30 Dec 2018

TRIALS AND SORROWS

நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

மீண்டும் இந்த மாதத்தில் இதே பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!

"என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தைஜெயித்தேன்" (யோவா.16:33) 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! 
உங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்து களிகூரும்படியான ஒரு சத்தியமாக இதை நீங்கள் பார்க்கலாம்! அன்மையில் ஒரு சபையில் இதைக்குறித்து பேசலாம் என்று நன்கு ஆயத்தப்படுத்தி, குறிப்புகளை எழுதிக்கொண்டு சென்றேன்; ஆனால் ஆவியானவர் வேறுஒரு செய்தியை கொடுக்க வழிநடத்தினார்! அந்த செய்திதான் இப்பொழுது உங்களுக்கு ஆசீர்வாதத்தை கொண்டுவரப்போகின்றது. 
"பிரதர்...... நாம அநேக உபத்திரவங்கள் வழியாகத்தான் பரலோக ராஜ்யத்துக்குள் போகமுடியும் பிரதர்"
"இயேசுவே சொல்லிட்டார், உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று எனவே உபத்திரவப்படனும் பிரதர்"
உபத்திரவம் இல்ல என்று சொல்லுகிற பிரசங்கிமாரெல்லாரும் சுகபோக பிரசங்கி பிரதர்...
ஆண்டவரே உபத்திரவப்பட்டார், நீ என்ன பெரிய பிஸ்தாவா?
ஆண்டவருடைய வழியை பின்பற்றுகிறவர்களுக்கு கண்டிப்பா உபத்திரவம் உண்டு பிரதர்......
உபத்திரவப்பட்டது நல்லது அதனாலே நான் கர்த்தருடைய பிரமாணங்களை கற்றுக்கொண்டேன் என தாவீதே சொல்லியிருக்கிறார் புரோ.....
உபத்திரவத்தைப் பற்றி ஆண்டவருடைய அணுகுமுறை என்ன? என்பதை குறித்தும், அவர் தமது உள்ளத்திலே என்ன நினைக்கின்றார் என்பதைக்குறித்தும் நாம் இப்பொழுது பார்க்கலாம். இந்த செய்தி இந்த புதிய வருடத்தில் மட்டுமல்ல, உங்கள் உயிருள்ள நாளெல்லாம் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரப்போகிறது. உங்கள் தலைமுறைக்கும் இந்த சத்தியத்தைக் கடத்துங்கள்! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! 
முதலாவது, தேவ ஜனங்கள் உபத்திரவப்பட்டபொழுது, தேவன் என்ன செய்தார் என்று பார்ப்போம்! அப்போஸ்தலர் 7:34ல், (மோசேயிடம் ஆண்டவர் பேசியது இது)
"எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால் நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்"
தேவ ஜனங்களின் உபத்திரவத்தைப் பார்த்து, பிதா இரக்கம் கொண்டார். இன்று நீங்கள் உபத்திரவத்தின் பாதையிலே இருக்கிண்றீர்களோ? பிதாவாகிய தேவன்  இஸ்ரவேலரை விடுவிக்க ஒரு மோசேயை தெரிந்து கொண்டு அனுப்பியதை போல, உங்களுக்கு உதவி செய்ய ஒருவரை இன்று அனுப்புவார். பொதுவாக விசுவாசிகள் எல்லோருமே தாங்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு தகுந்த வசனத்தைத் தெரிந்து கொண்டு, அதை விசுவாசிக்கின்றார்கள். உதாரணமாக நான் யோபுவைப்போல பாடு அனுபவிக்கின்றேன்...... சிலுவை மரணத்தினால் வந்த பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுவார்கள், அதே சிலுவையில் ஏற்றுக்கொண்ட காயங்கள் சுகமாக்குகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். இப்படி பல...... ஆனால் தேவ சித்தம் வேறாக இருக்கின்றது...... 
"நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்" (சங்கீதங்கள் 34:17)
"உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்"
ஆண்டவர் எப்பொழுதுமே உபத்திரவப்படுகின்ற நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்டு அவர்களை    விடுவிக்கிறவர். உங்களைப்பற்றித்தான் நான் இங்கு எழுதுகின்றேன். 
யோசேப்பின் வாழ்க்கையைக் குறித்து வேதம் கூறும்போது, அப்போஸ்தலர் 7:10ல், 
"தேவனோ அவனுடனே கூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து....." 
இந்த வசனங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுவது, ஆண்டவர் உபத்திரவப்படுகிறவர்களை விடுவிக்கிறவர் என அறிகிண்றீர்கள். சிலர், ப்ரோ... தேவன் உபத்திரவ படுத்துவார், இயேசு விடுவிப்பார்.. என கூறுகின்றனர். அதாவது பிள்ளையையும் கிள்ளிவிட்டு  தொட்டிலையும் ஆட்டுகின்றவர் ஆண்டவர் என்கின்றனர். அப்படிப்பட்ட ஆளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். சினிமா வில்லனைவிட மோசமான ஆள்தான் அப்படி செய்வார். same side goal அடிக்காதே..... இங்கே பிதாவுக்கு சித்தமானத்தையே நான் செய்கிறேன் என்று இயேசு கூறுவதை நினைவில் கொள்ளவேண்டும். அடுத்து,
"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கியவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது"
(எபிரேயர் 2:10) 
பிதாவாகிய தேவன் உங்களையெல்லாம் பரலோகத்தில் கொண்டுபோய் சேர்க்க, இரட்சிப்பின் அதிபதியை அதாவது இயேசுவை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது, அவருக்கு மிகவும் சரியாகப்பட்டது. உங்களையெல்லாம் பரலோகத்தில் கொண்டுபோய் சேர்க்க, உங்கள் இரட்சிப்பின் அதிபதியான இயேசுவை உபத்திரவப்படுத்துவது, தேவ சித்தமானது. நீங்கள் உபத்திரவப்படுவது தேவ சித்தமுமல்ல, நோக்கமுமல்ல. அடுத்து,
"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமானத்தைக் கற்றுக்கொள்ளுகின்றேன்" (சங்கீதங்கள் 119:71) 
இது டேவிட்டின் சாட்சி, நீங்கள் சாட்சியை விசுவாசிப்பதைவிட ஆண்டவர் உங்களுக்கென்று கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என விசுவாசிக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் இருந்த சபை ஒன்றில் உபதேசியாராய் இருந்த எனக்கன்பான ஊழியர் ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு விசுவாசி தன் கையில் 5 வயது மதிக்கத்தக்க குழந்தையோடு அந்த ஊழியரைப் பார்க்க வந்திருந்தார். அந்த குழந்தை கண் பார்வையற்ற குழந்தை. அந்த குழந்தை பார்வை அடையும்படி ஜெபியுங்கள் என்று கூறினார். நான் ஜெபித்தேன். ஜெபித்து முடித்தபின் அவர் பெற்றி பாக்ஸ்டரின் சாட்சியைக் கூறி அதை போல இவளுக்கும் ஆண்டவர் சுகம் தருவார் எனக் கூறினார். அவர் சொன்ன விடயத்தை வேத வசனத்தோடு ஒட்டிப் பார்த்தேன், ஒட்டவில்லை. அந்த இடத்தில் நான் அவருக்கு போதிக்கவில்லை. அவர் நம்புகின்ற சாட்சியின்படி அந்த குழந்தைக்கு ஆகட்டும் என உள்ளத்தில் நினைத்துக்கொண்டேன். 
தேவன் தன் பிள்ளைகளுக்கு உபத்திரவத்தின் மூலமாக அல்லாமல், ஆலோசனையின் மூலமாகவே கற்றுக்கொடுக்கின்றார். இதே டேவிட் இதை வேறுஒரு  இடத்தில் கூறியிருக்கின்றான். சங். 32:9ல், 
"வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்ட சேராத புத்தியில்லாத குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்க வேண்டாம்"
சொன்னா கேளு; அடிவாங்கி ஒன்றைக் கற்றுக் கொள்ளாதே. 32:8ல், 
"நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" 
புத்தியில்லாத கழுதையைத்தான் வாயைக் கட்டி, கடிவாளத்தைப் போட்டு இறுக்கி உபத்திரவப்படுத்துவார்கள். பிதாவாகிய தேவன் தன் பிள்ளைகளுக்கு, போதித்தும், ஆலோசனை கொடுத்தும்தான் கற்றுத்தருகின்றார். அல்லேலூயா!! எவ்வளவு அன்பான பிதா உங்களுக்கும் எனக்கும் இருக்கின்றார்!!
பொதுவாக, மூன்று வகை உபத்திரவங்கள் இந்த பூமியில் உள்ளது. இதிலே ஒன்றிலும் பிதாவாகிய தேவன் இல்லை. 
1. பிசாசிடமிருந்து வரும் உபத்திரவம்: "பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்" (மாற்கு 1:34)
2. மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் உபத்திரவம்: 
".....நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்;...." (சங்கீதம் 35:13)

3. மத கோட்பாடுகளினால் வரும் உபத்திரவம்: 
இன்னும் சில வேத வசனங்களை பார்ப்போம்! 
"இதோ நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்" (ஏசாயா 48:10) 
இந்த இடத்திலும் நான் உன்னை உபத்திரவப்படுத்தினேன் எனக் கர்த்தர்  கூறவில்லை. 2தெசலோனிக்கேயர் 1:6ல், 
"உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாக கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே" 
இங்கே தேவ பிள்ளைகளாகிய உங்களுக்கு, மனிதர்களால் உபத்திரவம் வந்தால், தேவ நீதி வெளிப்படும். 
ஊழியர்களுக்கு வரும் உபத்திரவம்: 
"....நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்" (அப். 14:22) 

இங்கே ஆண்டவர் எங்கே வருகின்றார் என்றால், வசனம் 20ல், சீஷர்கள் சூழ்ந்து நிற்க்கையில், அவன் (மரித்து போனான் என்று போட்டுவிட்டுப் போன அவன், எதுவுமே நடக்காதது போல தேவ வல்லமையினால்  எழுந்து) பட்டணத்துக்குள் பிரவேசித்தான்.....

இயேசுவின் நாமத்தினால் வந்த உபத்திரவத்தை அனுபவித்த நான் உங்களுக்கு இதை விளக்குவது எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்! சிறிய வித்தியாசங்கள் இதிலே உண்டு. நான் ஊழியம் செய்த இடத்துக்கு வெளியே தாக்கப்பட்டேன்.  தாக்கியது, கும்பல் அல்ல, ஒரே நபர். எனக்கு கொஞ்சம் பெலன் இருந்தது, எழுந்து எனது வீட்டுக்கு சென்றேன். இந்த சம்பவம் இரவு  11 மணிக்கு நடந்தது. நான் தாக்கப்பட்ட பொழுது என்னைச் சுற்றிலும் யாரும் இல்லை. "இயேசுவை எங்க ஏரியாவிலே சொல்லாதே, சொல்லாதே எனக் கூறியே அடித்தான். 
பின்பு அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் கேள்விப்பட்டிருந்தார்கள். வேத பகுதியில் பர்னபாவைக் கூட்டிக்கொண்டு, அடுத்த ஊர்களுக்குச் சென்று ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்தபின்பு, மீண்டும் அந்தியோக்கியாவுக்குத் திரும்பி வந்து அங்குள்ள சீஷருடைய மனதை திடப்படுத்தி, சொன்னதுதான் மேலே உள்ள வசனம்! இது சுவிஷேசத்தினால் வரும் உபத்திரவம்! நானும் பிற பகுதிகளில் ஊழியம் செய்துவிட்டு அடுத்தவாரம் அங்கு சென்றபொழுது, யாருமே நான் தாக்கப்பட்டதைக் குறித்து என்னிடம் கேட்கவில்லை. அப்படி விசாரித்து இருந்தால் நான் என்ன கூறியிருப்பேன்? ".....நம்ம அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்" என்ற வசனத்தைத்தான் சொல்லியிருப்பேன். இதிலிருந்து ஊழியர்களுக்கு உபத்திரவம் இயேசு என்ற நாமத்தின் மகிமைக்காக வருகின்றது! என்பதை நீங்கள் அறிய வேண்டும். அப்.20:23,24ல், 
"கட்டுக்களும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிரதை மாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றைக் குறித்தாகிலும் கவலைப்படேன்...." 

பவுலின் ஊழியத்தில் ஆவியானவர் முன்னமேயே அறிவிக்கின்றார், தெரியாத்தனமாக போய் மாட்டிக்கொண்டார் என்றல்ல, தெரிந்தே போய் ஊழியம் செய்தார் என்பதை நீங்கள் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்....... ஆகவேதான் ஊழியருக்காக ஜெபிக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. மறக்காமல் உங்கள் ஜெபங்களில் என்னையும் நினைத்துக்கொள்ளுங்கள்! 
"......உபத்திரவத்திலே பொறுமையாய் இருங்கள்...." (ரோமர் 12:12) 
"உபத்திரவம் பொறுமையையும்...... உண்டாக்குகிறது" (ரோமர் 5:3) 
இந்த செய்தியில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுவது, பிதாவாகிய தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய உங்களை உபத்திரவ படுத்த மாட்டார். 
கடைசியாக,
"என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குத் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33) 
இயேசு கூறியது இதுதான்: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; என்னிடத்தில் இல்லை. அனைவரும் இயேசுவினிடத்தில் வாருங்கள்!

23 Dec 2018

SOW THE SEED

கிறிஸ்துவுக்குள் அருமை நண்பர்கள் யாவருக்கும் இயேசுவின் நாமத்தில் நல் வாழ்த்துக்கள்!

பண விடயங்களில் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள மிக சிறந்த ஒரே வழி, கொடுப்பதுதான்! இன்றய இளம் விசுவாசிகளில் நிறையபேர், நாங்கள் சம்பாதிப்பது எங்களுக்கே போதவில்லை. நாங்கள் எப்படி ஆண்டவருக்கு கொடுப்பது? எனக் கேட்கின்றனர். இங்கு முதலாவது ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும், இது கட்டாயமல்ல, இது உற்ச்சாகமாய் செய்யப்படவேண்டியது. முதலாவது வசனம் என்ன சொல்லுகின்றது என்று பார்ப்போம்!

"விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாயத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" (2கொரி. 9:10) 
இந்தவசனத்தின் படி, உங்களுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும்,  அதற்குள்ளேயே சாப்பிடுவதற்கும், விதைப்பதற்குதேவையான விதையையும் ஆண்டவர் வைத்திருக்கின்றார். நான் சென்னைக்கு வருவதற்கு முன், எங்கள் ஊர் அகிலாண்டபுரத்திலே விவசாயமும், வியாபாரமும் மூன்று தலைமுறைகளாக செய்துவந்தோம். நெல் அறுவடையாகி வீட்டுக்கு வந்தவுடன், அடுத்தவருடம் விதைப்பதற்கு, தனியாக விதை நெல்லை காயப்போட்டு எடுத்து வைத்துவிடுவோம். (எங்கள் ஊர் வேலங்குடி கண்மாய்  மழைக்காலத்தில் தான் நிரம்பும், எனவே ஒரு போக நெல் சாகுபடிதான்) 
மீதியுள்ள நெல்லை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவித்து, உலக்கையால் குத்தி, அரிசியாக்கி சாப்பிடுவோம். அடுத்த வருடம் விதைக்கும் பருவத்தில், தனியாக எடுத்து வைத்த விதை நெல்லை எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைப்போம். இது எங்கள் வீட்டில் மட்டுமல்ல, எல்லா விவசாயி களுடைய வீடுகளிலும் நடக்கின்ற ஒரு விடயந்தான். 

இதிலே விதைப்பதற்கு விதை நெல்லை எடுத்து வைக்காவிட்டால் என்ன நடக்கும்? விதைக்கும் பருவம் வரும்பொழுது விதை நெல் இல்லாமல் போய்விடும். கடன் வாங்கித்தான் விதைக்க வேண்டும், சாப்பிடவேண்டும். மேலே உள்ள வசனத்தின்படி விதைப்பதற்கு விதையையும் சேர்த்தேதான்ஆண்டவர்வருமானத்தை   கொடுக்கின்றார்.எடுத்துவைத்து கொடுங்கள்! (ஊழியத்தில் விதையுங்கள்) 

ஒரு விவசாயி தனது நிலத்தில் சோளம் பயிரிட்டிருந்தார். அறுவடைக்கு வந்தது. கதிர் அறுத்து பக்கத்தில் உள்ள பாறையில் கதிர்களை காயப்போட்டிருந்தார். கதிர்களை கொத்திக்கொண்டு போவதற்கு வருகின்ற பறவைகள், அருகில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கோழிகள், இவைகளை விரட்டும்படிக்கு அருகில் இருந்த மரத்து நிழலில் அமர்ந்திருந்தார். பின்பு சும்மாகத்தானே இருக்கிறோம் என்று பொழுது போக்கிற்காக, ஒரு பரும்  கதிரை  (பெரிய) எடுத்து எத்தனை சோளம் இருக்கின்றது? எண்ணலாம் என நினைத்து எண்ணினார். அந்த கதிரில் மொத்தம் 558 சோளம் இருந்தன. ஒரு நிமிடம் யோசியுங்கள்! அவர் விதைத்த ஒரு சோளத்தில் இருந்து, 558 சோளங்கள்! 558 மடங்கு! வாவ்....

உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஊழியத்தில் விதைக்கிண்றீர்கள்! உதாரணத்துக்கு, ரூ. 1000/- விதைக்கிண்றீர்கள் என வைத்துக்கொள்ளுவோம்! அந்த விவசாயிக்கு விளைந்ததைப்போல விளையும் போது, எவ்வளவு இருக்கும்? அதிகபட்சம் ரூ.5,58,000. நீங்கள் இந்த ஊழியத்தில் விதைக்கும் ரூ. 1,000ன் பலன் 5,58,000ரூ. ஒவ்வொரு முறையும் ஊழியத்தில் விதைக்கும் பொழுது மேலே உள்ள வசனத்தை மனதிலே அறிக்கைபண்ணி விதையுங்கள்! (கொடுங்கள் அல்லது அனுப்புங்கள்) இது விதைப்பும், அறுப்புக்குமான கோட்பாடு! 

"இந்த பூமி இருக்கும் வரைக்கும் விதைப்பும் அறுப்பும் ............ ஒழிவதில்லை என்று தனது உள்ளத்திலே சொன்னார் என ஆதி. 8:22 சொல்லுகிறது.
 இந்த அளவு அதிகமாக பெற்றுக்கொண்டு நான் என்ன செய்வது? இன்னும் அதிகமாக நல்ல வேலைகளுக்கு கொடுக்கும்படி, பரிசுத்தவான்களின் குறைவுகளிலே உதவி செய்யும்படி. நிறைய விசுவாசிகள் எங்கள் ஊழியத்திற்கு கொடுப்பவர்களை பற்றிக் கூறுகின்றேன். பிரதர் ஏழைப்பிள்ளைகளின் மத்தியிலே ஊழியம் செய்கின்றார், நாம்தான் இந்த ஊழியத்துக்கு கொடுத்து தாங்க வேண்டும் என நினைத்து கொடுக்கிண்றீர்கள்! இது ஓரளவு சரிதான்! கொடுக்கின்ற நீங்களும், வாங்குகின்ற நானும் வசனத்தின்படி போய்விட்டால், இரண்டு பேருக்குமே நல்லது. வாழ்த்துக்களுடன்......

ஆண்டவர் பேசுவாரா?

நான் சென்ற மாதத்தில் ஓரிரு சபைகளுக்கு திடீரென சென்றபொழுது, அங்குள்ள ஊழியர் நான் எதிர்பார்க்கவே இல்லை... எப்படி இருக்கின்ரீர்கள்? என கேட்டனர். ஆண்டவர் இந்த சபைக்கு செல் என்று கூறியபடியால் இங்கு வந்தேன் என பதிலளித்தேன். அதிலிருந்து என்னிடத்தில் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி: ஆண்டவர் பேசுவாரா? என அடிக்கடி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் இதுதான்..... ஆண்டவர் பேசுவதைக் கேட்க வேண்டுமானால், கவனிக்க வேண்டும். சென்ற மாதத்திலே (இது ஆண்டவர் பேசியதற்கு ஒரு உதாரணம்) நமது ஊழியத்தில் விதைக்கின்ற ஒரு கடைக்கு சென்று திரும்பும்போது, பைக்கை எடுக்கும்போது, என் உள் மனது ஆண்டவரை நோக்கி, எனது பிரயாசத்தின் பலனை நான் பார்க்க எனக்கு உதவி செய்யும் என ஜெபித்தது. (இது நான் விரும்பி வாயை திறந்து ஜெபிக்கவில்லை) உள்மனதின் ஜெபம். உடனே ஆண்டவர், உனது பிரயாசத்தின் பலன் உனக்கு வேண்டுமா? அல்லது உன் விசுவாசத்தின் பலன் வேண்டுமா? எனக் கேட்டார். அவர் கேட்ட பின்தான் எனக்கு ஞானம் வந்தது... ஆண்டவரே சரீர முயற்சி அற்பமானது என்பதை நான் அறிவேன். எனக்கு, என் விசுவாசத்தின் பலனைக்கான உதவி செய்யும் என ஜெபித்தேன். இதுதான் ஆண்டவர் பேசுவது. வாக்குத்தத்தம் உங்கள் எல்லையாக இருக்கட்டும். உன்னிப்பாக கவனிக்கும் பொழுது கர்த்தர் பேசுவதை கேட்க முடியும். விசுவாசிக்கும் பொழுது, ஆண்டவர் செயல்படுவதை உணரமுடியும். விசுவாசியுங்கள், நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாய் ஆண்டவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுவீர்கள்!

சப்ளிமென்ட்:
சப்ளிமென்ட் என்றால் என்ன? எனது கிராமமாகிய அகிலாண்டபுரத்தில் நான் வியாபாரம் (கடை) செய்த பொழுது, விவசாய வேலைகளில் ஈடுபட்டிருப்போர், 'எனக்கு கைகால் வலிக்கின்றது, ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்கள்' என கேட்பார்கள். நாங்கள் அஞ்சால் அலுப்பு மருந்தைக் கொடுப்போம். நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு வேலைசெய்யத் தேவையான சக்தியைக் (உணவில் உள்ள கார்போஹைடிரேட்டும், கொழுப்பும் ஆக்ஸிஜனோடு சேர்ந்துஎரிந்து  வேலை செய்வதற்கான உஷ்ணத்தைக்) கொடுக்கின்றது. அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் பொழுது, சாப்பாட்டில் இருந்த சத்துக்களெல்லாம் எரிந்து காலியான பின்பு, உழைப்பு சரீரத்தைப் பாதிக்கின்றது. அப்பொழுது, கை, கால் வலி, குடைச்சல் எல்லாம் வருகின்றது. இதை சரிக்கட்டுவதற்கான மருந்துதான் அலுப்பு மருந்து. இது மாத்திரையாகவும் (பி-காம்ப்ளெஸ், வைட்டமின் போன்ற) இருக்கலாம். இன்று அநேகர், அதிகப்படியான உழைப்பின் நிமித்தம் வலி வரும்பொழுது, குடித்தால் வலி தெரியாது என தவறாக நம்பி, மது குடிக்க ஆரம்பித்து, பின்பு மதுவுக்கு அடிமையாகி விடுகின்றனர். இப்பொழுது அறிந்திருப்பீர்கள்! சப்ளிமென்ட் என்றால் அலுப்பு மருந்து. உண்ணும் உணவில் இருந்து வேலைக்குத்தேவையான சக்தியை பெற்று கொள்ளாமல், அதை வேறு வழியில் பெற்று கொள்ளுவது சப்ளிமென்ட். 




20 May 2018

GOODNESS WILL SHINE ON YOU LIKE THE SUN

உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்
"ஆனாலும் என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும், நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்" மல்கியா 4:2

ஆண்டவருக்கு பயப்படும் பயம் குறைந்து வரும் நாட்களில் நாம் வாழ்ந்து வருகின்றோம். அடுத்து என்ன நடக்கும் என யோசிக்காமல் பலர் செயல்படுவதை நீங்கள் பார்க்கின்றீர்கள்! ஆண்டவர் எப்பொழுதுமே அன்பினால் நிறைந்திருக்கின்றார். மனிதன் ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்புகின்றார்! ஆசீர்வாதங்களைக்கூட அதற்குள்ளேயே வைத்திருக்கின்றார்! இங்கே பயப்படும் பயம்! யாத்திராகமம் 20:20ல், நீங்கள் பிழையில்லாத வாழ்க்கை வாழும்படிக்கு ஆண்டவருக்கு பயப்படும் பயம்! நாளாகமம் 19:7ல், ஆண்டவருக்கு இலஞ்சம் கொடுக்க முடியாது, நீதியுள்ளவர் ஆகவே பயப்படும் பயம்! நீதிமொழிகள் 8:13ல்,  தீமையை வெறுப்பது கர்த்தருக்கு பயப்படும் பயம்! அதாவது கர்த்தர் வெறுப்பதை நீங்களும் வெறுக்க வேண்டும்! 

நான் ஆண்டவருக்கு பயந்த வாழ்க்கை வாழுகின்றேன்! இன்னமும் வாழுவேன் என உங்கள் உள்ளம் கூறுமானால், மிக நல்லது! இது சரிதான்! இதோடு இதன் பலனை பெற்று கொள்ளுவேன் என விசுவாசிக்க வேண்டும்! 

பலன் என்ன? ஞானத்தின் ஆரம்பம்! (நீதி.1:7) அறிவை பயன்படுத்துவதுதான் ஞானம்! வேத வசனத்தோடு கூட உங்கள் அறிவைப் பயன்படுத்தினீர்கள் எனில் அதுதான் தேவ ஞானம்! அதிலே சமாதானம் நிறைந்திருக்கும்! அதனால் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்! உதாரணத்துக்கு, நீங்கள் உங்கள் தோட்டத்திலே, முருங்கை மரங்களை பயிரிட்டு இருக்கின்ரீர்கள் என வைத்துக்கொள்ளுவோம்! அதற்க்கு தண்ணீர் பாய்ச்சும் பொழுது, எனது வருமானத்தில் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து ஒரு பங்கை கொடுக்கின்றேன், எனவே அவர் எனது வருமானத்தை ஆசீர்வதிக்கின்றார். இந்த முருங்கை மரங்கள் அனைத்தும் 100% பலனைத் தரும். எனது தோட்டத்தில் இருக்கும் முருங்கள் மரங்களே உங்களை நான் அதிகமாய் நேசிக்கின்றேன்! (அடுத்த முறை நீங்கள் தண்ணீர் விட செல்லும் பொழுது, ஒரு வித்தியாசத்தை உணருவீர்கள்!) ஆண்டவரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும், எனவே சந்தையில் எனது காய்கள் அதிக விலை பெரும். இப்படி பேசிக்கொண்டே / யோசித்துக்கொண்டே உங்கள் வேலைகளை செய்யுங்கள்! (உலகத்தோடு ஒப்பிட்டு பார்க்கதிருங்கள்!) உங்களுக்கு நீங்களே இடைப்படும்போது அறிவைப் பயன்படுத்துங்கள்! பிறரோடு இடைப்படும்போது இதயத்தை பயன்படுத்துங்கள்!

2வது, சரீரத்தில் ஆரோக்கியம்! மல்கியா 4:2ன்படி,உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்! அதன் கதிர்களில் ஆரோக்கியம் இருக்கும்! நீங்கள் விசுவாசித்து வாழ அழைக்கப்பட்டு இருக்கிண்றீர்கள்! இந்த வசனத்தை அறிக்கை செய்யுங்கள்! ஆரோக்கியம் என்பது வியாதி இல்லாமல் வாழும் வாழ்க்கை! ஆரோக்கியம் எப்பொழுதுமே தேவை! சுகம், வியாதி வந்தால் மட்டுமே தேவை.

ஆண்டவருக்கு பயப்படுவதால் வரும் அடுத்த ஆசீர்வாதம், லூக்கா 1:50ன்படி, அவருடைய இரக்கம் உங்கள் பிள்ளைகளின் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும் வருகின்றது. நீங்கள், உங்கள் சந்ததிக்கு இதைவிட எவ்வளவு பெரிய சொத்தையும் இந்த உலகத்திலே சேர்த்து வைக்க முடியாது. இதையெல்லாம் நினைத்து, அனுபவித்து ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்கள்!

பசுவிடம் பால் குடித்த கன்று எப்படி துள்ளுமோ அதுபோல உங்கள் வாழ்க்கை அமையும்! மனதில், மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்! 

ஜெபிப்போம்! 

பரிசுத்தமும், அன்பும் நிறைந்த எங்கள் பரம பிதாவே உம்மைத் துதிக்கிறோம்! நன்றி செலுத்துகின்றோம்! உமது வழி காட்டுதலுக்காக, உமது பிரசன்னத்துக்காக கோடானகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்! உமது அன்பான இந்த வாக்குக்காய் நன்றி! உமது வாக்கு தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்து நின்று ஆசீர்வதிப்பதற்காய் நன்றி! உமது இரக்கங்களுக்கு முடிவில்லை. தீமையை விட்டு விலகி வாழ தீர்மானிக்கின்றோம்! எல்லைகள் பெரிதாவதற்காய் நன்றி! வேத வசனத்தை மட்டுமே விசுவாசித்து வாழ உதவி செய்யும்! இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே! ஆமென், ஆமென்.
    
If you want to donate to our ministry in Bit Coin, this is our Bit Coin address: 36UeDPS5e8JUoLvR4F26B5AAQ57RRMKmgj
நன்றி!

19 Mar 2018

GOD SHOW HIS MIGHT TO YOU

கர்த்தர் தம்முடைய வல்லமையை உங்களிடத்தில் விளங்கச் செய்வார்

வாக்கு மாறாத தேவன் உங்களை தமது வாக்குத்தத்தின் மூலம் ஆசீர்வதிப்பார்!

"தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது..." (2 நாளா.16:9)

உங்கள் வாழ்க்கையிலே தேவனுடைய வல்லமையைக் காண விரும்புகிண்றீர்களா? உங்கள் குறைவுகளை நிறைவாக்கவும், உங்கள் துன்பத்தின் மத்தியில் தேவ ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும், உங்கள் பலவீனத்திலே தேவ பெலனையும், சோர்வு நேரத்திலே ஆண்டவரின் பிரசன்னத்தையும், வழி தெரியாத சூழ்நிலையில் தடைகளையே வழியாக்கவும், பல்வேறு பிரச்சனைகளினாலே வந்த சிக்கல்களில் இருந்து விடுதலையளிக்கவும் தேவன் விரும்புகின்றார். ஆகவே அவருடைய கண்கள், இந்த பூமியெங்கும் தேடுகிறது. அவருடைய பார்வையிலே நீங்கள் விழவேண்டுமானால், ஒரே ஒரு நிபந்தனைதான் இங்கு இருக்கின்றது. அது உத்தம இருதயம்! ஆண்டவரைக்குறித்த உத்தம இருதயம்!! ஆங்கில வேதாகமத்தில், 

"....For the eyes of the Lord run to and fro throughout the whole earth, to show his might in behalf of those whose heart is blameless toward him" 2 Chro. 16:9 (Revised Standard Version - Illustrated) குற்றமற்ற , மாசற்ற இருதயம்!

அப்படிப்பட்ட இருதயம் இங்கு எப்படி வருகின்றது எனப்பார்ப்போம்! 2நாளாகமம் 15:17ல், "....ஆனாலும் ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது" (யூதாவின் ராஜா) ஆண்டவருக்குப் பிடிக்காததை அவன், தன் நாட்டை விட்டு அகற்றியபோது, அவனுடைய இராஜ்யபாரம் முதல் பத்து வருடங்கள் அமரிக்கையாய் இருந்தது. அவர்களுடைய காரியமும் வாய்த்தது. 

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? ஆண்டவருக்கு பிரியமில்லாததை உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றிவிட்டீர்களா? நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன் உங்களுக்கு, காரியத்தை வாசிக்கும்படி செய்வார். நேர்மையை குறித்து சற்று யோசியுங்கள்! யூதாவிலே 5,20,000 பராக்கிரமசாலிகள். விரோதியாகிய எத்தியோப்பியனுக்கோ 10,00,000 பேர் + 300 இரதங்கள். ஏறக்குறைய இருமடங்கு! ஆசா ஆண்டவரைத் தேடினான், உதவியைக்கேட்டான். வேதம் சொல்லுகின்றது, கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக முறிந்து விழுந்தார்கள்! வெற்றி பெற்றவுடன் ஆண்டவர் அசரியாவின் மூலமாக பேசினார். 'அவரை விட்டீர்களானால் அவரும் உங்களை விட்டுவிடுவார்' உங்கள் வாழ்வில் ஆண்டவர் செய்த நன்மைகளுக்கு (ஜெபத்துக்கு பதிலளித்தபோது, காரியங்கள் வாய்த்தபோது) அவருக்கு மகிமையை செலுத்தினீர்களா? ஆசா தன் மக்களோடு கூட சேர்ந்து மகிமையை செலுத்தியபோது, வேதம் சொல்லுகிறது, ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது. இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை முறை!

இப்பொழுது சகோதரர்களுக்கிடையே. இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷா ராமாவைக்கட்டுகிறான். எதிரி பலம்வாய்ந்தவனாக இருந்தபொழுது, ஆண்டவரைத் தேடினான். தேவன் தன் பட்சத்திலிருந்து யுத்தத்தைப் பார்க்கின்றார் என்பதை அறிந்திருந்தான். அதனால்தான் இவ்வாறாக ஜெபித்தான், "....கர்த்தாவே எங்களுக்கு துணை நில்லும்; உம்மை சார்ந்து ஏராளமான இந்தக் கூட்டத்துக்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்...." (வ14:11) இப்பொழுது சகோதரர்களுக்கிடையே சண்டை. யூதாவுக்கு, எத்தியோப்பியருடன் ஒப்பிட்டால் இஸ்ரவேல் அவ்வளவு பெரிய எதிரியல்ல. வெற்றி பெறுவது என்பது லேசான காரியம். ஆனாலும் இவன், பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்திற்கு ஆளனுப்பினான். (இதுதான் மாம்சீக முடிவு) முடிவு: இவர்கள் ஜெயித்தாலும், ஆண்டவருடைய வாக்கு வருகின்றது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? உங்களுக்கு கடினமாக தோன்றுபவற்றில், ஆண்டவரைத் தேடியும், எளிதாக தோன்றுகிறவற்றில் சுயமாகவும் காரியத்தை நிறைவேற்றுகிண்றீர்களா? மனந்திரும்புங்கள் எல்லாவற்றிலும் (காரியம் சிறிதானாலும், பெரிதானாலும்) நீங்கள் அவரை சார்ந்து வாழ வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கின்றார். அவர் உங்களை ஸ்தாபிக்க விரும்புகின்றார். எல்லாவற்றிலும் நீங்கள்  அவரை சார்ந்து, உத்தம இருதயத்தோடு வாழுகின்றவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கச் செய்கிறார். இங்கே சார்ந்து என்பது அவரை முன்னிறுத்தி வாழ்வது.

எப்படி ஒரு சிறு குழந்தை தன் பெற்றோரை சார்ந்து வாழுகின்றதோ, அதைப்போல நீங்கள் கர்த்தரை சார்ந்து வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் தேவைகள் பெரிதானாலும் சிறிதானாலும் முதலாவது ஆண்டவரிடம் சொல்ல பழகுங்கள்! நான் இதை செய்கின்றேன் என உங்கள் உள்ளம் சொல்லுமானால் இப்பொழுதே கர்த்தர்  தம்முடைய வல்லமையை விளங்கச்செய்வார். 

மேலும் தாங்கள் தேவ சமூகத்திலே செய்த பொருத்தனைகளை சற்று நினைத்துப் பாருங்கள்! இந்த வசனத்தை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்!

"சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத்த தேடாதவன் எவனோ அவன் கொலை செய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து....." (2 நாளா. 15:13) 14ல், 
".....கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்" 

இனிமேல் வசனம் 16:12ல், 
"......அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்" 

எவ்வளவு எளிதாக தனது உடன்படிக்கையை, ஆணையை மறந்து போனான்! வருடங்கள் 30 ஆகிவிட்டது எனவே மறந்துவிட்டான் போலும்! ஆனாலும் ஆண்டவர் மறக்கவே இல்லை. 

இந்த வசனத்தை வைத்துக்கொண்டு ஒரு சபைப்பிரிவு வைத்தியரிடமே போகாதே. ஜெபம்பண்ணு, எல்லாம் சரியாகிவிடும் என கூறிக்கொண்டிருக்கின்றது. வைத்தியரிடம் சென்றால் ஏதோ ஒரு பாவியைப் பார்ப்பது போல பார்ப்பது என நடந்துகொண்டு இருக்கின்றது. சத்தியம் என்னவெனில், அவன் தனது  பொருத்தனையின்படி நடக்கவில்லை என்றே  வேதம் குறிப்பிடுகின்றது. சரி ஜெபிப்போம்!
பரிசுத்தமும் அன்பும் நிறைந்த எங்கள் அன்பின் பிதாவே! உம்மைத் துதிக்கிறோம்! இந்த வசனத்தின்படி, வாக்கின்படி இதைப்படிக்கின்ற அனைவரையும் தனித்தனியாக, பேர்பேராக உமது வல்லமையை விளங்கச்செய்யும்! எங்களின் பொருத்தனையின்படியே எங்களை வழி நடத்துவதற்காய் துதியும் கனத்தையும் செலுத்துகின்றோம்! எங்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்படியாய் ஜெபிக்கிறோம்! வேதவசனத்தைக் கொண்டு வாழ்க்கையை கட்டியெழுப்ப கிருபை செய்யும்! விசுவாசத்தில் நல்ல போராட்டத்தை போராடி ஜெயிக்க உதவி செய்யும்! பலப்படுத்தும், கடினமான சூழ்நிலைகளில் வாக்குத்தத்தத்தை நோக்கி பார்க்க கிருபை செய்யும்! மிகக் குறுகிய காலந்தான், கடினமான சூழ்நிலை என்பதை நினைத்து, சோர்ந்துவிடாமல் முன் செல்ல உதவி செய்யும்! எல்லா நேரங்களிலும் இயேசுவுக்கு பிரியமானத்தையே செய்ய கிருபை செய்யும்! வெற்றிக் கொடிபிடித்து எங்களுக்குமுன் தேவ சமூகம் செல்லுவதற்க்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே! ஆமென்! ஆமென்!!