17 Feb 2019

YOUR FATHER IN HEAVEN CERTAINLY GIVE GOOD GIFTS TO YOU....

நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
உங்கள் ஜெபம் வல்லமையுள்ளதாக, ஆண்டவரிடம் இருந்து பதிலைப்பெற்றுக் கொள்ளுவதாக மாறும்! 
நமது சீயோன் பங்காளர் ஒருவர் அடிக்கடி இயேசு கூறியதை ஏன் வாக்குத்தத்தமாக போடக்கூடாது? எனக் கேட்பார். ஆண்டவர் இதைச் சொல்லுகின்றாரோ அதுதான் வாக்குத்தத்தமாகும்.  நானே ஆண்டவரே இதை இந்த மாத வாக்குத்தத்தமாக எடுத்துக்கொள்ளுகின்றேன் என ஜெபிப்பது இல்லை. நீண்ட மாதங்களுக்குப் பிறகு, இந்த வருட வாக்குத்தத்தமாக இயேசு தான் சொன்ன பொன்மொழியையே வாக்குத்தத்தமாக கொடுத்திருக்கின்றார். 
"ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:11)
பொல்லாதவர்களாகிய நீங்கள்...... பொல்லாதவன் என்றால் வேதாகம பொருளின்படி கொடியவன், கெடுமதியாளன் இப்படி பொருள் படும். இது சான்றோர் கூறும் வசைச்சொல்லாகும். வேதாகமத்தில் தென்னந் தெரிசலாக ஓரிரு இடங்களில் இந்த சொல் காணக்கிடக்கின்றது. இயேசு கூறிய தாலந்து உவமையில் பொல்லாத ஊழியக்காரனான இவனை புறம்பான இருளிலே தள்ளுங்கள் எனக் கூறுகின்றார். 
மத்தேயு 18:32ல், மன்னிக்காத ஊழியக்காரனைப் பார்த்து பொல்லாதவன் என்று அழைத்தார். (அதுவும் ஒரு உவமைதான்/எடுத்துக்காட்டுதான்) இங்கே ஆண்டவர் உங்களைப்பார்த்து பொல்லாதவர்கள் எனக்கூறுகின்றார். இயேசுவே கூறிவிட்டார், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுகின்றார்கள். நான் பொல்லாதவள்(ன்) என்று நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் பொல்லாத தன்மை, நீங்கள் சாட்சியாக இருக்கவேண்டிய இடத்தில், அதாவது புறமதஸ்தர் மத்தியில் வெளிப்படுகின்றது. இன்னும் சிலர் மிக மோசமாக நடந்து கொண்டு, இயேசுவே என்னை பொல்லாதவன்(ள்) என கூறி இருக்கிறார் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளுகின்றார்கள்! நற்செய்தியை புறஜாதியாரிடம் என்னைப்போல் அறிவித்தீர்களானால் அப்பொழுது தெரியும், முதலாவது கிறிஸ்தவர்களிடம் போய் சொல்லு என கூறுவதைக் கேட்கும்பொழுது. எவ்வளவு மோசமாக வேத வசனத்தை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ரீர்கள். இன்னும் சில ஊழியர்களே இதுதான் தாழ்மை என்கின்றனர். இதை எங்கே போய் சொல்ல, சரியான லூசுங்க.....
அதே இடத்தில் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா எனவும் கூறுகின்றார். பிறர் மத்தியில் இயேசுவுக்கு சாட்சியாக நடந்து கொண்ட பின், 'பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் நாமம் மகிமைப்படுகின்றது' என ஆண்டவருக்கு மகிமையை செலுத்தி இருக்கின்றீர்களா? 
நான் என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்வியின் அடிப்படையில் மட்டும் அநேகர் வேதத்தைப் படிக்கிண்றீர்கள். ஆண்டவர் என்ன செய்திருக்கின்றார் என்ற அடிப்படையிலும் வேதத்தைப் படிக்கவேண்டும். வேதத்தைப் படிக்கும்போது சில வசனங்கள் உங்கள் உள்ளத்தில் பயத்தை கொண்டு வருகின்றதா? அதிலேயே நின்று ஆண்டவரை விளக்கித் தரும்படி கேளுங்கள். அந்த பயத்தோடு நீங்கள் அடுத்த வசனத்துக்கு போய்விட்டர்களாகில் வார்த்தையாகிய இயேசுவோடு உங்கள் ஐக்கியம் என்னவாகும்? உங்கள் உள்ளம் வசனத்தோடு சமரசமாய் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தெரியாதவைகளை சந்திக்கும் போது சற்று பயம் வருவது இயற்கை. எனவே வசனத்தை விளங்கிக்கொண்டால் உள்ளத்திலே சந்தோசம், சமாதானம். 
உங்கள் பரம பிதா........
"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 
அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனால் பிறந்தவர்கள்" (யோவான் 1:12,13)
தேவ பிள்ளைகள் என்பது அதிகாரம், இந்த அதிகாரத்தை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என ஆண்டவர் எதிர்பார்க்கிறார். ஆண்டவர் தமது சீடர்களே இதை செய்திருக்கலாம், தன்னை எழுப்பினார்கள் என நினைத்த வேத பகுதியை பார்ப்போம். மத்தேயு 8:23-26ஐ பாருங்கள்.
"அவர் படவில் ஏறியபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின் சென்று ஏறினார்கள். அப்பொழுது, (அப்பொழுது என்ற வார்த்தை, அவரோ நித்திரையாய் இருந்தார் என்ற வரிக்கு முன்பு வந்திருக்க வேண்டும்)  படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று அவரோ நித்திரையாய் இருந்தார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர் அற்ப விசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அற்ப விசுவாசிகளே என ஆண்டவர் அழைத்ததற்கு காரணம், நீங்களே காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தி இருக்கலாம் என்ற தொனியில் கூறினார்.
ஆண்டவர் தமது உறவின் மூலமாகவே உங்களை ஆசீர்வதிக்க விரும்புகின்றார். என எழுதியதில் இருந்து, சிலர் நான் உபவாச ஜெபத்துக்கு எதிரி என நினைக்கின்றனர். (இதற்கு முந்தய பதிவுகளை பார்க்கவும்) இதை மறுக்கின்றாற்போல ஆண்டவர் இந்த வாக்கைத் தந்திருக்கின்றார். உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?  அதாவது நான் உபவாசித்து ஜெபித்தேன், ஆகையால் ஆண்டவர் என்னை ஆசீர்வதித்தார் என நீங்கள் சாட்சி கூற கேட்டிருப்பீர்கள். அல்லது நீங்களே கூறியிருப்பீர்கள். அதை கேட்கின்றவர்கள், நானும் 10 நாட்கள் உபவாசித்து ஜெபித்தால்தான் ஆண்டவர் கொடுப்பார் என நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது என்பதை இங்கு குறிப்பிடுகின்றேன்.  அது வேதத்துக்கு புறம்பானது. என்னுடைய பரம பிதா என்னை ஆசீர்வதித்திருக்கிறார், தகப்பன், மகன்(ள்) என்ற உறவின் மூலமாகவே ஆசீர்வதிக்கப்பட்டேன் என்பதே மிக உயரிய சாட்சி. உபவாசித்தும் பெற்றுக்கொள்ளலாம், இதை மறுக்கவில்லை. எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தரும் எனக் கேட்டவர்களும் உண்டு, எனது விசுவாசத்தை வர்த்திக்கச் செய்யும் என கேட்டவர்களும் உண்டு!
ஒரு மனிதனுக்கு இரு கைகளை போன்றது, ஜெபமும், வேத வாசிப்பும். இரு கைகளை வைத்து நேர்த்தியாக வேலை செய்ய முடியும். ஆண்டவரோடு உள்ள ஐக்கியத்தை வலுப்படுத்துவதே ஜெபமும் வேத வாசிப்பும்தான். தந்தையும் மகனுமாய் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் பொழுதே உறவு வலுப்படும். உங்கள் ஜெபம் அந்தரங்கத்தில் இருக்கட்டும்; பதில் வெளியரங்கமாய் வரட்டும். 
வேதாகமத்தில் இருவர் தங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை பெற்றுக்கொண்டதை தியானிப்போம். 
"இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஒய்வு நாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா என்றார்" (லூக்கா 13:16) 
இந்த கூனிக்கு அற்புதம் செய்த கர்த்தர் அவளது ஜெபத்தையோ உபவாசத்தையோ பார்க்காமல் அவளை ஆபிரகாமின் குமாரத்தியாக பார்த்தார். அது ஒன்றுதான் ஆண்டவர் அவளிடம் பார்த்த ஒரே தகுதி. அற்புதம் நிகழ்ந்தது. 
இன்னொரு சம்பவம், லூக்கா 19:9ல், 
"இயேசு அவனை நோக்கி இன்று இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாய் இருக்கிறானே"
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் ஒன்று இருக்கின்றது. அது, இவன் மனந்திரும்பி தனது பாவத்துக்கு பரிகாரம் அறிக்கை செய்த பொழுதே ஆண்டவரால் இவன் வீடு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டது. இவன் கிரியை செய்தபின் அல்ல, மனந்திரும்பியவுடனே ஆசீர்வதிக்கப்பட்டான். அதை போலவே நீங்கள் அந்த இளையகுமாரன் மனந்திரும்பியத்தைப் போல மனந்திரும்பும்போதே ஆசீர்வதிக்கப் படுகிண்றீர்கள். உங்களது கிரியையைப் பார்த்து ஆசீர்வதிக்கவில்லை, (உபவாசம், மற்றும் எந்த கிரியையும் அல்ல) உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவை வைத்து ஆசீர்வதிக்கின்றார். ஆபிரகாமுக்கு உண்டான அத்தனை ஆசீர்வாதங்களும் உங்கள் அனைவருக்கும் உரியது. கலாத்தியர் 3:6-9ல், 
 "அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 
ஆகையால் விசுவாசமார்க்கத்தார் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னதாக கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. 
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகின்றார்கள்" 
வசனம் 14ல், 
"ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும் படியாகவும், ........."
ஆபிரகாமோடுகூட நீங்களெல்லாரும் ஆண்டவருடைய ஆசீராதங்களுக்கு சுதந்திரவாளிகளாய் இருக்கிண்றீர்கள். எல்லாமே பணம் அல்ல, மனம். ஆண்டவருடைய பார்வையில் உங்களை நீங்களே பாருங்கள், ஆசீர்வதிக்கப்படுவீர்கள். கடைசியாக,
தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம் என்று முடிக்காமல், நிச்சயமல்லவா? என்ற கேள்வியோடு முடித்திருக்கின்றார். இதன் அர்த்தம் என்ன? நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம் என்று உங்களிடம் பலமாக, உறுதியுடன் கூறுகின்றார். இதை நீங்கள் உங்கள் மனதில் சொல்லிப்பாருங்கள். இப்பொழுது தெரியும் உறுதியாக கூறுவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். இதைப்படிக்கின்ற உங்களது ஜெபம், வல்லமையுள்ளதாக, அற்புதங்களை அதிசயங்களைக் கொண்டுவருவதாக இருக்கும். 
மாறாத வசனத்தின் மீது உங்கள் விசுவாசத்தை வைக்கும்போது, உங்கள் விசுவாசம் அசைக்கப்படுவதில்லை. மனிதர்கள் மீது விசுவாசத்தை வைக்கும்போது நீங்கள் ஏமாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. பொதுவாக விசுவாசம் என்பது இயேசு, செய்து முடித்தவைகளில் வைப்பது, நம்பிக்கை என்பது எதிர்காலத்தின் மீது வைப்பது. உங்கள் ஜெபத்தைக் கேட்டு இனிமேல் ஆண்டவர் செய்வார் என்பது நம்பிக்கை. கடைசியாக,
இந்த வசனம் ஆங்கிலத்தில் எப்படி பொருள் கொள்ளுகின்றது என்று பார்த்துவிடுவோம்.💃👍
“And if you hardhearted, sinful men know how to give good gifts to your children, won’t your Father in heaven even more certainly give good gifts to those who ask him for them” Matthew 7:11
இதன் அர்த்தம் என்னவெனில், இதன் முந்தைய வசனங்களை படித்தீர்களானால், இயேசு, ஜெபத்துக்கு ஆண்டவர் பதிலளிப்பார் என்றும், நீங்கள் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை அப்படியே கொடுப்பார் எனக் கூறி, (இப்பொழுது ஆங்கில வசனத்தின் மொழிபெயர்ப்பு அல்ல, விளக்கம்...) ஒருவேளை நான் கூறுவதை ஏற்க மறுக்கின்ற கடின மனத்துடையவர்களாய் நீங்கள் இருந்தால், ஒரு பாவம் செய்கிற மனுஷன் (ஒரு அவிசுவாசி) தனது பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை எப்படி கொடுக்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றானே, பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பரம பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகின்ற உங்களுக்கு நன்மையான ஈவுகளை கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?
ஜெபிப்போம்! ஜெயம் பெறுவோம்!!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உங்களிடத்தில் வருகின்றோம், இந்த உமது நாமத்தின் மேல் விசுவாசம் என்னை மகனாக / மகளாக தெரிந்து கொண்டிருப்பதற்காய் நன்றி! இந்த அருமையான உறவுக்காய் நன்றி!! எவ்வளவு மகிமையான உறவை எங்களோடு நீர் ஏற்படுத்தி இருக்கிறீர்! உம்மை அறியாதிருந்த நிலையிலும் இயேசுவை எங்களுக்காக சிலுவையில் பலியாக்கினீரே நன்றி!!! எங்களிடம் பொறுமையாய் இருந்ததற்காய் நன்றி!! உற்சாக மனத்தோடுகூட உமது வேலைகளை செய்யவும், சாட்சியின் மூலமாக இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்த கிருபை செய்யும். வியாதிப்பட்டவர்களுக்காக ஜெபிக்கின்றேன்! இப்பொழுதே உமது காயங்கள் சுகமாக்குவதற்காய் நன்றி! குறைவுகளை நிறைவாக்கும். பலமும் அல்ல, பராக்கிரமம் அல்ல, உம்முடைய ஆவியினாலே ஆவதற்காய் நன்றி! எங்கள் தேசத்திலே எழுப்புதலைக் கட்டளையிடுவதற்காய் நன்றி! வயல் நிலங்கள் அறுப்புக்கு விளைந்திருப்பதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் கர்த்தாவே. ஆமென், ஆமென். 

17 Jan 2019

POWER OF GOD

அன்பு நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு வாரமும் ஓர் பதிவை இடலாம் என எண்ணி, இப்பொழுது தொடர்ந்து 3 வாரங்களாக பதிவிடுகின்றேன்! உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!
தேவ வல்லமை 
ஜோனி என்ற இளம் பெண்ணுக்கு நீச்சல் என்றால் கொள்ளை பிரியம். நீரில் குதிப்பது என்பது அவளுக்கு மிக மிக விருப்பம். தனது வீட்டருகே இருந்த நீச்சல் குளத்தில் அவள் நீச்சல் மற்றும் டைவ் அடித்தல் என கற்றுக்கொண்டாள். தான் ஒரு நல்ல டைவ் அடிக்கும் வீராங்கனையாக வரவேண்டும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என மிகுந்த விருப்பமுடையவளாக அவள் இருந்தாள்.
ஒரு நாள் சில நண்பர்களோடு வெளியூர் சென்றாள். அந்த ஊரில் இருந்த கடற்கரைக்கு சென்றாள். அங்கே இருந்த சூழ்நிலை கடலில் நீச்சலடிக்க வேண்டும் என்ற வாஞ்சை வந்தது. புதிய இடம். தண்ணீருக்குள் எங்கே என்ன இருக்கிறது எனத் தெரியாது. நண்பர்கள் அனைவரும் கடலுக்குள் இறங்கவே, இவளும் நண்பர்களோடு நீச்சல் அடித்தாள். மிகுந்த உற்சாகமாய் இருந்தது. அருகில் இருந்த ஒரு பாறையில் ஏறி கடலுக்குள் டைவ் அடித்தாள். அவ்வளவுதான், அவள் டைவ் அடித்த இடத்தில் கடல் ஆழம் குறைவாய் இருந்தபடியால், அவளுடைய தலை தரையில் மோதியது. அவளது முதுகு தண்டுவட நரம்பு பழுதாகி, அவளது எஞ்சிய காலம் முழுவதையும் சக்கர நாற்காலியில் கழிக்கச் செய்தது. அவள் மிகுந்த மனசோர்வும், கோபமும் கொண்டாள். அவளுடைய கோபம் முழுக்க தேவன் மீதுதான்
"கடவுளே ஏன் எனக்கு இதைச் செய்தீர்? எனக்காக நீர் என்ன செய்திருக்கின்ரீர்? என ஜெபித்தாள். ஆண்டவர் அவளை ஆயுள் காலம் முழுவதும் சுகமாக்க வில்லை என்றாலும், வேதவாசிப்பிலும், ஜெபத்திலும் ஈடுபட்டாள். எனவே ஆவிக்குரிய பிரகாரமாக வளர்ந்தாள். 
இவ்வாறு தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள், "எனக்கு வேறு வாய்ப்பு இல்லாததால், நிலைமையை ஏற்றுக் கொள்ளுதல், நம்பிக்கை கொள்ளுதல் மேலும் அர்ப்பணித்தல் இவைகளின் மூலமாக, உணர்வு பூர்வமான விடுதலையை கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, பெற்றுக் கொள்ளுகிறேன், பெற்றுக்கொண்டாள்.    
லூக்கா 1:26-38 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்! இதில் இன்னொரு இளம் பெண்ணைப் பார்க்கின்றோம். இவளும் ஏற்றுக் கொண்டாள், நம்பிக்கை வைத்தாள், தேவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இவளுடைய வாழ்க்கையை கர்த்தர் முன்னுக்கு கொண்டுவந்தார்.
1. தேவ செயலுக்கு, மரியாளின் எதிர் விளைவு, ஜொனியின் எதிர்விளைவோடு ஒத்துப்போகிறதா? அல்லது போகவில்லையா?
2. நீங்கள் எந்த குறிப்பிட்ட வழிகளில் தேவ வல்லமை உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என விரும்புகிண்றீர்கள்?
கவனத்தில் கொள்ளுங்கள்:
லூக்கா 1:26-38 பகுதியில் உங்களோடு பேசும் அடிக்கோடிடவும், மனனம் செய்யவும். 
ஆண்டவரின் வரையறையில்லாத வல்லமையை அறிந்து கொள்ளுவதற்கு உதவியைக் கேளுங்கள். அவர் தெரிந்தெடுக்கும் வழி முறைகளை பயன்படுத்தவும், அல்லது பயன்படுத்தாதிருக்கவும் இயேசுவை கேளுங்கள்.
மேலும் படியுங்கள்: சங்கீதம் 31:14-24 (பக்கம் 687); யாக்கோபு 1:1-5 (பக்கம் 313); 2 கொரிந்தியர் 12:7-10 (பக்கம் 225)
ஜெபிப்போம்!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம், எந்த 
சூழ்நிலையிலும் உமது அன்பு எங்கள் ஒவொருவரையும் வழி நடத்துவதற்காய் நன்றி! தேவ திட்டம் எங்கள் வாழ்நாளில் நிறைவேறுவதற்காய் நன்றி! எங்கள் வாழ்க்கையில் அநேகரை நீதிக்குட்படுத்த வழி நடத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே. ஆமென், ஆமென். 

8 Jan 2019

GOD: YOU ARE AFTER MY HEART

நண்பர்கள் யாவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே  வாழ்த்துகின்றேன்.....
".......ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்கு சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக் குறித்து சாட்சியும் கொடுத்தார்" (அப்.13:22)
இந்த வசனத்தினாலே உங்களை ஆசீர்வதிக்க பிதாவாகிய தேவன் சித்தமானார்! 
நற்செய்தியாளருக்கான ஒரு கூட்டத்திலே, ஆண்டவர் ஏன் சவுலைத் தள்ளி தாவீதை அரசனாக தெரிந்து கொண்டார்? என கேட்கப்பட்டது. ஒருவர் தாவீதை என் இதயத்துக்கு ஏற்றவன் என கர்த்தர் சொன்னார் என்று கூறினார். உடனே அருகில் இருந்தவர், அது அவன் பாவத்தில் விழுவதற்கு முன்னாக கூறினார். இவர்களின் உரையாடலை கெட்ட பொழுது, பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளே கிரியை செய்வதை உணர்ந்தேன். அதனுடைய விளைவுதான் இந்த செய்தி. இதன் மூலமாக உங்கள் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படும். முதலாவது,
"பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல; மனம் மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல;...." (எண். 23:19)
இந்த வசனத்தின் பிற்பகுதியை எடுத்துக்கொண்டோமானால், மனம் மாற அவர் மனிதன் அல்ல. அதாவது ஒன்றை சொல்லிவிட்டு, 'இத தப்பா சொல்லிவிட்டேன், இதை மாத்து' என கூறுகின்ற தேவன் அல்ல. அவர் சொன்னால் சொன்னதுதான். அவருடைய கூற்று, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றுக்கும் பொருந்தும். எப்படி உங்களை தனது பிள்ளைகளாக்கி அதிகாரத்தையும் கொடுத்தாரோ, அதைப்போல மாறாததுதான் இதுவும். ஆண்டவருடைய இருதயத்துக்கு ஏற்றவன் பாவம் செய்துவிட்டான். 
பாவம் செய்வதிலும் மிக மோசமான நிலைமை என்னவென்றால் செய்த குற்றம் உணர்த்தப்படும் போது, நான் செய்தது சரிதான் என வாதாடுவதுதான். இங்கே நாத்தான் என்ற தீர்க்கதரிசியை ஆண்டவர் அனுப்பினார். இந்த சம்பவம் 2சாமுவேல் 12:1-12 வரை காணக் கிடக்கின்றது. பாவத்தை உணர்த்தி தண்டனையையும் உடனே வழங்கினார். ஒருவருடைய பாவம் உணர்த்தப்படும்போது அவருடைய எதிர் செயல் என்ன என்று பார்த்தோமானால் நலமாயிருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் என்ன? உங்கள் தவறுகளை, குற்றங்களை ஆண்டவர் உணர்த்தும் போது, அதை நீதிகரித்துக் கொண்டு இருக்கிண்றீர்களோ! அது பாவம் செய்ததைக் காட்டிலும் மோசமான நிலைமையில் இருக்கின்றீர்கள் என பொருள். தாவீதின் எதிர் செயல் என்ன? 2சாமு. 12:13ல், 
"அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில் நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்றான்"
இந்த இடத்தில் நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயம் என்னவெனில், பாவம் உணர்த்தப்படும் போது, நான் ஆண்டவருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என உள்ளத்தில் நினைக்கும் போதுதான் அது உண்மையான மனந்திரும்புதலாக இருக்கும். இங்கே தாவீது நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்றான். (செய்த குற்றத்துக்கு மனம் வருந்துவது, இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும் செய்வதுதான். ஆனால் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்று உள்ளத்தில் நினைக்கும்போதுதான் அவனது மனந்திரும்புதல் ஆரம்பமாகி, இயேசுவின் இரத்தத்தினால் உள்ளம் கழுவப்படுவதில் முடிகின்றது). 1யோவான் 1:7-9 வரை வாசித்துப் பாருங்கள். சாக்லேட் என்று சொன்னால், வாய் இனிக்காது. அதை தின்ன வேண்டும். அப்பொழுதுதான் ருசி என்னவென்று அறிந்து கொள்ள முடியும். மேலே உள்ள வசனங்களை வாசித்து கீழ்ப்படிந்தால், பலன்: பாவமன்னிப்பின் நிச்சயம், அதினால் வருகின்ற சமாதானம், மகிழ்ச்சி இதற்க்கு ஈடு இணையே இல்லை, இது கிறிஸ்தவர்கள் மட்டுமே அனுபவிக்கும் பேராசீர்வாதமாகும். சங்கீதம் 51ல், தாவீது கண்ணீர்விட்டு கதறுகின்றான். 
இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழுகின்ற உங்களுக்கு, மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. அது என்னவெனில் இயேசு கிறிஸ்துவின் பாடும் மரணமும். பாவம் செய்தது நீங்கள், அடிவாங்கியது/பலியானது (தண்டனை வாங்கியது) எல்லாம் இயேசுகிறிஸ்து. பழைய ஏற்பாடு காலத்தில் நீங்கள் பாவ நிவாரண பலியிட வேண்டும். இப்பொழுதோ இயேசு உங்களுக்காக பலியாகி இருக்கின்றார். மகன்/மகள் என்ற உறவை ஏற்படுத்தி இருக்கிறார். உபவாசம் இருந்தாவது, பத்சேபாளுக்கும் தனக்கும் பிறந்த குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என முயற்சித்ததுதான். தாவீதுக்கு கொடுத்த தண்டனையைப் போல உங்களுக்கும் கொடுத்துவிட்டார் என நீங்கள் நினைத்தீர்களானால், உங்களைப் போல ஒரு முட்டாள் இருக்க மாட்டார்கள். 
இப்படிப்பட்டவனாக தாவீது இருப்பான் என்று முக்காலத்தையும் அறிந்த கர்த்தருக்கு நன்கு தெரியும். தாவீதைப்போல நீங்களும் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்பீர்களானால், உங்களையும் எனது இருதயத்துக்கு ஏற்றவன்/ஏற்றவள் என்று ஆண்டவர் கூறுவார்.  

தாவீது இன்னும் எப்படி கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்றவனாக இருந்தான்? இந்த பகுதி உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். அது 1சாமு. 26:11ல், 
"நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் போடாதபடிக்கு கர்த்தர் என்னை காக்கக் கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்....." 
சவுல் இஸ்ரவேலின் இராணுவத்தைக் கொண்டு தாவீதை வேட்டையாடியதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது தாவீதுக்கு ஒரு வாய்ப்பு. தூங்கிக்கொண்டிருந்த சவுலை கொல்லுவதற்கு வாய்ப்பு வந்த பொழுது, தாவீது மேற்கண்டவாறு கூறுகின்றான். கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவரை நான் கொல்லுவதில்லை என தனக்கு வந்த வாய்ப்பை மறுத்தான். எதிரியாக இருந்தாலும், கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் என்றான். கர்த்தரை கனம் பண்ணி தனக்கு வந்த வாய்ப்பை மறுத்தான். இன்று உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது? கிறிஸ்தவ ஊழியரைக் குறித்து உங்கள் நிலைமை என்ன? எஜமான் தன் அறுப்புக்கு கூலியாட்களை அனுப்புங்கள் என்று ஜெபித்துக்கொண்டே, அருகில் இருக்கும் ஊழியரோடு உங்கள் ஐக்கியம் எப்படி இருக்கிறது? ஊழியரின் நடவடிக்கை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீங்கள் விலகி இருப்பது நல்லது. பொதுவாக ஊழியருக்காக ஜெபித்தீர்கள் எனில் ஊழியரிடம் இருக்கும் குற்றம், குறைவுகளைப் பார்க்காமல், நல்ல விடயங்களை பார்த்து, ஆண்டவருக்கு மகிமையை செலுத்துவீர்கள். இன்னும் சொல்லப்போனால், விசுவாசிகள் அனைவருமே அபிஷேகம் பெற்றவர்கள்தாம். எனவே பிற விசுவாசிகளுக்கு விரோதமாக (பரிசுத்தவான்களுக்கு) விரோதமாக செயல்படாதிருங்கள்! பிற விசுவாசிகளில் குற்றம் காணும்போது என் வழி இயேசு வழி எனக் கூறி, போய்க்கொண்டே இருங்கள்! ஆண்டவருடைய இருதயத்துக்கு ஏற்றவராக இருப்பீர்கள்! 
சீமேயியின் விடயத்தில், 2சாமு. 16:5-13 வரை வாசித்துப்பாருங்கள்! அப்சலோமிடம் ராஜ்ய பாரத்தை இழந்து, மிகவும் சோர்ந்து போய் தனது மக்களோடு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, சீமேயி என்பவன் கெட்டவார்த்தைகளால் தாவீதை திட்டி, கற்களை எரிந்து அவமானப்படுத்தினான். தாவீது பொறுத்துக்கொண்டான். 2சாமு.19:14ல், மீண்டும் ராஜாவாக திரும்பி வருகின்றான். இப்போது முன்பு தூஷித்த சீமேயி தாவீதுக்கு முன்பாக போய் தாழ விழுந்து, மன்னிப்பு கேட்கின்றான். (வசனம் 18-20) "அப்பொழுது செரூயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்திரமாக: கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை  அதற்காகக் கொல்ல வேண்டாமா? என்றான். (2சாமு. 19:21) தாவீது, சவுலைக் குறித்து கூறிய அதே வார்த்தைகளை உபயோகித்து கேட்கிறான். இப்பொழுது அதிகாரம் கையிலே..... தூஷித்தவன் தரையிலே...... இப்பொழுது தாவீது அவனை மனதார மன்னித்தான். எனக்கான நண்பர்களே நீங்கள் மன்னிக்கும் போது, பிதாவாகிய தேவனால் மன்னிக்கப்படுகிண்றீர்கள்! என்பதே விடயம். மேலும் நீங்கள் சந்திக்கின்ற எந்தப் பிரச்சனையானாலும், அதை ஆண்டவர் தம் கையில் எடுத்து, உங்களுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அடுத்து தாவீதின் விசுவாச அறிக்கை: 
பெலிஸ்தியர்கள், இஸ்ரவேலுக்கு விரோதமாக படையெடுத்து வந்தபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீது என்ற இளைஞன் பட்டாளத்தில் பணி புரியும் தனது அண்ணன்மாரை பார்க்க வந்தபொழுது, யுத்த களத்தின் முன்னணியில் கூறிய வார்த்தைகள்தான் இது. "கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார் என்றான்" (1சாமு.17:47) மற்றவர்கள் தாவீதை அதைரியப் படுத்திய பொழுது, பயமுறுத்திய பொழுது அவன் தனது முந்தைய அனுபவங்களை (சிங்கம், கரடியைக் கொன்ற நிகழ்வு) அவர்களுக்கு தெரியப்படுத்தினான். கர்த்தர் தனக்கு வெற்றியை தருவார் என்று விசுவாசித்தான், வெற்றி சிறந்தான்! என் அன்பு நண்பர்களே, ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இந்த சத்தியங்களின்படி உயர்த்தி ஆசீர்வதிப்பாராக. 
ஜெபிப்போம்! 
அப்பா பிதாவே, இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம். இப்பொழுதும் உமது வாக்குத்தத்தங்கள் அனைத்தும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஆம், என்றும் ஆமென் என்றுமிருப்பதால் நன்றி! வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகளோ அழிந்து போகாது என்று சொன்ன வாக்குக்காய் நன்றி! இதன் மூலம் எங்களை தொடர்ந்து நடத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் பிதாவே. ஆமென், ஆமென். 
பின் குறிப்பு: இந்த வலைத்தளத்தை உங்கள் பிற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்! வாரந்தோறும் ஒரு பதிவையாவது செய்யவேண்டும் என நினைக்கின்றேன்! நன்றி!!
 

30 Dec 2018

TRIALS AND SORROWS

நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

மீண்டும் இந்த மாதத்தில் இதே பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!

"என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தைஜெயித்தேன்" (யோவா.16:33) 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! 
உங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்து களிகூரும்படியான ஒரு சத்தியமாக இதை நீங்கள் பார்க்கலாம்! அன்மையில் ஒரு சபையில் இதைக்குறித்து பேசலாம் என்று நன்கு ஆயத்தப்படுத்தி, குறிப்புகளை எழுதிக்கொண்டு சென்றேன்; ஆனால் ஆவியானவர் வேறுஒரு செய்தியை கொடுக்க வழிநடத்தினார்! அந்த செய்திதான் இப்பொழுது உங்களுக்கு ஆசீர்வாதத்தை கொண்டுவரப்போகின்றது. 
"பிரதர்...... நாம அநேக உபத்திரவங்கள் வழியாகத்தான் பரலோக ராஜ்யத்துக்குள் போகமுடியும் பிரதர்"
"இயேசுவே சொல்லிட்டார், உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று எனவே உபத்திரவப்படனும் பிரதர்"
உபத்திரவம் இல்ல என்று சொல்லுகிற பிரசங்கிமாரெல்லாரும் சுகபோக பிரசங்கி பிரதர்...
ஆண்டவரே உபத்திரவப்பட்டார், நீ என்ன பெரிய பிஸ்தாவா?
ஆண்டவருடைய வழியை பின்பற்றுகிறவர்களுக்கு கண்டிப்பா உபத்திரவம் உண்டு பிரதர்......
உபத்திரவப்பட்டது நல்லது அதனாலே நான் கர்த்தருடைய பிரமாணங்களை கற்றுக்கொண்டேன் என தாவீதே சொல்லியிருக்கிறார் புரோ.....
உபத்திரவத்தைப் பற்றி ஆண்டவருடைய அணுகுமுறை என்ன? என்பதை குறித்தும், அவர் தமது உள்ளத்திலே என்ன நினைக்கின்றார் என்பதைக்குறித்தும் நாம் இப்பொழுது பார்க்கலாம். இந்த செய்தி இந்த புதிய வருடத்தில் மட்டுமல்ல, உங்கள் உயிருள்ள நாளெல்லாம் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரப்போகிறது. உங்கள் தலைமுறைக்கும் இந்த சத்தியத்தைக் கடத்துங்கள்! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! 
முதலாவது, தேவ ஜனங்கள் உபத்திரவப்பட்டபொழுது, தேவன் என்ன செய்தார் என்று பார்ப்போம்! அப்போஸ்தலர் 7:34ல், (மோசேயிடம் ஆண்டவர் பேசியது இது)
"எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால் நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்"
தேவ ஜனங்களின் உபத்திரவத்தைப் பார்த்து, பிதா இரக்கம் கொண்டார். இன்று நீங்கள் உபத்திரவத்தின் பாதையிலே இருக்கிண்றீர்களோ? பிதாவாகிய தேவன்  இஸ்ரவேலரை விடுவிக்க ஒரு மோசேயை தெரிந்து கொண்டு அனுப்பியதை போல, உங்களுக்கு உதவி செய்ய ஒருவரை இன்று அனுப்புவார். பொதுவாக விசுவாசிகள் எல்லோருமே தாங்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு தகுந்த வசனத்தைத் தெரிந்து கொண்டு, அதை விசுவாசிக்கின்றார்கள். உதாரணமாக நான் யோபுவைப்போல பாடு அனுபவிக்கின்றேன்...... சிலுவை மரணத்தினால் வந்த பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுவார்கள், அதே சிலுவையில் ஏற்றுக்கொண்ட காயங்கள் சுகமாக்குகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். இப்படி பல...... ஆனால் தேவ சித்தம் வேறாக இருக்கின்றது...... 
"நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்" (சங்கீதங்கள் 34:17)
"உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்"
ஆண்டவர் எப்பொழுதுமே உபத்திரவப்படுகின்ற நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்டு அவர்களை    விடுவிக்கிறவர். உங்களைப்பற்றித்தான் நான் இங்கு எழுதுகின்றேன். 
யோசேப்பின் வாழ்க்கையைக் குறித்து வேதம் கூறும்போது, அப்போஸ்தலர் 7:10ல், 
"தேவனோ அவனுடனே கூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து....." 
இந்த வசனங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுவது, ஆண்டவர் உபத்திரவப்படுகிறவர்களை விடுவிக்கிறவர் என அறிகிண்றீர்கள். சிலர், ப்ரோ... தேவன் உபத்திரவ படுத்துவார், இயேசு விடுவிப்பார்.. என கூறுகின்றனர். அதாவது பிள்ளையையும் கிள்ளிவிட்டு  தொட்டிலையும் ஆட்டுகின்றவர் ஆண்டவர் என்கின்றனர். அப்படிப்பட்ட ஆளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். சினிமா வில்லனைவிட மோசமான ஆள்தான் அப்படி செய்வார். same side goal அடிக்காதே..... இங்கே பிதாவுக்கு சித்தமானத்தையே நான் செய்கிறேன் என்று இயேசு கூறுவதை நினைவில் கொள்ளவேண்டும். அடுத்து,
"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கியவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது"
(எபிரேயர் 2:10) 
பிதாவாகிய தேவன் உங்களையெல்லாம் பரலோகத்தில் கொண்டுபோய் சேர்க்க, இரட்சிப்பின் அதிபதியை அதாவது இயேசுவை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது, அவருக்கு மிகவும் சரியாகப்பட்டது. உங்களையெல்லாம் பரலோகத்தில் கொண்டுபோய் சேர்க்க, உங்கள் இரட்சிப்பின் அதிபதியான இயேசுவை உபத்திரவப்படுத்துவது, தேவ சித்தமானது. நீங்கள் உபத்திரவப்படுவது தேவ சித்தமுமல்ல, நோக்கமுமல்ல. அடுத்து,
"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமானத்தைக் கற்றுக்கொள்ளுகின்றேன்" (சங்கீதங்கள் 119:71) 
இது டேவிட்டின் சாட்சி, நீங்கள் சாட்சியை விசுவாசிப்பதைவிட ஆண்டவர் உங்களுக்கென்று கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என விசுவாசிக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் இருந்த சபை ஒன்றில் உபதேசியாராய் இருந்த எனக்கன்பான ஊழியர் ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு விசுவாசி தன் கையில் 5 வயது மதிக்கத்தக்க குழந்தையோடு அந்த ஊழியரைப் பார்க்க வந்திருந்தார். அந்த குழந்தை கண் பார்வையற்ற குழந்தை. அந்த குழந்தை பார்வை அடையும்படி ஜெபியுங்கள் என்று கூறினார். நான் ஜெபித்தேன். ஜெபித்து முடித்தபின் அவர் பெற்றி பாக்ஸ்டரின் சாட்சியைக் கூறி அதை போல இவளுக்கும் ஆண்டவர் சுகம் தருவார் எனக் கூறினார். அவர் சொன்ன விடயத்தை வேத வசனத்தோடு ஒட்டிப் பார்த்தேன், ஒட்டவில்லை. அந்த இடத்தில் நான் அவருக்கு போதிக்கவில்லை. அவர் நம்புகின்ற சாட்சியின்படி அந்த குழந்தைக்கு ஆகட்டும் என உள்ளத்தில் நினைத்துக்கொண்டேன். 
தேவன் தன் பிள்ளைகளுக்கு உபத்திரவத்தின் மூலமாக அல்லாமல், ஆலோசனையின் மூலமாகவே கற்றுக்கொடுக்கின்றார். இதே டேவிட் இதை வேறுஒரு  இடத்தில் கூறியிருக்கின்றான். சங். 32:9ல், 
"வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்ட சேராத புத்தியில்லாத குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்க வேண்டாம்"
சொன்னா கேளு; அடிவாங்கி ஒன்றைக் கற்றுக் கொள்ளாதே. 32:8ல், 
"நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" 
புத்தியில்லாத கழுதையைத்தான் வாயைக் கட்டி, கடிவாளத்தைப் போட்டு இறுக்கி உபத்திரவப்படுத்துவார்கள். பிதாவாகிய தேவன் தன் பிள்ளைகளுக்கு, போதித்தும், ஆலோசனை கொடுத்தும்தான் கற்றுத்தருகின்றார். அல்லேலூயா!! எவ்வளவு அன்பான பிதா உங்களுக்கும் எனக்கும் இருக்கின்றார்!!
பொதுவாக, மூன்று வகை உபத்திரவங்கள் இந்த பூமியில் உள்ளது. இதிலே ஒன்றிலும் பிதாவாகிய தேவன் இல்லை. 
1. பிசாசிடமிருந்து வரும் உபத்திரவம்: "பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்" (மாற்கு 1:34)
2. மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் உபத்திரவம்: 
".....நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்;...." (சங்கீதம் 35:13)

3. மத கோட்பாடுகளினால் வரும் உபத்திரவம்: 
இன்னும் சில வேத வசனங்களை பார்ப்போம்! 
"இதோ நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்" (ஏசாயா 48:10) 
இந்த இடத்திலும் நான் உன்னை உபத்திரவப்படுத்தினேன் எனக் கர்த்தர்  கூறவில்லை. 2தெசலோனிக்கேயர் 1:6ல், 
"உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாக கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே" 
இங்கே தேவ பிள்ளைகளாகிய உங்களுக்கு, மனிதர்களால் உபத்திரவம் வந்தால், தேவ நீதி வெளிப்படும். 
ஊழியர்களுக்கு வரும் உபத்திரவம்: 
"....நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்" (அப். 14:22) 

இங்கே ஆண்டவர் எங்கே வருகின்றார் என்றால், வசனம் 20ல், சீஷர்கள் சூழ்ந்து நிற்க்கையில், அவன் (மரித்து போனான் என்று போட்டுவிட்டுப் போன அவன், எதுவுமே நடக்காதது போல தேவ வல்லமையினால்  எழுந்து) பட்டணத்துக்குள் பிரவேசித்தான்.....

இயேசுவின் நாமத்தினால் வந்த உபத்திரவத்தை அனுபவித்த நான் உங்களுக்கு இதை விளக்குவது எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்! சிறிய வித்தியாசங்கள் இதிலே உண்டு. நான் ஊழியம் செய்த இடத்துக்கு வெளியே தாக்கப்பட்டேன்.  தாக்கியது, கும்பல் அல்ல, ஒரே நபர். எனக்கு கொஞ்சம் பெலன் இருந்தது, எழுந்து எனது வீட்டுக்கு சென்றேன். இந்த சம்பவம் இரவு  11 மணிக்கு நடந்தது. நான் தாக்கப்பட்ட பொழுது என்னைச் சுற்றிலும் யாரும் இல்லை. "இயேசுவை எங்க ஏரியாவிலே சொல்லாதே, சொல்லாதே எனக் கூறியே அடித்தான். 
பின்பு அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் கேள்விப்பட்டிருந்தார்கள். வேத பகுதியில் பர்னபாவைக் கூட்டிக்கொண்டு, அடுத்த ஊர்களுக்குச் சென்று ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்தபின்பு, மீண்டும் அந்தியோக்கியாவுக்குத் திரும்பி வந்து அங்குள்ள சீஷருடைய மனதை திடப்படுத்தி, சொன்னதுதான் மேலே உள்ள வசனம்! இது சுவிஷேசத்தினால் வரும் உபத்திரவம்! நானும் பிற பகுதிகளில் ஊழியம் செய்துவிட்டு அடுத்தவாரம் அங்கு சென்றபொழுது, யாருமே நான் தாக்கப்பட்டதைக் குறித்து என்னிடம் கேட்கவில்லை. அப்படி விசாரித்து இருந்தால் நான் என்ன கூறியிருப்பேன்? ".....நம்ம அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்" என்ற வசனத்தைத்தான் சொல்லியிருப்பேன். இதிலிருந்து ஊழியர்களுக்கு உபத்திரவம் இயேசு என்ற நாமத்தின் மகிமைக்காக வருகின்றது! என்பதை நீங்கள் அறிய வேண்டும். அப்.20:23,24ல், 
"கட்டுக்களும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிரதை மாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றைக் குறித்தாகிலும் கவலைப்படேன்...." 

பவுலின் ஊழியத்தில் ஆவியானவர் முன்னமேயே அறிவிக்கின்றார், தெரியாத்தனமாக போய் மாட்டிக்கொண்டார் என்றல்ல, தெரிந்தே போய் ஊழியம் செய்தார் என்பதை நீங்கள் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்....... ஆகவேதான் ஊழியருக்காக ஜெபிக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. மறக்காமல் உங்கள் ஜெபங்களில் என்னையும் நினைத்துக்கொள்ளுங்கள்! 
"......உபத்திரவத்திலே பொறுமையாய் இருங்கள்...." (ரோமர் 12:12) 
"உபத்திரவம் பொறுமையையும்...... உண்டாக்குகிறது" (ரோமர் 5:3) 
இந்த செய்தியில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுவது, பிதாவாகிய தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய உங்களை உபத்திரவ படுத்த மாட்டார். 
கடைசியாக,
"என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குத் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33) 
இயேசு கூறியது இதுதான்: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; என்னிடத்தில் இல்லை. அனைவரும் இயேசுவினிடத்தில் வாருங்கள்!

23 Dec 2018

SOW THE SEED

கிறிஸ்துவுக்குள் அருமை நண்பர்கள் யாவருக்கும் இயேசுவின் நாமத்தில் நல் வாழ்த்துக்கள்!

பண விடயங்களில் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள மிக சிறந்த ஒரே வழி, கொடுப்பதுதான்! இன்றய இளம் விசுவாசிகளில் நிறையபேர், நாங்கள் சம்பாதிப்பது எங்களுக்கே போதவில்லை. நாங்கள் எப்படி ஆண்டவருக்கு கொடுப்பது? எனக் கேட்கின்றனர். இங்கு முதலாவது ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும், இது கட்டாயமல்ல, இது உற்ச்சாகமாய் செய்யப்படவேண்டியது. முதலாவது வசனம் என்ன சொல்லுகின்றது என்று பார்ப்போம்!

"விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாயத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" (2கொரி. 9:10) 
இந்தவசனத்தின் படி, உங்களுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும்,  அதற்குள்ளேயே சாப்பிடுவதற்கும், விதைப்பதற்குதேவையான விதையையும் ஆண்டவர் வைத்திருக்கின்றார். நான் சென்னைக்கு வருவதற்கு முன், எங்கள் ஊர் அகிலாண்டபுரத்திலே விவசாயமும், வியாபாரமும் மூன்று தலைமுறைகளாக செய்துவந்தோம். நெல் அறுவடையாகி வீட்டுக்கு வந்தவுடன், அடுத்தவருடம் விதைப்பதற்கு, தனியாக விதை நெல்லை காயப்போட்டு எடுத்து வைத்துவிடுவோம். (எங்கள் ஊர் வேலங்குடி கண்மாய்  மழைக்காலத்தில் தான் நிரம்பும், எனவே ஒரு போக நெல் சாகுபடிதான்) 
மீதியுள்ள நெல்லை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவித்து, உலக்கையால் குத்தி, அரிசியாக்கி சாப்பிடுவோம். அடுத்த வருடம் விதைக்கும் பருவத்தில், தனியாக எடுத்து வைத்த விதை நெல்லை எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைப்போம். இது எங்கள் வீட்டில் மட்டுமல்ல, எல்லா விவசாயி களுடைய வீடுகளிலும் நடக்கின்ற ஒரு விடயந்தான். 

இதிலே விதைப்பதற்கு விதை நெல்லை எடுத்து வைக்காவிட்டால் என்ன நடக்கும்? விதைக்கும் பருவம் வரும்பொழுது விதை நெல் இல்லாமல் போய்விடும். கடன் வாங்கித்தான் விதைக்க வேண்டும், சாப்பிடவேண்டும். மேலே உள்ள வசனத்தின்படி விதைப்பதற்கு விதையையும் சேர்த்தேதான்ஆண்டவர்வருமானத்தை   கொடுக்கின்றார்.எடுத்துவைத்து கொடுங்கள்! (ஊழியத்தில் விதையுங்கள்) 

ஒரு விவசாயி தனது நிலத்தில் சோளம் பயிரிட்டிருந்தார். அறுவடைக்கு வந்தது. கதிர் அறுத்து பக்கத்தில் உள்ள பாறையில் கதிர்களை காயப்போட்டிருந்தார். கதிர்களை கொத்திக்கொண்டு போவதற்கு வருகின்ற பறவைகள், அருகில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கோழிகள், இவைகளை விரட்டும்படிக்கு அருகில் இருந்த மரத்து நிழலில் அமர்ந்திருந்தார். பின்பு சும்மாகத்தானே இருக்கிறோம் என்று பொழுது போக்கிற்காக, ஒரு பரும்  கதிரை  (பெரிய) எடுத்து எத்தனை சோளம் இருக்கின்றது? எண்ணலாம் என நினைத்து எண்ணினார். அந்த கதிரில் மொத்தம் 558 சோளம் இருந்தன. ஒரு நிமிடம் யோசியுங்கள்! அவர் விதைத்த ஒரு சோளத்தில் இருந்து, 558 சோளங்கள்! 558 மடங்கு! வாவ்....

உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஊழியத்தில் விதைக்கிண்றீர்கள்! உதாரணத்துக்கு, ரூ. 1000/- விதைக்கிண்றீர்கள் என வைத்துக்கொள்ளுவோம்! அந்த விவசாயிக்கு விளைந்ததைப்போல விளையும் போது, எவ்வளவு இருக்கும்? அதிகபட்சம் ரூ.5,58,000. நீங்கள் இந்த ஊழியத்தில் விதைக்கும் ரூ. 1,000ன் பலன் 5,58,000ரூ. ஒவ்வொரு முறையும் ஊழியத்தில் விதைக்கும் பொழுது மேலே உள்ள வசனத்தை மனதிலே அறிக்கைபண்ணி விதையுங்கள்! (கொடுங்கள் அல்லது அனுப்புங்கள்) இது விதைப்பும், அறுப்புக்குமான கோட்பாடு! 

"இந்த பூமி இருக்கும் வரைக்கும் விதைப்பும் அறுப்பும் ............ ஒழிவதில்லை என்று தனது உள்ளத்திலே சொன்னார் என ஆதி. 8:22 சொல்லுகிறது.
 இந்த அளவு அதிகமாக பெற்றுக்கொண்டு நான் என்ன செய்வது? இன்னும் அதிகமாக நல்ல வேலைகளுக்கு கொடுக்கும்படி, பரிசுத்தவான்களின் குறைவுகளிலே உதவி செய்யும்படி. நிறைய விசுவாசிகள் எங்கள் ஊழியத்திற்கு கொடுப்பவர்களை பற்றிக் கூறுகின்றேன். பிரதர் ஏழைப்பிள்ளைகளின் மத்தியிலே ஊழியம் செய்கின்றார், நாம்தான் இந்த ஊழியத்துக்கு கொடுத்து தாங்க வேண்டும் என நினைத்து கொடுக்கிண்றீர்கள்! இது ஓரளவு சரிதான்! கொடுக்கின்ற நீங்களும், வாங்குகின்ற நானும் வசனத்தின்படி போய்விட்டால், இரண்டு பேருக்குமே நல்லது. வாழ்த்துக்களுடன்......

ஆண்டவர் பேசுவாரா?

நான் சென்ற மாதத்தில் ஓரிரு சபைகளுக்கு திடீரென சென்றபொழுது, அங்குள்ள ஊழியர் நான் எதிர்பார்க்கவே இல்லை... எப்படி இருக்கின்ரீர்கள்? என கேட்டனர். ஆண்டவர் இந்த சபைக்கு செல் என்று கூறியபடியால் இங்கு வந்தேன் என பதிலளித்தேன். அதிலிருந்து என்னிடத்தில் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி: ஆண்டவர் பேசுவாரா? என அடிக்கடி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் இதுதான்..... ஆண்டவர் பேசுவதைக் கேட்க வேண்டுமானால், கவனிக்க வேண்டும். சென்ற மாதத்திலே (இது ஆண்டவர் பேசியதற்கு ஒரு உதாரணம்) நமது ஊழியத்தில் விதைக்கின்ற ஒரு கடைக்கு சென்று திரும்பும்போது, பைக்கை எடுக்கும்போது, என் உள் மனது ஆண்டவரை நோக்கி, எனது பிரயாசத்தின் பலனை நான் பார்க்க எனக்கு உதவி செய்யும் என ஜெபித்தது. (இது நான் விரும்பி வாயை திறந்து ஜெபிக்கவில்லை) உள்மனதின் ஜெபம். உடனே ஆண்டவர், உனது பிரயாசத்தின் பலன் உனக்கு வேண்டுமா? அல்லது உன் விசுவாசத்தின் பலன் வேண்டுமா? எனக் கேட்டார். அவர் கேட்ட பின்தான் எனக்கு ஞானம் வந்தது... ஆண்டவரே சரீர முயற்சி அற்பமானது என்பதை நான் அறிவேன். எனக்கு, என் விசுவாசத்தின் பலனைக்கான உதவி செய்யும் என ஜெபித்தேன். இதுதான் ஆண்டவர் பேசுவது. வாக்குத்தத்தம் உங்கள் எல்லையாக இருக்கட்டும். உன்னிப்பாக கவனிக்கும் பொழுது கர்த்தர் பேசுவதை கேட்க முடியும். விசுவாசிக்கும் பொழுது, ஆண்டவர் செயல்படுவதை உணரமுடியும். விசுவாசியுங்கள், நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாய் ஆண்டவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுவீர்கள்!

சப்ளிமென்ட்:
சப்ளிமென்ட் என்றால் என்ன? எனது கிராமமாகிய அகிலாண்டபுரத்தில் நான் வியாபாரம் (கடை) செய்த பொழுது, விவசாய வேலைகளில் ஈடுபட்டிருப்போர், 'எனக்கு கைகால் வலிக்கின்றது, ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்கள்' என கேட்பார்கள். நாங்கள் அஞ்சால் அலுப்பு மருந்தைக் கொடுப்போம். நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு வேலைசெய்யத் தேவையான சக்தியைக் (உணவில் உள்ள கார்போஹைடிரேட்டும், கொழுப்பும் ஆக்ஸிஜனோடு சேர்ந்துஎரிந்து  வேலை செய்வதற்கான உஷ்ணத்தைக்) கொடுக்கின்றது. அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் பொழுது, சாப்பாட்டில் இருந்த சத்துக்களெல்லாம் எரிந்து காலியான பின்பு, உழைப்பு சரீரத்தைப் பாதிக்கின்றது. அப்பொழுது, கை, கால் வலி, குடைச்சல் எல்லாம் வருகின்றது. இதை சரிக்கட்டுவதற்கான மருந்துதான் அலுப்பு மருந்து. இது மாத்திரையாகவும் (பி-காம்ப்ளெஸ், வைட்டமின் போன்ற) இருக்கலாம். இன்று அநேகர், அதிகப்படியான உழைப்பின் நிமித்தம் வலி வரும்பொழுது, குடித்தால் வலி தெரியாது என தவறாக நம்பி, மது குடிக்க ஆரம்பித்து, பின்பு மதுவுக்கு அடிமையாகி விடுகின்றனர். இப்பொழுது அறிந்திருப்பீர்கள்! சப்ளிமென்ட் என்றால் அலுப்பு மருந்து. உண்ணும் உணவில் இருந்து வேலைக்குத்தேவையான சக்தியை பெற்று கொள்ளாமல், அதை வேறு வழியில் பெற்று கொள்ளுவது சப்ளிமென்ட். 




20 May 2018

GOODNESS WILL SHINE ON YOU LIKE THE SUN

உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்
"ஆனாலும் என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும், நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்" மல்கியா 4:2

ஆண்டவருக்கு பயப்படும் பயம் குறைந்து வரும் நாட்களில் நாம் வாழ்ந்து வருகின்றோம். அடுத்து என்ன நடக்கும் என யோசிக்காமல் பலர் செயல்படுவதை நீங்கள் பார்க்கின்றீர்கள்! ஆண்டவர் எப்பொழுதுமே அன்பினால் நிறைந்திருக்கின்றார். மனிதன் ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்புகின்றார்! ஆசீர்வாதங்களைக்கூட அதற்குள்ளேயே வைத்திருக்கின்றார்! இங்கே பயப்படும் பயம்! யாத்திராகமம் 20:20ல், நீங்கள் பிழையில்லாத வாழ்க்கை வாழும்படிக்கு ஆண்டவருக்கு பயப்படும் பயம்! நாளாகமம் 19:7ல், ஆண்டவருக்கு இலஞ்சம் கொடுக்க முடியாது, நீதியுள்ளவர் ஆகவே பயப்படும் பயம்! நீதிமொழிகள் 8:13ல்,  தீமையை வெறுப்பது கர்த்தருக்கு பயப்படும் பயம்! அதாவது கர்த்தர் வெறுப்பதை நீங்களும் வெறுக்க வேண்டும்! 

நான் ஆண்டவருக்கு பயந்த வாழ்க்கை வாழுகின்றேன்! இன்னமும் வாழுவேன் என உங்கள் உள்ளம் கூறுமானால், மிக நல்லது! இது சரிதான்! இதோடு இதன் பலனை பெற்று கொள்ளுவேன் என விசுவாசிக்க வேண்டும்! 

பலன் என்ன? ஞானத்தின் ஆரம்பம்! (நீதி.1:7) அறிவை பயன்படுத்துவதுதான் ஞானம்! வேத வசனத்தோடு கூட உங்கள் அறிவைப் பயன்படுத்தினீர்கள் எனில் அதுதான் தேவ ஞானம்! அதிலே சமாதானம் நிறைந்திருக்கும்! அதனால் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்! உதாரணத்துக்கு, நீங்கள் உங்கள் தோட்டத்திலே, முருங்கை மரங்களை பயிரிட்டு இருக்கின்ரீர்கள் என வைத்துக்கொள்ளுவோம்! அதற்க்கு தண்ணீர் பாய்ச்சும் பொழுது, எனது வருமானத்தில் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து ஒரு பங்கை கொடுக்கின்றேன், எனவே அவர் எனது வருமானத்தை ஆசீர்வதிக்கின்றார். இந்த முருங்கை மரங்கள் அனைத்தும் 100% பலனைத் தரும். எனது தோட்டத்தில் இருக்கும் முருங்கள் மரங்களே உங்களை நான் அதிகமாய் நேசிக்கின்றேன்! (அடுத்த முறை நீங்கள் தண்ணீர் விட செல்லும் பொழுது, ஒரு வித்தியாசத்தை உணருவீர்கள்!) ஆண்டவரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும், எனவே சந்தையில் எனது காய்கள் அதிக விலை பெரும். இப்படி பேசிக்கொண்டே / யோசித்துக்கொண்டே உங்கள் வேலைகளை செய்யுங்கள்! (உலகத்தோடு ஒப்பிட்டு பார்க்கதிருங்கள்!) உங்களுக்கு நீங்களே இடைப்படும்போது அறிவைப் பயன்படுத்துங்கள்! பிறரோடு இடைப்படும்போது இதயத்தை பயன்படுத்துங்கள்!

2வது, சரீரத்தில் ஆரோக்கியம்! மல்கியா 4:2ன்படி,உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்! அதன் கதிர்களில் ஆரோக்கியம் இருக்கும்! நீங்கள் விசுவாசித்து வாழ அழைக்கப்பட்டு இருக்கிண்றீர்கள்! இந்த வசனத்தை அறிக்கை செய்யுங்கள்! ஆரோக்கியம் என்பது வியாதி இல்லாமல் வாழும் வாழ்க்கை! ஆரோக்கியம் எப்பொழுதுமே தேவை! சுகம், வியாதி வந்தால் மட்டுமே தேவை.

ஆண்டவருக்கு பயப்படுவதால் வரும் அடுத்த ஆசீர்வாதம், லூக்கா 1:50ன்படி, அவருடைய இரக்கம் உங்கள் பிள்ளைகளின் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும் வருகின்றது. நீங்கள், உங்கள் சந்ததிக்கு இதைவிட எவ்வளவு பெரிய சொத்தையும் இந்த உலகத்திலே சேர்த்து வைக்க முடியாது. இதையெல்லாம் நினைத்து, அனுபவித்து ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்கள்!

பசுவிடம் பால் குடித்த கன்று எப்படி துள்ளுமோ அதுபோல உங்கள் வாழ்க்கை அமையும்! மனதில், மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்! 

ஜெபிப்போம்! 

பரிசுத்தமும், அன்பும் நிறைந்த எங்கள் பரம பிதாவே உம்மைத் துதிக்கிறோம்! நன்றி செலுத்துகின்றோம்! உமது வழி காட்டுதலுக்காக, உமது பிரசன்னத்துக்காக கோடானகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்! உமது அன்பான இந்த வாக்குக்காய் நன்றி! உமது வாக்கு தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்து நின்று ஆசீர்வதிப்பதற்காய் நன்றி! உமது இரக்கங்களுக்கு முடிவில்லை. தீமையை விட்டு விலகி வாழ தீர்மானிக்கின்றோம்! எல்லைகள் பெரிதாவதற்காய் நன்றி! வேத வசனத்தை மட்டுமே விசுவாசித்து வாழ உதவி செய்யும்! இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே! ஆமென், ஆமென்.
    
If you want to donate to our ministry in Bit Coin, this is our Bit Coin address: 36UeDPS5e8JUoLvR4F26B5AAQ57RRMKmgj
நன்றி!

19 Mar 2018

GOD SHOW HIS MIGHT TO YOU

கர்த்தர் தம்முடைய வல்லமையை உங்களிடத்தில் விளங்கச் செய்வார்

வாக்கு மாறாத தேவன் உங்களை தமது வாக்குத்தத்தின் மூலம் ஆசீர்வதிப்பார்!

"தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது..." (2 நாளா.16:9)

உங்கள் வாழ்க்கையிலே தேவனுடைய வல்லமையைக் காண விரும்புகிண்றீர்களா? உங்கள் குறைவுகளை நிறைவாக்கவும், உங்கள் துன்பத்தின் மத்தியில் தேவ ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும், உங்கள் பலவீனத்திலே தேவ பெலனையும், சோர்வு நேரத்திலே ஆண்டவரின் பிரசன்னத்தையும், வழி தெரியாத சூழ்நிலையில் தடைகளையே வழியாக்கவும், பல்வேறு பிரச்சனைகளினாலே வந்த சிக்கல்களில் இருந்து விடுதலையளிக்கவும் தேவன் விரும்புகின்றார். ஆகவே அவருடைய கண்கள், இந்த பூமியெங்கும் தேடுகிறது. அவருடைய பார்வையிலே நீங்கள் விழவேண்டுமானால், ஒரே ஒரு நிபந்தனைதான் இங்கு இருக்கின்றது. அது உத்தம இருதயம்! ஆண்டவரைக்குறித்த உத்தம இருதயம்!! ஆங்கில வேதாகமத்தில், 

"....For the eyes of the Lord run to and fro throughout the whole earth, to show his might in behalf of those whose heart is blameless toward him" 2 Chro. 16:9 (Revised Standard Version - Illustrated) குற்றமற்ற , மாசற்ற இருதயம்!

அப்படிப்பட்ட இருதயம் இங்கு எப்படி வருகின்றது எனப்பார்ப்போம்! 2நாளாகமம் 15:17ல், "....ஆனாலும் ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது" (யூதாவின் ராஜா) ஆண்டவருக்குப் பிடிக்காததை அவன், தன் நாட்டை விட்டு அகற்றியபோது, அவனுடைய இராஜ்யபாரம் முதல் பத்து வருடங்கள் அமரிக்கையாய் இருந்தது. அவர்களுடைய காரியமும் வாய்த்தது. 

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? ஆண்டவருக்கு பிரியமில்லாததை உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றிவிட்டீர்களா? நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன் உங்களுக்கு, காரியத்தை வாசிக்கும்படி செய்வார். நேர்மையை குறித்து சற்று யோசியுங்கள்! யூதாவிலே 5,20,000 பராக்கிரமசாலிகள். விரோதியாகிய எத்தியோப்பியனுக்கோ 10,00,000 பேர் + 300 இரதங்கள். ஏறக்குறைய இருமடங்கு! ஆசா ஆண்டவரைத் தேடினான், உதவியைக்கேட்டான். வேதம் சொல்லுகின்றது, கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக முறிந்து விழுந்தார்கள்! வெற்றி பெற்றவுடன் ஆண்டவர் அசரியாவின் மூலமாக பேசினார். 'அவரை விட்டீர்களானால் அவரும் உங்களை விட்டுவிடுவார்' உங்கள் வாழ்வில் ஆண்டவர் செய்த நன்மைகளுக்கு (ஜெபத்துக்கு பதிலளித்தபோது, காரியங்கள் வாய்த்தபோது) அவருக்கு மகிமையை செலுத்தினீர்களா? ஆசா தன் மக்களோடு கூட சேர்ந்து மகிமையை செலுத்தியபோது, வேதம் சொல்லுகிறது, ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது. இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை முறை!

இப்பொழுது சகோதரர்களுக்கிடையே. இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷா ராமாவைக்கட்டுகிறான். எதிரி பலம்வாய்ந்தவனாக இருந்தபொழுது, ஆண்டவரைத் தேடினான். தேவன் தன் பட்சத்திலிருந்து யுத்தத்தைப் பார்க்கின்றார் என்பதை அறிந்திருந்தான். அதனால்தான் இவ்வாறாக ஜெபித்தான், "....கர்த்தாவே எங்களுக்கு துணை நில்லும்; உம்மை சார்ந்து ஏராளமான இந்தக் கூட்டத்துக்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்...." (வ14:11) இப்பொழுது சகோதரர்களுக்கிடையே சண்டை. யூதாவுக்கு, எத்தியோப்பியருடன் ஒப்பிட்டால் இஸ்ரவேல் அவ்வளவு பெரிய எதிரியல்ல. வெற்றி பெறுவது என்பது லேசான காரியம். ஆனாலும் இவன், பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்திற்கு ஆளனுப்பினான். (இதுதான் மாம்சீக முடிவு) முடிவு: இவர்கள் ஜெயித்தாலும், ஆண்டவருடைய வாக்கு வருகின்றது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? உங்களுக்கு கடினமாக தோன்றுபவற்றில், ஆண்டவரைத் தேடியும், எளிதாக தோன்றுகிறவற்றில் சுயமாகவும் காரியத்தை நிறைவேற்றுகிண்றீர்களா? மனந்திரும்புங்கள் எல்லாவற்றிலும் (காரியம் சிறிதானாலும், பெரிதானாலும்) நீங்கள் அவரை சார்ந்து வாழ வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கின்றார். அவர் உங்களை ஸ்தாபிக்க விரும்புகின்றார். எல்லாவற்றிலும் நீங்கள்  அவரை சார்ந்து, உத்தம இருதயத்தோடு வாழுகின்றவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கச் செய்கிறார். இங்கே சார்ந்து என்பது அவரை முன்னிறுத்தி வாழ்வது.

எப்படி ஒரு சிறு குழந்தை தன் பெற்றோரை சார்ந்து வாழுகின்றதோ, அதைப்போல நீங்கள் கர்த்தரை சார்ந்து வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் தேவைகள் பெரிதானாலும் சிறிதானாலும் முதலாவது ஆண்டவரிடம் சொல்ல பழகுங்கள்! நான் இதை செய்கின்றேன் என உங்கள் உள்ளம் சொல்லுமானால் இப்பொழுதே கர்த்தர்  தம்முடைய வல்லமையை விளங்கச்செய்வார். 

மேலும் தாங்கள் தேவ சமூகத்திலே செய்த பொருத்தனைகளை சற்று நினைத்துப் பாருங்கள்! இந்த வசனத்தை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்!

"சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத்த தேடாதவன் எவனோ அவன் கொலை செய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து....." (2 நாளா. 15:13) 14ல், 
".....கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்" 

இனிமேல் வசனம் 16:12ல், 
"......அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்" 

எவ்வளவு எளிதாக தனது உடன்படிக்கையை, ஆணையை மறந்து போனான்! வருடங்கள் 30 ஆகிவிட்டது எனவே மறந்துவிட்டான் போலும்! ஆனாலும் ஆண்டவர் மறக்கவே இல்லை. 

இந்த வசனத்தை வைத்துக்கொண்டு ஒரு சபைப்பிரிவு வைத்தியரிடமே போகாதே. ஜெபம்பண்ணு, எல்லாம் சரியாகிவிடும் என கூறிக்கொண்டிருக்கின்றது. வைத்தியரிடம் சென்றால் ஏதோ ஒரு பாவியைப் பார்ப்பது போல பார்ப்பது என நடந்துகொண்டு இருக்கின்றது. சத்தியம் என்னவெனில், அவன் தனது  பொருத்தனையின்படி நடக்கவில்லை என்றே  வேதம் குறிப்பிடுகின்றது. சரி ஜெபிப்போம்!
பரிசுத்தமும் அன்பும் நிறைந்த எங்கள் அன்பின் பிதாவே! உம்மைத் துதிக்கிறோம்! இந்த வசனத்தின்படி, வாக்கின்படி இதைப்படிக்கின்ற அனைவரையும் தனித்தனியாக, பேர்பேராக உமது வல்லமையை விளங்கச்செய்யும்! எங்களின் பொருத்தனையின்படியே எங்களை வழி நடத்துவதற்காய் துதியும் கனத்தையும் செலுத்துகின்றோம்! எங்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்படியாய் ஜெபிக்கிறோம்! வேதவசனத்தைக் கொண்டு வாழ்க்கையை கட்டியெழுப்ப கிருபை செய்யும்! விசுவாசத்தில் நல்ல போராட்டத்தை போராடி ஜெயிக்க உதவி செய்யும்! பலப்படுத்தும், கடினமான சூழ்நிலைகளில் வாக்குத்தத்தத்தை நோக்கி பார்க்க கிருபை செய்யும்! மிகக் குறுகிய காலந்தான், கடினமான சூழ்நிலை என்பதை நினைத்து, சோர்ந்துவிடாமல் முன் செல்ல உதவி செய்யும்! எல்லா நேரங்களிலும் இயேசுவுக்கு பிரியமானத்தையே செய்ய கிருபை செய்யும்! வெற்றிக் கொடிபிடித்து எங்களுக்குமுன் தேவ சமூகம் செல்லுவதற்க்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே! ஆமென்! ஆமென்!!