விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! இந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!
"விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" மாற்கு 9:23
என்ற வசனத்தின் மூலமாக ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்தவிருக்கும் மாற்றங்களை ஆவலோடு எதிர் பார்க்கின்றேன்!
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை நாம் விசுவசித்துதான் பெற்றுக் கொள்ளவேண்டும். எபிரேயர் 6:11ல்,
"நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிரவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து..........."
என வேதம் கூறுகின்றது. இதன்படி இயேசுவிடமிருந்து அற்புதங்களை, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டுமானால், நாம் 1. அசதியாய் இருக்கக் கூடாது. 2. விசுவாசம் தேவை. 3. நீடிய பொறுமை தேவை. இந்த வசனமும் நமக்கு விசுவாசம் அவசியம் தேவை என வலியுறுத்துகின்றது.
மேலும் இயேசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் தம்மை அற்புதம் செய்ய வேண்டி சந்திக்க வந்தவர்களிடம் விசுவாசத்தை எதிர்பார்த்தார். மத்தேயு 9:22ல்,
"இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்"
மத்தேயு 9:29ல்,
"அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக் கடவது என்றார்"
மாற்கு 9:23ல்,
"இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்"
யோவான் 11:40ல்,
"இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்"
மேலும் வேதாகமத்தில், விசுவாசத்தை குறித்து, ரோமர் 8:33; 10:11ல்,
"அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை....."
ரோமர் 14:23ல்,
"விசுவசத்தாலே வராத யாவும் பாவமே"
மேலும், எபிரேயர் 11:6ல்,
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்......"
நமது விசுவாசத்தைப் பெருக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? அது சம்பந்தமாக, வேறு சில வசனங்களைத் தியானிப்போம்.இயேசு தமது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்த போது, லூக்கா 17:5ல்,
"அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்"
இதற்கு முந்தய வசனங்களை நாம் பார்க்கும் போது, இயேசு கிறிஸ்து மன்னிப்பின் அவசியத்தைக் குறித்து பேசிய பொழுது அவருடைய சீடர்கள் மேற்கண்டவாறு கேட்டனர். நமது விசுவாசம் வல்லமையுள்ளதாக சாரமுள்ளதாக இருக்க வேண்டுமானால் நாம் பிறரை மனதார மன்னிக்க வேண்டும். இதன் அர்த்தம் என்னவெனில்,
எனக்கு விரோதமாக, துரோகியாக நீ எதை செய்தாலும் எனது அற்புதத்தை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்ளுவேன் என்பதுதான். என்னை கோபப்படுத்தி என் விசுவாசத்தை குறைத்து விட முடியாது என்பதுதான்!
மன்னிக்க முடியவில்லையானால், இயேசு கிறிஸ்து தமது மலைப் பிரசங்கத்தில் மத்தேயு 5:44ல்,
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்"
என்ற வசனத்திற்கு கீழ்படியுங்கள். நாம் பிறரை மன்னித்தால்தான் நாம் ஆண்டவரிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சத்தியம் மாறாதது. மத்தேயு 6:12ல்,
"எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்"
ஆண்டவர் இதை விரும்புகின்றார். நீங்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொள்ள ஆயத்தப்படுகின்றீர்கள்.
2. நமது விசுவாசம் காணக் கூடியதாக இருக்கவேண்டும்: எங்கள் சிறுவர் ஊழியத்தில், அன்பைக் குறித்து சொல்லிக் கொடுக்கும் போது, உங்கள் அப்பா, அம்மாவிடம் எப்படி உங்கள் அன்பைக் காட்டுவீர்கள்? எனக் கேட்டால், சில பிள்ளைகள் என் அம்மாவிற்கு நான் முத்தம் கொடுப்பேன், சிலர், 'அம்மா சொன்ன வேலைகளை செய்வேன்' சிலர், 'அன்பாக இருப்பேன்' இப்படிக் கூறுவார்கள். இங்கே நம் விசுவாசம் காணக் கூடியதாக இருக்க வேண்டும். மத்தேயு 9:2ல்,
"இயேசு அவர்களுடைய விசுவாசத்தை கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன் கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டது என்றார்"
மாற்கு 2:5லும், இதே சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என வேதம் நமக்கு போதிக்கின்றது. செயல்களின் மூலமாக நாம் நமது விசுவாசத்தைக் காட்டவேண்டும். எனது ஊழியத்தில் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு, வாரத்தில் ஒரு நாள் நான் தவறாமல் ஊழியத்துக்கு செல்லுவது உண்டு. தனித்தாள் ஊழியம். வீடு வீடாக சென்று அவர்களை விசாரித்து, ஆண்டவருடைய அன்பைக் கூறுவேன். அநேகர் குடும்பமாக இரட்சிக்கப் பட்டார்கள்; சிறுவர் ஊழியத்தையும் ஆரம்பித்து செய்து வந்தேன். சுமார் 3௦ பிள்ளைகள் வருவார்கள். ஒருநாள் சில வீடுகளை சந்தித்துவிட்டு, அந்த பகுதியின் மையத்தில் இருந்த ஒரு திண்டில் உட்கார்ந்து எனது ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சகோதரி ஒரு வயதுள்ள ஒரு குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு, "சார்..... இந்தக் குழந்தை காலையில் இருந்தே அழுகின்றது. தயவு செய்து வேண்டுங்கள்" என்றார்கள். சரி நான் உங்கள் வீட்டுக்கே வருகின்றேன் என்று கூறவே, அவர்கள் முன் சென்றார்கள். நான் பின்னாலே சென்றேன். என்னோடு கூட ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளும் வந்தார்கள். குடிசைக்குள்ளே சென்றேன். உள்ளே இன்னொரு குழந்தை இரண்டு வயதிருக்கும், ஒரு கந்தல் துணியில் படுத்திருந்தது. இதுக்கு என்ன? "அவனுக்கும் ஜுரம் சார்...." தொட்டுப் பார்த்தேன் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. தேங்காய் எண்ணை இருக்கிறதா? கேட்டுவாங்கி நெடுமுழங்காலில் ஜெபிக்க ஆரம்பித்தேன். முதலாவது அந்த சிறு குழந்தைக்கு எண்ணை பூசி ஜெபித்தேன். பின்பு அந்த 2 வயதுப் பையனுக்கும் எண்ணை பூசி ஜெபித்தேன். பின்பு சத்தியத்தை சொல்ல ஆரம்பித்தேன். அப்பொழுது ஞாயிறு பள்ளி பிள்ளைகள், "இன்னும் அழுதுகிட்டே இருக்கு பாரு சார்" ஒரு வினாடி திகைத்தேன். பக்கத்திலிருந்த பாட்டிலில் இருந்த எண்ணையை எடுத்து, இயேசுவின் இரத்தம் ஜெயம் என சத்தமாக கூறி, தனது தாயின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்த குழந்தையின் வயிற்றில் (அதுதான் எனக்கு எட்டிய இடத்தில் இருந்தது) தடவினேன். அடுத்த நொடி குழந்தை தன் அழுகையை நிறுத்தியது. அந்த 2 வயதுப் பையனைப் பார்த்தேன் அவன் எழுந்து விளையாடிக் கொண்டிருந்தான். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! எனது ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளின் கண்களிலும் மகிழ்ச்சி! சத்தியத்தை சொன்னேன். ஆண்டவர் நமது விசுவாசத்தைப் பார்க்க விரும்புகின்றார்! கடைசியாக,
துதிக்கவேண்டும்: வாக்குத்தத்தத்தை நாம் சுதந்தரிக்க நாம் விசுவாசிகளின் தகப்பன், ஆபிரகாமைப் பின்பற்ற வேண்டும். ரோமர் 4:20,21ல்,
"தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப் படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப் படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்"
ஆபிரகாமின் 75 வது வயதிலே ஆண்டவர் வாக்குக் கொடுத்தார். இடையிலே சிறிது தளர்வு. மீண்டும் அவன் நம்புவதற்கேதுவான ஏதுக்களைக் (மேலே வானத்தின் நட்சத்திரங்கள், கீழே கடற்கரை மணல்) கொடுத்தார். நானும் எனது ஊழியத்தில் சில ஏதுக்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு அது ஊழியத்திலே நிறைவேறியதைக் கண்டிருக்கின்றேன். வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் சந்தேகப் படாமல்.......". சந்தேகப்படாமல் இருப்பதற்கு அவன் என்ன செய்தான்? ஆண்டவருடைய வாக்குத்தத்தத்திற்கு எதிராய் தோன்றிய எதையுமே அவன் எண்ணாதிருந்தான். (ரோமர் 4:19) நாமும் அப்படியே இருக்க வேண்டும்.
உதாரணமாக ஆபிரகாமுக்கு இருந்த பிரச்சனையையே எடுத்துக் கொள்ளுவோம். தற்காலத்தில் குழந்தை இல்லையெனில் டாக்டரிடம் சென்று சரீரத்தை செக் பண்ணி இருக்கலாம். குழந்தையை பெற்றெடுக்கும் அளவிற்கு சரீர நிலை இல்லை எனக் கூறியிருக்கலாம். சிலருக்கு மைன்ட் செட் ஆக வேண்டும் என்று கூறியிருக்கலாம். ஒரு சிலருக்கு குழந்தையே பிறக்காது எனக் கூட கூறியிருக்கலாம். ஆபிரகாம் என்ன செய்தான்? டாக்டர் கூறியது எல்லாம் நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் அதை அவன் எண்ணவில்லை --- பெரிதாக நினைக்கவில்லை. சோர்ந்து போகவும் இல்லை. அதை தடையாக நினைக்கவுமில்லை. மாறாக வாக்குத்தத்தத்தைப் பார்த்தான்.
"உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுவேன்" (சங்கீதம் 115:14)
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நீங்கள் இதைப்போல உங்கள் ஆசீர்வாதத்துக்காக, இருக்கின்ற நிலைமையை மட்டுமே பார்க்காமல் ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்த்து ஆண்டவருக்கு மகிமையை செலுத்துவீர்களா?
ஆபிரகாம் எப்படி ஆண்டவருக்கு மகிமையை செலுத்தியிருப்பான்?
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிற கர்த்தாவே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். மரித்தவர்களையும் உயிரோடு எழுப்ப வல்லமையுள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். என்னுடைய பிரச்சனைகளைக் காட்டிலும் பெரியவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். என்னுடைய குறைவுகளை நிறைவாக்க வல்லமை உள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். கர்த்தாவே நீர் பெரியவர் உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை ஆகவே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். தாயின் கருவிலே என்னைக் கண்டவரே உம்மைத் துதிக்கிறேன். கர்ப்பத்தை உயிர்பிக்க வல்லமையுள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். சர்வ வல்லமை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம்! இப்படியாக ஆபிரகாம் தேவனுக்கு மகிமையை செலுத்தியிருப்பான்.
ஜெபிப்போமா?
ஆபிரகாமின் தேவனே, ஈசாக்கின் தேவனே யாக்கோபின் தேவனே... உமது பரிசுத்தப் பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தில் தேவ சமூகத்தில் வருகின்றேன். எனது பாவங்களை உமது திருக் குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் மன்னித்து இரத்தத்தினால் கழுவி பரிசுத்தப்படுத்தும். நீர் என் மீது வைத்திருக்கும் உம்முடைய அன்பை எண்ணாமல் உலகத்தின் மீது மனதை செலுத்தியதை மன்னியும். சகலத்தையும் அறிந்திருக்கின்ற உமக்கு முன்பாக நான் பாவஞ்செய்தேன் என அறிக்கையிடுகின்றேன். நீர் அதினதின் காலத்தில் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவர் என விசுவாசிக்கின்றேன். எனது குறைவுகளை நிறைவாக்குகிறபடியால் நன்றி! எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கச் செய்கிறபடியால் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபங்களும் எங்கள் பிதாவே.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! பிறருக்கு பிரயோஜனம் உண்டாகும்படி உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்!
உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது
No comments:
Post a Comment