19 Mar 2018

GOD SHOW HIS MIGHT TO YOU

கர்த்தர் தம்முடைய வல்லமையை உங்களிடத்தில் விளங்கச் செய்வார்

வாக்கு மாறாத தேவன் உங்களை தமது வாக்குத்தத்தின் மூலம் ஆசீர்வதிப்பார்!

"தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது..." (2 நாளா.16:9)

உங்கள் வாழ்க்கையிலே தேவனுடைய வல்லமையைக் காண விரும்புகிண்றீர்களா? உங்கள் குறைவுகளை நிறைவாக்கவும், உங்கள் துன்பத்தின் மத்தியில் தேவ ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும், உங்கள் பலவீனத்திலே தேவ பெலனையும், சோர்வு நேரத்திலே ஆண்டவரின் பிரசன்னத்தையும், வழி தெரியாத சூழ்நிலையில் தடைகளையே வழியாக்கவும், பல்வேறு பிரச்சனைகளினாலே வந்த சிக்கல்களில் இருந்து விடுதலையளிக்கவும் தேவன் விரும்புகின்றார். ஆகவே அவருடைய கண்கள், இந்த பூமியெங்கும் தேடுகிறது. அவருடைய பார்வையிலே நீங்கள் விழவேண்டுமானால், ஒரே ஒரு நிபந்தனைதான் இங்கு இருக்கின்றது. அது உத்தம இருதயம்! ஆண்டவரைக்குறித்த உத்தம இருதயம்!! ஆங்கில வேதாகமத்தில், 

"....For the eyes of the Lord run to and fro throughout the whole earth, to show his might in behalf of those whose heart is blameless toward him" 2 Chro. 16:9 (Revised Standard Version - Illustrated) குற்றமற்ற , மாசற்ற இருதயம்!

அப்படிப்பட்ட இருதயம் இங்கு எப்படி வருகின்றது எனப்பார்ப்போம்! 2நாளாகமம் 15:17ல், "....ஆனாலும் ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது" (யூதாவின் ராஜா) ஆண்டவருக்குப் பிடிக்காததை அவன், தன் நாட்டை விட்டு அகற்றியபோது, அவனுடைய இராஜ்யபாரம் முதல் பத்து வருடங்கள் அமரிக்கையாய் இருந்தது. அவர்களுடைய காரியமும் வாய்த்தது. 

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? ஆண்டவருக்கு பிரியமில்லாததை உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றிவிட்டீர்களா? நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன் உங்களுக்கு, காரியத்தை வாசிக்கும்படி செய்வார். நேர்மையை குறித்து சற்று யோசியுங்கள்! யூதாவிலே 5,20,000 பராக்கிரமசாலிகள். விரோதியாகிய எத்தியோப்பியனுக்கோ 10,00,000 பேர் + 300 இரதங்கள். ஏறக்குறைய இருமடங்கு! ஆசா ஆண்டவரைத் தேடினான், உதவியைக்கேட்டான். வேதம் சொல்லுகின்றது, கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக முறிந்து விழுந்தார்கள்! வெற்றி பெற்றவுடன் ஆண்டவர் அசரியாவின் மூலமாக பேசினார். 'அவரை விட்டீர்களானால் அவரும் உங்களை விட்டுவிடுவார்' உங்கள் வாழ்வில் ஆண்டவர் செய்த நன்மைகளுக்கு (ஜெபத்துக்கு பதிலளித்தபோது, காரியங்கள் வாய்த்தபோது) அவருக்கு மகிமையை செலுத்தினீர்களா? ஆசா தன் மக்களோடு கூட சேர்ந்து மகிமையை செலுத்தியபோது, வேதம் சொல்லுகிறது, ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது. இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை முறை!

இப்பொழுது சகோதரர்களுக்கிடையே. இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷா ராமாவைக்கட்டுகிறான். எதிரி பலம்வாய்ந்தவனாக இருந்தபொழுது, ஆண்டவரைத் தேடினான். தேவன் தன் பட்சத்திலிருந்து யுத்தத்தைப் பார்க்கின்றார் என்பதை அறிந்திருந்தான். அதனால்தான் இவ்வாறாக ஜெபித்தான், "....கர்த்தாவே எங்களுக்கு துணை நில்லும்; உம்மை சார்ந்து ஏராளமான இந்தக் கூட்டத்துக்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்...." (வ14:11) இப்பொழுது சகோதரர்களுக்கிடையே சண்டை. யூதாவுக்கு, எத்தியோப்பியருடன் ஒப்பிட்டால் இஸ்ரவேல் அவ்வளவு பெரிய எதிரியல்ல. வெற்றி பெறுவது என்பது லேசான காரியம். ஆனாலும் இவன், பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்திற்கு ஆளனுப்பினான். (இதுதான் மாம்சீக முடிவு) முடிவு: இவர்கள் ஜெயித்தாலும், ஆண்டவருடைய வாக்கு வருகின்றது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? உங்களுக்கு கடினமாக தோன்றுபவற்றில், ஆண்டவரைத் தேடியும், எளிதாக தோன்றுகிறவற்றில் சுயமாகவும் காரியத்தை நிறைவேற்றுகிண்றீர்களா? மனந்திரும்புங்கள் எல்லாவற்றிலும் (காரியம் சிறிதானாலும், பெரிதானாலும்) நீங்கள் அவரை சார்ந்து வாழ வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கின்றார். அவர் உங்களை ஸ்தாபிக்க விரும்புகின்றார். எல்லாவற்றிலும் நீங்கள்  அவரை சார்ந்து, உத்தம இருதயத்தோடு வாழுகின்றவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கச் செய்கிறார். இங்கே சார்ந்து என்பது அவரை முன்னிறுத்தி வாழ்வது.

எப்படி ஒரு சிறு குழந்தை தன் பெற்றோரை சார்ந்து வாழுகின்றதோ, அதைப்போல நீங்கள் கர்த்தரை சார்ந்து வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் தேவைகள் பெரிதானாலும் சிறிதானாலும் முதலாவது ஆண்டவரிடம் சொல்ல பழகுங்கள்! நான் இதை செய்கின்றேன் என உங்கள் உள்ளம் சொல்லுமானால் இப்பொழுதே கர்த்தர்  தம்முடைய வல்லமையை விளங்கச்செய்வார். 

மேலும் தாங்கள் தேவ சமூகத்திலே செய்த பொருத்தனைகளை சற்று நினைத்துப் பாருங்கள்! இந்த வசனத்தை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்!

"சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத்த தேடாதவன் எவனோ அவன் கொலை செய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து....." (2 நாளா. 15:13) 14ல், 
".....கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்" 

இனிமேல் வசனம் 16:12ல், 
"......அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்" 

எவ்வளவு எளிதாக தனது உடன்படிக்கையை, ஆணையை மறந்து போனான்! வருடங்கள் 30 ஆகிவிட்டது எனவே மறந்துவிட்டான் போலும்! ஆனாலும் ஆண்டவர் மறக்கவே இல்லை. 

இந்த வசனத்தை வைத்துக்கொண்டு ஒரு சபைப்பிரிவு வைத்தியரிடமே போகாதே. ஜெபம்பண்ணு, எல்லாம் சரியாகிவிடும் என கூறிக்கொண்டிருக்கின்றது. வைத்தியரிடம் சென்றால் ஏதோ ஒரு பாவியைப் பார்ப்பது போல பார்ப்பது என நடந்துகொண்டு இருக்கின்றது. சத்தியம் என்னவெனில், அவன் தனது  பொருத்தனையின்படி நடக்கவில்லை என்றே  வேதம் குறிப்பிடுகின்றது. சரி ஜெபிப்போம்!
பரிசுத்தமும் அன்பும் நிறைந்த எங்கள் அன்பின் பிதாவே! உம்மைத் துதிக்கிறோம்! இந்த வசனத்தின்படி, வாக்கின்படி இதைப்படிக்கின்ற அனைவரையும் தனித்தனியாக, பேர்பேராக உமது வல்லமையை விளங்கச்செய்யும்! எங்களின் பொருத்தனையின்படியே எங்களை வழி நடத்துவதற்காய் துதியும் கனத்தையும் செலுத்துகின்றோம்! எங்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்படியாய் ஜெபிக்கிறோம்! வேதவசனத்தைக் கொண்டு வாழ்க்கையை கட்டியெழுப்ப கிருபை செய்யும்! விசுவாசத்தில் நல்ல போராட்டத்தை போராடி ஜெயிக்க உதவி செய்யும்! பலப்படுத்தும், கடினமான சூழ்நிலைகளில் வாக்குத்தத்தத்தை நோக்கி பார்க்க கிருபை செய்யும்! மிகக் குறுகிய காலந்தான், கடினமான சூழ்நிலை என்பதை நினைத்து, சோர்ந்துவிடாமல் முன் செல்ல உதவி செய்யும்! எல்லா நேரங்களிலும் இயேசுவுக்கு பிரியமானத்தையே செய்ய கிருபை செய்யும்! வெற்றிக் கொடிபிடித்து எங்களுக்குமுன் தேவ சமூகம் செல்லுவதற்க்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே! ஆமென்! ஆமென்!!

No comments:

Post a Comment