல மீனவன். நீயும் ஒருநாள் அதைப் போல வரவேண்டும் என நான் விரும்புகின்றேன்" எனக் கூறாமல், சிறுபிள்ளையை சுட்டிக் காட்டி பெரியவர்களைப் பார்த்து, "நீங்கள் இந்த சிறுபிள்ளையைப் போல மாறவேண்டும்" என்றார். சிறுபிள்ளைகளிடம் நாம் கற்றுக் கொள்ள என்ன இருக்கின்றது எனப் பார்ப்போமா?
1. நம்பும் தன்மை (அ) சார்ந்துகொள்ளும் தன்மை: குழந்தைகள் இயல்பாகவே பெற்றோர் தங்கள் தேவைகளையெல்லாம் சந்திப்பார்கள் என நம்புகின்றார்கள். தங்கள் பெற்றோரோடு வெளியூர்களுக்குச் செல்லும் பொழுது, அவர்களுக்கு வழி தெரியாது. டிக்கெட்டுக்கு பணமும் கிடையாது, எனினும் பாதுகாப்பாக ஊர் போய் சேருவோம் என நம்புகின்றனர். பெற்றோரை சார்ந்து வாழுகின்றனர்.
2. கற்றுக் கொள்ளும் விருப்பம்: சாதாரணமாக பிள்ளைகள் புதிய கருத்துக்களை உடையவர்கள். மேலும் புதியவற்றைக் கற்றுக் கொள்ள தம் பெற்றோரைத் தம் கேள்விகளால் துளைக்கின்றனர். தங்களுக்கு தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் செய்வார்கள்.
3. வேகமாக மன்னித்து மறந்தும் விடுவார்கள்: சிறு பிள்ளைகள் அடிக்கடி தங்களுக்குள் சண்டை போடுவார்கள்; நிமிஷத்திலே ஒன்றுமே நடக்காததைப் போல, கூடி விளையாடுவார்கள். பெற்றோர்கள் அவர்களைத் தவறாக கண்டித்தால் கூட மன்னித்து மறந்து விடுவார்கள்.
இயேசு சிறு பிள்ளையைப் போன்ற தன்மைதான் பெரியது (GREATNESS) எனக் கூறினார்.(வ 4) இந்த அடிப்படைத் தன்மைகள் ஆண்டவரோடு நாம், நடக்கும் போது நமக்குத் தேவை. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தது இப்படித்தான். ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நம் வாழ்வில் நிறைவேற வேண்டுமானால் நாம் இப்படித்தான் வாழவேண்டும்.
வசனம் 5ல், 'ஏற்றுக் கொள்ளுகிறவன்' என்பதற்கு, அன்பு செலுத்துதல் - இரக்கத்தோடு நடந்துகொள்ளுதல் எனப் பொருள்படும். ஒரு சிறு பிள்ளையின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பது களைப்பை ஏற்படுத்தும் ஒரு வேலையாகும். துணிகளைத் துவைத்தல், காயம் பட்டால் கட்டுதல், உணவு தயாரித்தல், ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தல், என களைப்பை ஏற்படுத்தும். இவைகள் அனைத்தும் அன்புடனும், பொறுமையுடனும் செய்யப் படவேண்டும்.
'இந்த சிறியரில் ஒருவனுக்கு' (வ 6) என்ற சொற்றொடர் சிறுவரைக் குறித்தாலும், இங்கே இயேசு கிறிஸ்து, கிறிஸ்துவில் சிறுபிள்ளைகளைக் குறிப்பிடுகிறார். அதாவது புது விசுவாசிகள். இப்பொழுதுதான் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள். நீடிய பொறுமையுள்ள வழி நடத்துதலும், நல்ல முன் மாதிரியான வாழ்க்கையும், அன்பும் தேவையாய் இருக்கும், ஆண்டவருடைய பிள்ளைகளை இயேசு இங்கே குறிப்பிடுகின்றார்.
வசனங்கள் 6- 10 ல், இயேசு பிறருக்கு இடறல் உண்டாக்குகின்ற தன்மையின் எச்சரிப்பைக் குறித்து கூறுகின்றார். பாவம் மோசமானது. பிறரைப் பாவஞ்செய்யத் தூண்டுவது அதைவிட மோசமானது.
தவறானவற்றை கற்றுக் கொடுப்பது, தவறான உதாரணங்களைக் கூறி பிறரைப் பாவத்துகுட்படுத்துவது, சபையை குற்றஞ்சாட்டுவது, பிறருடைய உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் உணர்வில்லாதவர்களாய் இருப்பது, (கண்களை மூடிக் கொள்ளுவது) இவைகளெல்லாம் மோசமான உதாரணத்தைக் காட்டுகின்றது. இவைகள் எளிதாக பாவஞ்செய்யத் தூண்டுகின்றது.
மனந்திரும்பாமல் இறப்பவர்கள் போகும் இடத்தை (வார்த்தையினால் விவரிக்க முடியாத இடத்தை) குறித்து, இயேசு மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார். நரகம் என்பது மிகக் கொடுமையான இடம்.8ம் வசனத்தின் பிற்பகுதியிலே 'நித்திய அக்கினி' என்றும் 9ம் வசனத்தின் மையப் பகுதியிலே 'எரி நரகம்' எனவும் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே மிக இரக்கமுடையவரான இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் தான் இது.
அநேக வேதாகம வல்லுனர்கள், கையை வெட்டுவதும், கண்களைப் பிடுங்குவதும் உதாரணமாகத்தான் கூறப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். ஏனெனில் கையை வெட்டுவதால் திருட்டை சரி செய்ய முடியாது, காலை வெட்டுவதால் தவறான இடத்துக்கு செல்லுவதைத் தடுக்க முடியாது, கண்களைப் பிடுங்குவதால், இச்சை, பாலியல் குற்றங்களுக்கு விலக்க முடியாது எனவும் கூறுகின்றனர். இந்தப் பாடங்கள் அனைத்தும் மனதிற்கான (உள்ளத்திற்கான) பாடங்கள் ஆகும்.
1. வாழ்க்கையில் உனக்கு மிகவும் பிடித்த பொருட்கள் உன்னைப் பாவஞ்செய்யத் தூண்டினால் வெட்டு.
2. பாவஞ் செய்ய ஒத்துப் போகின்ற தொடர்புகள், ஒருவேளை உன் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் வெட்டிவிடு.
3. எந்த தியாகமும் (கையை வெட்டுவது கூட) மிகச் சரியானது. காரணம் கடவுளிடமிருந்து வரும் தண்டனைக்குத் தப்பிக் கொள்ளுவதால்.
ஒரு கையை வெட்டுவது சரி என நாம் சொல்லக் கூடாது; இயேசு கிறிஸ் துவும் அந்தப் பொருளிலே கூறவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்துவுக்குள்ளான புது விசுவாசிகளை தவறாக நடத்தினால் அவர்களுக்குரிய தேவ தூதர்கள் அவர்களைப் பாதுகாப்பார்கள் என இயேசு கூறுகின்றார். (வ 1௦)
வேதாகமம் நமக்கு / ஒவ்வொரு பிள்ளைக்கும், ஒவ்வொரு விசுவாசிக்கும் இரட்சிப்பின் அனுபவத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவ தூதர்கள் இரவு பகலாக ஊழியம் செய்கின்றனர் என கூறுகின்றது. எபிரெயர் 1:14 ல்,
"இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களின்நிமித்தமாக ஊழியஞ் செய்யும்படிக்கு, அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?"
சிங்கத்தின் கெபியிலே ஓர் இரவைக் கழித்த தானியேல் காக்கப்பட்டது தேவதூதனால். சிறை சாலையில் பேதுரு அடைக்கப் பட்டிருந்த பொழுது, விடுவித்தது தேவ தூதன், பிலிப்புவை கந்தாகே மந்திரிக்கு நற்செய்தியை அறிவிக்க வழி நடத்தியது தேவதூதன். இயேசுவின் பிறப்பை மரியாளுக்கு அறிவித்தது தேவ தூதன். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். நாமனைவருமே தேவதூதர்களின் மேற்ப்பார்வையில் இருக்கின்றோம். நாம் அடிக்கடி கனவு காண்பதைவிட பரலோகத்திற்கு மிக அருகில் நாம் இருக்கிறோம். சிறு பிள்ளைகளுக்கும், கிரிஸ்துவில் புது விசுவாசிகளுக்கும் நல்ல உதாரணமாக நாம் இருக்க வேண்டும். காரணம் தேவ தூதர்கள் நம்மைக் கண் காணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இறுதியாக,
'சிறு பிள்ளையைப்போல' என்றால், நம்பிக்கை கொள்ளுவது, அல்லது சார்ந்து கொள்ளுவது, கற்றுக் கொள்ள ஆர்வம், வேகமாக மன்னித்தல் மறத்தல் - இவைகளை உள்ளடக்கியது. இவைகள் தான் பெரிய மனிதத்தன்மை. இந்த தன்மையை உடைக்கக் கொடுக்கப்படும் ஆதரவு, மனிதர்களைக் குறை கூற முடியாதபடி பரத்திலிருந்து தண்டனையைப் பெற்றுத் தரும்.
நாம் சிறு பிள்ளையப் போன்று வாழ ஒப்புக் கொடுப்போம். ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவோம்.
வாழ்த்துக்கள்! உங்கள் மேலான கருத்துக்களை பிறருக்கு பிரயோஜனம் உண்டாகும்படி கீழே பதிவு செய்யுங்கள். |
No comments:
Post a Comment