உண்மையான மகிழ்ச்சி!
12ம் நூற்றாண்டில் இத்தாலியில் உள்ள அசிசி என்ற நகரத்தில் பிரான்சிஸ்கோ என்ற ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். இவனது தகப்பனார், அந்தப் பட்டணத்தில் மிகப் பெரிய செல்வச் செழிப்பு மிக்க தொழிலதிபராக இருந்தார்.
எனவே இளைஞன் பிரான்சிஸ்க்கோவிடம் நிறைய பணம் இருந்தது. நிறைய நண்பர்கள், இவன் சொல்லுக்குக் கீழ்ப்படிய நிறையபேர் இருந்தனர். வாழ்க்கை சுகபோகமாக சென்று கொண்டிருந்தது. தன் நண்பர்களோடு குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தான். இன்றும் கூட உங்களில் அநேகர் பணமிருந்தால் உண்மையான மகிழ்ச்சியோடு இருக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கின்ரீர்களல்லவா? அதற்காக அநேகர் குறுக்கு வழியில் பணத்தைப் பெற முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்! உதாரணத்துக்கு இன்றைய அரசியல்வாதிகள், அதிகாரிகள். ஆனால் பிரான்சிஸ்கோவிடம், ஒன்றே ஒன்று இல்லாமலிருந்தது. அதுதான் உண்மையான மகிழ்ச்சி! தினமும் நண்பர்கள் அவனைப் பிரிந்து சென்றவுடன் ஒரு இனம் புரியாத சோர்வு அவனைப் பிடித்துக்கொள்ளும். இதிலிருந்து விடுபட அவனால் முடியவில்லை. (குடித்து வெறித்தாலும் மகிழ்ச்சி இல்லை) பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒன்று அவன் வீரனாக பயிற்சி எடுக்கத் தொடங்கியதுதான். குதிரையேற்றம், வில்வித்தை, வாள்வித்தை, என அனைத்திலும் பயிற்சி எடுத்தான். அந்த ஊரிலேயே ஒரு பெரிய வீரனாகிவிட்டான்.
அவனது 21ம் வயதில், அருகில் இருந்த பெருஜியா என்ற பட்டணத்துக்கு அசிசி பட்டணத்துக்கு இடையில் சண்டை மூண்டது. போர்க்களத்தில் எடுத்த ஒரு மோசமான முடிவினால், பிரான்சிஸ்கோவும் அவனது வீரர்களும் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கே அவனுக்கு காய்ச்சல் வந்து, ஏறக்குறைய சாகும் நிலைக்கு சென்றுவிட்டான். எதிரிகள் அவனை விடுதலை செய்தனர். அவன் அசிசிக்குத் திரும்பிய போது, அவன் மாவீரன் பட்டத்தை இழந்து, வியாதியுடன், தோல்வியைத் தழுவினவனாக, உருவமே உருக்குலைந்து வந்து சேர்ந்தான்.
இந்த அனுபவங்கள் பிரான்சிஸ்கோவை, தன் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யத்தூண்டியது. நாட்கணக்காக வேதாகமத்தோடு ஜெபத்தில் உட்கார்ந்தான். குறிப்பாக மலைப்பிரதேச பிரசங்கத்தை உன்னிப்பாக கவனித்து படிக்க ஆரம்பித்தான். (மத்தேயு 5-7 அதிகாரங்கள்) மேன்மையான மகிழ்ச்சி இந்த இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தான். உங்கள் பொக்கிஷங்களை இந்த பூமியில் அல்ல, பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், நாலையைக் குறித்து கவலைப்படாதிருங்கள், கர்த்தரை விசுவாசியுங்கள் என்பன போன்றவை. இவைகளைத் தியானம் செய்த பொழுது வானத்தில் சிறகடித்து பறப்பது போலவும், பறவைகளை போல பாடி மகிழ்வது போலும் உணர்ந்தார்.
அவர் தனக்குரிய அரண்மனையை விட்டு வெளியேறினார். பொருட்களைப்பற்றிய பாரம் இல்லாமல் வாழும்படியாக குகைகளில் தங்க ஆரம்பித்தார். விலையுயர்ந்த ஆடைகளுக்குப் பதிலாக ஏழைகள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தார். மற்றவர்களோடு கூட இருந்த ஐக்கியமும் மாறியது. முதன் முதலாக மகிழ்ச்சியை அனுபவித்தார்! அவர், ஏழைகளுக்கு, வீடில்லாதவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதில் தனது நாட்களைச் செலவிட்டார். தொழுநோயாளிகள் இருப்பிடத்துக்கே சென்று, அவர்களுடைய காயங்களைக் கழுவி மருந்திட்டுக் காயம் கட்டினார். முன்பு அவர் வெறுத்த மக்களுக்கெல்லாம் உதவிகள் செய்தார். இது அநேக நண்பர்களை அவர் பக்கம் ஈர்த்தது. அவர்களும் பிரான்சிஸ்கோவுடன் சேர்ந்து ஏழைகள் மத்தியில் ஊழியம் செய்தனர்.
பிரான்சிஸ்கோ மரணமடைந்த கொஞ்ச நாட்களுக்குப்பின் அவரது பெயர் புனித பிரான்சிஸ் என அழைக்கப்பட்டது. மேலும் அவர் கிறிஸ்தவர்கள் எல்லோராலும் நேசிக்கப்பட்டார்.
800 வருடங்களுக்குப் பின்னரும் மக்கள், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் கண்டு பிடித்த மகிழ்ச்சியின் இரகசியத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான வேத பகுதிகளில் ஒன்று, மத்தேயு 5:1-12 ஆகும். புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றிய இயேசுவின் "உண்மையான மகிழ்ச்சியின் இரகசியங்களை" நீங்களும் படியுங்கள்!
1. பிரான்சிஸ்கோவின் சோர்வை நீக்கியது இயேசு கிறிஸ்துவின் எந்த வார்த்தையாக இருக்கும் என நீங்கள் நினைக்கிண்றீர்கள்?
2. நீங்கள் கற்றுக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியையும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் உள்ள உண்மையான மகிழ்ச்சியையும் எவ்வாறு சாப்பிடுவீர்கள்?
யோசிக்க:
உங்கள் வீட்டில் உள்ள, உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பொருட்களை உற்று கவனியுங்கள். அதே பொருட்கள் இயேசுவை மகிழ்ச்சிக்குள்ளாக்குமா? என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
மேலே உள்ள வசனங்களை சிறுசிறு அட்டைகளில் எழுதி, அதை நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டிவைத்து அதை பார்க்கும்போதெல்லாம் சத்தமாக படியுங்கள்.
மேலும் உங்கள் உதவியாக:
1. சங்கீதம் 4; 2. லூக்கா 6:17-49; 3. யோவான் 15:5-11.
இந்த பதிவு உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். இந்த வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்! புதிய பதிவுகள் உங்கள் இன்-பாக்ஸில் வந்து சேரும்! நன்றிகள் பல. நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால் இந்த ஊழியத்துக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment