23 Aug 2017

CHRIST TOOK AWAY THE CURSE THE LAW PUT ON US

கிறிஸ்து உங்களுக்காக சாபமாகி உங்கள் மீது இருந்த சாபத்தை நீக்கிவிட்டார் 

நாம் எதை விசுவாசிக்க வேண்டும்? 

1தெசலோனிக்கேயர் 4:14ன் படி,
"இயேசுவானவர் மறித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே...."

இயேசு சிலுவையில் மரித்ததின் பலன் என்ன? அதை விசுவாசிக்கிண்றீர்களா? இயேசு சிலுவையில் செய்து முடித்ததை நீங்கள் விசுவாசிக்கிண்றீர்களா?

1. உங்கள் பாவம் மன்னிக்கப்படுகின்றது. இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டதினால் சிந்திய இரத்தத்தினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. 
"அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7)

2. நீங்கள் சுகமாகின்றீர்கள். 
"நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" (1பேதுரு 2:24)

3. உங்கள் மேலிருந்த சாபம் நீக்கப்படுகின்றது.

"மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்" (கலாத்தியர் 3:13)

4. உங்களை குற்றங்சாட்டுகின்ற பிசாசை சிலுவையிலே ஜெயித்தார். 
"நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குழைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்க கோலமாக்கி அவைகளின் மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்" (கொலோ. 2:14,15)

மேலே உள்ளவற்றில், சாபங்கள் நீங்கியதைப்பற்றி தியானிப்போம். நியாயப்பிரமாணத்தின் சாபங்கள்: 
"இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்துக்கு செவி கொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்" (உபாகமம் 28:15)
இந்த வசனத்துக்குப் பின் 68ம் வசனம் வரைக்கும் சாபங்கள்தான். 

இந்த சாபங்களெல்லாம் இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டதினால் உங்களை விட்டு நீக்கப்பட்டது. இயேசு எனக்காக மரித்தார் என்று சொல்லும் நீங்கள், என் மீது வந்த சாபங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார் எனவும் கூறவேண்டும். அதாவது உபாகமம் 28:15ன்படி, ஆண்டவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனாலும், அதனால் வரும் சாபங்கள் அனைத்தும் (வானமும், பூமியும் உள்ளளவும்) நீக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வெறுமனே பாவ மன்னிப்புக்காக மட்டுமல்ல. 

இயேசுவானவர் சிலுவையில் செய்து முடித்தவைகளை விசுவாசிக்க நீங்கள் அழைக்கப்பட்டு இருக்கின்ரீர்கள். செய்து முடித்தவைகளின் மீது வைக்கப்படுவதுதான் விசுவாசம். இனிமேல்தான் நடக்கும் என எதிர்பார்ப்பது நம்பிக்கை. இதன் வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். விசுவாசம் என்பது இயேசு ஏற்கனவே சிலுவையில் செய்து முடிக்கப்பட்டவைகளில் வைப்பது. ஆண்டவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போகின்ற, உனது சாபங்கள் எல்லாம் உங்களை விட்டு நீக்கப்பட்டது. இனி,

மனிதர்களுக்கிடையேயான சாபம்: 
"அடைக்கலான் குருவி அலைந்து போவது போலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும் காரணமில்லாமலிட்ட சாபம் தாங்காது" (நீதி. 26:2)

எந்த மனிதராவது, உங்களை சாபமிட்டால், இந்த வசனத்தை மனதிற் கொண்டு, சாபத்தை அலட்சியப்படுத்திவிடுங்கள். மேலும், 
"...... உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்..." (மத்தேயு 5:44)

 ஒருவேளை உங்கள் மீது தவறு இருந்து அதாவது காரணத்தோடு சாபமிட்டால், நேரடியாக மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். 

ஜெபம்:
எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே, இயேசுவின் நாமத்தில் உமக்கு ஸ்தோத்திரம்! கல்வாரி சிலுவையில் நீர் பட்ட பாடுகளுக்காய் உமக்கு ஸ்தோத்திரம்! அதன் மூலமாக நியாயபிரமாணத்தை நாங்கள் மீறியதால் வந்த  சாபத்தை எங்களை விட்டு என்றென்றும்   நீக்கியதற்காய் நன்றி! சகமனிதர்கள் மூலமாய் வருகின்ற சாபத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காய் நன்றி! எங்களின் மூலமாக இயேசுவின் நாமம் சதாகாலங்களிலும் மகிமைப்படுவதாக. இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.
     
நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்! சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாகும் என்ற வசனத்தின்படி விடுதலையோடு வாழ உங்களை ஆண்டவர் வழிநடத்துவாராக! வசனம் என்னும் பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! உபயோகப்படுத்துங்கள்!! கோபம், எரிச்சல், பொறாமை என்னும் மாம்சத்தின் கிரியைகளை கொண்டு வருகின்ற பிசாசை ஜெயித்துவிடுங்கள்!!! மீண்டும் வாழ்த்துக்கள்!!!!

No comments:

Post a Comment