4 Nov 2020

SIN CONSCIOUS MIND

 கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்கள் யாவருககும் வாழ்த்துக்கள்!

காலையில் எழும்போதே தலைப்பு எமது எண்ணத்திலே அலைமோதிக் கொண்டு இருந்தது. இதைத்தவிற்க எவ்வளவோ முயற்சித்தேன். போகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பிடித்தது. எனவே இந்தச் செய்தி எப்படி ஈஸ்கடோஸ் பத்திரிக்கைக் குடும்பத்துக்கு ஆசீர்வாதமாய் இருந்ததோ, அதைப் போல இப்பொழுது உங்களுக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் என விசுவாசிக்கின்றேன். 

சென்ற வருட இறுதியில், எனது மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்று இருந்தபோது, பல்வேறு விடயங்களைக் குறித்து பேசினோம். அவள் கேட்ட கேள்விகளில் ஒன்று, பாவம் என்றால் என்ன? உங்களுக்குத் தெரிந்திருக்கின்றபடி,  நமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட துண்டுப்பிரதியில், பாவம் என்றால் என்ன? தலைப்பிலே அனேக வசனங்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவற்றில் சில இங்கேயும்.

"அநீதியெல்லாம் பாவந்தான்." (1யோவான்5:17)

"சொற்களின் மிகுதியில் பாவம் இல்லாமல் போகாது" (நீதி. 10:19)

"தீய நோக்கம் பாவமாம்" (நீதி. 24:9)

"ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாய் இருக்கும்" (யாக்கோபு 4:17)

இதை எல்லாம் கூறியும் எடுபடவில்லை. அதாவது இதெல்லாம் விளக்கமே ஒழிய மிகச் சரியான பதில் இல்லை. ஆனால் காருண்யா எதிற்பார்த்தது, இதுவல்ல. இப்பொழுது விசுவாசம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டால், நீங்கள் எபிரேயர் 1:1ஐக் கூறுவீர்கள். ஆனால் காருண்யா எதிற்பார்த்தது இதுவல்ல, விசுவாசமானது இயற்கை விதிகளை உடைத்தெறியும், கடவுளின் உண்மைத் தன்மை இப்படிப்பட்டதைப் போல. சரி! இங்கே பாவத்துக்கு வருவோம்.... இந்தப் பகுதி கடைசியாக நான் செய்தியளித்த ஊழியர் ஐக்கியத்தில் பகிறப்பட்ட ஒன்று. இப்பொழுது உங்களுக்கு,

ஆண்டவர், மனிதன். மனிதன் கடவுளுடைய உள்ளத்தை உடைக்க முயற்ச்சிக்கின்றான், தன் செயல்களால்.... (விலக்கப்பட்ட கனியைப் புசித்து) ஆனாலும் ஆண்டவர் அவன் மீதிருந்த அன்பினால் அவனைத் தேடி வந்தாரே! ஆதாம் ஆண்டவருடைய உள்ளத்தைத் தன் செயல்களினால் உடைத்தாலும், ஆண்டவர் அவனைத் தேடி வந்தாரே.... ஆண்டவருடைய அன்பு அவனுடைய பாவத்தை மேற்கொள்ளுகின்றதே! பாவத்தின் சம்பளம் மரணத்தின்படி இங்கே மனிதனுக்கும் ஆண்டவருக்கும் இடையே பிளவு வர முடியாதே. இங்கே நீங்கள் கற்றுக் கொள்ளுவது, உன்னுடைய செயலினால் அதாவது, பீடி குடித்தல், சிகரெட் அடித்தல், மதுக்குடித்தல், விபச்சாரம், வேசித்தனம் மற்றும் நீ செய்கின்ற அத்தனை அழிச்சாட்டியங்களையும் ஆண்டவருடைய அன்பு மேற்கொண்டுவிடுகின்றது! ஆண்டவரிடமிருந்து மனுக்குலத்தைப் பிரித்துவிட வேண்டும் என்ற சாத்தானின் சதி தோல்வியில் தானே முடிகின்றது. இங்கே நீங்கள் செய்கின்ற செயல் அல்ல. உள்ளம், மனம், MIND SETTING. பிசாசு தன் தந்திரத்தினாலே, ஏவாளின் உள்ளத்திலே ஆண்டவரைக் குறித்த தவறான படத்தை வைத்தான். பூமியிலே அனைத்து உயிரினங்களின் மீதும் அதிகாரத்தைப் பெற்ற மனிதன், பெற்றுக் கொண்ட அதிகாரத்தைப் பற்றி நினைக்காமல், சிந்திக்காமல், யோசிக்காமல் ஆண்டவருக்கும் தனக்கும் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி யோசித்தான். உண்மையில் பாவம் என்பது உள்ளம் அழுக்கடைவதுதானே ஒழிய, உங்கள் செயல் அல்ல. ஆண்டவரின் அன்பு, கருணை ஆகியவற்றை அறியாததுதான் பாவம். ஆண்டவரை எரிச்சல் உள்ளவர் என்றும், பழிக்குப் பழி வாங்குபவர் என்றும் பார்த்துக் கொண்டிருத்தலே பாவம். 

இன்றைய சபைகள் ஆண்டவரைக் குறித்த எந்தப் படத்தை விசுவாசிகள் உள்ளத்திலே வைக்கின்றன. ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு, ஆண்டவருக்குப் பிரியமாய், சாட்சியாய் வாழ வேண்டும் என்ற உற்சாக மனதோடு வருகின்ற விசுவாசிகளுக்குப் பாவத்தையும், அதன் ஆழத்தையும் பற்றிப் போதித்துக் கொண்டிருக்கின்றன. ஆவிக்குறிய வாழ்க்கையின் முன்னேற்றத்தைத் தடை செய்துகொண்டு இருக்கின்றன. 

வேதாகமத்தின் இன்னொறு பகுதிக்குள்ளாக உங்களை அழைத்துச் செல்லவிருக்கின்றேன்....

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலே அடிமைகளாய் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். வெளிப்படுத்தல் 11:8ல், வாசிக்கிறபடி, 

"...அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொலலப்படும்;...."

 சோதோமையும் எகிப்தையும் இணைத்துக் கூறியிருப்பதின் பொருள், சோதோம் எப்படி பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும் நிறைந்திருந்ததோ அதைப் போலவே எகிப்தும் இருந்தது. எகிப்தின் வாழ்க்கை பாவத்தின் வாழ்க்கை, அடிமைத்தனத்தின் வாழ்க்கை. இங்கே பாவத்துக்கு, வறுமைக்கு இஸ்ரவேல் மக்கள் அடிமைகளாக இருந்தார்கள். பாவத்துக்கு அடிமைகள் எப்படி பிசாசுக்கும் அடிமைகளாவார்களோ, அதைப் போல இந்த மக்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள். (உபா. 6:21) இதன்படி பார்வோன் பிசாசுக்கு ஒப்பாகின்றான். சுருக்கமாக, பாவத்துக்குள் மூழ்கி, பிசாசுக்கு அடிமைகளாய் இருந்த மக்களை ஆண்டவர் விடுவித்தார். உபா.7:8ல், "....அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் (பாவத்திலிருந்தும்) அதன் ராஜாவாகிய பார்வோனின் (பிசாசின்) கையிலிருந்தும் உங்களை மீட்டுக் கொண்டார்"

மனந்திரும்பிய  (எகிப்திலிருந்து கிளம்பிய)  உடனே ஞானஸ்நானம். இங்கே 1கொரி. 10:2ன்படி, 

"எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்." 

இதற்கு முன்பாக ஒரு வசனம், யாத். 14:13ன்படி, 

"அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காண்பதில்லை". இதன் பொருள்,

கர்த்தருக்குள் நித்திரை அடைந்தவரைப் பெட்டிக்குள் வைத்து ஆனி அடித்துக் குழிக்குள் இறக்குவதற்கு முன், கடைசியில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். இனி உங்கள் வாழ்க்கையில், பார்க்கப் போவதே இல்லை என்று சொல்லுவதைப் போல, எல்லோரும் திரும்பி ஒரு முறை பார்வோனைப் (பிசாசைப்) பார்த்துக் கொள்ளுங்கள்; இனி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பிசாசைப் பார்க்கப்போவதே இல்லை. இப்பொழுது ஞானஸ்நானம். சிவந்த சமுத்திரம் வழியாக வனாந்திர வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கின்றீர்கள். இங்கேதான் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பமாகின்றது. மீண்டும் பார்வோனை - பிசாசை அவர்கள் சந்திக்காததைப் போல நீங்களும் பிசாசைச் சந்திக்கப்போவதே இல்லை.  

உங்கள்  வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைக்குப் பாவந்தான் காரணம் என்று எண்ணாதிருங்கள். விடுதலையாவீர்கள்! இயேசு என்ற பெயரின் அர்த்தமே அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார். (மத்தேயு 1:21)

பாவம் உங்களை ஆளுகை செய்ய முடியாது என்பதை வேதாகமத்தின் இன்னொரு பகுதியிலிருந்து பார்க்கலாம். அது ரோமர் 6:1-7. வரையுள்ள வசனங்கள்.

"ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே."

இந்த வசனத்தின் பொருள், பாவம் அதிகமாகப் பெருகியிருக்கின்ற இடங்களில் கிருபை பெருகுகின்றது.  காரணம், பாவத்திலே வாழுகின்றவர்கள் அழிந்து போகக் கூடாது என்றுதான், ஆண்டவர் கிருபையைப் பெருக்கித் தருகின்றார். இங்கே கிருபை என்பது, சிறிதும் தகுதியற்றவர்கள் மேல் ஆண்டவர் வைக்கின்ற இரக்கம்.  இங்கே இது கேள்வி வடிவத்தில் கேட்கப்படுகின்றது. கிருபை பெருகும்படிக்கு நீங்கள் பாவத்தில் நிலைத்து நிற்கலாமா? கூடாதே அல்ல, முடியாதே. உதாரணமாக, 

நீங்கள் ௹10,000/-ஐ எடுத்துக் கொண்டு, உங்கள் மனைவி, பிள்ளைகளோடு ஒரு பொருட்காட்சிக்குச் செல்லுகின்றீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், மனைவிக்கு, பிள்ளைகளுக்கு எனப் பொருட்களை வாங்குகின்றீர்கள். மீதி இப்பொழுது உங்கள் மனைவி கையில் ௹1,000/- இருக்கின்றது என வைத்துக் கொள்ளுவோம். பொருட்காட்சியை விட்டு வெளியேரும்போது, கடைசியாக ஒரு கடைக்குள் செல்லுகின்றீர்கள். அது ஒரு மீன் காட்சியகம். அதில் உள்ள ஒரு கண்ணாடித்தொட்டி உங்கள் கவனத்தைக் அதிகமாகக் கவருகின்றது. நம்ம வீட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றீர்கள். விலை ௹3,500/- உடனே மனைவியிடம் பணத்தை எடு என்று கூறுகின்றீர்கள். என்னிடம் ௹1,000/-தான் இருக்கின்றது என்கின்றார்கள். இப்பொழுது உங்களுக்கு விருப்பமான மீனை வாங்க முடியுமா? கூடாதா? பதில் கூடாது அல்ல, முடியாது என்பதுதான். இதைப்போலத்தான் பாவத்தில் நிலைத்து நிற்க முடியாது. வசனம் 3ல், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? ஞானஸ்நான ஆராதனை என்றாலே அடக்க ஆராதனைதான். தண்ணீருக்குள் மூழ்கும்போது, பாவத்துக்கு மரித்தவர்களாக அடக்கம் பண்ணப்படுகின்றீர்கள். எனவே மரணத்தின் சாயல் உங்களிடத்தில் இருக்கின்றது. மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருகிறானே. 

இதைப் படிக்கிற நீங்கள் யாவரும், அதாவது ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் பாவத்துக்கு மரித்திருக்கின்றீர்கள். எனவே பாவம் உங்களை ஆளுகை செய்ய முடியாது. ஆகையால் இன்னும் நீங்கள் பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும் என்று ஜெபித்துக் கொண்டிருப்பீர்களெனில், நீங்கள் எகிப்திலே, பாவத்துக்கு அடிமையாக, பிசாசின் ஆளுகைக்குள்ளாக, மனந்திரும்பியதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட நிகழ்வுக்கு முன்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்றுதான் பொருள். இறுதியாக,

ஏற்கனவே எங்கள் ஈஸ்கடோஸ் பத்திரிக்கைக் குடும்பத்தார் அனைவருக்கும் தெரிந்த சத்தியம், தேவன் தனது உறவின் அடிப்படையிலேயேதான் ஆசீர்வதிக்கிறார் என்பது. இந்த உறவுக்கும் பாவத்துக்கும் கூடச் சம்பந்தம் இருக்கின்றது. அடிப்படை வசனத்திலிருந்து வருவோம்!

யோவான் 1:12ல், 

"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்."

இயேசு என்ற பெயரை விசுவாசித்து, இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் அத்துனைபேரும் தேவ பிள்ளைகள்தான். இதன்படி நீங்கள் ஆண்டவருடைய பிள்ளைகளாய் இருக்கின்றீர்கள். 1யோவான் 3:19ல்,

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்."

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யக் கூடாது என்று இல்லை. செய்யான் என்று இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ளுவதில் உங்களுக்கு ஏதுவும் சிரமம் இருக்காது என நினைக்கிறேன். ஏன் பாவஞ்செய்வதில்லை? நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனது வித்து (விதை/வசனம்/மனதில் இருந்த வரைபடம்) அவனுக்குள் இருக்கிறது. அவனது வாழ்க்கை தேவனால் டிஸைன் பண்ணப்பட்டிருக்கிறது. எனவே அவன் பாவஞ்செய்யமாட்டான். மேலும் 1யோவான்5:18ல்,

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்."

தேவனால் பிறந்த பிற கிறிஸ்தவர்களைப் பார்க்கும்போது, பாவஞ்செய்யான் என்று நீங்கள் அறிந்திருக்கிறபடி பாருங்கள். அவன் தன்னை பாவத்துக்கு விலக்கிக் காத்துக் கொள்ளுகின்றான். அந்த உள்ளுணர்வை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். 

என்ன நண்பர்களே! இங்கே கூறப்பட்டுள்ள செய்தியைக் கவனமாகப் படித்தீர்களா? சத்தியத்தைக் குறித்து எவ்வளவாய் நீங்கள் அறிந்திருக்கின்றீர்களோ, அவ்வளவாய் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இப்பொழுது பாவத்தைக் குறித்த உங்கள் மனதில் உள்ள படம் மாற்றப்பட்டு, புதிய படத்தைப் பெற்றிருக்கின்றீர்கள்! இச்செய்தியின் மூலம் உங்கள் உள்ளம் புதியதாக்கப்பட்டுள்ளது. நீங்கள் மறுரூபமாகி இருக்கின்றீர்கள்! 

GOD BLESS YOU! 

HAVE A NICE AND WONDERFUL CHRISTIAN LIFE AHEAD OF YOU!!

8 Sept 2020

CHRISTIAN'S LIFE


 
கிறிஸ்தவ வாழ்க்கை

கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் யாவரையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்!

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சூப்பரான வாழ்க்கை! நீங்கள் எப்படி வாழுகின்றீர்கள்!!

உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது?

உங்களில் பெரும்பாலானோர், கிறிஸ்தவ பெற்றோர்களுக்குப் பிறந்திருப்பீர்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் உங்களைக் கிறிஸ்தவ ஆலயத்துககு அழைத்துச் சென்றிருப்பார்கள். அங்கே சென்று பாடல்களைக் கேட்டீர்கள், கற்றுக்கொண்டீர்கள். ஜெபத்தையும் அப்படியே.... நீங்கள் வளர்ந்து வரும்போது, உங்களுக்கு வேத வசனங்கள் மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்பு தனியாக ஜெபம் செய்யக் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்பு கூட்டத்துக்கு முன்பு.... பாவந்தான் ஆண்டவருக்கும் உங்களுக்கும் பிரிவினை உண்டாக்குகிறது. எனவே பாவமன்னிப்பை ஜெபத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் போதிக்கப்பட்டீர்கள். பெற்றுக் கொண்டீர்கள். பின்பு அபிஷேகம்....  கேள்விப்பட்டபொழுது எப்படியும் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்ப்பட்டது. அதற்காகவும் ஜெபித்தீர்கள். சில நாட்களில் அபிஷேகத்தையும் பெற்றுக் கொண்டீர்கள். கடினமான சூழல் வாழ்க்கையில் வந்தபோது, அபிஷேகம் நுகத்தை முறிக்கும் என்ற வசனத்தின்படி, கடினமான சூழ்நிலைகளை மேற்கொண்டீர்கள். இப்படியே உங்கள் ஆவிக்குறிய வாழ்வு வாழக் கற்றுக் கொடுக்கப்பட்டது. 

மேலே சொன்னபடி பெரும்பாலான கிறிஸ்தவர்களின் ஆவிக்குறிய வாழ்வு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஒரு வேளை மேலே கண்டவற்றுள் ஏதாவது விடுபட்டுப் போய் இருந்தால், பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். 

ஒரு வேளை உங்கள் மனைவியின் கற்புள்ள நடவடிக்கையின் மூலம், நண்பர்களின் வழிநடத்துதலால், அல்லது, கிறிஸ்தவ நற்செய்திக் கூட்டத்தின் மூலமாக நீங்கள் மனந்திரும்பி, இயேசுவை ஏற்றுக் கொண்டிருந்தால், மேலே உள்ளவற்றின்படி, உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைக் கட்டி எழுப்புங்கள். மேலும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு சத்தியம் ஒன்று உண்டு. அதைத்தான் நீங்கள் கீழே பார்க்கவிருக்கின்றீர்கள். அது,

கிறிஸ்தவ வாழ்க்கை ஓர் அழைப்பு: இயேசுகிறிஸ்துவின் முக்கிய மிஷனில் ஒன்று, "பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்". இதுதான். இதையே மாற்கு 2:17; லூக்கா 5:32 வசனங்களில் இருந்தும் பார்க்கலாம். நீங்கள் அனைவருமே கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படியாக அழைக்கப்பட்டவர்கள்தான். கலாத்தியர் 1:15ல்,

 "அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்". 

இப்பொழுது இயேசுவை சொந்த கடவுளாக ஏற்றுக் கொண்ட யாராய் இருந்தாலும் இந்த வசனத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கலாம். ஆக நீங்கள் அனைவரும் அழைக்கப்பட்டவர்கள்!!

முதன் முதலாக ஆபிரகாமை தேவன் அழைத்தபொழுது வாக்குத்தத்தத்தைக் கொடுத்து அழைத்தார். இதைத் தொடக்கநூல் 12:1,2,3 வசனங்களில் பார்க்கலாம். ஆக உங்களை அழைத்த தேவன் உங்களுக்கென, பிரத்தியேகமான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் அந்த வாக்குத்தத்தத்தை முன்னிலைப் படுத்தி, மையப்படுத்தி வாழ அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள்! நீங்கள் எந்த ஒரு நிச்சயமும் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை வாழ அழைக்கப்படவில்லை. ஆண்டவர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு, அவனுடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இழையோடிக் கொண்டிருப்பதை நீங்கள் அறியலாம். இதுவரை உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் எதை வைத்து முடிவெடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஓர் ஒழுக்கமான, நேர்த்தியான, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டுமானால் உங்களுக்குத் தேவை, வாக்குத்தத்தம் அடிப்படையிலான வாழ்க்கை!!!

வாக்குத்தத்தம் உங்களை, அது நினைத்திருக்கின்ற இடத்திற்கு கவர்ந்து கொள்ளும். ஏனெனில் அது தேவனுடைய வாக்கு. அது மாறுவதே இல்லை. 

உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்த இடத்தில் தோற்றுப் போகின்றீர்கள்? உங்கள் சரீரத்தில் வியாதி இருக்கின்றது என வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் 1பேதுரு 2:24ஐ உறுதியாகப் பற்றிக் கொண்டீர்கள் எனில், நீங்கள்தான் வெற்றி வீரராகத் திகழுகின்றீர்கள். உங்கள் சரீரமே உங்களுக்கு வியாதியை உணர்த்திக் கொண்டிருந்தாலும், நான் வேத வசனத்தை மட்டுமே விசுவாசிப்பேன் என உறுதியாக இருந்தீர்கள் எனில், அந்த இடத்திலிருந்துதான் உண்மையான எழுப்புதல் ஆரம்பிக்கின்றது. அது உங்களுக்கு மட்டுமல்ல; உங்களைச் சுற்றி இருக்கின்றவர்கள் மத்தியிலேயும் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. வியாதி உங்களைவிட்டு போய்த்தான் ஆக வேண்டும். அது உங்கள் சரீரத்தை ஆளுகை செய்ய முடிவே முடியாது. இதை விடுத்து, எப்பொழுது நீங்கள் எல்லாருக்கும் வருகின்ற வியாதிதானென ஏற்றுக் கொள்ளுகின்றீர்களோ, அதாவது இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கின்றீர்களோ அந்த இடந்தான் நீங்கள் தோற்றுப்போகின்ற இடம். பிசாசானவன் ஜெயிக்கின்ற இடமும் அதுதான். சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் மாறினால் தோற்றுவிட்டீர்கள். வசனத்துக்கு ஏற்பச் சூழ்நிலையை மாற்றினால், நீங்கள்தான் வெற்றிவீரர்!!

கிறிஸ்தவர்களும் ஒரு காலத்தில் வறுமையில் இருந்தார்கள். ஆனால் ஒரு சில ஊழியர்கள் வறுமையும், ஆண்டவருடைய ஆசீர்வாதங்களில் ஒன்று என்ற பிரசங்கத்தைக் கேட்டு, எப்பொழுது வறுமையை ஏற்றுக் கொண்டார்களோ, அப்பொழுதே பிசாசானவன் ஜெயித்துவிட்டான். எனவே,

வேதவசனத்துக்கு ஏற்ப, உங்கள் உள்ளத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும், வறுமை மேன்மையானது என்ற கருத்து வேதாகமத்தில் எந்த இடத்திலும் இல்லை. பஞ்சம் வந்தது, ஒரு சபையில் இருந்த விசுவாசிகள், பஞ்சம் பாதித்த இடங்களில் உள்ள சபைகளின் விசுவாசிகளுக்குத் தங்கள் திரானிக்கு மேலாகப் பொருளுதவி செய்தார்கள்! ஆனால் வறுமை ஒரு ஆசீர்வாதம் என அவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்னும் சில ஊழியர்கள், பிரதர்.... பிசாசுக்கு அம்மாவாசை, பௌர்னமி என்றால் கொண்டாட்டம். அந்த நாட்களில்தான் நாம் உபவாசமிருந்து, பிசாசுக்கு எதிற்த்து நிற்க வேண்டும் எனக்கூறி, அம்மாவாசை உபவாச ஜெபம், பௌர்னமி ஜெபம் என்று சென்னையிலே நடத்திக் கொண்டிருந்தார்கள். கொரோனாவினால் அந்த ஜெபங்கள் எதுவும் நடக்கவில்லை. இப்பொழுது பிசாசு எங்கே போனான் என்றும் தெரியவில்லை.

பிசாசின் கிரியை இருக்கின்றது என ஒத்துக் கொள்ளுகின்றேன். ஆனால் அது எங்கே இருக்கின்றது என்பது மிக முக்கியம். ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாத ஆவிசுவாசிகளிடம்தான் இருக்க வேண்டும். விசுவாசிகளிடம் இருந்தால்.... கவனிக்கப்பட வேண்டிய விடயம்.... 

எங்கள் ஊழியத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு இங்கே எழுதுவது எங்களுக்குச் சரியாகப்படுகின்றது. அது பில்லிசூனியத்தைப் பற்றியது. 

அவரது குடும்பம் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பம். ஏதோ ஒரு சூழலில், அவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, வியாபாரம் செய்துவந்த மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், தனக்கு பில்லிசூனியம் வைத்துவிட்டார்கள் என நம்ப ஆரம்பித்துவிட்டார். (எண்.23:23ஐ மீறி) பிறகென்ன பிசாசு அதைவைத்தே அவரது குடும்பத்தைக் கசக்கி பிழிய ஆரம்பித்துவிட்டான்.

மிகக் கடுமையான நிலைமை. தனது தொழிலை இழந்தார், தனது கடைசி மகனுடைய நிலைமை சரியில்லை. பல்வேறு இடங்களிலே விபத்துக்களைச் சந்தித்தார். அதுவும் அவர் இப்படி விபத்து நடக்கும் என நினைத்தபடியே நடக்கும். இதிலிருந்து விடுபடுவதற்கு ஜெபிக்க ஆரம்பித்தார். தான் ஆராதிக்கப் போன சபை ஊழியர்களை எல்லாம் அழைத்து வந்து ஜெபிக்க ஆரம்பித்தார். இவருக்காக ஜெபித்த ஊழியர் அனைவரும் நினைவிழந்து கீழே விழுந்தனர். இவர், அவர்கள்மேல் கைகளை வைத்து ஜெபித்து எழுப்பிவிடுவார். அவர் சொன்னது: பில்லிசூனியத்தை எடுத்தால், அடிக்கும்படி, சூனியத்தை எடுக்க முடியாதபடி வைத்துவிட்டனர் என்றார். 

அவர் பேசியதிலிருந்து, நான் அறிந்து கொண்டது: ஆண்டவருடைய வல்லமையைக் காட்டிலும் பில்லிசூனியந்தான் பெரியது என நம்ப ஆரம்பித்துவிட்டார் என்பதுதான். (உங்களில் எத்தனைபேர் இயேசுவைக் காட்டிலும், பிசாசுதான் பெரியவன் என்றும், இயேசுவின் தழும்புகளைக் காட்டிலும்  வியாதிதான் பெரியது என்றும், இயேசுவின் தரித்திரியத்தைக் காட்டிலும், வறுமைதான் பெரியது என நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்) அந்தப் பாதிக்கப்பட்ட விசுவாசியை அறிமுகம் செய்தவர் அப்பொழுதுதான் ஊழியத்தை ஆரம்பித்திருந்தார். நாங்கள் இருவரும் ஜெபிக்கப் போன இடத்தில் பேசியதுதான் மேலே உள்ள அனைத்து உரையாடலும். 'நீங்கள் எங்களுக்காக ஜெபியுங்கள், ஏதாவது ஆனதென்றால் நான் உங்களுக்காக ஜெபித்து எழுப்பிவிடுகின்றேன்'என்றார்.

ஆண்டவருடைய கிருபையால் ஒரு சில அடிப்படை சத்தியங்கள் எனது உள்ளத்திலே ஆழமாகப் பதிந்து போயிருந்தது. அவையாவன:

1. மந்திரவாதம், குறி சொல்லுதல் என எனக்கு விரோதமாக யாரும் செய்ய முடியாது. (எண்.23:23)

2. ஆண்டவர் என்னை ஒருக்காலும் குற்றப்படுத்த மாட்டார் (எண்.23:21)

3. என்னை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம் (எண்.24:1)

எனவே அவர் கூறியதை எனது மனம், ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஆண்டவர் அவரையும், அவர் குடும்பத்தையும் விடுதலை செய்தார். கடைசியாக அவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டேன். ஆண்டவர் உங்கள் பாவங்களை மன்னித்திருக்கிறாரென எதை வைத்துச் சொல்லுகிறீர்கள்?

அவர், "இதை யாராவது சொல்ல வேண்டுமா? என் உள்ளமே எனக்கு இதைச் சொல்லுகிறது".

நான், "வசன ஆதாரத்தைக் கேட்கிறேன்".

அவர், "1யோவான்1:7,9".

நான், "இந்த வசனத்தை விசுவாசிக்கிற நீங்கள் ஏன் எண்ணாகமம் 23:23ஐ விசுவாசிக்கக் கூடாது?". 

அவரிடம் பதில் இல்லை.

எனக்கன்பான நண்பர்களே, நீங்கள் சந்திக்கின்ற பிரச்சனையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? உங்களைக் கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி அழைத்தவர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி பார்த்தால், அதின் அடிப்படையில் பார்ப்பீர்கள். உங்கள் சூழ்நிலையையே மாற்றி அமைப்பீர்கள்! எதையும் எதிர்கொள்ளப் பெலனடைவீர்கள்!! உங்களை வீழ்த்த யாராலும் முடியாது!!! 

ஆண்டவரே குற்றஞ்சுமத்தாத உங்களை முதலாவது நீங்கள் மன்னியுங்கள்! குற்றமனசாட்சியிலிருந்து விடுதலையாவீர்கள்!! உங்கள் வாழ்க்கைத் துணைவரை மன்னியுங்கள்! உங்கள் அரமணைக்குள்ளே சமாதானமும், சுகமும் ஆட்சி செய்யும்.

கிறிஸ்தவ வாழ்க்கை, ஆண்டவரால் அழைக்கப்பட்ட வாழ்க்கை என்பதற்கு மேலும் ஒரு சில வசனங்களைப் பார்ப்போம். (ரோமரிலிருந்து மட்டும்) வ.8:28ல்,

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு  கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்"

வ.8:30ல்,

"எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிரார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறாறோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்"

வ.9:24ல்,

"அவர் யூதரிலிருந்து மாத்திரமல்ல, புறஜாதிகளிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே"

வ.11:29ல்,

"தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே". 

எனவே ஒரு தீர்மாணத்திற்கு வருகின்றோம், ஆண்டவருடைய ஆழைப்பின் மீதுதான் உங்கள் வாழ்க்கை இருக்கின்றது. அழைத்தவர் உங்களைச் சும்மா அழைக்கவில்லை, ஒரு விருந்தை ஆயத்தப்படுத்திவிட்டுதான் அழைத்திருக்கின்றார். 

கிறிஸ்தவ வாழ்க்கையே ஒரு விருந்தின் வாழ்க்கைதான். படைப்பிலிருந்தும் இதைப் பார்க்கலாம் (தொடக்கநூல் முதல் அதிகாரம்). விசுவாசிக்கின்றவர்கள் பாக்கியவான்கள். ஈசாக்கு வரவர விருத்தியடைந்தான் என்பதைப் போல நீங்களும் தினமும் விருத்தியடைவீர்கள். இறுதியாக,

எபேசியர் 1:18,19ன்படி

"தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்.... நீங்கள் அறியும்படி அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகின்றேன்" 

அறிவிப்பு: 1. 

இந்த வலைத்தளத்தில் நீங்கள் உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்!

அறிவிப்பு: 2. 

"ஐசுவரியம் VS பணஆசை" 

என்ற தலைப்பில் 32பக்க புத்தகம் வெளியிட்டிருக்கின்றோம். ஒன்றின் விலை இந்திய ௹10/- மட்டுமே. உங்கள் முகவரியைக் கீழே உள்ள எண்ணுக்கு அனுப்பி வைக்கவும். இப்புத்தகம், குறிப்பாக ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

அறிவிப்பு:3.

 CELL NO: 9840836690

G PAY NO: 9840836690

selvin12zion@gmail.com

16 Aug 2020

DO YOU KNOW ONE THING?


உங்களுக்கு ஒன்று தெரியுமா?

கிறிஸ்துவில் அன்பான நண்பர்கள் யாவரையும் வாழ்த்துகின்றேன்! மேலே உள்ள தலைப்பில் ஒரு முக்கியமான விடயத்தைப் பகிற்ந்து கொள்ளுகின்றேன்!!

"எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்" (லூக்கா 16:13)

அறிந்தோ அறியாமலோ எல்லாக் காலத்திலும் பணத்துக்கு, உடைமைகளுக்கு எல்லாவற்றைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் மக்களிடையே இருந்திருக்கின்றது. அதனாலேதான் கர்த்தர் மேலே உள்ள வசனத்தைக் கூறியுள்ளார். (தமிழில் கூட 'காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா' எனப் பாடிவைத்தான். ஆனால் இந்தப் பாடல், பைபிள் வசனத்துக்கு முறன்பாடானது, கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.)

எனவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பேசியதை விட, பணத்தைக் குறித்து அதிகம் பேசியுள்ளார். பாதுகாப்பைக் குறித்து பேசும்போது, ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவி, ஊழியக்காரர்களின் செயல்பாட்டைக் கூறும்போது, ஐந்து தாலந்து, இரண்டு தாலந்து, ஒரு தாலந்து எனப் பணத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசினார். மேலும் பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பேசும்பொழுது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன், நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டவன் எனப் பேசினார். பல்வேறு விடயங்களை, பேசும்போது பணத்தை ஒப்பிட்டுப் பேசினார். காரணம் மக்கள் பணத்தின் மீது ஈர்ப்புடன் இருக்கின்றார்கள் என்பதுதான்.

பணம் பாதாளம் வரைப் பாயும் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பணம் நித்தியமான வீடுகள்வரை ஏறும். 

இதைஎல்லாம் வாசிக்கும்போது, நீங்கள் பண ஆசையுள்ளவர்களாக இருங்கள் என நான் வற்புறுத்துவதைப் போன்றிருக்கும். விரிவாக விளக்கம் தேவை எனில் ஐசுவரியம் VS பண‍ஆசை என்ற ரூபாய் 10 மதிப்புள்ள புத்தகத்தைக் கேட்டு எனக்கு எழுதுங்கள். கீழே விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றேன்! லூக்கா16:9ல்,

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா16:9)

நீங்கள் மரித்து அல்லது மறுரூபமாகி பரலோகத்திற்குச் செல்லும்போது, உங்களை நித்தியமான வீடுகளுக்கு வரவேற்க இங்கே உங்கள் செல்வத்தினால் நண்பர்களைச் சம்பாதியுங்கள். பிரதர்! சிஸ்டர்!! நீங்கள் போதும் என்ற மனதுடனே கூடிய தெய்வ பக்தியிலேயே வாழ்ந்துவிட்டேன், எனவே ஊழியத்திலே விதைக்கவில்லே, நண்பர்களைச் சம்பாதிக்கவில்லை என்று சொல்லுவீர்களாகில், உங்களை வரவேற்க நண்பர்கள் என்று யாரும் நித்தியமான வீடுகளிலே இருக்கமாட்டார்கள்! எனக்குப் பரலோகம் போனாலே போதும் புரோ! அந்த அளவிற்கு பரலோகத்தை சபைகள் பூட்டி வைத்திருக்கின்றன என அறிகின்றேன். இயேசு என்னை வரவேற்றால் போதும் எனக் கூறுவீர்களானால், மேலே உள்ள வசனத்தின் பொருள் என்ன? எனக்கு மோசேயைத் தெரியும், தாவீதைத் தெரியும் எனக் கூறுவீர்களானால், உங்களுக்கு அவர்களைத் தெரியும், ஆனால் அவர்களுக்கு உங்களைத் தெரியாது.  

எனக்குச் சிறுவர் ஊழியத்திலே சிறிது பழக்கம் இருக்கின்றபடியினால் ஒரு சிறிய நாடகம், சரியா!

தாவீதை எடுத்துக் கொள்ளுவோம். அவரைப் பார்ப்பதற்கு பத்து நாட்களாக வரிசையில் காத்திருந்து, சந்திக்கின்றீர்கள். அவர்,

'நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகின்றீர்கள்? என்ற விசேடம்?'

'ஐயா உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன்! வேதாகமத்தில் படித்திருக்கிறேன்!! எங்கள் ஊழியர்கூட உங்களைப் பற்றி, நீங்கள் எழுதிய பாடல்களைக் குறித்து நிறைய கூறியிருக்கின்றார்'

அவர், 'வாழ்த்துக்கள்! இங்கே வந்து என்னைச் சந்தித்ததில். இன்னும் நிறையப்பேர் 20 நாட்களாக என்னைச் சந்திக்க வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்! போய் வாருங்கள்!! ஒரு நிமிடம்.... இங்கே உங்களை வரவேற்பதற்கு நண்பர்களைச் சம்பாதிக்கவில்லையா?'

எனவே உங்களுக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் எனக் கூறுவதை விட்டு விட்டு, உங்களது உலகப்பொருட்களினாலே இன்னும் இரட்சிக்கப்படாத நண்பர்களைச் சம்பாதிக்க முயலுங்கள்!! ஊழியத்திலே விதையுங்கள். விதைக்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! உங்களை வரவேற்க நித்தியமான வீடுகளில் பெருந்திரளான கூட்டம் ஆயத்தமாயிருக்கும்!! ஆதலால்தான் பணம், நித்தியமான வீடுகள்வரைக்கும் ஏறும். இயேசுவும் கூடப் பரலோகத்தைவிட பணத்தைப் பற்றி அதிகம் பேசியுள்ளார். சத்திய வசனத்தின் படி வாழுங்கள். கடைசியாக, 2இராஜாக்கள் 4:1ல்,

"தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்."

இந்தக் குடும்பத்தின் சூழலைப் பாருங்கள்! இது மிகவும் கடுமையானது! கொடுமையானது!! பணம் எவ்வளவுதூரம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மதிக்கப்பட்டது என்பதையும் இந்த வசனத்திலிருந்து அறிகின்றோம்! 

ஊழியத்திலே விதையுங்கள்! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!! 

ஜெபிப்போம்!

அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்! "விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" என்று 2கொரிந்தியர் 9:10ல், எழுதியிருக்கிற பிரகாரம் ஆசீர்வதியும்! இதைப் படிக்கின்ற நண்பர்கள் அனைவரையும் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை யாவறிலுமிருந்து விடுதலை செய்து ஆசீர்வதிப்பதற்காய் நன்றி! கிரமமாய் விதைக்கவும், அறுவடையை அபரிமிதமாகப் பெற்றுக் கொள்ளவும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென், ஆமென், ஆமென் 

ஐசுவரியம் VS பணஆசை 

என்ற புத்தகத்தைப் பெற, G PAY: 9840836690 மேலும் எமது மின் அஞ்சல் முகவரி: SELVIN12ZION@GMAIL.COM நன்றி! நன்றி!! நன்றி!!!

8 Aug 2020

COMMUNION SERVICE @ OUR HOUSE ON COVID - 19 LOCK - DOWN


இராப்போசனம்  / நற்கருணை

உலகளாவிய தொப்புள் கொடித் தமிழ் உறவுகள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்!

நீண்ட நாட்களுக்குப் பின், வலைத்தளத்தின் மூலமாக உங்களைச் சந்திக்கச் செய்த தேவனைத் துதிக்கிறேன்! 

நற்கருணை ஆராதனையில் பங்கு  பெற்று இயேசுவின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைப்  பாணம் பண்ணி இயேசுவின் மரணத்தை நினைவு கூறுகின்ற உங்களை வாழ்த்துகிறேன்!!

1கொரிந்தியர் 11:26ல்,

"ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்"

ஆதாம் ஆண்டவருடைய கட்டளையை மீறியபொழுது, ஆதியாகமம் 3:17ல்,

"பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்"

இங்கே ஆண்டவர் ஆதாமை சபிக்கவில்லை ஏனெனில் அவன் ஆண்டவரால் சிருஷ்டிக்கப்பட்டவன், மகனைப் போல. எனவே அவனது மீறுதலினால் வரும் விளைவுகளைப் பற்றி இங்குக் கூறுகின்றார். பூமி சபிக்கப்பட்டதினால், அவனுடைய வாழ்க்கை கடினமாகும் எனக் குறிப்பிடுகின்றார். 

காயீன் தன் சகோதரனான ஆபேலைக் கொலை செய்தபொழுது, ஆதியாகமம் 4:11,12ல்,

"இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியிலே நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்."

இங்கே காயீன் ஆண்டவரிடமிருந்து நேரடியாகச் சாபத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றான். நற்கருணை ஆராதனையில் இயேசுவின் இரத்தத்தையும் பாணம் பண்ணும்போது, உங்களால் இந்தப் பூமி ஆசீர்வதிக்கப்படுகின்றது! காயீனால் இந்த பூமி பெற்ற சாபம் நிவர்த்தியாகின்றது. அடுத்த முறை நற்கருணையில் பங்கு   பெரும்போது, என்னால் இந்தப் பூமி (உங்கள் தோட்டம், துரவு) ஆசீர்வதிக்கப்படுகின்றது என்ற விசுவாசத்தோடு பங்கு பெறுங்கள்!! 

மாம்சமும், இரத்தமும்: 

மத்தேயு 16:17ல், 

"இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரமாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்"

எமது ஊழியத்திலே நாம் அதிகமாக விரும்புவது, அனேக வெளிப்பாடுகளை உள்ளடக்கியதாய் எமது பிரசங்கம் இருக்க வேண்டும் என்பதுதான். பேதுருவின் மூலமாக வந்த வெளிப்பாடு எப்படி இயேசுவை உற்சாகப்படுததியதோ, அதைப் போல எமது பிரசங்கத்திலே பிதாவின் வெளிப்பாடுகள் நிறைந்ததாய் இருக்க வேண்டும். மட்டுமல்ல, இயேசுவிடமிருந்து உடனே வாக்குத்தத்தத்தைப் பேதுரு பெற்றுக் கொண்டதைப் போல, எமது சத்தத்தைக் கேட்கின்ற யாவரும் ஆண்டவரிடமிருந்து வாக்குத்தத்தத்தைப் பெற்று தங்கள் வாழ்க்கையிலே உயர்வடைய வேண்டும். அடுத்த முறை நீங்கள் நற்கருணை ஆராதனையில் பங்கு பெறும்போது, என்னையும் எமது ஊழியத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள்! மேலும், எபிரேயர் 2:24ல்,

"ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்காயிருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் மாம்சத்தையும் உடையவரானா்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,....."

இராப்போஜனத்தில் பங்குபெறும்போது, அவருடைய மரணத்தை நினைவு கூறுகின்றோம். அவருடைய மரணம், பிசாசை அழித்துவிட்டபடியினால், நமது வாழ்க்கையில் பிசாசுக்கு எந்த அதிகாரமும், வல்லமையும் இல்லை என்பதையும் நினைவு கூறுகின்றோம். அடுத்த முறை பங்கேற்கும்போது இந்தச் சத்தியத்தை மனதில் வையுங்கள்! 1கொரி.15:50ல்,

"சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை"

புதிய ஏற்பாடு முழுவதும் நமது உள்ளம், மனம், ஆத்துமா இவைகளைப் பற்றியே பேசுகின்றது. இயேசுவும் கூட மனந்திரும்புங்கள் என்றே பிரசங்கித்தார். உங்கள் ஆத்துமா வாழும்போது, உங்கள் வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்படுகின்றது. பிறனுக்கானவைகளையும் நோக்குவோம்!! கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கின்றோம். இன்று அனேகர் தங்கள் பாவ சுபாவம் போகவிலலையெனப் பேசுகின்றனர். அது போகாது, நாம் அதைச் சிலுவையிலே அறைந்திருக்கிறோம்!! அல்லேலுயா!!!!

உங்களை ஏதோ ஒரு நிச்சமில்லாதவற்றை விசுவாசிக்க வேதம் அழைக்கவில்லை. மிகவும் உறுதியான வசனம் நமக்கு உண்டு. அப்படிப்பட்ட வேதத்தின் வெளிச்சத்திலே நாம் நடக்கின்றோம். வாழ்த்துக்களுடன்....

ஜெபிப்போம்!

அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்! நாங்கள் பாவிகளாய் இருக்கையில் உம்முடைய அன்பை, உமது திருக்குமாரனாகிய இயேசுவை சிலுவையிலே அடிக்க ஒப்புக் கொடுத்ததிலிருந்து அறிகின்றோம்.... நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கின்ற மாறாத அன்பிற்காக உமக்கு நன்றி!! இராப்போஜனத்தின் மூலமாக இயேசு எங்களுக்காக, பாவங்களை மன்னிக்க, எங்களைச் சுகமாக்க, ஐசுவரியவான்களாக்க, எங்கள் வாழ்க்கையில் பிசாசின் சகல வல்லமைகளையும் அழிக்கச் சிலுவையில் மரணித்தார் என்பதை நினைவு கூறுகின்றோம். இதன் மூலமாகப் பூமி ஆசீர்வதிக்கப்படுவதற்காய் நன்றி! இயேசுவின் நாமத்தில் ஜெபங்கேளும் பிதாவே! ஆமென், ஆமென், ஆமென்....

ஊழிய அழைப்புக்கு

selvin12zion@gmail.com

Cell: +91 9840836690 & +91 8939018488

5 Mar 2020

OUR LORD JESUS CHRIST, WHO HAS BLESSED US WITH EVERY BLESSING

கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் யாவருக்கும் எமது அன்பின் வாழ்த்துக்கள்!!
"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" (எபேசியர் 1:3)
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் அனைத்துமே கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றது. வேத வாக்குத்தத்தத்தைக் கூறும்பொழுது, ஆமா, இது உனக்கு மட்டுந்தானா கொடுக்கப்பட்டிருக்கிறது! எனக்கும், பைபிள் படிக்கிற எல்லோருக்குமேதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன இருக்கிறது? என ஏளனமாகக் கேட்கும் நல்ல கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்! நீங்கள் மனம் சோர்ந்து போகாமல் இருக்க ஆண்டவர் ஒரு யோசனையை இங்கே தருகின்றார். அதுதான் நீங்கள் எடுக்கும் தீர்மானம் உங்களைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது!!
ஒரே வீட்டில் பிறந்த இரு சகோதரிகள் இருந்தனர். அவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிண்றீர்கள்? எனக் கேட்கப்பட்டது. ஒருத்தி, நான் டாக்டராக விரும்புகின்றேன் என்றாள். அடுத்தவளோ நான் ஐ.ஏ. எஸ். ஆக விரும்புகின்றேன் என்றாள். ஒரே குடும்பத்தில் கூட ஒரே விருப்பமுடையவர்களை பார்ப்பது அரிது. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, அவர்கள் படிக்கின்ற பாடங்களும் வேறுபடுகின்றது. இதைப்போலத்தான் தீர்மானங்களும். பொதுவாக, ஆண்டவரை அறியாதவர்கள், மாம்சத்தின்படி தீர்மானிப்பார்கள்! நாமோ ஆவியின்படி தீர்மானம் எடுக்க வேண்டும். 
பல வருடங்களுக்கு முன் நாங்கள் குடியிருந்த ஒரு அடுக்ககத்தில், ஒரு வக்கீல் தனது அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையாகிய மனைவியுடனும், இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தார். தினந்தோறும் தனது வேலை முடிந்து வரும்போது, நன்றாகக் குடித்துவிட்டு, தட்டு தடுமாறி, ரோட்டை அளந்துகொண்டே வருவார். இவரைப் பார்க்கும்பொழுது, நன்கு படித்தவர் ஏன் இப்படி இருக்கின்றார்? என மனம் வருந்தினேன். மட்டுமல்ல அவர் மனந்திரும்ப வேண்டும் என உபவாசித்து ஜெபித்துவந்தேன். அவரிடம் குடிக்காதீர்கள் எனச் சொல்லவே இல்லை. ஆனால் உபவாச ஜெபந்தான் அவருக்காக. ஒருநாள், நான் கேட்காமலேயே அவர் என்னிடம் வந்து, நான் இப்பொழுதெல்லாம் குடிப்பதில்லையெனக் கூறினார். நான், நீங்கள் ஒரு பைபிள் வாங்கி படியுங்கள் என்றேன். நாட்கள் கடந்தது, ஒருவருடம் இருக்கும். ஒருநாள் அவருடைய தந்தை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தவர்  இறந்துவிட்டார். அவருடைய பூதவுடலை எங்கள் அடுக்கத்திலிருந்து 20 வீடுகள் தள்ளி அவர் வசித்த வீட்டிற்கு கொண்டுவந்தனர். நாங்கள் துட்டி கேட்கப் போகலாம் என்று, அடுக்ககத்தில் வாழ்ந்து வந்த பிற குடும்பத்தினருடன் சென்றோம். கணவன் இறந்து விட்டாரெனக் கேள்விப்பட்ட அவருடைய மனைவியும் இறந்து விட்டார். துக்கம் அதிகமாகி, உறவினர்களுடன் சேர்ந்து இவரும் தண்ணீரைப் போட்டுவிட்டு தலைகீழாக நின்றுகொண்டிருந்தார். இன்றைய கிறிஸ்தவ நண்பர்களும் கூட மாம்சத்தின்படி முடிவெடுத்துவிட்டு, பின்பு பின் வாங்கிப் போவதை பார்க்கின்றோம். இது பழைய ஏற்பாட்டு தீர்மானம். 
இன்று இந்த வாக்குத்தத்தத்தின்படி தீர்மானம் எடுக்கவிருக்கின்றீர்கள். ஏற்கனவே பிதாவாகிய தேவன், உங்களை ஆசீர்வதித்து இருக்கின்றார். அதாவது நீங்கள் சகல ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிண்றீர்கள்! இப்படி ஆசீர்வதிக்கப்பட்டுள்ள அனைவரும், உங்களுடைய தனிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள நீங்கள் எடுக்கும்  
தீர்மானங்கள் உங்களுக்கு உதவி செய்கின்றது. ஒருவர் கடை வியாபாரம் செய்வார், ஒருவர் ஆசீரியராகப் பணிபுரிவார் இருவரும் ஒரேவிதமான தீர்மானங்களை எடுக்க முடியாது. 
கிறிஸ்தவர்கள், தீர்மானம் எடுப்பது என்பது, வேதவசனத்தின்படி எடுப்பது, மாம்சத்தில் எடுப்பது அல்ல, ஆவியில் எடுப்பது, கட்டாயத்தின் பேரில் அல்ல, விருப்பத்தின் பேரில் எடுப்பது, கிறிஸ்தவ ஊழியர்கள், தங்கள் அழைப்பின்மீது எடுப்பது. பிலிப்பியர் 2:13ன்படி,
".....தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்"
முதலாவது, கர்த்தரால் உங்கள் உள்ளத்திலே விருப்பம் வைக்கப்படுகின்றது, அதைத் தொடர்ந்து, விருப்பம் செயலாகின்றது. எனவே நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் உங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்கட்டும். உங்கள் உள்ளத்திலே என்னென்ன வாங்கவேண்டும் என விரும்பினீர்களோ அதையெல்லாம் இந்த வாரத்திலே வாங்க ஆண்டவர் உதவி செய்வார். வீடு கட்டுவது, திருமண காரியங்கள், வெளிநாடுகளுக்கு செல்லுவது, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது என எதையெல்லாம் உங்கள் உள்ளத்திலே விருப்பத்தை ஆண்டவர் வைத்திருக்கின்றாரோ எல்லாவறையும் நிறைவேற்ற இப்பொழுதே  அடித்தளமிடப்படுகின்றது. இரண்டாவதாக, 
கொடுங்கள்: இதுவரை ஊழியத்திலே விதைக்காதவர்கள், தாராளமாக விதையுங்கள். கொடுக்கின்ற அனைத்தையும் இருமடங்காக்குங்கள்! ஆண்டவர் உங்களை ஏற்கனவே சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார் என்ற இந்த வாக்குத்தத்தின்மீது செயல்படுங்கள்! கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாய் இருக்கின்றது. மூன்றாவதாக,
ஜெபமும், வேதவாசிப்பும்: நான் தினமும் 10 அதிகாரங்களைப் படிக்க வேண்டும் என்று தீர்மானிக்காமல், ஆண்டவர் என்னோடு வசனத்தின் மூலமாகப் பேசும் வேதாகமத்தைப் படிப்பேன் என்று தீர்மானியுங்கள். முதல் நாள், 20 அதிகாரங்கள் படித்தபின்பு பேசினார், அடுத்த நாள், இரண்டாம் வசனத்திலேயே பேசினார். பேசியவசனத்தை தியானியுங்கள்! ஆண்டவர் பேசிய வசனத்தோடு, ரோமர் 5:9ஐ இணைத்துப் பாருங்கள்! 
"இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க,........"
நீங்கள் நீதிமான் என்ற அடிப்படையில் அனுதினமும் உங்களுடன் ஆண்டவர் பேசிய வசனத்தைத் தியானித்தால், நீங்கள் எங்கேயோ போய்விடுவீர்கள்! தொடர்ந்து தினந்தோறும் பயிற்சி செய்யுங்கள்! உங்கள் வாழ்வு மட்டுமல்ல, உங்கள் பேரப்பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகள் என உங்கள் வம்சமே ஆசீர்வதிக்கப்படும். ஓரிரு நாள் விட்டுவிட்டீர்கள் என்றால், சோர்ந்து போக வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள்! ஆண்டவர் உங்கள் பிரயாசங்களை ஆசீர்வதிப்பார். இறுதியாக,
உங்கள் உள்ளான மனிதனைப் போஷிப்பதற்கு பணம் செலவிடுங்கள்! உள்ளான மனிதன் பலவீனமாய் இருந்தால், எளிதாக நீங்கள் அடிமைப்பட்டுவிட வாய்ப்புகள் இருக்கின்றன. பைபிளோடு கூட அநேக ஆவிக்குரிய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். அது உங்கள் உள்ளான மனிதனை பலமுள்ளவனாக்கும். வாழ்த்துக்களுடன்,
உங்கள் சகோதரன்,
செல்வின் துரை. செல்பேசி எண்: 9840836690
உங்கள் நண்பர்களுக்கு இந்தத் தளத்தை அறிமுகம் செய்யுங்கள்! நன்றி, வணக்கம்!
  

9 Feb 2020

MESSAGE FROM CHRISTMAS CELEBRATIONS

கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
நமது கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அளித்த தேவசெய்தியில் இருந்து ஒரு சில துளிகள்.... 
இது கிறிஸ்துமஸ் கொண்டாடி, நாட்கள் ஆகிவிட்டதே என்று இல்லாமல், என்றைக்கும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவையான செய்தியாய் இருப்பதால், சற்று கவனமாக வாசியுங்கள்! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! முதலாவதாக,
இயேசுவிடம் சென்று, ஐயா, நீங்கள் எதற்காக இந்த பூமிக்கு வந்தீர்கள் எனக் கேட்டால், அவர் என்ன சொல்லுவார்? 
"நீதிமான்களை அல்ல; பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்" (மத். 9:13; மாற்கு 2:17) 
என்பார் அல்லவா! கிறிஸ்தவர்களாகிய நீங்கள், நான் மட்டும் பரலோகத்துக்கு சொல்லுவேன், வேறு யாரும் என்னோடு வரவேண்டாம் எனச் சொல்லுவீர்கள் எனில், நீங்கள் பரிதபிக்கப்படத் தக்க இடத்தில் இருக்கின்றீர்கள்! பிறருக்கு இயேசுவை அறிவியுங்கள்! அறிவிக்கின்ற ஊழியங்களுக்கு தாராளமாக  உதவி செய்யுங்கள்! இதன் பொருள், நீங்கள் இயேசுவோடு இணைகிண்றீர்கள். இரண்டாவதாக, 
"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும் நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே" (2கொரி.8:9)
உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி, இயேசு தரித்திரராகவே இந்த உலகத்தில் பிறந்தார்; எட்டாம் நாளிலே, நியாயப் பிரமானத்தின்படி தேவாலயத்துக்கு சென்று பலி செலுத்த ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கக் கூட, அவர்களிடம் பணம் இல்லாமல் புறாக்களை பலியிட்டார்கள். அவர் அப்படிப்பட்ட ஏழைக் கோலமெடுக்கக் காரணம், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்குத்தான். உங்களை செல்வ செழிப்புள்ளவர்களாக்கும்படிக்கு, இயேசு தரித்திரரானார்.  
நாம் எப்படிப்பட்ட ஐசுவரியவான்களாகக் கூடாது எனத் தேவன் விரும்புகிறார் என்பதையும் வேதத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளுகின்றோம். முதலாவது,
லூக்கா 12:15-21 வரை வாசித்துப் பாருங்கள்! இயேசு கூறிய ஒரு உவமைக்கதை, இந்த ஐசுவரியவானின் நிலம் நன்கு விளைந்தது. சுக போகமாக வாழுவேன் என்று உள்ளத்தில் நினைத்தான். ஆண்டவர் முட்டாளெனத் திட்டினார். காரணம், தன்னைப்பற்றியே இவன் நினைத்ததுதான். தேவையில் இருந்த சொந்த காரர்கள், ஊர்க்காரர்கள் இருந்தார்கள். உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலைதான் இவனுக்கு இல்லை.  ஐசுவரியத்தில் பிரச்சனை இல்லை, சுயநலம்தான் பிரச்சனை. பிறனுக்கானவைகளையும் நோக்க மனமில்லை. இரண்டாவதாக,
லூக்கா 16:19ல் இருந்து கடைசிவரை வாசித்துப்பாருங்கள். இங்கே லாசரு, ஐசுவரியாவான் உவமைக் கதை. ஏழைகளைப் பற்றி அக்கறை இல்லாத வாழ்க்கை. சம்பிரம்பமாய் சுகபோகமாய் வாழ்ந்து வந்தான். இறந்த பின் என்ன நடந்தது? நிலைமை தலைகீழாக மாறியது. லாசரு பணக்காரன் ஆனான். பணக்காரன் ஏழையானான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள், ஆவிக்குரிய தரித்திரத்தில் இருக்கின்றார்கள். இவர்களைக் குறித்த கரிசனை இல்லையெனில், இந்த லாசரு, பணக்காரன் உவமையின்படி பணக்காரனுக்கு நடந்தது, உங்களுக்கும் நடக்கும் என்பதை மறந்து போகாதிருங்கள்! இது எச்சரிக்கை! மூன்றாவதாக,
மாற்கு 10:17-25வரை வாசித்துப் பாருங்கள்! இவன் மிகுந்த பணம் படைத்தவனாய் இருந்தபடியால், மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிண்றீர்கள்? இவன் கொடுத்துப் பழக்கமில்லாதவன். எனவேதான் துக்கத்தோடே போய்விட்டான். இன்று ஆண்டவர் உங்களை உன் சொத்துக்களை விற்று ஊழியத்துக்கு கொடு என்று கூறினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? 99.9% பேர் துக்கத்தோடே போய்விடுவீர்கள். அல்லது இது வேறு ஒரு இயேசு எனக் கூறிவிடுவீர்கள்! 0.1% பேரைப் பற்றி உங்களுக்குத் சொல்லுகின்றேன். இவர்கள் முதலாவது பத்தில் ஒன்றைக் கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள். அதிலே உண்மையாய் இருந்தவர்கள்! 
உங்கள் வருமானம் மிகக் குறைவாக இருக்கும் போதே நீங்கள் குறைந்த பட்சம் ஆண்டவருக்கு (ஊழியத்துக்கு) கொடுங்கள்! உதாரணத்துக்கு உங்களுக்கு, (இந்தியாவில் உள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு) வாரத்தில் இருநாட்கள்தான் வேலை கிடைக்கின்றது என வைத்துக்கொள்ளுங்கள். ஆக வார வருமானம் ரூ. 1000 இதில் பத்தில் ஒன்றை ஆண்டவருக்கு கொடுங்கள்! இதைப் பார்க்கும் இயேசு கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கிறான்(ள்) என அறிந்து, ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார் இப்பொழுது ஆறு நாட்களும் வேலை வருமானம் ரூ மூவாயிரம் ஆண்டவருக்கு நன்றியுள்ள இருதயத்தோடு கொடுக்க ஆரம்பிக்கின்றீர்கள்  இப்படி வருமானம் உயர உயர உங்கள் வருமானத்த்தில் பத்தில் ஒன்றை கொடுக்கிண்றீர்கள். இது உங்களுக்கு பெரிய விடயமாகத் தெரியாது. 
ஒரு சபையில் பத்தில் ஒன்றை ஆண்டவருக்கு கொடுப்பது அவசியம் எனப் பேசிவிட்டு, வெளியே வந்தேன். அந்த ஆராதனைக்கு வந்த ஒரு சகோதரன், என்னோடு பேசிக்கொண்டே வந்தார். நீங்கள் பத்தில் ஒன்றை கொடுப்பது பற்றிப் பேசினீர்கள். ஆண்டவர், ஒருவனுக்கு இரண்டு வஸ்திரம் இருந்தால், தேவையில் இருக்கிறவனுக்கு ஒன்றை கொடுத்துவிடு எனக் கூறி 50%க்கு போய்விட்டார் என்றார். அப்படி கொடுக்க ஆண்டவர் நமக்குக் கிருபை தருவாராக. இதிலிருந்து நீங்கள் அறிவது ஐசுவரியத்தில் குற்றமில்லை, பண ஆசை குற்றமுடையதாய் இருக்கின்றது. மூன்றாவதாக, 

"ஆதலால் பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும் அப்படியானார்"இதே வசனம் ஆங்கில வேதாகமத்தில், எப்படி வருகின்றது எனப் பார்ப்போம். 
"Since we, God's children, are human beings-made of flesh and blood-he became flesh and blood too by being born in human form; for only as a human being could he die and in dying break the power of the devil who had the power of death"(Hebrews 2:14) (The living Bible illustrated)
 ஆங்கிலத்தில் இந்த வசனம் மிகச் சரியாக வந்திருக்கின்றது. இந்த வசனத்தின் எனது மொழிபெயர்ப்பு இது: 'நாம் கடவுளுடைய பிள்ளைகளாக, மனிதர்களாக இரத்தமும் சதையுமாய் இருப்பதினால், அவரும் இரத்தமும் சதையும் உடைய மனிதனாகப் பிறந்தார்; மரணத்திற்கு அதிகாரியான பிசாசின் வல்லமையை தமது மரணத்தினாலே உடைத்தெறியும்படிக்கு அப்படியானார்' இந்த வசனத்தின்படி, பிசாசு உயிரோடுதான் இருக்கின்றான். ஆனால் கிறிஸ்தவர்கள் வாழ்க்கையிலே வல்லமை கொள்ளாதபடிக்கு அவனுடைய வல்லமையை இயேசு கிறிஸ்து, நிர்மூலமாக்கிவிட்டார். கிறிஸ்தவர்கள் பிசாசுக்கு இணங்கும்போது, அவனுடைய வழிகாட்டுதல் கிரியை செய்து, உங்களை இன்னல்களுக்கு உள்ளாக்கி விடுகிறது. சாட்சியைக் கெடுத்துவிடுகிறது. 
இன்றைக்கு சபைகளில், பிசாசு என்னை இப்படி படுத்தினான், அப்படி படுத்தினான், ஆண்டவர்தான் என்னை விடுவித்தார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! உண்மை என்னவெனில், பிசாசு எனது வாழ்க்கையில் கிரியை செய்யவே முடியாது, ஏனெனில் இயேசு எனக்காக இந்த உலகத்தில் பிறந்து மனிதனானார். பிசாசின் வல்லமையை என் வாழ்க்கையிலே தமது மரணத்தினால் முறித்திருக்கிறார். நான் ஆசீர்வதிக்கப்படுகின்றேன்! அனேக சிக்கல்கள் என்னைவிட்டு நீங்குகின்றது. 
இயேசு கிறிஸ்து மனிதனாய் பிறந்ததின் பலனை, என் வாழ்நாளெல்லாம் நான் அனுபவிப்பேன். மேலே உள்ள 3 விடயங்களிலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வாழ்த்துகின்றேன்..... உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளைக் கடந்து செல்லும்போது, பரிசுத்த ஆவியானவர் இந்தச் சத்தியங்களை உங்கள் நினைவுக்குக் கொண்டுவருவாராக.... 
வாழ்த்துக்களுடன் உங்கள் சகோதரன்....