அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்!
நீங்கள் நமது வலைத்தளத்துக்கு கொடுத்து வருகின்ற ஆதரவுக்காக நன்றிகள்! உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்தீர்களானால், எப்பொழுதெல்லாம் புதிய பதிவுகள் வெளியிடுகின்றோமோ அது உங்களுக்கு உடனடியாக வந்து சேரும்!
"உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்
உன் தாயையும் உன் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது" (எபே. 6:2,3)
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகின்றேன்! உங்கள் வாழ்க்கையில் நன்மைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற எனது அன்பு தம்பி தங்கையரே! மேலே உள்ள வசனத்தின் மூலமாக உங்களை சந்திப்பது தேவ சித்தமாய் இருக்கின்றது. இன்றுள்ள வாலிபரின் வாழ்க்கையின் அதிகமான தாக்கம் நண்பர்களிடத்தில் இருக்கின்றது! நண்பர்களும் இக்கட்டான நேரத்தில் உதவி செய்வதின் மூலமாக, அதை உறுதி செய்கின்றனர். வாலிபரின் வாழ்க்கையின் நோக்கம், வாழும் முறை இவைகளில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது!
சில வருடங்களுக்கு முன், தடா என்ற நகரில், மீனவர் குப்பத்தில் சிறுவர் வேதாகம பள்ளி நடத்த அழைக்கப்பட்டிருந்தேன். நான் முதுநிலை (15 வயது முதல் 25 வயதுவரை) ஆசிரியராக பணியாற்றினேன். அவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். உங்களுக்கு யாரை அதிகமாக பிடிக்கும்? எல்லாரும் அமைதியாக இருந்தனர். என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தனர். பதில் சொல்ல விரும்புகிறவர்கள் உங்கள் கைகளை தூக்கி காட்டுங்கள் என கூறினேன். உடனே நான்கு, ஐந்து பேர் கைகளைத் தூக்கினர். அந்த வகுப்பில் மொத்தம் 18-20 பேர் இருந்தனர். கைதூக்கிய ஒரு தம்பியைப் பார்த்து நீ சொல்லு என்றேன்; அவன் மிகுந்த சத்தமாக எனக்கு காஞ்சனாவை பிடிக்கும் எனக் கூறினான். மற்ற பிள்ளைகளெல்லாம் சிரித்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை, காஞ்சனா யார்? என்று கேட்டேன். மற்ற பிள்ளைகள் பதிலளித்தனர், அது தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் வரும் பாத்திரம் (கேரக்டர்) என்றனர்.
வாலிப பருவம் என்பது, ஒரு கிடைத்தற்கரிய ஒரு பருவம். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், நண்பர்களோடு விளையாடவேண்டும். வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டும். அப்பா, அம்மா சாப்பிட்டார்களா என்ற கவலை இல்லை. பணத்தைக் குறித்து எந்தவிதமான கவலையும் இல்லை. அப்பா கொடுக்காவிட்டால், அம்மா கொடுப்பார்கள். எப்பொழுதும் மகிழ்ச்சி, எந்தவித கவலையும் இல்லை, பொறுப்பும் இல்லை. மகிழ்ச்சிதான்.... தங்கச்சிகள்..... பள்ளி, கல்லூரிக்கு சென்றுவந்தபின் வீட்டுப் பாடங்களை முடிப்பது, அம்மாவுக்கு உதவி செய்வது, இப்பொழுது சுட்டுரை, முகநூல் பக்கங்கள், வாட்ஸ் அப் என வலம் வர வேண்டியது. கிறிஸ்த்தவ குடும்பங்களில் வேதவாசிப்பு, ஜெபம் இதையும் கூட்டிக்கொள்ளலாம். பொதுவாக இந்த பருவம்தான் உங்கள் எதிர் காலத்தை நிர்ணயம் செய்கின்றது.
மேலே உள்ள வசனத்தில் வாசிக்கிறோம், உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணு..... உன்னுடைய பெற்றோரை கனம் பண்ணு எனக் கூறவில்லை. காரணம் உன் அம்மாவின் அன்பு வேறு, உன் அப்பாவின் அன்பு வேறு.
அம்மாவின் அன்பு: இது பொதுவாக சரீரத்துக்கு அடுத்ததாக இருக்கும். சாப்பிட்டானா? இன்னும் சாப்பிடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? சாப்பிட்டுவிட்டு போய் படி. கோபம் வந்தால் உடனே தண்டனை; இங்கே வா என்றால் உடனே அழுதுகொண்டே ஓடிப்போய் சேலையை பிடித்துக் கொண்டு நிற்கும். அடித்தாலும் பிடித்தாலும் அம்மா. அம்மாவின் அன்பு, என்வீடு, என்பிள்ளை என்பதிலேயே நிற்கும். அம்மா பிள்ளையை தூக்கினால், இடுப்பிலே தூங்குவார்கள், அல்லது கைகளிலே எடுத்து தனது மார்போடு அனைத்து தூங்குவார்கள். பொருள்: நீ என் மனதுக்கு இனியவன்(ள்) என் மகள் தப்பே செய்திருக்க மாட்டான்(ள்) இப்படி. அப்பாவின் அன்பு அப்படி இல்லை.
அப்பாவின் அன்பு: இவரது அன்பு கண்டிப்பு. இவர் தன் பிள்ளைகள் இந்த உலகிலே வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கின்றார். உலகில் உள்ள பிரச்சனைகளை தன் மகன்(ள்) கற்றுக் கொண்டு எல்லாவற்றிலும் வெற்றிசிறக்க வேண்டும் என உளமார விரும்புகின்றார். ஆனால் அதை சொல்லிக் கொடுத்து அல்ல, வழிநடத்தி கற்றுக் கொடுக்க விரும்புகின்றார். அது பிள்ளைகளுக்கு வலியை கொடுக்கின்றது, அவருக்கும் வலிக்கின்றது. ஆனால் வேறு வழியில்லை. தண்டிக்கிறார் ஆனால் மனதில் வருந்துகின்றார். வருத்தத்தை வெளியே காட்டிக்கொள்ளுவதில்லை. பிள்ளையை தூக்கும்போது நீ என்னைவிட உயரத்துக்கு வரவேண்டும் / இன்னும் தூரத்தைப் பார்க்க வேண்டும் என்று தன் தோளின்மேல் தூக்கி சுமக்கின்றார். இது அப்பாவின் அன்பு. சில வீடுகளில் அப்பாவின் அருகிலேயே செல்ல முடியாது. அப்படிப்பட்டவர்தான் அப்பா. எனவே பெரும்பாலான வீடுகளில் அப்பாவைவிட அம்மாவையே பிடிக்கின்றது. (ஒரு சில வீடுகளைத் தவிர, தன் பிள்ளைகளை வைத்துக்கொண்டே, தன் புருஷனைத் திட்டுவது வாடிக்கையாக உள்ளது. பிள்ளைகளின் கண்ணோட்டத்தில் இதை பாருங்கள்... இன்னும் சில சகோதரிகள் அருகில் யார் இருக்கின்றார்கள் என்பதையே பார்க்காமல் தன் புருஷனது காலை வாருவார்கள். முதலில் மனைவி தன் புருஷனை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். எல்லாப் பிள்ளைகளும் அப்பா, அம்மாவைத்தான் வாழுகின்றார்கள். பிள்ளைகளுக்கு முன்பாகவே, அப்பாவும் அம்மாவும் சண்டைபோட்டால் எப்படி இருக்கும்? பிள்ளைகள் நம்பிக்கை இழக்கின்றார்கள். வாழ்க்கையே சூனியமாகி விடுகின்றது. பிள்ளைகளின் மனதும் கல்லாகிவிடுகின்றது. சிறுவர் ஊழியத்தில் நாங்கள் இப்படிப்பட்ட பிள்ளைகளை, சாதாரண நிலைக்கு கொண்டுவருவது சகஜம்) சரி தலைப்புக்கு வருவோம்!
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தனது மகனது பள்ளி ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதை இங்கு பார்க்கப் போகின்றோம்! ஒரு தந்தை நேரடியாக தன பிள்ளையை நடத்த முடியாத பகுதிகளுக்கு அவர், தனது மகனது ஆசிரியரின் உதவியை நாடுகின்றார். ஒரு தந்தையின் அன்பை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்!
"இன்று எனது மகன் தனது பள்ளி வாழ்க்கையை ஆரம்பிக்கின்றான்; சில நாட்களுக்கு அவன் முன்பின் அறிந்திராத புதியவர்களை சந்திப்பான் எனவே ஆசிரியரே! அவனை மென்மையாக நடத்துங்கள்; அவன் பல கண்டங்களைத் தாண்டி வீர, தீரச் செயல்களைப் புரியவேண்டும்; எல்லா வீர தீரச் செயல்களும் போராட்டங்களையும், துன்பங்களையும், கவலைகளையும் உள்ளடக்கியது. இப்படிப்பட்ட வாழ்க்கை வாழுவதற்கு அன்பு ஆசிரியரே நம்பிக்கை, அன்பு, தைரியம் தேவை. இவைகளை எனது அன்பு மகனின் கைகளை பிடித்துக்கொண்டு இதமாக கற்றுக் கொடுங்கள். எல்லா மனிதர்களுமே, நேர்மையானவர்களுமல்ல, உண்மையானவர்களுமல்ல என்பதை இவன் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு ரௌடிக்குள்ளும் ஒரு கதாநாயகன் இருக்கின்றான் என்றும், ஒவ்வொரு அரசியல்வாதிக்குள்ளும் ஒரு அற்பணிப்புள்ள தலைவன் இருக்கிறான் எனவும் கற்றுக்கொடுங்கள்;
உங்களால் முடிந்தால், கீழே கிடந்தது எடுக்கும் 100ரூபாயைக் காட்டிலும், உழைத்து சம்பாதிக்கும் 10 ரூபாய் மிக உயர்ந்தது எனவும் கற்றுக் கொடுங்கள். பள்ளியில், அருமை ஆசிரியரே, ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மேலானது எனக் கற்றுக்கொடுங்கள்.; ஏமாற்றங்களை எப்படி நேர்த்தியாய் எதிர்கொள்ளுவது என்பதை பற்றியும், வெற்றியை எவ்வாறு கொண்டாடுவது எனவும் கற்றுக் கொடுங்கள்;
அனைத்து மனிதர்களிடமும் மென்மையான போக்கை கையாளவும், கடுமையான மனிதர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்! பொறாமையில் இருந்து ஓடிவிடவும், உங்களால் முடிந்தால் மென்மையாக சிரிப்பது என்பதையும் கற்றுக் கொடுங்கள்; துன்பத்திலும் எவ்வாறு சிரிப்பது என்றும், கண்ணீர் விடுவது (அழுவது) அவமானம் இல்லை என்றும் உங்களால் முடிந்தால் கற்றுக்கொடுங்கள்; தோல்வியில் கூட ஒரு பெருமை இருக்கமுடியும், வெற்றியில் கூட மனத்தளர்வு இருக்கக்கூடும் என்பதையும் கற்றுக்கொடுங்கள்; எடுத்ததற்கெல்லாம் குறை கூறுபவரை ஏளனமாக பார்க்க கற்றுக் கொடுங்கள்;
புத்தகங்களின் மேன்மையைக் கற்றுக்கொடுங்கள்; ஆனால் வானத்தில் பறக்கும் பறவைகளையும், மலைகளில் மலரும் மலர்களையும், அதிலே மொய்க்கும் தேனீக்களையும் பற்றி ஆழ்ந்து சிந்திக்க அவனுக்குப் போதிய நேரங்கொடுங்கள்; அநேகர் இவையெல்லாம் தவறு எனக் கூறினாலும் தன் சொந்த கருத்துக்களில் நம்பிக்கை வைக்க கற்றுக் கொடுங்கள்;
எல்லோரும் செய்வதுபோல கூட்டங்களுக்குப் பின் சென்றுவிடாமல், என் மகனைப் பெலப்படுத்துங்கள்! ஒவ்வொருவரையும் கவனித்துக் கேட்க கற்றுக் கொடுங்கள்; ஆனால், கெட்டவர்களை உண்மை என்ற சல்லடையில் சலித்து நல்லவற்றை தெரிந்துகொள்ள கற்றுக் கொடுங்கள்;
அவனது அறிவையும், திறமையையும் மேலான விலைக்கு விற்க, ஆனால் தனது இதயத்தையும், ஆத்துமாவையும் விற்றுவிடாமல் இருக்க உங்களால் முடிந்தால் கற்றுக்கொடுங்கள்; மனஉரத்தை பெற்றுக் கொள்ள பொறுமையையும், பொறுமையின்மையாய் இருக்க தைரியத்தையும் கற்றுக் கொடுங்கள்; தன் மீது உயர்ந்த நம்பிக்கைவைக்கவும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில், எப்பொழுதும் மனுக்குலத்தின் மீதும், தேவனின் மீதும் உயர்ந்த நம்பிக்கை வைக்கும்படியாக. இது நான் உங்களுக்கு கொடுக்கும் ஒரு ஒழுங்குமுறை. ஆனால் ஆசிரியரே, உங்களுக்கு எது சிறப்பாகத் தெரிகிறதோ, அதையே இந்த சிறுவனுகு கற்றுக்கொடுங்கள். ஏனெனில் இது என் மகன்.
ஆபிரகாம் லிங்கன் ஒரு ஜெப வீரன் என்பதை நன்கு அறிவீர்கள்! என் அன்பு தம்பி, தங்கையரே! தகப்பனின் அன்பு இப்படித்தான் இருக்கும். எனது அப்பாவாலதான் எனக்கு பிரச்சனை என்று நினைத்துக்கொண்டிருக்கிற வாலிபரே! அவர் வேலை செய்யும் இடத்துக்கு சென்று பாருங்கள்! அவருடைய உழைப்பை பாருங்கள்! உங்களை போஷிக்கும்படியாக, உங்களுக்கு நல்ல உடுப்பு எடுத்து கொடுக்க உங்களை படிக்க வைக்க அவர் படும் பாடுகளைப் பாருங்கள்! நீங்கள் நிச்சயமாகவே புரிந்து கொள்ளுவீர்கள் அவர் அன்பை.
இன்னும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்: உங்களால் உங்கள் குடும்பத்தில் பகிர்ந்து கொள்ள முடியாத எதையும் செய்யாதீர்கள்! அப்படி செய்தால் நீங்கள், உங்கள் தாய், தந்தைக்கு துரோகம் செய்கின்றீர்கள்! தமிழில் இவ்வாறு கூறுவார்கள்! 'சொந்த செலவிலே சூனியம் வைத்தான் என்று' அதுபோலதான். உங்கள் எதிர்கால நன்மைகள் உங்கள் பெற்றோரின் கைகளில்தான் இருக்கின்றது! அதைத்தான் வேதமும் உறுதியாக, தெளிவாக சொல்லுகின்றது. நிலைத்து நிற்கும் நன்மைகளும் அவர்களிடமிருந்துதான்!
நான் ஊழியம் செய்த இடத்தில், ஒரு கிறிஸ்தவ வாலிப மகள், தனது பாட்டியை முன்பு வைத்துக்கொண்டே, தனது பாட்டி அவளை நம்புவதில்லை என புகார் கூறினாள். எப்படி? என்று கேட்டேன். அவள் கூறியது, நான் பக்கத்தில் உள்ள மார்க்கெட்டில் வேலை செய்கின்றேன். எனக்கு என சொந்தமாக ஒரு கைபேசி வைத்துக்கொள்ள எனது பாட்டி என்னை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நான் கெட்டுப்போய்விடுவேனாம்! என்றாள். மட்டுமல்ல, நீங்களே சொல்லுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு கைபேசி வாங்கிக் கொடுத்திருக்கின்ரீர்களா? இல்லையா? எனக் கேட்டாள். "எனது பிள்ளைகள் கைபேசி வைத்திருக்கின்றார்கள்! (இந்த சம்பவம் நடந்த பொழுது எனது மூத்த மகள், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது பெண், +2 படித்துக் கொண்டிருந்தாள்) மூத்தவள் படித்த கல்லூரியில் கைபேசி அனுமதி இல்லை. எனவே வீட்டில்தான் இருக்கும். அடுத்தவள், வீட்டில் இருந்த தொலைபேசியில்தான் பேசுவாள். எங்களுக்கு (எனது மனைவிக்கும்) முன்பாகத்தான் தொலைபேசியில், தன் நண்பர்களோடு, (மாணவியர் மட்டும் படிக்கும் பள்ளி) தங்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள், கேள்விபதில்கள், வீட்டுப்பாடங்களில் வரும் சந்தேகங்கள் ஆகியவைகளைக் குறித்து விவாதிப்பாள். பெரியவள், செல்பேசியை உபயோகிப்பாள். எங்கள் பிள்ளைகள் மீது ஒரு வினாடி கூட எங்களுக்கு சந்தேகம் என்பதே வந்ததில்லை. "இப்படிப்பட்ட பிரச்சனை எங்களுக்கு வந்ததே இல்லை" என்றேன்.
பொதுவாக பெற்றோர்கள், தாங்கள் சந்திக்கின்ற பிரச்னையை வைத்தே தங்களது பிள்ளைகளை நடத்துவார்கள்! உனது அம்மாவை எங்கே? என்றேன். அவள், "எங்களுடன் இல்லை" என்றாள். நீ தவறாக உன் செல்பேசியை பயன்படுத்தமாட்டேன் என்று உன் பாட்டிக்கு காண்பித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்றேன். அவள் சென்ற பின் அவள் பாட்டியிடம், "ஒன்று வாங்கிக் கொடுங்கள், அவள் அதை தவறாக பயன் படுத்த மாட்டாள்" என்றேன்.
உங்கள் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் ஆகியவைகளை, கவனமாக உபயோகியுங்கள். வாழ்த்துகின்றேன்...
ஜெபிப்போம்!
அன்பின் பரலோகப் பிதாவே, நீர் எனக்கு கொடுத்திருக்கின்ற எனது பெற்றோருக்காக நான் கோடானுகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன்! பெற்றோருடனும், உற்றார் உறவினர்களோடு இணங்கி வாழ நீர் கொடுத்திருக்கின்ற வாய்ப்புகளுக்காக நன்றி! தொடர்ந்து எனது பெற்றோரின் மூலமாக எனக்கு நீர் தருகின்ற நன்மைகளுக்காக நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் பிதாவே. ஆமென்! ஆமென்!! ஆமென்!!!
No comments:
Post a Comment