மன்னிப்பு (மத்தேயு 18:21-35)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இந்த பதிவை படிக்குமுன் உங்கள் வேதாகமத்தை பக்கத்திலே வைத்துக் கொண்டு, மேலே உள்ள வசனங்களை ஒருமுறைக்கு நான்குமுறை படித்துக் கொள்ளுவது நலம். ஏனெனில், அப்பொழுதுதான் உங்களுக்கு நன்கு புரியும்.
முதலாவது வசனம் 21ல் அப்போஸ்தலர் பேதுரு எத்தனை தடவை மன்னிப்பது என்ற கேள்வியைக் கேட்கின்றார், "ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்?".....
மன்னிப்பு என்பது மனித தன்மையின் உயரிய பண்பு. ஏனெனில் இது கடவுளைப் பிரதிபலிக்கின்றது. தேவன் நம்மை இலவசமாகவே மன்னிக்கின்றார். மேலும் நாம் பிறரை சீக்கிரமாகவே மன்னிக்கவும் எதிர்பார்க்கின்றார். இயேசு கிறிஸ்தவ மனதுருக்கம் மீண்டும், மீண்டும்......., ............., ..............., மீண்டும் மீண்டும் மன்னிக்கும் என போதித்தார்.
வசனம் 23-35ல், இயேசு கிறிஸ்து ஒரு ஈவிரக்கமற்ற ஒரு வேலைக்காரனைப் பற்றிய ஓர் உவமையைக் கூறுகின்றார். ஒருமனிதன் ஒரு அரசனிடம் கடன் (இன்றைய மதிப்பின்படி ரூ. 7,32,00,000/-) பட்டிருந்தான். அரசன் உடனே கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நெருக்கியபோது, கடன் வாங்கியவன் இரக்கத்துக்காக் கெஞ்சினான். அவன் கெஞ்சிக் கேட்டதையடுத்து, அரசன் அவன் கடன் முழுவதையும் மன்னித்து அனுப்பிவிட்டான். ஆனால் இந்தக் கடன்காரன், (7,32,00,000/- ரூபாய் மன்னிக்கப்பட்டவன்) தன்னிடம் ரூ.1220/- கடன் வாங்கியவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து, நீ பட்ட கடனை எனக்கு உடனே கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்றான். அப்பொழுது அவன், இவன் காலில் விழுந்து, என்னிடத்தில் பொறுமையாய் இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்கின்றேன், என்று அவனை வேண்டிக் கொண்டான். இவனோ சம்மதியாமல் போய், அவன் பட்ட கடனைக் கொடுத்து தீர்குமட்டும், அவனைக் காவலில் போடுவித்தான்.
இயேசு மிகச் சரியாக 'மன்னிக்காத தன்மை'யைக் கண்டித்தார். நமது பரலோக தேவனிடம் நாமனைவருமே எல்லையில்லா மன்னிப்பைப் பெற்றவர்கள். நமக்கு விரோதமாக செய்யப் படும் சின்ன குற்றங்களைக்கூட வேகமாக மன்னிக்க வேண்டும்.இந்தப் பகுதியில் (மத்தேயு 18ன் பிற்பகுதியில்) உண்மையான மன்னிப்பைப் பற்றி நாம் கற்றுக் கொள்ளுகின்றோம்.
1. உண்மையான மன்னிப்புக்கு எல்லை இல்லை: (18:21,22) நாம் ஏழு தரம் மாத்திரமல்ல, ஏழு எழுபது தரம் மன்னிக்க வேண்டும். யூதர்கள் மூன்று முறை மட்டுமே மன்னித்தனர். யூத மத போதகர்கள், 'ஒருவன் ஒருமுறை குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு, இரண்டாம் முறை குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு, மூன்றாம் முறையும் குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு. நான்காம் முறை குற்றஞ் செய்தால் மன்னிக்காதே' என போதித்தனர். இங்கே பேதுரு யூத முறைமையைக்காட்டிலும் மேலும் நான்கு முறையைச் சேர்த்து ஏழு தரம் குற்றஞ் செய்தால்.............' எனக் கேட்கின்றார். இங்கே இயேசு கூறுகின்றார், :மன்னிப்புக்கு எல்லையே கிடையாது' ஒரே மனிதன் மீண்டும் மீண்டும் குற்றமிழைத்தாலும் ஏழு எழுபது முறை (நானூற்று தொண்ணூறு முறை) நாம் மன்னிக்க வேண்டும். மன்னித்தல் என்பது நிலையான அடிப்படையாய் இருக்க வேண்டும்.
2. நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவனை நாம் மன்னிக்கும் போது நாம் நம்முடைய பெருந்தன்மையைக் காட்டுகின்றோம்: தேவன் நமது பாவம் என்ற கடனை நமக்கு மன்னித்திருக்கிறபடியால், (நமது "கடவுளிடம் மனந்திரும்புங்கள்" என்ற கைப்பிரதியில் நாம் ஒருவருக்கு விரோதமாக குற்றஞ் செய்தால் அது படைத்த கடவுளுக்கு விரோதமாகவும் குற்றஞ் செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளோம்) நாமும் நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்க வேண்டும். தேவன் நம்மை மன்னித்ததைப் போல நாம் மன்னிக்க வேண்டும். எபேசியர் 4:32 சொல்லுகிறது.
"ஒருவருக்கொருவர் தயவாயும் மனதுருக்கமாயுமிருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்"
மன்னிப்பு என்னும் விலைக் கிரையம், நம்மைத் தவறாக நடத்தியவர்களிடம் முரட்டுத்தனமாயும், மன்னிக்க மறுக்கும் தன்மையையும் உடையவர்களாய் இருப்பதிலிருந்து, நம்மை விழிப்புடையவர்களாக்குகிறது.
3. மன்னிக்காத தன்மை, மிகக் கடுமையான பின் விளைவுகளைக் கொண்டுவரும்: (18:34,35) மத்தேயு 6:15ல்,
இயேசு, "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" என்றார்.
நீங்கள் இதை மிக எளிதாக எடுத்துக் கொள்ளமுடியும், ஆனால் நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்காவிடில், ஆண்டவருடைய தீர்ப்பு மேலிரங்கும். அது 'மனிதனை' குறை சொல்ல முடியாதபடி இருக்கும்.
நம்மில் ஒவொருவரும் கடவுளுக்குக் கடன்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும் போது அவர் மன்னிக்கிறார். ஒரே ஒரு நிபந்தனை........... நாம், நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்கும் போது மட்டுமே.
ஆண்டவரை அறியாத மக்கள், கிறிஸ்தவர்களைப் பார்த்துக் கூறும் ஒரு குறை என்னவென்றால், 'என்ன தப்புப் பண்ணியிருந்தாலும் இயேசுகிட்ட போய்.... என்ன மன்னியும்..... என்ன மன்னியும்.... அப்படீன்னு சொல்லி மன்னிப்புக் கேட்பீங்க... அவரும் மன்னிச்சுறுவாரு..... தப்புப் பண்ணீட்டு........ தப்புப் பண்ணீட்டு மன்னிப்புக் கேட்ருவீ ங்க.... அவரும் எத்தனை தடவைனாலும் மன்னிப்பாரு....... எங்களுக்கெல்லாம் அது தெரியாது.... நாங்க தப்பே செய்யாமல் வாழத்தான் முயற்சிக்கிறோம்".
மன்னிப்பதற்கும் ஆண்டவர் ஒரு நிபந்தனை வைத்திருக்கின்றார் என்பதை அறியாமல் கூறுவார்கள். நாம் அடுத்தவர்கள் மீது எரிச்சலுடனும் பொறாமையுடனும், கசப்புடனும், பழிவாங்கும் உணர்வுடன் இருந்தால், சமாதானத்தை உண்டுபண்னும்படியான நடவடிக்கைகளை உடனே நாம் மேற்கொள்ளவேண்டும்.
உணமையாகவே மன்னிக்கப் பட்ட மனிதன், நான் இப்படிப்பட்ட குற்றஞ் செய்துவிட்டேனே என்று அதையே நினைத்துக் கொண்டு அதிலேயே இருக்க மறுக்க வேண்டும். ஆனால், சில வேளைகளில் நினைவுக்குவரும், அதை தடுக்க முடியாது. "மன்னித்து மறந்துவிடு" என நாம் கூற முடியும். அப்படிப் பட்ட வாசகம் வேதாகமத்திலே எங்கும் இல்லை. ஒரு காரியம் மன்னிக்கப் பட்டதானால், நாம் அதையே நினைத்துக் கொண்டு அதிலேயே தங்கிவிடக் கூடாது. அப்படி இருந்தால் அது மறக்க முடியாத தளும்பாக மாறிவிடும். இதிலே கவனம் தேவை.
மன்னிப்பு என்பது பாவம் நிறைந்த குற்றத்தை மறைக்க சாக்குப் போக்கு சொல்லுவதில்லை. நான் மற்றவரை மன்னிக்கிறேன் என்றால், நான் அந்த மனிதர் செய்த பாவத்தை தட்டிக் கழிப்பது ஆகாது. பாவம் எப்போதுமே பாவந்தான். மேலும் உண்மை அன்பு பாவத் தன்மையை எப்பொழுதுமே குறைக்க முயற்சிக்காது. குற்றஞ் செய்தவன் மனந்திரும்பும்படியாய் விட்டுவிடும். ஆனால் மனிப்பு என்பது கசப்பு, கோபம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். மேலும் நமக்கு விரோதமாக செய்யப்பட்ட பாவத்தை அனுசரித்து செல்லும்.
இங்கே எனது ஜெபமெல்லாம், ஆண்டவர் இதைப் படிக்கின்ற அன்பு சகோதர சகோதரிகளின் இருதயத்தில் மன்னிப்பு என்னும் நீரூற்றைத் திறக்கும் படியாகவும், நம்மில் ஒவொருவரும் மேலும் மேலும் மன்னிப்பின் ஆவியால் நிறைந்திருக்க வேண்டும் என்பதே. மத்தேயு 18ல் இயேசு கிறிஸ்து 'மனத்தாழ்மை, மனதுருக்கம், மன்னிப்பு' இவைகளைக் குறித்து போதிக்கின்றார்.
No comments:
Post a Comment