19 Dec 2015

DO YOU GET ANSWER FOR YOUR PRAYER?

இயேசு உங்கள் ஜெபத்துக்கு பதிலளிக்கின்றாரா?


ஜெபம்: சில குறிப்பிட்ட வேண்டுதலில் ஆண்டவருடைய இடைபடுதலை எதிர்பார்க்கும் தகவல் தொடர்புதான் ஜெபம்.

ஜெபம் என்பது இயேசுவை விசுவாசிக்கும் யாவரும் பெற்றுக்கொண்டுள்ள ஒரு பெரிய தனி உரிமையாகும். ஆனால் பதிலைப் பெற்றுக்கொள்ளாமல் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கின்றீர்களா? உங்கள் ஜெபத்தை அவர் கவனிக்காததினால் நீங்கள் சோர்ந்து போய் இருக்கின்றீர்களா? அல்லது ஆண்டவரைக் குற்றப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்களா? நம்மில் ஒரு சிலருக்கு ஆண்டவரைத் தேடி, அவர் கண்டிப்பாக தனது ஜெபத்துக்கு பதிலளிக்க வேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.  ஏனெனில் அவர் அன்பின் தேவனல்லவா? உதவிக்கு நாம் அவரைக் கூப்பிடும் போது கண்டிப்பாக அவர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார் அல்லவா?

நாம் நம்மை பெருமையாக கிறிஸ்தவர்கள் என அழைத்துக்கொண்ட போதிலும், நாம் அடிக்கடி ஜெபத்தின் சில அடிப்படைகளை மறந்து விடுகின்றோம். நாம் ஒரு சில குறிப்பிட்ட காரியங்களுக்காக ஜெபித்து, நாம் எதிர்பார்த்தபடி அல்லது நமது வழியில் பதிலைப் பெற்றுக் கொள்ளவில்லையானால் அவர் மீது கோபப்படுவது நமக்கு பழக்கமாக போய்விட்டது. நாம் நமது கைகளைக் குத்தி "அன்பின் கடவுள்" எப்படி எனது ஜெபத்துக்கு பதில் கொடுக்காமல் இருக்கலாம்? என கூறிக் கொண்டிருக்கிறோம். மாற்கு 11:24ல்,
"ஆதலால் நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்"
என்று வேதம் கூறவில்லையா? அவர் நமக்கு (உடனடியாக) பதிலளிக்கவில்லையானால், நம்மிடத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதை நாம் உணராமல் உடனே எளிதாக ஆண்டவரைக் குற்றஞ்சாட்டுகிறோம். 

நமது ஜெபத்துக்கு ஆண்டவர் ஏன் உடனே பதிலளிக்கவில்லை என்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அநேக கிறிஸ்தவர்கள், ஆண்டவர் தங்களிடத்தில் எதிர்பார்க்கும் முறைதவறாத / நேர்மையை உதறி தள்ளிவிட்டு, ஏன் எனக்கு உதவி செய்யவில்லை? என அதிகாரத்துடன் ஆண்டவரைக் கேட்கின்றனர். இதில் முறைதவறாத, நேர்மை என்ற சொற்களை நாம் கவனித்தோமானால், சில உண்மைகளை நாம் அறியலாம். 

முதலாவது ஆண்டவர் நமது ஜெபத்துக்கு பதிலளிப்பது, அவரது  நீதி, அன்பு, மற்றும் இரக்கத்தினாலேயே ஆகும். நமது நீதியோ அல்லது நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நீதியோ அல்ல.

இரண்டாவதாக, 'ஜெபம்' என்பது, நமது விருப்பத்தின்படி அவர் தமது சித்தத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும்மல்ல. மாறாக ஜெபம் என்பது நமது விருப்பத்தை அவரது சித்தத்தின்படி மாற்றிக் கொள்ளுவதேயாகும். நாம் ஆண்டவரை மாற்ற முடியாது. நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ளவேண்டும். இது பதில் பெறாத நமது ஜெப பிரச்னைக்கு தீர்வைக் கொண்டுவரும்.  

வேதாகமத்தை கருத்தாய் வாசித்துப் பார்த்தோமானால், நமது ஜெபம் ஏன் ஆண்டவருடைய காதை, மனதை எட்டவில்லை? என நாம் அறிந்து கொள்ளலாம். இங்கே நாம் முக்கியமான (8) எட்டு பிரச்சனைகளை (கடவுளிடம், நமது விண்ணப்பங்களை அணுகாமல் தடுக்கும் தடைகளை) பார்ப்போம். அவைகள்:

1. சந்தேகமும், அவிசுவாசமும்,

2. தவறான காரணங்களுக்காக கேட்பது,

3. உனது வாழ்க்கையில் பாவத்தை விட்டுவிடாதிருப்பது,

4. மற்றவர்களுடைய தேவையில் கண்களை மூடிக்கொல்லுவது,

5. மற்றவர்களை மன்னிக்காதது,

6. ஆண்டவருடைய சித்தத்தின்படி அல்லாததைக் கேட்பது,

7. உனது வாழ்க்கையிலுள்ள பெருமை,

8. ஜெபிக்கும்போது, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவது, (உளறுவது) 

  1. சந்தேகமும் அவிசுவாசமும்

ஆண்டவரது காதுகளில் முதலாவது எட்டுவது இரட்சிப்பு. இரட்சிப்பு  நமது பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் பூரண பலியாக தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்து, தனது குற்றமில்லாத மாசற்ற இரத்தத்தை சிந்தி மரித்த இயேசு கிறிஸ்துவோடு கூட தனிப்பட்ட உறவை ஏற்ப்படுத்துகின்றது. நாம் நம்புகிறபடி அவர் மனுஷ குமாரன். நமது வாழ்வில் இரட்சகராகவும், நமது வாழ்வின் ஆளுநராகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நமது பாவத்தை மன்னித்திருக்கிறார், நித்திய இராஜியத்தை நமக்கு ஆயத்தம் செய்திருக்கிறார். மேலும் கடவுளோடு கூட உன்னதத்தில் உட்காரவும் செய்கிறார். யோவான் 14:6ல்,
"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்"
எளிமையாக சொல்ல வேண்டுமானால் கடவுளோடு தொடர்பு கொள்ளுவதற்கு இயேசுகிறிஸ்து ஒருவரே வழி என விசுவாசிக்க வேண்டும். அவிசுவாசம் உங்கள் ஜெபத்தை தடை செய்துவிடும். இந்த சூழ்நிலையில் கடவுள், இயேசு கிறிஸ்துவிடம் நமது பாவத்தை மன்னிக்கக் கோருவதையும், கடவுளின் தூய ஆவியானவரை அவரது நீதியின்படி வாழ்க்கையில் வழிகாட்டும்படியாக அழைக்கும் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளுகின்றார். உனது இரட்சகராக இயேசுவை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை (அவிசுவாசம்) எனில் கதவு அடைக்கப்படும். 

நமக்கு முன்பாக இருக்கும் இன்னொரு சுவர் என்னவெனில், அது சந்தேகம். இயேசுவும் கூட மாற்கு 9:23ல்,
"இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்"
நாம் ஜெபிக்கும் போது சந்தேகத்தையும் கூடவே வைத்திருந்தோமானால், நாம் நமது ஜெபத்துக்கான பதிலை மிக மோசமாக கட்டுப்படுத்துகிறோம். யாக்கோபின் புத்தகம், சந்தேகத்தை கூடவே வைத்துக் கொண்டு ஜெபிக்கும்போது ஏற்படுகின்ற விளைவுகளை மேலும் விளக்குகின்றது. யாக்கோபு 1:6,7ல்,
"ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்ககடவன்;  சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக"
மேலும் இயேசு, மத்தேயு 19:26ல்,
"இயேசு அவர்களைப் பார்த்து: மனிஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்"
நமது முதலாவது படி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக பிதாவாகிய கடவுளை அனுக வேண்டும். அப்படி கடவுளை, அவருடைய சிங்காசனத்தை அணுகும்போது, சந்தேகப்படாமல் நாம் அவரது வல்லமையையும் அவரால் எல்லாம் கூடும் என்ற வல்லமையில் விசுவாசத்தை வைக்கவேண்டும். 
2. தவறான காரணங்களுக்காக கேட்பது 

கடவுள் நமது விண்ணப்பத்துக்கு பதில் தராமல் இருக்கும் பெரிய காரணம், நமது ஜெப விண்ணப்பங்களில் இருக்கின்ற குறிப்புகளாகும். நிறைய காரியங்கள் கடவுளாலும் செய்ய முடியாது. அவரால் பாவத்தைப் பார்க்க முடியாது. அவரால் பொய் சொல்ல முடியாது, அவர் சுய நோக்கோடு கேட்க்கும் ஜெபம், உலக ஆசையில் பற்று, பேராசை, சுயத்துக்காக வல்லமையை நாடுதல், பண ஆசை இவற்றிற்கு பதிலளிக்க அவர் மறுப்பார். யாக்கோபு 4:3ல், 
"நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழ்க்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்  கொள்ளாமலிருக்கிறீர்கள்"
சொந்த விருப்பத்தை நிறைவேற்ற ஏறெடுக்கும் ஜெபத்தை தேவன் கவனிப்பதே இல்லை. (கடவுளே என்னை லாட்டரியில் ஜெய்க்க வையும்) பாவம் நிறைந்த ஜெபத்திற்கு கடவுளிடமிருந்து பதில் கிடைக்காது. எனது பணக்கார உறவினர் சீக்கிரம் சாக வேண்டும், எனக்கு அப்பொழுதுதான் அவர்களது சொத்துக்கள் மூலமாக நிறைய பணம் கிடைக்கும். என்னை எப்பொழுதும் துன்பப்படுத்துகிற பக்கத்துக் வீட்டுக்காரர், விபத்திலே சாக வேண்டும். எனக்கு தீங்கு இழைத்தவர்கள், நான் வருத்தப்படுவது போல நினைத்து நினைத்து மெல்ல மெல்ல சாகவேண்டும். இப்படிப்பட்ட ஜெபங்கள் அனைத்தும் கடவுளுடைய கண்களிலும், இருதயத்திலும் தவரானவைகள். இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு பதிலை எதிர்பாராதேயுங்கள். மத்தேயு 6:33ல், 
"முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்"
நாம் கடவுளையும் அவருடைய நீதியையும் தேடும்பொழுது, நமது சொந்த விருப்பத்தை ஒருமுகப்படுத்தி கேட்காதபடி, சுறுசுறுப்புடன் கூடிய விடாமுயற்ச்சியோடு மன உறுதியுடன் கேட்க நம்மை வழிநடத்தும். நாம் நமது சுய நீதியை பிடித்துக் கொண்டிருந்தோமானால் கடவுள் நம் வாழ்க்கையில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் நாம் மட்டுப்படுத்துகிறோம். 


3. உனது வாழ்க்கையில் பாவத்தை விட்டுவிடாதிருப்பது

கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள மிகப்பெரும் தடை நமது வாழ்க்கையில் காணப்படும் பாவமேயாகும். இயேசுகிறிஸ்துவை தமது வாழ்க்கையில் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படாமல் இருப்பதால், கடவுள் அவர்கள் கூப்பிடும்போது கவனிப்பதில்லை. (இரட்சிப்புக்காக இயேசுவைத் தேடும் பொழுதை தவிர) ஆனால் கிறிஸ்தவர்களின் ஜெபத்துக்கு பதில் வராத காரணம் அவர்கள் அறிக்கையிடாத பாவந்தான். நாம் ஏற்க்கனவே பார்த்த படி கடவுள் பாவத்தைப் பார்க்காத சுத்த கண்களையுடையவர். வேதாகமம் நமக்கு சொல்லுகிறது, 1யோவான் 1:9ல், 
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், நமது பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதுயும் உள்ளவராயிருக்கிறார்"
யோவான் 9:31ல்,
"பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லை என்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்கு சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்"
ஒரு கிறிஸ்தவருக்கு பாவத்தை அறிக்கையிடுவது என்பது வாழ்க்கையில் ஒரு முறை செய்யும் ஜெபம் அல்ல, பரிசுத்த ஆவியானவர் நமது குற்றங்களை உணர்த்தும் போதெல்லாம், நாம் பாவத்தை அறிக்கை செய்து, பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். (மேலும் வேதவசனத்தை வாசிக்கும் போதும் ஆவியானவர் நமது பாவத்தை உணர்த்துவார், அப்படி அவர் உணர்த்தும் போது நாம் அறிக்கை செய்தால் நம் உள்ளம் மகிழ்ச்சியினால் நிரம்பும்) ஏன் ஆண்டவர் கூட பாழாக்குகின்ற பாவ தன்மை நமது ஜெபத்தின் பதிலைக் கேடுக்கிறது என ஏசாயா 59:1,2ல், 
"இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாக்கவுமிலை.
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது"
இதற்கு மேலே விளக்கம் தேவையில்லை. நீ உன் வாழ்க்கையிலே இருக்கின்ற பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட்டு சரி செய்யவேண்டும். நீ ஒரு கிறிஸ்தவனாய் இருப்பதனால் உனக்குள்ளே பாவமில்லை என நினைக்கவேண்டாம். கிறிஸ்து திரும்பவும் வருமளவும் அல்லது சாகும் வரையிலும் இயேசுவிடம் ஒப்புக் கொடுக்கவேண்டும்.

1யோவான் 1:8ல்,
"நமக்கு பாவமில்லையேண்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது"
நாம் ஒரு கிறிஸ்தவராக பாவத்தில் இல்லாமலிருக்கலாம், அல்லது பாவத்தை தேடாமல் இருக்கலாம், ஆனால் பாவம் ஏதோ ஒருவழியில் உள்ளே வந்துவிடுகின்றது. தற்போதைய மனோதத்துவம் பாவத்தைக் குறித்து கூறும் போது, நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் ஆகவேதான் தவறுகிறோம்.... ஆனால் அடிப்படையில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது, என்னை நானே குற்றஞ் சுமத்த மாட்டேன். மனோதத்துவம் என்ன சொன்னாலும் நமது கடவுள் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கும் போது, ஏசாயா 64:6ன் படி,
"நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப் போல் உதிருகிறோம்; எண்கள் அக்கிரமங்கள் காற்றைப் போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது"
பாவத்தின் சம்பளம் (நாம் நமது பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கை செய்யாமல்...... கிறிஸ்துவினால் மன்னிக்கப் படாமல் போனால், நாம் விலை கொடுக்க வேண்டியது வரும்) மரணம்! நாமனைவரும் அறிக்கையிடாத, மன்னிக்கப்படாத பாவங்களுக்கு விளைக்கிரையம் செலுத்தவேண்டியது வரும்...... அது பதில் பெறாத ஜெபமாய் இருக்கலாம், அல்லது நித்திய நரகமாய் இருக்கலாம்.
4.பிறருடைய தேவைகளைப் புறக்கணித்தல் 

தங்களுடைய ஜெபங்களைத் தடை செய்கிற விஷயமாக அநேக கிறிஸ்தவர்கள் இதை நினைப்பதே இல்லை. ஆனால் வேதம் நாம் தன்னலமாக இருந்தோமானால் விலைக்கிரையம் கொடுக்கவேண்டியது வரும் என எச்சரிக்கிறது. பழைய ஏற்பாட்டில் சாலமன் மன்னன் எழுதிய நீதிமொழிகள் புத்தகம் 21:13ல்
"ஏழையின் கூக்குரலுக்குத் தன செவியை அடைத்துக் கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்"
நமது ஜெபத்தைத் தேவன் கேட்டு மதிப்பளிக்க எதிர் பார்த்தோமானால், நாமும் பிறருடைய தேவைக்கு அன்புடனும், இரக்கத்துடனும் காது கொடுத்துக் கேட்டு, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். வேதாகமம் நமக்கு முடியும் போதெல்லாம் ஜெபத்தினாலும், நேரத்தினாலும், பணத்தினாலும் ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும் என பல வசனங்கள் மூலமாக போதிக்கின்றது. 

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்திருக்கிறார். ரோமர் 5:8ல், 
"நாம் பாவிகளாய் இருக்கையிலே கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே...." 
இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய நாம் முடிவெடுக்கும் முன்னரே, நம் ஒவ்வொருவருக்காகவும் தமது ஜீவனைக் கொடுக்க இயேசு தாமதிக்கவில்லை. அவர் உண்மையான அன்பினால் தம்மைத்தாமே பலியாக்கினார். தமது வாழ்க்கை முழுவதுமே நமக்காக, அவரை விசுவாசிக்க மறுக்கின்றவர்களுக்காகவும் சேர்த்தே அர்ப்பணித்தார். அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியர்2:4ல்,
"அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக"
என எழுதிவைத்தார்.இன்னொரு வார்த்தையில் சொன்னோமானால், சுயநலத்துடன் இருக்காதே, எப்பொழுதும்  எனக்கு எனக்கு எனக்கு என்பதை விட்டுவிடு. கர்த்தரும் நாம் பிறரிடம் இரக்கமாய் இருக்கவேண்டும் என வர்ப்புருத்துகிறார். யாக்கோபு 2:13ல், 
"......இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத் தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்"
நம்முடைய ஜெபத்துக்குப் பதில் வேண்டுமானால், நாம் தேவையில் இருப்போருடைய  கூப்பிடுதலுக்கு செவி சாய்க்க வேண்டும்.
5.பிறரை மன்னிக்கத் தவறுதல் 

மன்னிப்பு என்பது நமது ஜெபத்துக்கு பரலோகத்தின் கதவுகளை திறக்கும் அல்லது மூடி சீல் வைக்கும் ஒரு செயலாகும். இரட்சிப்பின் முழு திட்டமும் நமக்கு இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக கிடைப்பதாகும். அது நாம் என்ன பாவம் செய்தோம் என்பதைக் குறித்து அல்ல; நாம் கிறிஸ்துவிடம் எவ்வளவு உண்மையாக பாவங்களை அறிக்கை செய்தோம் என்பதைக் குறித்தே ஆகும். அவர் உடனே நமக்கு பாவங்களை மன்னிக்கின்றார். எனவே பிறரை மன்னிக்காமல் இருப்பதற்கு நாம் யார்? ரோமர் 3:23ல்,
"எல்லோரும் பாவஞ் செய்து, தேவ மகிமையற்றவர்களாகி"
என வேதாகமம் கூறுகின்றது. ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில் குறைவுள்ளவர்களாய் இருக்கிறோம். எனவே நமக்கு ஜெபமும் பிறருடைய உதவியும் தேவையாய் இருக்கிறது. மாற்கு எழுதிய சுவிசேஷம் 11:26ல், 
"நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்"
என மிகவும் உறுதியாக கூறியிருக்கிறார். நமது வாழ்க்கையில் பாவம் இருக்குமானால், நமது ஜெபத்துக்கு பதில் வராமல் போகும், மட்டுமல்ல நமது நித்திய வாழ்க்கையை நரகத்தில் கழிக்க வேண்டியதும்  வரும். இது மிகவும் கடினமானதாக இருக்கலாம், ஆனால் நாம் ஒன்றை மனதில் கொள்ளவேண்டும், நாம் அறிக்கையிட்ட பாவங்களை அனைத்தையும் மன்னிக்கதக்க தமது குமாரனாகிய இயேசுவை சிலுவையில் அடிக்க ஒப்புக்கொடுத்தார். இந்த மன்னிப்பு நமக்கு இலவசமாக அருளப்படுகின்றது. நாம் இதை சம்பாதிக்க வேண்டியதோ அல்லது வேறு தகுதியோ தேவையில்லை. யோவான் 3:16,18ல்,
"தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கேட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேரான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ள வனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று"
மிகப் பெரிய ஜெப உதாரணம் வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவால் அருளப்பட்டதை மத்தேயு 6ம் அதிகாரத்தில் காணலாம். அவர் தமது சீடர்களுக்கு (பின்பற்றியவர்களுக்கு) கொடுத்தது. இது 9ம் வசனத்தில் ஆரம்பிக்கின்றது.
"பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே .....
என ஆரம்பித்து, 12ம் வசனத்தில் எங்கள் கடனாளிகளுக்கு (எங்களுக்கு விரோதமாய் குற்றஞ் செய்தவர்களுக்கு) நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை (பாவங்களை) எங்களுக்கு மன்னியும். மன்னிப்பது என்பது ஆலோசனை அல்ல. அல்லது மற்றவர்களுக்கு இரக்கங் காட்டுவதும் அல்ல. இது பரலோகத்திற்குள் செல்ல வாஞ்சை உள்ளவர்களால், தமது ஜெபத்துக்கு பதிலைப்பெற்றுக் கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு வற்புறுத்தப்படுகின்றது. ஒருவேளை உனக்கு விரோதமாக மனிதர்கள் எழும்பலாம். மிக மோசமான மனவலியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என இயேசு கூறுவதைக் கேட்போம். லூக்கா 6:28ல், 
"உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்"
நாம் ஒன்றை மனதில் கொள்ளவேண்டும் கடவுள் எல்லாவற்றையும் பார்க்கின்றார்; அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள், ஆளுகைக்குள் இருக்கின்றது. அவரே (இயேசுவின் மூலமாக) நீடித்திருக்கின்ற நீதிபதி!

மன்னிப்பின் கடைசிப் பதிவாக, தயவு செய்து இயேசு சொன்னதை நினைவிற் கொள்ளுங்கள். இயேசு கல்வாரி சிலுவையில் மரிப்பதற்கு முன்பாக அடிக்கப்பட்டார்; காறி துப்பப்பட்டார்; முள்ளால் செய்யப்பட்ட கிரீடம் அவரது மண்டையோட்டில் நன்கு பதியும்படி அழுத்தி அணிவிக்கப்பட்டார்; சிலுவையில் கைகளிளும் கால்களிலும் ஆணிகளால் கடாவப்பட்டார். வலியினால் மிகவும் பாதிக்கப்பட்டார்; கடுமையான மன வேதனைகளினால் நிறைந்திருந்தார். யாராவது எந்த நேரத்திலாவது, எந்த சூழ்நிலையிலாவது மன்னிக்காமல் இருக்க காரணத்தை வைத்திருந்தீர்களானால், இயேசுவும் உங்களைப்போலவே அநியாயமாகவே குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால் தன்னைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து, துன்பப்படுத்தி தன்னை சாகடித்தவர்கள் மீது அவரது எதிர் செயல் அல்லது அடிப்படை செயல் எப்படி இருந்தது? 
"....பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்....." (லூக்கா 23:34)
"நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயுருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்" (மாற்கு 11:25)
யாரையும் மன்னிக்க மறுப்பதற்கு நாம் யார்?
6. ஆண்டவருடைய சித்தத்தின்படி அல்லாததைக் கேட்பது 
கிறிஸ்தவ வாழ்க்கையில்ன் நம்மில் ஒவொரு வரும் பல்வேறு காரணங்களுக்காக ஜெபிக்கும் போது ஆண்டவருக்கு சித்தமில்லாததைக் கேட்கின்றோம். நமது மாம்சமான சரீரத்தில் பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகிறோம். அல்லது நமது ஜெபத்துக்கு ஆவிக்குரிய பதிலைவிட மாம்சீகமான பதிலைத் தேடுகின்றோம். கடவுளிடமிருந்து நாம் விரும்புகின்ற பதில்உண்மையாகவே  அவருடைய பூரண சித்தத்திற்கு மாறாகவே இருக்கிறது. உதாரணமாக ஒருவர் வேலைக்காக ஜெபிக்கின்றார் என வைத்துக்கொள்ளுவோம். அதை அவர் பெற்றுக்கொள்ள வில்லையெனில் கடவுளிடம் கோப படுகிறார். சற்று யோசித்துப் பார்ப்போமானால் கடவுளுடைய ஐக்கியத்திலிருந்து விலகிச் செல்ல வைப்பதாகவே அது இருக்கும். அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு நபரை திருமணம் செய்து கொள்ளலாமா? என அறிந்து கொள்ள ஜெபிக்கின்றார் என வைத்துக் கொள்ளுவோம். எல்லாம் அறிந்த கடவுள் அதைக் கேட்காமலே போகலாம். பிற்காலத்தில் அது பிரச்னையை உண்டாக்கும் என ஜெபிப்பவருக்குத் தெரியாது. ஆனால் ஆண்டவர் நமக்கு மிகச் சரியானதைக் கொடுக்க அறிந்திருக்கிறார் என அறியாமல் நாம் விரும்பியவற்றை, கொடுக்காவிட்டால் நாம் ஆண்டவரைக் கோபித்துக் கொள்ளுகிறோம். 

அநேக விசுவாசிகள் மாற்கு 11:24தை மேற்கோள் காட்ட விரும்புகின்றனர். 
"ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்"
இந்த வசனத்தின்படி சூரியனுக்குக்  கீழே நீங்கள் எதையும் எல்லாவற்றையும் கேட்கலாம்..... நியாயாதிபதியாகிய கர்த்தரின் சித்தத்துக்கு உட்பட்டு எதை வேண்டுமானாலும் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். இது 1யோவான் 5:14,15ல், விவரிக்கப்பட்டுள்ளது.
"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்" 
நமது வாழ்க்கையில் தேவ சித்தத்தை அறிய எப்போது ஜெப சிந்தையோடு இருக்கவேண்டும்.எல்லாநேரங்களிலும்வேதவசனத்தின் அடிப்படையில் நாம் ஜெபிப்பது, தேவ சித்தம் என்பதை அறிந்திருக்கின்றோம். வேதவசனம் எப்பொழுதுமே உண்மை(சத்தியம்) நாம் மற்ற நேரங்களில் அவருடைய சித்தத்தை தேடும் பொழுது சரியாகும். (சுயநலம் மற்றும் மாம்சீக விருப்பங்கள் அல்ல) ஒருமுறை அவருடைய சித்தத்தை, விருப்பத்தை நாம் அறியும்போது, நாம் உறுதியான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தோடு விண்ணப்பிக்கலாம்.

நம் இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவும் கூட பிதாவினுடைய சித்தத்தையே நாடினார். மூன்றரை வருட ஊழிய முடிவிலே கெத்சமனே தோட்டத்தில் ஜெபித்தார். அவர் சிலுவையில் அடிக்கப்படுவதர்க்கு முன் சில மணிநேரத்துக்கு முன் நெருக்கப்பட்டு, பொறுக்க முடியாத உடல் வலியினாலும், மன நோவினாலும் பாதிக்கப்பட்ட பொழுது வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது. (மேற்கண்டபடி ஒருவர் பாடுபடும்போது இரத்த வியர்வை வர வாய்ப்பிருக்கிறது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது) அப்பொழுது அவர் ஏறெடுத்த ஜெபத்தை லூக்கா 22:42ல் பார்க்கலாம்,
"பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபன் பண்ணினார்"
இயேசு தேவகுமாரனாக, அவர் செய்த தியாகத்தின் மூலமாகவே பாவ மன்னிப்புக் கிடைக்கும் என்று உணரச்செய்தார். அவர் மனிதனாக வாழ்ந்தபோது பாடுபட்டார், சோதிக்கப்பட்டார், இந்த மாம்சத்திலே வாழ்க்கையின் கடினங்களை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் பாவம் செய்யவில்லை. இதுதான் அவரை சர்வலோகத்தின் பாவ நிவாரண பலியாக அனுமதித்தது. அவர் இந்த மாம்ச சரீரத்திலே வாழ்ந்ததால் சிலுவைப்பாடுகளைக் குறித்த துன்பங்களை நன்கு அறிந்திருந்தார்; எனவே மனுக்குலத்தை மீட்க வேறு வழியை கண்டுபிடிக்க கடவுளிடம் வேண்டினார். ஆனால் பூரண தேவசித்தத்தின் உண்மையை உணர்ந்தார்; எனவே நேராக கல்வாரியை நோக்கி முன்னேறிச் சென்று நமது பாவத்துக்காக மரித்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அவர் பிதாவின் பூரண சித்தத்தைக் கற்றுக்கொண்டார்!
7.உனது வாழ்க்கையில் உள்ள பெருமை 
எப்படி வெளிச்சம் இருளுக்கு எதிரானதோ அதைப்போல பணிவு (மனத்தாழ்மை) என்பது பெருமைக்கு எதிரானது. உண்மையாகவே கடவுளுக்கு சேவை செய்கின்றவர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். பெருமை என்பது இருக்கவே கூடாது. நமது தேவசித்தத்தை அறிந்து கொள்ள முடியாதபடி பெருமை தடுக்கும். மேலும் நமது ஜெபத்துக்கும்  ஆண்டவருக்கும், இடையில் பிளவை உண்டாக்கும். ஏசாயா 57:11ல், 
"நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னததிதிலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பண்ந்தவர்களின் ஆவிய உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்"
இப்படி பணிந்த ஆவியுள்ளவர்களை ஆண்டவர் பெரிதாக மதிக்கிறார். மேலும் பெருமையை வெறுக்கிறார். நீதிமொழிகள் 8:13ல்,
"தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்"
தீயபண்பு ஒருவர், உள்ளத்தில் சுய நீதியை வளர்த்து, கடவுளுடைய நீதி செயல்பட விடாமல் தடுக்கின்றது. இது நமது சொந்த வழியில் செயல்பட விருப்பமுடையவர்களாக நம்மை மாற்றுகிறது. நீதிமழிகள் 16:5ல்
"மன மேட்டிமையுள்ளவனேவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்"
பெருமையை நாம்ஓரத்தில் தள்ளிவிட்டு, ஆண்டவரைத் தேடும் வரைக்கும் நாம் இன்று, நாளை, என்றும்ஒரு  ஜெபத்தையாவது  ஏறெடுக்க வேண்டாம். 

வேதாகமத்தை வாசித்து புரிந்து கொள்ளுபவர்களுக்கு, ஏசாயா பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட சாத்தானைக் குறித்து விவாதிக்கின்றது, எசேக்கியேல் 28:15ல்,
"நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவங்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டதுமட்டும் உன் வழிகளில் குறைவற்றிருந்தாய்" 
கடவுளுக்கும் மேலாக, என் சிங்காசனத்தை உயர்த்துவேன்  என அவன் உள்ளத்தில் மேட்டிமை வந்தபோது அந்த பெருமையே அவனை பரலோகத்திலிருந்து கீழே தள்ளி விழ வைத்தது. இப்பொழுதோ அவன் ஆண்டவருடைய கட்டளையை எதிர்க்க மனித இனத்தை வஞ்சித்து, கடவுளுக்கு விரோதமாக கலகமூட்டி, பெருமையிலேயே வைத்துவிட்டான். பெருமையே ஆதாமையும் ஏவாளையும் ஏதேனிலிருந்து துரத்தியது. மேலும் சொல்லப்போனால், வேதாகமத்தில் உள்ள அநேக வல்லமையான விழுதலுக்கு, பெருமையே காரணமாக அமைந்தது. எச்சரிக்கை: பொதுவாக பெருமை, நம்மை பிறரோடு ஒப்பிடும்போது ஆட்கொள்ளும். 

எப்படி புற்றுநோய் மனிதனுடைய சரீரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறதோ அதைப்போல் பெருமை நமது ஆவிக்குரிய வளர்ச்சியை, இயேசுவோடு கூட உள்ள உறவை அழித்துவிடுகின்றது. பெருமையை நம்மை விட்டு அகற்றவில்லையானால் நரகத்தில் நம்மைக் கொண்டுபோய் சேர்த்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. இன்னும் பெருமையின் விளைவுகளைப்பற்றி சந்தேகமிருந்தால், யாக்கோபு 4:6ஐ வாசிப்போம். 
"அவர் அதிகமாய் கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது"
இன்னும் உறுதிப்படவில்லையானால், நீதிமொழிகள் 16:18ல், 
"அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை"
பெருமை உன்னை அழித்துவிடும்; உன் வாழ்வில் பெருமை இருக்குமானால் உன் ஜெபம் உன் கூரையைக் கூட எட்டாது. பெருமை எப்பொழுதுமே சாத்தானோடு கூட உள்ள தன்மை, கடவுளோடு கூட உள்ளதல்ல! 
8. ஜெபிக்கும் போது சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லுவது (உளறுவது)

அநேக மக்கள் இதை ஜெபத்துக்குரிய தடையாகவே நினைப்பதில்லை. ஒரே ஜெபத்தையே திரும்பத் திரும்ப சொல்லி ஜெபித்துக் கொண்டிருப்பது. (பொருளை உணராமல்) ஜெபம் என்பது சில குறிப்பிட்ட பகுதிகளை மனப்பாடம் செய்து சொல்லுவதல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆண்டவரிடம் பேசுவதுதான் ஜெபம்! 

இயேசுவின் ஊழியத்தில், மத தலைவர்கள் ஏறெடுத்த வெளியரங்கமான நீண்ட..... ஜெபன்களைக் குறித்து விவாதித்தார். அவர்கள் தங்களுக்கு கீழே உள்ளவர்களுக்கு முன் நீண்ட ஜெபம் பண்ணி, தங்களைத் தாங்களே அவர்களுக்கு முன் புனிதராக காட்டிக் கொண்டார்கள். அதனாலேயே இயேசு கிறிஸ்து, மத்தேயு 23:14ல், 
"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி...." 
எனக் கூறினார். இயேசுவை கவருவதற்கு நீங்கள் முயலவேண்டாம்; சிலர் முட்டாளாகி விடுகின்றனர்; அல்லது சுற்றிலும் உள்ளவர்களைக் கவருகின்றனர். ஆனால் ஜெபம் தேவனுடைய இருதயத்தைத் தொட முடியவில்லை. 

நாம் ஒரே ஜெபத்தை பொருளை உணர்ந்து சொல்லாமல் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால், நாம் ஆண்டவரைத் தேடாமல் காற்றிலே பேசிக்கொண்டிருப்போம். நாம் சில பரிசுத்தமான வார்த்தைகளைப் பேசுவதால் ஆண்டவரிடத்தில் இரக்கத்தைப் பெற முடியுமா? என்பதை யோசியுங்கள். இயேசு கிறிஸ்துவே இந்த தலைப்பில் தம்மைப் பின்பற்றியவர்களிடம் பேசினார். மத்தேயு 6:7ல்,
"அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்"
உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசுகின்ற 5 வார்த்தைகளைப் பார்க்கிலும் ஒரு துண்டு தாளில் இருந்து வாசிக்கின்ற 10,000 வார்த்தைகள் நமது அன்பான இரக்கமுள்ள தேவனது கவனத்தை ஈர்க்காது. அன்பு உள்ளத்திலிருந்துதான் தொடர்ந்து செயலாறுமே ஒழிய உதட்டிலிருந்து அல்ல. நாம் தேவனுடைய அரியாசனத்தை அணுகும் பொழுது, உண்மையாகவே நாம் பதிலை எதிர்பார்த்தோமானால், நாம் நமது உள்ளத்திலிருந்து ஜெபிக்கவேண்டும்.

இந்த 8 தலைப்புக்கள் மட்டுமின்றி, ஜெபத்தடைகளைக் குறித்து இன்னும் அநேக வேத பகுதிகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த பகுதிகளில் வெளியானவைகளை கவனித்து தவிர்க்கவேண்டியத்தை தவிர்த்தால், மிகவும் அற்புதமான மாற்றங்களோடு கூட ஜெபத்திற்கான பதிலையும் பெற்றுக்கொள்ளுவோம்; அதே நேரத்தில் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை அனுபவிப்போம். 

ஜெபத்தை குறித்ததான சில அருமையான வேத பகுதிகளைப் பார்ப்போம்: 
1தேசலோனிகேயர் 5:17, 
"இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்"
உன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே ஆண்டவரைத் தேடாமல், ஆண்டவருடைய சித்தத்தை அறிந்து கொள்ள ஜெபி; ஆண்டவரில் பெலப்பட ஜெபி; சபைக்காக ஜெபி.
2. யாக்கோபு 5:16
"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது"
நாம், சோர்வு, கவலை, பலவீனத்தோடு இருக்கின்றவர்கள், பிரச்சனைகள், சோதனைக்குள்ளாக இருக்கின்றவர்களுக்காக ஜெபிக்கவேண்டும். மேற்கண்டவைகள் நமது வாழ்க்கையில் சம்பவிக்கும் போதும் பிறரிடம் ஜெபிக்க சொல்லவேண்டும். ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் ஆதரவாயும், உதவியாயும் இருக்க வேண்டும். 

3. பிலிப்பியர் 4:6,
"நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்"
கடவுள் நம் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதையும் நம் இதயத்து நினைவுகளையும் நன்கு அறிந்திருக்கின்றார். ஆனால் நாம் அவரோடு பேசவேண்டும் என விரும்புகிறார். இந்த வசனத்திலிருந்து, அவர் நமக்கு செவி கொடுப்பதற்காகவும், பதிலளிப்பதற்க்காகவும் நாம் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.
4. நீதிமொழிகள் 15:29,
"....நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்"
தேவனுடைய நீதியைத் தேடும் பொழுது நாம் பரிசைப் பெற்றுக்கொள்ளுவோம்! அது ஜெபத்திற்கான பதில்!!
5. 1பேதுரு 3:12,
"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது;...."
நாம் ஒவ்வொருநாளும் ஆண்டவரை ஆராதிக்க வேண்டும்; ஞாயிறு காலையில் மட்டுமல்ல; (சிலர் கிறிஸ்துமஸ், புதுவருடம் மட்டுமே சபைக்கு போவார்கள்) ஆண்டவருடைய நீதியை தேடுவது நமது அன்றாட வேலையாய் இருக்கவேண்டும். அது வருடத்தில் ஒருநாள் மட்டும் நடப்பதல்ல.
6. யாக்கோபு 6:16,
".....நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது"
இந்த வசனத்தை நாம் பிரித்துப் பார்த்தோமானால், உறுதியான கிறிஸ்தவ வாழ்க்கை வாழும் ஒருவர், தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல் ஜெபிக்கும் வல்லமையான ஜெபம், மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும்.
7. லூக்கா 21: 36,
".....எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்"
நாம் நம்முடைய தேவனை ஆராதிக்கவிடாதபடி தடைசெய்யும் சாத்தானைக் குறித்து விழிப்புள்ளவர்களாய் இருக்கவேண்டும். நாம் ஆண்டவரோடு உறுதியான தொடர்பு கொண்டு பரலோகத்தின் கதவுகளை நமது ஜெபத்துக்கு எப்போதும் திறந்திருக்கும்படி செய்யவேண்டும். 

ஒரு கிறிஸ்தவராக நாம் அனுதினம்மும் ஜெப வாழ்க்கையைக் கடைபிடிக்க வேண்டும். அதில் துதித்தல், நமது வாழ்க்கையை நடத்திச் செல்லும் திசையை அறிதல், அவருடைய சித்தத்தின்படி பிறரை உயர்த்துவதற்கான ஜெபம், இவைகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். யோவான் 10:10ன் படி,
"திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்......"
இயேசு கிறிஸ்து மூலமாக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வல்லமையையும், அதிகாரத்தையும் தேடாமல் போனால், நமக்கு நாமே எதிராளிகளாகிவிடுவோம். ஜெபம் என்பது நேரடியாக பரலோக தேவனின் அறியாசனத்தோடு தொடர்புடையது. தேவனுடைய விருப்பமெல்லாம் தன்னைத் தேடுகின்ற அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்பதுதான். ஆனால் நாம் அவரை அலட்சியப் படுத்தினாலும், எப்போதாவது ஜெபித்தாலும் நாம் தவறான இடத்திலிருந்து கொண்டு தவறான ஜெபத்திற்காக தேவனைக் குற்றஞ்சாட்டிக் கொண்டுதானிருப்போம். ஆண்டவர் தமது பிள்ளைகளை ஆசீர்வதிக்க விரும்புகிறார். 
ஜெபம்!

அன்புள்ள பரலோகப் பிதாவே! நீர் எனது ஜெப வாழ்க்கையை உறுதிப்படுத்தும்படியாய் கேட்கின்றேன். எனது வாழ்க்கையில் உமக்கு பிடிக்காத பகுதிகளை எனக்கு சுட்டிக் காட்டுமாறு உமது பரிசுத்த ஆவியானவரது ஒத்துழைப்பை நாடுகின்றேன். எனது ஜெபத்துக்கான பதில் என்ற ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள, தேவையான மாற்றங்களை எனக்குள் ஏற்படுத்த, ஆவிக்குரிய விழிப்புணர்வை எனக்குத் தாரும். நான் ஜெபிக்கும்போது அதை விசுவாசிக்க ஆவிக்குரிய பெலத்தை எனக்குத் தாரும். எனது ஜெபங்களிலே எப்பொழுதும் உம்மை மகிமைப்படுத்தி துதிக்க ஞாபகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபங்களும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.

No comments:

Post a Comment