கர்த்தரிடத்திலிருந்து உங்கள் உதவி
கிறிஸ்துவில் அன்பு நண்பர்கள் யாவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்!
"நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தருடைய நாமத்தில் உள்ளது" (சங்கீதம் 124:8)
இங்கே சகாயம் என்பது உதவி. உங்களுக்கு வருகின்ற உதவி கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. நீங்கள் அநேக காரியங்களைக் குறித்து ஜெபிக்கின்றீர்கள்! பதில் வரும்போது ஆண்டவருக்கு மகிமையை செலுத்தவேண்டும்!
ஒரு பக்தன் இவ்வாறு பாடுகின்றார்,
யெகோவா தேவனுக்கு 1000 நாமங்கள்
என்ன சொல்லி நான் பாடுவேன்......
இங்கே ஒரு சில நாமங்களைக் குறித்து தியானிக்கலாம்! வேதாகம கால பக்தர்கள் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் ஆசீர்வாதமாக மாறும்போது அவர்கள் ஆண்டவருக்கு பிரச்சனைகளின் அடிப்படையில் பெயர் வைத்தார்கள்! ஆனால் நாம் இங்கு ஆண்டவரே தன் பெயரை வெளியிட்ட இடங்களைத் தேடிப்பிடித்து தியானிக்கிறோம்!
ஆதியாகமம் 17:1ல்,
"...... நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாய் இரு"
கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவன்: அன்று ஆண்டவருடைய வாக்கை சந்தேகப்பட்டபொழுது, தேவ தூதன் கூறியது, 'தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை' வாக்கு வந்தபொழுது சாராளும் சந்தேகப்பட்டாள், அப்பொழுது கர்த்தரே 'கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?' எனக் கேட்கின்றார். உங்கள் வாழ்க்கையிலே ஆண்டவரால் நிறைவேற்ற முடியாத வாக்குத்தத்தம் என ஒன்றுமே இருக்காது. வாயின் வார்த்தையினால் வானத்தையும் பூமியையும் படைத்தவர், அவருடைய வாக்குத்தத்தங்கள் வேதாகமத்திலே இருக்கின்றது, பயன்படுத்துங்கள்!
"மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்" யாத்திராகமம் 3:15
இதின் பொருள் என்னவென்றால், இஸ்ரவேல் ஜனங்கள், ஆண்டவரை தங்கள் பாவத்தினால் கோபமூட்டினாலும், அவர்கள் மனந்திரும்பும் போது, இவர்களின் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைத்து, தண்டனையிலிருந்து விடுவித்து, ஆசீர்வதிப்பார் என்பதுதான். நீங்கள் சுவிஷேசத்தை அறிவிக்கும் போது, மேலே உள்ளவர்களின் தேவன் என நீங்கள் கூறினால், கேட்பவர்கள், நாங்கள் நினைத்தது சரிதான்...... இயேசு வெளிநாட்டுக் கடவுள் எனக் கூறுவார்கள். நீங்கள் ஆண்டவரை இருக்கிறவராகவே இருக்கின்றார், என்றும் மாறாதவர், மனுக்குலத்தின் மீது அன்பு செலுத்தினபடியால், இயேசுவாக, பாவத்தை மன்னிக்கிறவராக இந்த உலகத்துக்கு வந்தார். அவர்தான் வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவர் நாமம் இம்மானுவேல் - என்றும் நம்மோடிருக்கிறவர். என்றுதான் அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால், உங்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வல்லமையுள்ளவர் என்பதுதான்.
"மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும், யாக்கோபுக்கு தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினாலே நான் அவர்களுக்கு அறியப்படவில்லை" (யாத்திராகமம் 6:2,3)
முதலாவது வசனத்தைத் தியானித்தீர்களானால், உங்கள் வாழ்க்கையிலே இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்களில் அற்புதத்தைச் செய்வார். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாவத்திலிருந்து / மாம்சத்திலிருந்து (எகிப்து), விடுதலை செய்வார். உங்களை விட்டு பிரிந்து செல்லு(ம்)வார்கள். உங்களை சரியாக வழிநடத்தாமல், தவறான வழியில் நடத்தியவர்கள், என்னை விட்டால் போதும் எனக்கூறி ஓடுவார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்தே ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுவீர்கள்! ஏனெனில் அவர் யேகோவா என்னும் நாமத்தில் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவார். பாவத்தின் கட்டிலிருந்து வெளிவருவதே மிகப் பெரிய ஆசீர்வாதமாகும். உள்ளம் சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினால் நிரம்பி வழியும். இவைகளை பெற்றுக் கொண்டு ஆண்டவருக்கு சாட்சியாக வாழுங்கள்! ஆத்துமாக்களை ஆதாயம் செய்யுங்கள்!
முடிவாக, ஆதி.12:8,
"..... கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்" வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தருடைய நாமத்தை ஆபிரகாம் தொழுது கொண்டதை போல, நீங்களும் அவனுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்!
"...நான் யேகோவா"
(யாத். 6:3)
நண்பர்கள் யாவரையும் மீண்டும் அன்புடன் வாழ்த்துகின்றேன்! உங்கள் நண்பர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படிக்கு, உங்கள் முகநூல் பக்கத்திலே பகிர்ந்து கொள்ளுங்கள்!
நன்றி!