11 Jun 2019

100% GOD!!


கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் யாவருக்கும் நல் வாழ்த்துக்கள்! 
உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் 100க்கு 100 ஆண்டவராக இருக்கின்றார் என்ற நல்ல செய்தியை உங்களுக்கு இதன் மூலம் அறிவிக்கின்றேன்!
நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கு முன்பு எவைகளில் எல்லாம் தோல்வி அடைந்திருந்தீர்களோ, அல்லது உங்கள் உறவினர்கள் உங்களுக்கு வரவேண்டிய நன்மையைக் கெடுத்திருந்தார்களோ   அவைகளை எல்லாம் உங்களுக்காக மீண்டும் தோண்டி எடுத்து ஆசீர்வதிக்க இருக்கின்றார்!  
இதை படிக்கின்ற உங்களுக்கு, இந்த நாட்களில் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் இடைப்படுவார். உங்கள் விசுவாசத்தை இயேசுவின் (வார்த்தையின்) மேல் வைத்துவிடுங்கள்!
முதலாவது, ஈசாக்கு: இவனது எதிரிகள் மனிதர்கள். ஆதி. 26:12-15ல், 
"ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு,
அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள்"
ஈசாக்கின் தகப்பன் மூலமாக, ஈசாக்குக்கு வந்த அத்தனை ஆசீர்வாதங்களையும் கெடுத்து போட்டார்கள்! 
என் அன்பு நண்பனே! உன்னுடைய வாழ்க்கையிலே உன் தகப்பன் உனக்கு செய்த நன்மைகளை உன் சுற்றத்தாரே அழித்துவிட்டார்களோ, சக மனிதர்களால் வஞ்சிக்கப்பட்டிருக்கிண்றீர்களோ! கவலைப்படாதீர்கள், உங்களை நீங்களே தேற்றிக் கொள்ளுங்கள்! உங்கள் தேவன் இன்றும் ஜீவிக்கின்றார். அவர் மாறாதவர், அவர் பெரியவர், அவர் உங்கள் பட்சம் இருந்து, உங்களுக்கு மீண்டும் மீட்டுத்தருவார். 
அந்த காலத்தில் துரவுகளில் இருந்துதான், தங்கள் ஆடுமாடுகள், ஒட்டகங்கள் ஆகிய அனைத்துக்கும், தங்களுக்கும் தேவையான குடிநீரும் பெற்றுக்கொண்டார்கள். ஈசாக்கும், அவனது ஆடு, மாடுகளும் உயிர்வாழக்கூடிய அடிப்படையான ஆசீர்வாதத்திலேயே கையைவைத்தார்கள். எவ்வளவு மோசமான மனிதர்கள் மத்தியில், வாழ்ந்து வந்தான். வசனம் 26:18ல்,
"....ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப் போட்டவைகளுமான துரவுகளை மீண்டும் தோண்டி,......"
மனிதர்களால் தூர்த்துப் போடப்பட்ட உங்கள் குடும்ப ஆசீர்வாதங்கள் அனைத்தும், மீண்டும் ஆண்டவரே தோண்டி எடுப்பார்! உங்கள் தகப்பனாரின் பிரயாசத்தின் பலன் மீண்டும் உங்களை வந்து அடையும்! மனிதர்களால் உங்கள் குடும்பத்துக்கு வந்த அத்துனை தீமைகளையும், நன்மையாய் இந்த நாளில் மாறப்பண்ணுகிறார்! நீங்கள் பலுகி பெருகும்படி ஆண்டவர் உங்களுக்கு ஒரு இடத்தையும் உண்டாக்குகிறார்! கர்த்தரை துதியுங்கள்! அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் நல்லவராகவே இருக்கின்றார்! 
அடுத்து, சிம்சோன்:
இவனது எதிரி இவனது சொந்த பலவீனம், ஆம், இவன் ஒரு பொம்பளை பொறுக்கி! இவனை ஒரு திட்டத்தோடு மனோவாவின் வீட்டில் பிறக்கச் செய்தார். ஒரு பாடல் வரிகள், இப்படியாக வருகின்றது,
"சிம்சோனைப்போல் சிநேகம் கொள்ளாதே"
பெண்களின் மீது நாட்டம்! நியா.14:4ல்,
"அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்திரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்;....."
இங்கே கர்த்தர் அவனது பெலவீனத்தையே பயன்படுத்தி, தனது திட்டத்தை நிறைவேற்றினார்! 
ஆண்டவரின் திட்டம், அவன் பெலிஸ்தியரை ஒடுக்குவதின் மூலமாக நிறைவேற ஆரம்பித்தது! பெண்ணின் சகவாசம் எப்படி முடியும் எனவும் ஒரு விடுகதையின் மூலமாக அவனுக்கு தெரியப்படுத்தினார். அதை அவன் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை! 
அதைப்போலவே, எனக்கன்பான நண்பரே, உங்கள் பெலவீனம் என்ன? சிலருக்கு, சிம்சோனின் பெலவீனம், சிலருக்கு குடிப்பழக்கம், சிலருக்கு பணஆசை, சிலருக்கு சுயம், சிலருக்கு சோம்பேறித்தனம் பெலவீனம்!  
ஆண்டவர் சிம்சோனை அப்படியே விட்டுவிடவில்லை! அவனுடைய பெலவீனம் அவனது கண்களை மறைத்தது! கண்களை இழந்தான்; மொட்டையடிக்கப்பட்டான்; மிக கடுமையாக தண்டிக்கப்பட்டான். ஆனால் ஆண்டவர் அவனை அப்படியே விட்டுவிடவில்லை! அவனது தோல்வியை வெற்றியாக மாற்றினார்! நியா.16:22ல், 
"அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத்தொடங்கியது"
அல்லேலூயா!.... ஆண்டவர் கைவிட்டுவிடவே இல்லை. மனிதர்கள் தூற்றித்திரியலாம், ஆண்டவர் கை விடவே மாட்டார்! மீண்டும் மயிர் முளைக்கத் தொடங்கியது. உங்கள் சொந்த பெலவீனத்தின் நிமித்தம் நீங்கள், உங்கள் வாழ்க்கை வீணாய் போய்விட்டது என்று நினைக்கிண்றீர்களா? சோர்ந்து போகாதிருங்கள்! சிம்சோனின் மயிர் மீண்டும் முளைக்கத் தொடங்கியது!! உங்கள் வாழ்க்கை மீண்டும் துளிர் விடுகின்றது!! ஆண்டவர் உங்கள் வாழ்க்கையின் மூன்று காலங்களையும் ஆளுகை செய்கிறார்!! கடைசியாக, யோபு:
உங்கள் வாழ்க்கையில் எனக்கு ஏன் இந்த பிரச்சனை? இந்த பிரச்சனை யாரால் வந்தது? என்று யோசித்து நேரத்தையும், காலத்தையும் விரயமாக்காமல், இதை எப்படி மேற்கொள்ளலாம் எனப் பாருங்கள்! முதல் கேள்விக்கு, நிச்சயமாக பதில் கிடைக்காது. இரண்டாம் கேள்விக்கு, பதிலாக யாரையாவது பிசாசு காட்டினான் என்றால், நீங்கள் அந்த நபரை பகைப்பீர்கள்! இது தேவ சித்தத்துக்கு எதிரானது. யோபு, தன் பிரச்னைக்கு காரணம், கர்த்தர்தான் என முழுமையாக விசுவாசித்தான். இதை யோபு 1:21ல், பார்க்கலாம்.
"....கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்  என்றான்"
சரி விடயத்துக்கு வருவோம்! யோபு 33:29,30ல், 
"இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்திலே பிரகாசிப்பிக்கிறதற்கும், 
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்" 
இந்த வசனத்தை ஒருமுறைக்கு இரு முறை வாசியுங்கள்! இப்பொழுது புரிந்திருக்கும் என நான் நினைக்கின்றேன்! 
தமிழில், வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத் தட்டும் என கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்! நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டிய வாய்ப்பை கோட்டை  (தவற)  விட்டு விட்டீர்களானால், இந்த வசனங்களின்படி, நீங்கள் சரியான ஆசீர்வாதங்களைப் பெற்று கொள்ளும்படியாக ஆண்டவர் பலமுறை உங்கள் வாழ்க்கையில் வாய்ப்பைக் கொண்டுவருகிறார்!! எனவே நீங்கள் சென்றுபோன நிகழ்வுகளையே (கோட்டை விட்ட) சிந்தித்துக் கொண்டிராமல், ஆண்டவரால் கொண்டுவரப்படுகின்ற அடுத்தடுத்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! இது உங்கள் வாழ்க்கையில் பலமுறை நடைபெறும்!!!
ஜெபிப்போம்! 
நேற்றும் இன்றும் என்றும் மாறாத எங்கள் பரம  பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. நீர் எங்கள் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு கடவுளாய் இருக்கின்றபடியால் ஸ்தோத்தரிக்கின்றோம்! இந்த செய்தியை வாசிக்கின்ற அனைத்து சகோதர சகோதரிகளையும் நீர் மேலே வாசித்த சத்தியத்தின்படி, வழிநடத்தி ஆசீர்வதிப்பதற்க்காய் நன்றி! இந்த செய்தியின்படி அநேக சாட்சிகள் எழும்பி உமது நாமத்தை மகிமைப்படுத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் நல்ல பிதாவே. ஆமென், ஆமென். 

No comments:

Post a Comment