கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் யாவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
வழக்கமாக வெளியிடும் நமது ஈஸ்கட்டோஸ் மாதப்பத்திரிக்கை தொடர்ந்து நான்கைந்து மாதமாக வெளியிடமுடியவில்லை. அரசாங்கத்தில் பத்திரிக்கையைப் முறைப்படி பதிவு செய்யவே இந்தக் காலதாமதம். நீண்ட நாட்களாக, உங்களோடு தொடற்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. எனவே பத்திரிக்கை வருமளவும், இந்த வலைத்தளத்தில் ஆண்டவர் தரும் செய்திகளை வெளியிடலாமென முடிவெடுத்தேன். மேலும் இந்த வலைதளத்தை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள் யாவரோடும் பகிற்ந்து கொள்ளுங்கள்! உங்கள் மின்அஞ்சல் முகவரியைக் கொடுத்து, SUBSCRIBE செய்வீர்களாகில், உங்கள் மின்அஞ்சலுக்கே நாங்கள் வெளியிடும் செய்திகள் உங்களை வந்தடையும். தொடர்ந்து வாசியுங்கள்! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்! உங்கள் மனம் புதிதாகும், நீங்கள் மறுரூபமாவீர்கள்!! (எபேசியர்1:3; ரோமர் 12:2)
"ஏனெனில் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எபிரேயர் 8:12)
எனக்கன்பானவர்களே இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகின்றேன்! ஏன் பாவங்களையும் அக்கிரமங்களையும் நினைப்பதில்லையெனக் கேட்டால், அவர் இரக்க குணம் உள்ளவர் எனப் பொதுவாக எல்லாரும் கூறவர். நாம் வேறுவிதமாக இதை இங்கே பார்க்கப்போகின்றோம்.
முதலாம் உடன்படிக்கையின் கீழே ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணத்தையும், நியமங்களையும் கொடுத்தார். உபாகமம் 4:13ல்,
"நீங்கள் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்"
உபாகமம் 5:1-3ன் படி, இந்த உடன்படிக்கை ஓரேபிலே, இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டது.
உபாகமம் 9:9-11 இந்த வசனத்தை ஏன் இங்குக் குறிப்பிடுகின்றேன் எனில் தேவன் 10 கற்பனைகளைக் கற்பலகைகளில் எழுதினார் என்பதை வலியுருத்தி கூறத்தான்.
புறஜாதிகளும் நியாயப்பிரமாணத்தை, கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரோமர் 2:14,15ல்,
"அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப் பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
அவர்களுடைய மனசாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றக் கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்."
ஒருமுறை சிந்தாதிரிப்பேட்டை, ஐந்து குடிசைப்பகுதியில் சிறுவர் வேதாகம பள்ளி நடத்த ஆயத்தம் செய்து, பிள்ளைகளை அழைத்துக் கொண்டிருந்தேன். சில வாலிப பெண்கள் என்னிடம் நீ என்ன சொல்லிக் கொடுப்ப? பொய் சொல்லாத, கெட்டவார்த்தை பேசாத, திருடாத, விபச்சாரம் செய்யாத..... இதைத்தானே..... எனக்கு என்ன பதில் சொல்லுவது என்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துவிட்டேன்.
மேலே அந்தப்பிள்ளைகள் கூறியதைப் போல, இப்படிப்பட்ட கருத்துக்களை, அறிவுரைகளை நீங்கள் எங்கும் (பள்ளிகளில், வீட்டில், ஒரு சில கிறிஸ்தவ சபைகளில், இன்னபிற இடங்களில் கதைகள் மூலமாக) கேட்கலாம்.
புனித வேதாகமம் உங்களை வேறு அடிப்படையில் வாழும்படியாக அழைக்கின்றது.
புது உடன்படிக்கையை மறந்து, பழைய உடன்படிக்கையின் கீழே வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கும் இயேசுவை அறியாதவர்களுக்கும் இடையில் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விட்டது. நாமனைவரும் புதிய உடன்படிக்கையின் (புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்) கீழ் வாழ்கின்றோம் என்பதை மனதில் இருத்துங்கள்!
புது உடன்படிக்கையைக் குறித்து நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து முதன் முதலாகப் பேசுகின்றார். பெரிய வியாழன் அன்று இரவு தனது சீடர்களோடு பந்தியிருந்தபோது, இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகின்ற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது எனக்கூற, எல்லோரும் பானம் பண்ணினார்கள். இதை மத்தேயு 26:28; மாற்கு 14:24; லூக்கா 22:20; 1கொரிந்தியர் 11:25 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம்.
பழைய உடன்படிக்கையில், இஸ்ரவேலர்கள் பாவ நிவாரணபலி, குற்ற நிவாரணபலி இப்படிப் பட்ட பலிகளைச் செலுத்தி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டார்கள். இப்பொழுதோ, நாம் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவின் இரத்தத்தினால் உள்ளம் கழுவப்படுகின்றோம். (1யோவான் 1:7) இப்பொழுது நமது நிலைமை எனன? ரோமர் 7:6ன்படி,
"இப்பொழுதோ நாம் பழமையான எழுத்திபடியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத் தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலை யாக்கப்பட்டிருக்கிறோம்."
ரோமர் 7:4ல்,
"அப்படிப்போல, என் சகோதரரே நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்."
ஞானஸ்நானத்திலே நீங்கள் எப்படி பாவத்துக்குச் செத்தீர்களோ, அதைப் போல நீங்கள் கிறிஸ்துவை (மேலே உள்ள வசனத்தின்படி) ஏற்றுக் கொ்ண்டபொழுது, கிறிஸ்துவின் சரீரத்தினாலே..... நியாயப்பிரமாணம், நியமம், கற்பனைகள், கட்டளைகளுக்கு மரித்திருக் கின்றீர்கள்.
கிறிஸ்தவர்கள் ஏன் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளத் தேவையில்லை?
எபேசியர் 2:15ல்,
"சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, ...."
நியாயப்பிரமாணம் ஒழிக்கப்பட்டுவிட்டது.
2. சிலுவையிலே வெற்றி சிறந்தார். கொலோ. 2:14ல்,
"நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் (கற்பனையைக்) குலைத்து அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து; சிலுவையின் மேல் ஆனியடித்து;"
பழைய உடன்படிக்கை ஊழியம், புதிய உடன்படிக்கையில் இருக்கின்ற ஊழியத்தின் வித்தியாசத்தைக் கூறுமிடத்து, 2கொரி.3:6,7ல்,
"புது உடன்படிக்கையின் ஊழியக்காரரா யிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவராக்கினார், அந்த உடன்படிக்கை எழுத்துக்குறியதாயிராமல், ஆவிக்குறியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக் கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே....."
மேலேயுள்ள வசனங்களின்படி, உடன்படிக்கை, கற்பனைகளுக்கான ஊழியம் அனைத்தும் மரணத்துக்கு ஏதுவானது என அறிகின்றோம்.
இயேசு கூறிய உவமைக் கதையில், பரிசேயன், ஆயக்காரன் ஜெபத்தைப் பார்ப்பீர்களானால், நான் வாரத்தில் 2 நேரம் உபவாசிக்கின்றேன், எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கின்றேன் எனக் கூறி ஜெபித்தான். இது நியாயப்பிரமாணத்தின்படி முற்றிலும் சரியானது. அவன் அப்படி ஜெபித்ததில் தவறே இல்லை. இரண்டுபேருடைய ஜெபத்தின் பதில் என்ன? ஆயக்காரனே நீதிமானாக்கப் பட்டவனாய் வீட்டுக்குத் திரும்பினான். இதிலிருந்து, நீதிமான் ஆகவேண்டுமானால் நியாயப் பிரமானத்தைக் கடைப்பிடி என்பதுதானே. என் நீதிக்குத்தக்கதாகத் தேவன் எனக்குப் பலனளித்தாரெனச் சங்கீதக்காரன் கூறுகின்றான். ரோமர் 9:32ல்,
"என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்."
முந்தய வசனத்தைப் பார்த்தால், நீதியை அவர்கள் அடையவில்லை. ரோமர் 3:20ல்,
"இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகின்றபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை."
பவுல், பேதுருவைப் பார்த்துக் கூறியது இங்கே.....கலாத்தியர் 2:15ல்,
"புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவ தில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியை களினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்."
ஆதித்திருசபை ஏன் உபத்திரவப்படுத்தப்பட்டது?
கலாத்திய சபையிலே விருத்தசேதனம் (நியாயப்பிரமாணம்) உள்ளே வந்தபொழுது, பவுல் கூறுகிறதை சற்று கவனியுங்கள். 5:11ல்,
"சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்காகத் துன்பப்படுகிறேன்? அப்டியானால், சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே."
நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்து தேவனிடத்தில் நீதிமானாக வேண்டும் என வாழ்ந்து கொண்டிருந்த ஒரு யூத சமுதாயத்தில், கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நிறைவாயிருக்கின்றார் என்று பிரசங்கித்ததின் விளைவே உபத்திரவத்தை ஆதித்திருசபைக்குக் கொண்டுவந்தது.
சரி புரோ..... இப்பொழுது நாங்கள் எப்படி வாழுவது? நியாயப்பிரமாணமும் இல்லை, கட்டளையும் இல்லை, நாங்கள் எப்படி கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும்? எனக் கேட்பது எனக்கு நன்றாகத் தெரிகின்றது. இயேசுவைப் பற்றும் விசுவாசத்தில் வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போக நாங்கள் விரும்பவில்லை.புகைப்பிடிக்காதே, கைபேசியை நோன்டிக் கொண்டிருக்காதே, உட்கார்ந்து படி, பொய் சொல்லாதே, லாகிரி வஸ்துக்களை உபயோகிக்காதே என்றெல்லாம் சொல்லக்கூடாதா?
இப்பொழுது என் நிலைமை என்ன?????
ரோமர் 7:6ல், "இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாக, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்."
எபிரேயர் 8:9,10ல்,
"அவர்களுடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப்பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப் போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே. நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்."
எபிரேயர் 10:16ல் இதே வசனம் அப்படியே இருக்கின்றது.
அதாவது (புது உடன்படிக்கையில்) உங்கள் மனதிலே பிதாவாகிய தேவன் தமது பிரமாணங்களை எழுதியிருக்கின்றார். உங்கள் விருப்பத்தோடே கலந்துவிட்டேன் என்கிறார்.
பிலிப்பியர் 2:13ல்,
"ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்."
மேலே உள்ள வசனங்களை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், உங்களுக்குள் தோன்றுகின்ற விருப்பமே தேவனது பிரமாணம்.
தலைப்புக்கு வருவோம்!!
எபிரேயர் 10:11
"அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதை சொல்லுகிறார்."
1கொரிந்தியர் 15:56
"மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்."
இந்த வசனத்தின்படி பாவம் நியாயப்பிரமாணத்தினாலே பெலன் கொள்ளுகின்றது. நியாயப்பிரமாணமே இல்லை என்கிறபோது, பாவம் எங்கே இருந்து வரும்?? ஆகவே உங்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்கிறார்.
வாழ்த்துக்களுடன்,
உங்கள் சகோதரன்....
கா. செல்வின்துரை. கைபேசி 9840836690.