2 Jan 2022

FATHER - SON

பிதா - மகன் 

நண்பர்கள் யாவருக்கும் 2022 அன்பின் வாழ்த்துக்கள்!

இந்தத் தேவச்செய்தி, ஈஸ்கடோஸ் என்ற எமது மாதப் பத்திரிக்கையில் வெளிவந்து அனேகமாயிரம் பேருக்கு ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு இந்தப் பத்திரிக்கை வேண்டுமானால், உங்கள் முகவரியை 9840836690 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி வையுங்கள்.  அனுப்பி வைக்கப்படும்! நமது ஊழியத்துக்கு ஆண்டவர் கொடுத்த வாக்கின் அடிப்படையில் இந்தச் செய்தி.

எபேசியர் 1:3 

"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குறிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்"

இந்த வாக்கின்படி, உங்களை ஆண்டவர் சகல ஆசீர்வாதத்தினாலும் ஆவியில் ஆசீர்வதித்திருக்கிறார். ஆவியிலே ஆசீர்வாதம் உங்கள் சரீரவாழ்க்கைக்குள் வரும்படியாகவே இந்தச் செய்தி!! அல்லேலுயா!!!

ஆவியிலே ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் உங்களது ஆத்துமா / மனம் புதிதாகும்போது, உங்கள் சரீரவாழ்க்கையில் ஆசீர்வாதம் பிரவேசிக்கின்றது. ஆசீர்வாதம் என்று பெயர் வைத்திருப்பவர் அல்ல, உண்மையாக ஆண்டவர் உங்களுக்கு வைத்திருக்கின்ற ஆசீர்வாதம்!

ஆசீர்வாதம் என்றால், கண்ணுக்குத் தெரியாதது. ஐஸ்வரியம், பணம், நீடிய வாழ்வு, சுகம், பெலன் என்பதெல்லாம் உங்கள் சரீரத்திலே அனுபவிப்பது. பார்க்கக்கூடியது. 3 யோவான் 2ல்,

"பிரியமானவனே, உன் ஆத்துமா (மனம்) வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்".

தமிழர்கள் வாழ்த்தும்போது, உன் மனம்போல வாழுங்கள் என வாழ்த்துவதை நீங்கள் கேட்டிருக்கலாம், பார்த்திருக்கலாம். அதுதான் மேலே உள்ள வசனம். ஆவிக்கும், சரீரத்துக்கும் இடையில் உள்ள மனம் (ஆத்துமா) வாழ வேண்டும், அல்லது புதிதாக வேண்டும். ரோமர்12:2ல்,

"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்"

உங்கள் மனம், உள்ளம், MIND புதிதாகிறதினாலே நீங்கள் மறுரூபமாகின்றீர்கள்! மறுரூபமாகும்போது, ப்பூ இவ்வளவுதானா?! என நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சனையைப் பார்த்து நீங்கள் கூறுவீர்கள். 

இங்கே தலைப்புக்கு வருவோம்! பிதா-மகன். 

அனேகர் கேட்கும் கேள்வி, புரோ..... பைபிள் எல்லாம் ஒன்றுதானே ஏன் வேதாகமத்தை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனப் பிரித்துப் பார்க்க வேண்டும்? 

இந்தக் கேள்விக்கு மிக முக்கியமான பதிலையும் ஆசீர்வாதங்களையும் பார்க்கப்போகிறோம்.  உங்கள் ஜெபவாழ்க்கை, ஆவிக்குறிய வாழ்க்கை ஒரு புதிய பரிணாமத்தைப் பெறும். மேலும் பழைய ஏற்பாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விருக்கின்றீர்கள்! அதுதான் RELATIONSHIP. பிதா-மகன் என்ற உறவு.

பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையில் உள்ள உறவு. இங்கே மத்தேயு3:17ல்,

"அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது".

பிதா-குமாரன் என்ற உறவு இவர்கள் இருவருக்குமே தெரிந்த ஒரு விஷயந்தான். இங்கே "இவர்" எனக் கர்த்தர் உரைத்ததிலிருந்து அன்று ஞானஸ்நானம் பெற வந்த அனைவருக்கும் இதை அறிவிக்கின்றார். இவர் என் நேச குமாரன்.  

இயேசுவுக்கு வந்த சோதனை: ஞானஸ்நானம் எடுத்தபின் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்திரத்துக்கு ஆவியானவராலே வழிநடததப் படுகின்றார். அங்கே மூன்று சோதனைகள் இயேசுவுக்கு. மூன்றில் இரண்டு நீர் தேவனுடைய குமாரனேயானால்..... மத்தேயு4:3ல், 

"அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்".
மத்தேயு 4:6ல்,

"நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்"
இதேபகுதி, லூக்கா 4:3ல்,

"அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்".

லூக்கா4:9ல், 

"அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல்  அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரமேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.

இங்கே இயேசுவின் உள்ளத்தில் பிசாசுச் சந்தேகத்தை விதைக்கின்றான். எனக்கன்பான நண்பர்களே, இயேசுவுககுக் கொடுத்த சோதனையை உங்களுக்கும் கொண்டுவருகின்றான். யோவான்1:12ல்,

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்".

எப்பொழுதுமே நீங்கள் தேவனுடைய பிள்ளைகள்தான். இதிலே உங்களுக்குச் சோதனை உண்டு. எப்படிப்பட்ட சோதனை? 

எஜமானனே, எஜமானனே என் இயேசு இராஜனே என் எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே..... 

மனந்திருந்திய மைந்தன் புத்தி தெளிந்தபோது, எஜமானன் எனத் தன் தந்தையைப் பார்த்திருப்பானானால், திரும்ப வீட்டுக்குச் சென்றிருக்கவே மாட்டான். ஏனெனில் எஜமானன் ஈவு இரக்கம் இல்லாமல் வேலை வாங்குபவன். அன்பை எஜமானிடம் எதிர்பார்க்க முடியாது.  (இதற்கு விதிவிலக்கும் உண்டு) இது ஒரு மாயமான தாழ்மை. பரம பிதாவோடு நீங்கள், தகப்பன்/மகன்/மகள் என்ற உறவுக்குள் இல்லையானால், அப்படி நினைக்க முடியாத பட்சத்தில் இருப்பீர்களானால், பிசாசின் வஞ்சகத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். சரி செய்யுங்கள்!

நமது இரட்சகருக்கு பல்வேறு இடங்களில் இந்த பிதா-மகன் என்ற உறவிலே சோதனை வந்தது. (இயேசுவைச் சிலுவையில் அடிக்க ஒப்புகொடுத்தது தேவ சித்தமாக இருந்தாலும்), இந்த உறவும் ஒரு காரணம் என்பதை அறிவீர்களா? இதை லூக்கா22:70ல்,

"அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால் நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். 22:71ல்,

"அப்பொழுது அவர்கள் இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினால் கேட்டோமே என்றார்கள்".

மருரூபமலை அனுபவம்: இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்போது எப்படி பிதா தனது குமாரனாகிய இயேசுவை, பிறர் அறிய அறிக்கையிட்டாரோ, அதைப் போல இன்னும் சிலுவை மரணத்துக்கு ஒரு வாரந்தான் இருக்கின்றது என்ற நிலையில் பிதாவின் குரல் வருகின்றது. மத்தேயு 17:5ல்,

"அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
லூக்கா9:35ல்,

"அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செலிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று". 

அங்கே இயேசுவோடுகூட ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்கு கூறப்பட்டது. இங்கே இயேசுவின் சீடர்களுக்குக் கூறப்படுகின்றது. இதை வாசிக்கின்ற உங்களையும் சேர்த்துத்தான் அன்றே பிதாவாகிய தேவன் வானத்திலிருந்து பேசினார். இயேசுவுக்கு, அவர் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம். இயேசு தனது ஊழியததின் முடிவுக்கு வந்தபொழுது ஆண்டவர் அவரது ஊழியத்தை அங்கீகரிக்கும்படியாக, மெச்சிக் கொள்ளும்படியாக இந்தச் சப்தம் இருந்தது.  

பிசாசானவன், சிலுவையிலும் இயேசுவை விடவில்லை. சுற்றிலும் இருந்த மூலமாக அவரது உள்ளத்தை உடைக்க முயற்சித்தான். இதோடு உன் சோலி முடிந்தது, எனப் பொருள்படும்படியாக. மத்தேயு 27:40ல், 

"தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்".
மத்தேயு 27:43

"தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்".
 

எனக்கன்பான நண்பர்களே, இயேசுவுக்கு வந்த சோதனையைப் பாருங்கள்; ஊழிய ஆரம்பத்திலிருந்து சிலுவையின் முடிவு பரியந்தம் பிசாசு, இயேசுவுக்கு விரித்த வலை, இயேசுவானவர் தேவகுமாரன் இல்லை என்பதுதான்.

இயேசு கிறிஸ்து, பிறர் தன்னை தேவனுடைய குமாரன் என அறிந்திருக்க வேண்டும் என விரும்பினார். அதைக் கீழே உள்ள வசனங்களிலிருந்து அறியலாம். மத்தேயு 22:42ல்,

"பரிசேயர் கூடிவந்திருக்கையில் இயேசு அவர்களை நோக்கி;

22:42 "கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்".

இந்த இடத்தில் அவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று சொல்லியிருந்தால் ஆண்டவர் வேறுமாதிரியாகப் பேசியிருப்பார். இவர்கள் தாவீதின் குமாரன் எனக்கூறவே, உரையாடல் அடுத்த வசனத்துக்குப் போகின்றது. 

மத்தேயு22:43 "அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருப்பது எப்படி?"

22:44 "நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே".

22:45 "தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

பரிசேயர், இயேசுவை தாவீதின் குமாரன் என்று சொல்லவே, தாவீதே கிறிஸ்துவை ஆண்டவர் என்று சொல்லியிருக்க எப்படி குமாரனானார். நான் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுவதைவிட தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படவே விரும்புகின்றேன் என்பதுதான் இந்த வசனங்களின் பொருள். இதற்கு நீங்கள் பழைய ஏற்பாட்டில் போய்த் தேடினீர்கள் என்றால், மிகச்சரியான விளக்கத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு அது வெளிப்படுத்தப்படவில்லை. ஆகவே அடுத்த வசனம்,

22:46 "அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அன்று முதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்வி கேட்கக் துணியவில்லை".

உண்மையிலேயே இயேசுகிறிஸ்துதான் ஆரம்பத்தில் கேள்வி கேட்டது. முடிவோ அவரிடத்தில் கேள்வி கேட்க யாரும் துணியவில்லை. இதைப் போல உங்களிடத்தில் கேள்வி கேட்கத் துணியாதிருந்தால் எப்படி இருக்கும்?

இன்னொறு பகுதி, இது ஆச்சரியமானது!! மாற்கு3:11ல்,

"அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.

3:12 "தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்".

உங்களிடமிருந்து பெற விரும்பிய ஒன்றை இயேசு கிறிஸ்து பிசாசிடமிருந்து பெற விரும்பவில்லை. ஆகவே நீங்கள் பேறு பெற்றவர்கள்.

மத்தேயு14:33அப்பொழுது படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்".

கடலில் நடந்து, மூழ்கிய பேதுருவை கரம் நீட்டித் தூக்கி, இருவரும் படவிற்கு வந்தபொழுது, இயேசுவின் வல்லமையையும், அற்புதத்தையும் கண்டபொழுது தேவகுமாரன் என்று சொல்லி அவரைத் தொழுதுகொண்டார்கள். சரி, அடுத்த பகுதிக்குக் கடந்து செல்லுவோம்.....

இது ஒரு முக்கியமான பகுதி, மத்தேயு 16:13 - 17

"பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள்: சிலர்  உம்மை யோவான்ஸ்நானகன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கத்தரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்".

இந்தப் பதிலைக் கேட்டவுடன், இயேசுவுக்கு உள்ளம் உற்சாகத்தால் நிறம்பி வழிகின்றது. இந்தப் பதிலை இயேசுவே எதிர்பார்க்கவே இல்லை. 

17 "இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்". எனக்கூறி, உற்சாகத்தால் நிறைந்து பரிசுகளை வாரி வழங்கினார். 

18 "மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை.

இன்றைய ரோமன் கத்தோலிக்க மக்கள் எங்களது முதல் போப்பாண்டவர் பேதுரு; இயேசுவின் வாக்கின்படி உருவான உண்மையான சபை எங்கள் சபைதானெனக் கூறிக் கொண்டிருக்கின்றனர். பேதுரு மீது அல்ல. பிதா-மகன் என்ற வெளிப்பாட்டின் மீதுதான் ஆண்டவர் சபையைக் கட்டுகின்றார். மேலும் பழைய ஏற்பாட்டில் பிதா-பிள்ளைகள், புத்திரர்கள் என்ற உறவே இல்லை.

19 "பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 

இவைகளெல்லாம் பேதுருவுக்கு இயேசுவால் கொடுக்கப்பட்ட வெகுமதிகள்!! இதை விசுவாசிக்கிற உங்களுக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கின்றார். 

அன்பு நண்பர்களே! இந்த உலகத்தில் உள்ள திருசபைகள் அனைத்தும் கட்டப்படுவது, கிறிஸ்து ஜீவனுள்ள குமாரனாகிய கிறிஸ்து என்ற உறவு (பிதா-குமாரன்) மற்றும் வெளிப்பாட்டின் அடிப்படையில் தான். ஆண்டவர் எவ்வளவு தூரம் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். உங்கள் மனம் புதிதாகியிருக்கிறது! நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய பிதாவின் மகன்/மகள் என்ற உறவை நினைவில் கொள்ளுங்கள், பிசாசுக்கு விட்டுக் கொடுத்துவிடாதிருங்கள்!!!

ஜெபம்! லூக்கா 11:1-2ல்,

"அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றான்.

அதற்கு அவர்: நீங்கள் ஜெபம் பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக;

முதன் முறையாக யெகோவா தேவனை, பிதா என அறிமுகப்படுத்தி ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கிறார். இங்கே நீங்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். பிதா-மகன் என்ற உறவு நெருக்கமான உறவு. யாராலும் பிரிக்க முடியாத உறவு. அப்பாவிடமிருந்து, ஆசீர்வாதங்களை, வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளுகின்ற உரிமையுள்ள உறவு. இந்த உலகத்தின் பிரச்சனைகளை எப்படி எதிற் கொள்ள வேண்டும்? எனக் கற்றுக் கொடுக்கும் உறவு.

ஒரு உதாரணத்தை உங்களுக்குச் சொல்லுகின்றேன்..... உங்கள் குடும்பங்களிலே எத்தனைபேர் உங்கள் அப்பாவைக் காட்டிலும் அதிகமாகப் படிததுள்ளீர்கள்? எனக்குத் தெரிந்து உங்களில் 99.99% அப்பாவைக் காட்டிலும் அதிகமாகப் படித்துள்ளீர்கள். காரணம், தன்னைக் காட்டிலும் தனது மகன், மகள் மேன்மையான நிலைக்கு வர வேண்டும் எனப் பாடுபடும் உறவு!அதே நேரத்தில் அப்பாவின் அன்பு புரிந்து கொள்ள முடியாததாயும் உள்ளது. 

சமீப காலத்தில், கூலிக்காரர் ஒருவருடைய மகள் தனது ஐ.ஏ.எஸ் பரீட்சையிலே பாஸான பின், தன் தந்தையின் கட்டை வண்டியிலே அவரை உட்கார  வைத்து, தெருவெங்கும் இழுத்துச் சென்ற சம்பவத்தைச் சமூக வலைத்தளங்களிலே நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இந்தக் கைவண்டியில் மூட்டைகளை ஏற்றி, இழுத்துதான் என்னை எனது அப்பா படிக்க வைத்தாரென அந்த ஊருக்கு அவள் அறிவித்தாள். அப்பாவின் அன்பு!!

இப்பொழுது உங்கள் மனம் புதிதாகி இருக்கின்றது. நீங்கள் மருரூபமாகி இருக்கின்றீர்கள்! பழைய ஏற்பாட்டிலே இயேசு என்ற நாமமே இல்லை. பரிசுத்த ஆவியைக் குறித்த தகவல்களும் இல்லை. இங்கேயோ, தேவன், பிதா (தந்தை) என்று அறியப்படுகின்றார்.  கடைசியாக,

மத்தேயு 27:54ல், 

"நூற்றுக்கு அதிபதியும், அவனோடே கூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். நூற்றுக்கு அதிபதி ஒரு ரோமன், புற ஜாதியான். இவன் அறிக்கையிடுகிறான், இயேசுவை நோக்கி மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன். புற ஜாதியாராகிய நமக்கு இரட்சிப்பு வந்ததிலே எந்தவித ஆச்சரியமுமில்லை. உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!!

ஜெபம்!

அன்பின் தகப்பனே, இயேசு தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகின்றோம்!  பேதுருவுக்குக் கொடுத்த பரிசுகளை எங்களுக்கும் தந்திருப்பதற்காய் நன்றி! இவைகளைப் பயன்படுத்தி ஆத்தும அதாயம் செய்ய எங்களுக்குக் கிருபை செய்யும்! இயேசுவின் மூலம் பிதாவே! ஆமென், ஆமென். 

No comments:

Post a Comment