23 Aug 2017

CHRIST TOOK AWAY THE CURSE THE LAW PUT ON US

கிறிஸ்து உங்களுக்காக சாபமாகி உங்கள் மீது இருந்த சாபத்தை நீக்கிவிட்டார் 

நாம் எதை விசுவாசிக்க வேண்டும்? 

1தெசலோனிக்கேயர் 4:14ன் படி,
"இயேசுவானவர் மறித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே...."

இயேசு சிலுவையில் மரித்ததின் பலன் என்ன? அதை விசுவாசிக்கிண்றீர்களா? இயேசு சிலுவையில் செய்து முடித்ததை நீங்கள் விசுவாசிக்கிண்றீர்களா?

1. உங்கள் பாவம் மன்னிக்கப்படுகின்றது. இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டதினால் சிந்திய இரத்தத்தினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. 
"அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7)

2. நீங்கள் சுகமாகின்றீர்கள். 
"நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" (1பேதுரு 2:24)

3. உங்கள் மேலிருந்த சாபம் நீக்கப்படுகின்றது.

"மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்" (கலாத்தியர் 3:13)

4. உங்களை குற்றங்சாட்டுகின்ற பிசாசை சிலுவையிலே ஜெயித்தார். 
"நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குழைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்க கோலமாக்கி அவைகளின் மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்" (கொலோ. 2:14,15)

மேலே உள்ளவற்றில், சாபங்கள் நீங்கியதைப்பற்றி தியானிப்போம். நியாயப்பிரமாணத்தின் சாபங்கள்: 
"இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்துக்கு செவி கொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்" (உபாகமம் 28:15)
இந்த வசனத்துக்குப் பின் 68ம் வசனம் வரைக்கும் சாபங்கள்தான். 

இந்த சாபங்களெல்லாம் இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டதினால் உங்களை விட்டு நீக்கப்பட்டது. இயேசு எனக்காக மரித்தார் என்று சொல்லும் நீங்கள், என் மீது வந்த சாபங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார் எனவும் கூறவேண்டும். அதாவது உபாகமம் 28:15ன்படி, ஆண்டவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனாலும், அதனால் வரும் சாபங்கள் அனைத்தும் (வானமும், பூமியும் உள்ளளவும்) நீக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வெறுமனே பாவ மன்னிப்புக்காக மட்டுமல்ல. 

இயேசுவானவர் சிலுவையில் செய்து முடித்தவைகளை விசுவாசிக்க நீங்கள் அழைக்கப்பட்டு இருக்கின்ரீர்கள். செய்து முடித்தவைகளின் மீது வைக்கப்படுவதுதான் விசுவாசம். இனிமேல்தான் நடக்கும் என எதிர்பார்ப்பது நம்பிக்கை. இதன் வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். விசுவாசம் என்பது இயேசு ஏற்கனவே சிலுவையில் செய்து முடிக்கப்பட்டவைகளில் வைப்பது. ஆண்டவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போகின்ற, உனது சாபங்கள் எல்லாம் உங்களை விட்டு நீக்கப்பட்டது. இனி,

மனிதர்களுக்கிடையேயான சாபம்: 
"அடைக்கலான் குருவி அலைந்து போவது போலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும் காரணமில்லாமலிட்ட சாபம் தாங்காது" (நீதி. 26:2)

எந்த மனிதராவது, உங்களை சாபமிட்டால், இந்த வசனத்தை மனதிற் கொண்டு, சாபத்தை அலட்சியப்படுத்திவிடுங்கள். மேலும், 
"...... உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்..." (மத்தேயு 5:44)

 ஒருவேளை உங்கள் மீது தவறு இருந்து அதாவது காரணத்தோடு சாபமிட்டால், நேரடியாக மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். 

ஜெபம்:
எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே, இயேசுவின் நாமத்தில் உமக்கு ஸ்தோத்திரம்! கல்வாரி சிலுவையில் நீர் பட்ட பாடுகளுக்காய் உமக்கு ஸ்தோத்திரம்! அதன் மூலமாக நியாயபிரமாணத்தை நாங்கள் மீறியதால் வந்த  சாபத்தை எங்களை விட்டு என்றென்றும்   நீக்கியதற்காய் நன்றி! சகமனிதர்கள் மூலமாய் வருகின்ற சாபத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காய் நன்றி! எங்களின் மூலமாக இயேசுவின் நாமம் சதாகாலங்களிலும் மகிமைப்படுவதாக. இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.
     
நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்! சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாகும் என்ற வசனத்தின்படி விடுதலையோடு வாழ உங்களை ஆண்டவர் வழிநடத்துவாராக! வசனம் என்னும் பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! உபயோகப்படுத்துங்கள்!! கோபம், எரிச்சல், பொறாமை என்னும் மாம்சத்தின் கிரியைகளை கொண்டு வருகின்ற பிசாசை ஜெயித்துவிடுங்கள்!!! மீண்டும் வாழ்த்துக்கள்!!!!

10 Aug 2017

DEBIT PART - 2

கடன் !!
(இரண்டாம் பகுதி)
கிறிஸ்துவில் பிரியமான நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்! இரண்டாம் பகுதியாக நடைமுறையில் எவ்வாறு கடனைத் தீர்க்கலாம்? என்ற தலைப்பில் நாம் பார்க்கலாம்.

1. முதலாவது ஜெபம்: கடனை விரைவாக திருப்பி செலுத்தி அதைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களுடைய உண்மையை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். விதவைப்பெண்ணிற்கு (2இராஜாக்கள் 4ம் அதிகாரம்) உடனடியாக உதவி செய்ததைப்போல அல்லது சிறிது காலத்துக்குப் பின், அவ்வாறு செய்யலாம். (கையில் பணம் இருந்தால் உடனடியாக கடனைத் திரும்பிச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள்) மாத தவணையாக  திரும்பிச் செலுத்த ஒரு சிறு தொகைதான் இருந்தாலும், கடனை திரும்பிச் செலுத்துங்கள். கர்த்தர் உங்கள் முயற்சிகளை வர்த்திக்கப் பண்ணுவார்.

2. வரவு செலவைத் திட்டமிடுங்கள்: வரவு செலவு திட்டமானது, நீங்கள் முன்கூட்டியே உங்கள் செலவுகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, உதவியாக இருக்கும்.

3. உங்கள் உடமைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்: உங்கள் உடைமைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு தேவையற்றதாக இருக்குமென்றால், அதை விற்று கடன் சுமையிலிருந்து விரைவாக நீங்கள் வெளியேறிவிடலாம்.

4. உங்கள் கடன்களை பட்டியலிடுங்கள்: அநேகர் எவ்வளவு கடன் இருந்த போதிலும், துல்லியமாக எவ்வளவு தங்களுக்கு கடன் இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். இது இயல்பானது. உங்களுக்குத் பிடிக்காததை நீங்கள் நினைக்காமலிருந்தால், ஒருவேளை அது உங்களை விட்டு மறைந்து போய்விடும் என்ற எண்ணம் இருப்பினும், உங்களுடைய கடன்களின் பட்டியல் இருந்தால்தான் உங்களுடைய நிதி நிலைமையை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும். (ஒருவர் இப்படியாகச் சொன்னார், 2 இலட்சரூபாய் கடன் இருக்கின்றது, கடன் எனக்கு அல்ல. என் தொழிலுக்கு இருக்கின்றது என்று)

5. கடனைத் திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகள்: அ) முதலாவது சிறிய கடனைத் திரும்பிச் செலுத்துங்கள். இதை நீங்கள் உங்கள் குறிக்கோளாகக் கொண்டால், ஒவ்வொரு கடனாகக் குறையக் குறைய மீதமிருக்கும், கடன்களை திருப்பி செலுத்த அது உங்களை உற்ச்சாகப் படுத்தும். ஆ)அதிக வட்டியுள்ள கடன்களை திரும்பிச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள். 

6. உங்கள் வருவாயை அதிகரிக்க முடியுமா எனப் பாருங்கள்: இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் உங்கள் வருவாயை அதிகரிக்க முடியுமா? எனப் பாருங்கள். அப்படி வரும் அதிக வருமானத்தை கடனை அடைப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். வருவாயை அதிகரிக்கும் முயற்சியானது, கர்த்தரிடமும், உங்கள் குடும்பத்தின் மேலும் உங்களுக்கு இருக்கின்ற உறவைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். (அதாவது ஞாயிறு அன்றும் வேலைக்குச் சென்று விடாதிருங்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை விட்டு விடாதீர்கள்)

7. சிக்கனம்: செலவை எப்படி குறைக்கலாம் என்று யோசித்து, முடிவெடுங்கள்.

8. கடன் அட்டையை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்: உங்களுக்கு கடன் அட்டை இருந்தால், அதை பயன்படுத்துவதை அறவே நிறுத்த வேண்டும். பணத்துக்குப் பதிலாக கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் வழக்கமான செலவை விட 1/3 மடங்கு அதிகமாக செலவளிக்கின்றார்கள்.

9. போதும் என்ற மனநிறைவைக் கொள்ளுங்கள்: நுகர்வோரை வியாபாரிகள் பல்வேறு முறைகளில் தங்கள் பொருட்களை வாங்கும்படி தூண்டுகின்றனர். அவைகளில் ஒன்று, விளம்பரங்கள். உதாரணத்துக்கு 30/07/2017 ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரம் இது. ICICI Bank Credit & Debit Cards Daily highest spender wins 100 gms of GOLD. (In the form of a voucher worth Rs.3 lakh from Tanishq) Offer period July 16, 2017 to August 15, 2017. உங்களுக்கு இருப்பது போதாது என்ற அதிருப்தியான எண்ணத்தை உருவாக்குவதே விளம்பரங்களின் நோக்கமாக இருக்கின்றது. 

ஒரு அமெரிக்க கம்பெனி, தங்கள் நாட்டில் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்று, மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றில், தொடங்கியது. ஒரு மாதமாகியது, மாத சம்பளம் பெற்றுக் கொண்ட மக்கள், அடுத்த மாதத்திலிருந்து யாருமே வேலைக்கு வரவில்லை. ஒரு சில மாதங்கள் கம்பெனி மூடிக் கிடந்தது. பின்பு அதன் முதலாளி, அந்த கிராமத்தின் தலைவரிடம் சென்று விசாரித்தார். அவர், எங்களுக்கு எல்லாம் இருக்கின்றது! நாங்கள் ஏன் வேலை செய்யவேண்டும்? என சொன்னாராம். பின்பு யாரோ ஒருவர், அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும், விலைக்கு வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலை தபாலில் அனுப்பினாராம். அதற்கு பின்பு அந்த தொழிற்சாலைக்கு தொழிலாளர் பிரச்சனையே இல்லை.

உங்களுடைய பொருளாதாரத்தை பொருட்களின் நுகர்வு எவ்வளவு பாதிக்கின்றது என்பதற்கான 3 காரணங்கள் இதோ! 1. நீங்கள் எவ்வளவு அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவு செய்கின்றீர்கள். 2. பத்திரிகையில் எவ்வளவு அதிகமாய் பொருட்களின் பட்டியலையும், விலையையும் பார்க்கிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவு செய்கின்றீர்கள். 3. கடைத்தெருவுக்கு நீங்கள் எவ்வளவு அதிகமாய் செல்லுகிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவளிக்கிண்றீர்கள்! தொலைக்காட்சியில் வருகின்ற விளம்பரங்களை பார்த்துவிட்டு எனக்கு அதை வாங்கிக்கொடுங்கள் எனக் கேட்காத குழந்தைகளே உங்கள் வீடுகளில் இருக்க மாட்டார்கள். இதுவே உங்களுக்கு சான்று.

"கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. போதுமென்கிற மனதுடன் கூடிய தேவபக்தியே ஆதாயம்" 1 தீமோ. 6:5,6

இயேசுவை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு ஒருவர், தன் நண்பர்களோடு, சினிமாதியேட்டரில், உயர்ந்த கட்டணத்திலும், உயர்தரமான உணவு விடுதிகளில் சாப்பிடவும் தனது பணத்தை தண்ணீராய் செலவிடுவாராம். இயேசுவை ஏற்றுக்கொண்டபின் எல்லோரையும் கவருவதற்குப் பதில், புதிய கிறிஸ்தவ நண்பர்களோடு, விலை மலிவான உணவு விடுதியில் தனது வாழ்க்கைக்குத் தேவையான வேதாகம சாத்தியங்களை பேசி புதிய உறவுகளை வளர்த்துக் கொள்ளுகின்றாராம். கிறிஸ்துவில் மனா நிறைவோடு இருப்பது மிகுந்த ஆதாயம்.

9. வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர கொண்டுவர முயலுங்கள்: அநேகர் தங்கள் கடனிலிருந்து மீளுவதற்காக தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை குறைப்பதற்கு ஆயத்தமாய் இருக்கின்றனர். சிலர் தங்கள் வீட்டை விற்றுவிட்டு சிறிய வீட்டை வாங்கி இருக்கின்றனர். அல்லது வாடகை வீட்டுக்குச் சென்று இருக்கின்றார்கள். பலர் தங்கள் விலை உயர்ந்த கார்களை விற்றுவிட்டு, விலை குறைந்த கார்களை பணம் கொடுத்து வாங்கி இருக்கின்றார்கள். சரியாகச் சொன்னால் அவர்கள் குறைந்த காலத்தில் தங்கள் கடனிலிருந்து மீளுவதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை தற்காலிகமாக தியாகம் செய்திருக்கின்றார்கள்.

10. மனம் தளராதீர்கள்! கடனிலிருந்து மீளுவதற்கான இந்த முயற்சி மிகவும் கடினமானது. அதற்க்கு கடின உழைப்பு தேவை. 3 காரியங்களை நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும். 
1. உங்கள் வருவாயை விட அதிகமாக செலவழிப்பதை நிறுத்துங்கள். 
2. கடனுக்கான வட்டியை செலுத்த தவறாதீர்கள்.
3. கடன் முழுவதையும் அடைத்துவிடுங்கள்!
கடனிலிருந்து மீளுவது எளிதானதல்ல என்றாலும் அதனால் கிடைக்கும் விடுதலையானது உங்களை உற்சாகப்படுத்தும்.

சில சிக்கன நடவடிக்கை: கார் வாங்கினால் அந்த காரை 7,8 வருடங்களாவது பயன்படுத்துங்கள். புதிய மாடல் கார் கவர்ச்சியாக இருக்கின்றது என புதிய மாடலுக்கு தாவி விடாதிருங்கள்!! ஒரு ஸ்மார்ட் கைபேசி வாங்கினால், குறைந்த பட்சம், 5 வருடங்களாவது பயன்படுத்துங்கள்! இது ஆடம்பரத்திலிருந்து உங்களை விலக்கிக் காக்கும். ஒரு வீடு வாங்க, அல்லது கட்ட முடிவெடுத்து வங்கியில் கடன் வாங்குகிண்றீர்கள். அந்த கடன் தொகையோ, திரும்பிச் செலுத்தும் தவனையோ உங்களை / உங்கள் மனநிலையை இப்பொழுதிருக்கிற வாழ்க்கைத் தரத்தை பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த பகுதி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகின்றோம்! இந்த கட்டுரை எமது ஈஸ்கட்டோஸ் என்னும் மாதப் பத்திரிகையில் இருந்து கொடுக்கின்றோம்! உங்களுக்கு பத்திரிகை வேண்டுமானால், உங்கள் முகவரியை 9840836690 என்ற கைபேசி எண்ணுக்கு குறுங்செய்தியாக அனுப்பிவைக்கவும்!! நன்றி!!!

22 Jun 2017

ENVY - GATE OF THE EVIL

பொறாமை - தீமையின் வாசல் 

விசுவாசிகள் மற்றும் நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

அது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் நாள். பிள்ளைகளின் படிப்பு எந்த அளவில் இருக்கின்றது என்பதை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியலுடன் காத்துக் கொண்டிருந்தனர். பெற்றோர்கள் ஆசிரியர்களை பார்த்து தங்கள் பிள்ளைகளின் படிப்பில் உள்ள முன்னேற்றங்களைக் குறித்து, தனித்தனியாக சந்தித்துப் பேசி, மதிப்பெண் பட்டியல்களை வாங்கி கொண்டிருந்தனர்.

பிரான்சிஸ் (12ம் வகுப்பு), மேரியின் (10ம் வகுப்பு) பெற்றோர் அன்று பள்ளிக்கு வரவில்லை. மேரியும், பிரான்சிஸும் காரணத்தைச் சொல்லி அவரவர் வகுப்பாசிரியர்களிடம் சென்று மதிப்பெண் பட்டியலை வாங்கி கொண்டனர். பிரான்சிஸ் வீட்டுக்கு பயத்தோடு சென்றான். தனது பெற்றோர் மேரியின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்திருப்பார்கள். தனது மதிப்பெண்கள், அவளோடு மதிப்பெண்களோடு ஒப்பிட்டால், அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என எண்ணிப்பார்த்த்தான். "அவர்கள், அவள் 90% க்கு மேல் வாங்கியிருக்கும் ஒவ்வொரு படத்துக்கும், ஒரு அன்பளிப்பு என (புத்தாடை, தின்பண்டம் அது, இது என) வாங்கிக் கொடுப்பார்கள். இப்படியே யோசித்துக் கொண்டு வீட்டை அடைந்தான். முன் கதவைத் திறந்தபொழுது, முன் வீட்டில் இருந்த அவனது பெற்றோரின் பேச்சைக் கேட்க நேரிட்டது.

"மேரி, வழக்கம் போலவே இது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த மதிப்பெண் பட்டியல்" என உணர்ச்சிபொங்க அப்பா கூறிக்கொண்டிருந்தார். 
"செல்ல்ல்ல்ல குட்டி, உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது, நீ மிக கடுமையாக உழைத்திருக்கிறாய்" இது அம்மா.

பிரான்சிஸ் அவர்கள் மூவரையும் தாண்டிச் செல்ல முயன்றான். அவன் அடுத்த அறைக்கு செல்லுவதற்கு சற்றுமுன், அவனது அம்மா, "பிரான்சிஸ் இங்கே வா.... இந்த முறை நீ எப்படி செய்திருக்கிறாய்? எனப் பார்ப்போம்"

"மிக நல்லது....." எனக் கூறிய பிரான்சிஸ், இப்பொழுது உலகப்போர் 3 ஆரம்பமாகப் போகிறது என நினைத்தான். திரும்பி அம்மாவிடம் வந்து, அவனது பையில் இருந்த கசங்கி இருந்த மதிப்பெண் பட்டியலை எடுத்து நீட்டினான்.

அம்மா அதை பிரித்துப் பார்த்து, "நல்லது இதுவும் நல்ல மதிப்பெண்கள்தான்" சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவனது அப்பா, "ஹும்ம்ம்ம்ம்ம்...."
"கணக்கிலே இந்த முறை நல்ல மதிப்பெண்கள், முன்னேற்றந்தான்......"

பிரான்சிஸ், "சரிதான்..... ஆனாலும் நான் மேரியைப்போல நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை. ஒரு பாடத்திலும் 90 மதிப்பெண்கள் எடுக்கவில்லை, அவளைப்போல நான் நன்றாகவே செய்யவில்லை" இப்படிக் கூறிவிட்டு அந்த குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு வேகமாக கதவை அடித்து சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

பிரான்சிஸ், மேரிமீது கொண்ட பொறாமை அவனது பெற்றோர்களுக்கு பதில் கூற வேண்டியதை பாதித்தது. அப்போஸ்தலர் நடப்படிகள் 13:44-52ல், சில யூதமக்கள், பவுல் மற்றும் பர்னபாவிடம் கொண்ட பொறாமை, அவர்களை நடத்த வேண்டிய விதத்தைப் பாதித்தது.

பதிலளியுங்கள் (தியானியுங்கள்):

1. ஏன் பிரான்சிஸ் மற்றும் யூதர்கள் பொறாமையினால் நிறைந்தனர்? அவர்களின் பொறாமையின் பின் விளைவுகள் என்ன?

2. யார் மீதாவது நீங்கள் பொறாமைப்பட்டிருக்கின்ரீர்களா? அதன் மூலம் என்ன பின் விளைவுகளை சந்தித்தீர்கள்?

கவனிக்க: 

நீங்கள், பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதிருங்கள்.

உங்கள் திறமைகளை பட்டியலிடுங்கள், எதிலெல்லாம் நல்லவைகளை செய்தீர்கள்? பின்பு உங்களை பொறாமை என்னும் சோதனைக்குள்ளாக்கிய நபர்களின் பெயர்களை படியுங்கள்.

உங்களை பொறாமை கொள்ளச்செய்த (சரியாக சொன்னால் உங்களை ஆச்சரியப்படுத்திய, கிளர்ச்சியூட்டிய) நபர்களுக்காக ஆண்டவரைத் துதியுங்கள்.

மேலும் படிக்க: 1) ஆதியாகமம் 37 (பக்கம் 48)
2) அப்போஸ்தலர் 17:5-9 (பக்கம் 187)
3) சங்கீதம் 37:1-8 (பக்கம் 691)


       
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நண்பர்களே!! உங்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகின்றேன்! உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாயிருக்கும் இதைப்போன்ற வெளியீடுகளை, உங்கள் நண்பர்களுக்கும் (கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவரல்லாதவர்கள்) என எல்லாருக்கும் அறிமுகம் செய்யுங்கள்! நன்றி!!

9 May 2017

CHILDREN'S BIBLE SCHOOL

சிறுவர் வேதாகம பள்ளி
அன்பு நண்பர்கள் யாவருக்கும் வணக்கம்!
சிறுவர் வேதாகம பள்ளி 2/05/2017 செவ்வாய் அன்று ஆரம்பித்து 6/05/2017 சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது. கடைசி நாள் ஊர்வலம் மட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை கீழே வெளியிட்டுள்ளேன்! சிறுவர்களின் வாயினால் ஏற்பட்ட துதியினால் பெரம்பூர், அருந்ததி நகர் பகுதி நிரம்பி வழிந்தது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக! பெரம்பூரில் எழுப்புதல் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!
தொடர்ந்து ஞாயிறு பள்ளியும் நடைபெற்று வருகின்றது! உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்! சனிக்கிழமை மாலை பிள்ளைகள் 5:15க்கு, கூடிவந்தனர்! அனைவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டது. (ஜீவ கிரீடம், நீதியின் கிரீடம்) சிறுவர் வேதாகம பள்ளியில் கற்றுக் கொடுத்த பாடல்களை பாடிக்கொண்டே ஊர்வலம் சகோதரி. லிடியாவின் ஆரம்ப ஜெபத்துடன் ஆரம்பமானது! ஆண்டவரது நாமம் மகிமைப்பட்டது! 
லிடியாவின் ஆரம்ப ஜெபம்!
 ஆரம்ப நிலையில் உள்ள பவனியின் சில புகைப்படங்கள்!



இந்த இடத்தில்தான் சிறுவர் வேதாகம பள்ளி நடத்தப்பட்டது!

தெருக்களில் பாடல்களை பாடி......




என்னோடுகூட சகோதரி.லீதியாள், சகோதரி. மோகனவல்லி ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக இந்த பள்ளி  நடத்தபட்டது. நன்றி!  

18 Apr 2017

OUR HELP COMES FROM THE LORD!

கர்த்தரிடத்திலிருந்து உங்கள் உதவி
கிறிஸ்துவில் அன்பு நண்பர்கள் யாவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்!
"நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தருடைய நாமத்தில் உள்ளது" (சங்கீதம் 124:8)
இங்கே சகாயம் என்பது உதவி. உங்களுக்கு வருகின்ற உதவி கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. நீங்கள் அநேக காரியங்களைக் குறித்து ஜெபிக்கின்றீர்கள்! பதில் வரும்போது ஆண்டவருக்கு மகிமையை செலுத்தவேண்டும்!
ஒரு பக்தன் இவ்வாறு பாடுகின்றார்,
யெகோவா தேவனுக்கு 1000 நாமங்கள் 
என்ன சொல்லி நான் பாடுவேன்......
இங்கே ஒரு சில நாமங்களைக் குறித்து தியானிக்கலாம்! வேதாகம கால பக்தர்கள் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் ஆசீர்வாதமாக மாறும்போது அவர்கள் ஆண்டவருக்கு  பிரச்சனைகளின் அடிப்படையில் பெயர் வைத்தார்கள்! ஆனால் நாம் இங்கு ஆண்டவரே தன் பெயரை வெளியிட்ட இடங்களைத் தேடிப்பிடித்து தியானிக்கிறோம்!
ஆதியாகமம் 17:1ல்,
"...... நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாய் இரு" 
கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவன்: அன்று ஆண்டவருடைய வாக்கை சந்தேகப்பட்டபொழுது, தேவ தூதன் கூறியது, 'தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை' வாக்கு வந்தபொழுது சாராளும் சந்தேகப்பட்டாள், அப்பொழுது கர்த்தரே 'கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?' எனக் கேட்கின்றார். உங்கள் வாழ்க்கையிலே ஆண்டவரால் நிறைவேற்ற முடியாத வாக்குத்தத்தம் என ஒன்றுமே இருக்காது. வாயின் வார்த்தையினால் வானத்தையும் பூமியையும் படைத்தவர், அவருடைய வாக்குத்தத்தங்கள் வேதாகமத்திலே இருக்கின்றது, பயன்படுத்துங்கள்!
"மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்" யாத்திராகமம் 3:15
இதின் பொருள் என்னவென்றால், இஸ்ரவேல் ஜனங்கள், ஆண்டவரை தங்கள் பாவத்தினால் கோபமூட்டினாலும், அவர்கள் மனந்திரும்பும் போது, இவர்களின் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைத்து, தண்டனையிலிருந்து விடுவித்து, ஆசீர்வதிப்பார் என்பதுதான். நீங்கள் சுவிஷேசத்தை அறிவிக்கும் போது, மேலே உள்ளவர்களின் தேவன் என நீங்கள் கூறினால், கேட்பவர்கள், நாங்கள் நினைத்தது சரிதான்...... இயேசு வெளிநாட்டுக் கடவுள் எனக் கூறுவார்கள். நீங்கள் ஆண்டவரை இருக்கிறவராகவே இருக்கின்றார், என்றும் மாறாதவர், மனுக்குலத்தின் மீது அன்பு செலுத்தினபடியால், இயேசுவாக, பாவத்தை மன்னிக்கிறவராக இந்த உலகத்துக்கு வந்தார். அவர்தான் வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவர் நாமம் இம்மானுவேல் - என்றும் நம்மோடிருக்கிறவர். என்றுதான் அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால், உங்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வல்லமையுள்ளவர் என்பதுதான். 
"மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும், யாக்கோபுக்கு தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினாலே நான் அவர்களுக்கு அறியப்படவில்லை" (யாத்திராகமம் 6:2,3)
முதலாவது வசனத்தைத் தியானித்தீர்களானால், உங்கள் வாழ்க்கையிலே இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்களில் அற்புதத்தைச் செய்வார். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாவத்திலிருந்து / மாம்சத்திலிருந்து (எகிப்து), விடுதலை செய்வார். உங்களை விட்டு பிரிந்து செல்லு(ம்)வார்கள். உங்களை சரியாக வழிநடத்தாமல், தவறான வழியில் நடத்தியவர்கள், என்னை விட்டால் போதும் எனக்கூறி ஓடுவார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்தே ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுவீர்கள்! ஏனெனில் அவர் யேகோவா என்னும் நாமத்தில் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவார். பாவத்தின் கட்டிலிருந்து வெளிவருவதே மிகப் பெரிய ஆசீர்வாதமாகும். உள்ளம் சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினால் நிரம்பி வழியும். இவைகளை பெற்றுக் கொண்டு ஆண்டவருக்கு சாட்சியாக வாழுங்கள்! ஆத்துமாக்களை ஆதாயம் செய்யுங்கள்! 
முடிவாக, ஆதி.12:8,
"..... கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்" வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தருடைய நாமத்தை ஆபிரகாம் தொழுது கொண்டதை போல, நீங்களும் அவனுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்! 
"...நான் யேகோவா" 
(யாத். 6:3)
நண்பர்கள் யாவரையும் மீண்டும் அன்புடன் வாழ்த்துகின்றேன்! உங்கள் நண்பர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படிக்கு, உங்கள் முகநூல் பக்கத்திலே பகிர்ந்து கொள்ளுங்கள்! 
நன்றி!

17 Apr 2017

DEBIT PART - 1

கடன்!
(முதல் பகுதி)
அன்பு நண்பர்கள் யாவருக்கும் வணக்கம்! 
இந்த தலைப்பை 3 பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம். 
1. வேதாகமம் கடனைப்பற்றி என்ன கூறுகின்றது?
2. நடைமுறையில் கடனை எவ்வாறு தீர்க்கலாம்?
3. இனிமேல் கடன் வாங்க வேண்டியது இருந்தால், என்ன கோட்பாடுகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்?
வேதாகமத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு கடன் இருந்தால், இந்த தலைப்பில் உள்ள அனைத்தையும் திறந்த உள்ளத்தோடு படியுங்கள்! இந்த வேதவசனங்களுக்கு கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்புக்கொடுங்கள்! கடனிலிருந்து வேதவசனத்தின் அடிப்படையில் வெளியேற வேண்டும் என்பதில் தீவிரமாக இருங்கள்!) கடனிலிருந்து வெளியேற ஆவியானவர் உங்களை வழிநடத்துவார் என விசுவாசிக்கின்றேன்! வேத வசனங்களை உறுதியாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்! கடனை வேதவசனத்தின் அடிப்படையில் பாருங்கள்! கவலை உங்கள் உள்ளத்தை விட்டு அகலும். வேத வசனத்தை மீண்டும் மீண்டும் வாசித்து, பதிலை ஒரு நோட்டில் எழுதவும்.
குறிப்பு: 
ஒவ்வொரு வசனத்துக்கு தனித்தனியாக பதிலை எழுதவேண்டும். எந்த வசனம் உங்களுக்கு இடறலாக தெரிகின்றதோ, அதற்க்கு நிச்சயமாக கீழ்ப்படிந்தே (ஏற்றுக்கொண்டே) ஆகவேண்டும்.
வசன பகுதி 1. உபாகமம் 15:4-6 
"எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்கு கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
உன்தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை"
வசனப்பகுதி 2: உபாகமம் 28:1,2,12,
"இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்துக்கு உண்மையாய் செவி கொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்"
வசனப்பகுதி 3: உபாகமம் 28:15, 43-45 "இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதே போவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மென்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப் போவாய். அவன் உன்னிடத்தில் கடன் படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாய் இருப்பான், நீ வாலாயிருப்பாய்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து....."
மேலே உள்ள வசனபகுதிகளில் இருந்து தனித்தனியாக கீழே உள்ள கேள்விகளுக்கு  பதிலளிக்கவும். 
கேள்வி: 
இந்த வேதபி பகுதிகளின் அடிப்படையில் பழைய ஏற்பாட்டுக்கு காலத்தில் கடன் எவ்வாறு பார்க்கப்பட்டது? 
ஒருவர்்கடனுக்கு  ஆளாவதற்கோ அதினின்று விடுபடுவதற்க்கோ என்ன காரணம்? 
அடுத்தது,
வேதப்பகுதி 1:ரோமர் 13:8 "ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மறறொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறரிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்" 
நீதிமாழிகள் 22:7, 
"ஐசுவரியாவான் தரித்திரனை ஆழுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை" 
1 கொரிந்தியர் 7:23, 
"நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்"
வேதாகமம் கடனைப் பரிந்துரைக்கிறதா? அப்படியெனில் ஏன்?2இந்த வேதவசனங்கள் கூறுவது உங்கள் தொழிலுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? (வாழ்க்கைக்கும்)
உங்களுக்கு கடன் இருந்தால் அதிலிருந்து மீளுவதற்கான திட்டம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் அந்த திட்டத்தை உங்கள் நோட்டில் எழுதவும். இதை நன்கு சிந்தித்து முடிவெடுக்கவும். 
அடுத்தது,
சங்கீதம் 37:21, 
"துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இறங்கிக் கொடுக்கிறான்" 
நீதிமொழிகள் 3:27,28, 
"நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாலைக்குத் தருவேன் என்று சொல்லாதே"
கேள்வி: கடனைத் திரும்பிச் செலுத்துவதை பற்றி இந்த வசனங்கள் கூறுவது என்ன? இரு வசனங்களுக்கும் தனித்தனியாக பதில் எழுதவும். இதை நீங்கள் எவ்வாறு செயல்படுத்துவீர்கள்?
அடுத்தது, 
2 இராஜாக்கள் 4:1-7ஐ வாசிக்கவும். 
"தீர்க்கத்தரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமதுஅடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்:பி ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். 
அப்பொழுது அவன்: நீ பொய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, 
உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததாய் ஒரு பக்கத்தில் வை என்றான்.
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள்  பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள். 
அந்த பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றாள். அதற்க்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.
அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு  அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவணம் பண்ணுங்கள் என்றான். 
1. இந்த வேத பகுதியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளும் கடனிலிருந்து மீளுவதற்கான கோட்பாடுகள் என்னென்ன?
2. ஏதாவது ஒரு கோட்பாட்டை உங்களுடைய தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்த முடியுமா? ஆம் எனில் எவ்வாறு?
(மேலே உள்ள இரு கேள்விகளுக்கும் நீங்களே தியானித்து எழுதுங்கள். அல்லது அடுத்த பதிவாக இதே வலைத்தளத்தில் வெளியிடப்படும், உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகம் செய்யுங்கள். இது உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்) 
அடுத்தது,
நீதிமொழிகள் 22:26,27 
"கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைக்கப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக் கொள்ள வேண்டியதாகுமே"
நீதிமொழிகள் 17:18, 
"புத்தியீனன் தன்  சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக் கொடுத்துப் பிணைப்படுகிறான்"
மேலே உள்ள வசனங்களில் இருந்து கீழே உள்ள கேள்விக்கு பதிலளிக்கவும். 
1. ஜாமீன் கொடுப்பதைக் குறித்து இந்த வசனம் என்ன சொல்லுகிறது? எழுதவும். 
அடுத்தது, 
நீதிமொழிகள் 6:1-5, 
"என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அன்னியனுக்குக் கையடித்துக் கொடுத்தாயானால்,
நீ உன் வாய் மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்ட படியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். 
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவது போல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்" 
கேள்வி:
ஜாமீன் கையெழுத்திட்டவர் என்ன செய்ய வேண்டும்?
நண்பர்கள் யாவருக்கும் அன்பு வணக்கம்! அடுத்த இரு பிரிவுகள் அடுத்த பதிவாக வெளியாகும். உங்களுக்கு கடன் இருக்கும் பட்சத்தில், கடனிலிருந்து வெளியேற ஜெபிக்கிறேன்! வாழ்த்துகின்றேன்!!

5 Apr 2017

THE SECRET OF REAL HAPPYNESS

உண்மையான மகிழ்ச்சி!
12ம் நூற்றாண்டில் இத்தாலியில் உள்ள அசிசி என்ற நகரத்தில் பிரான்சிஸ்கோ என்ற ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். இவனது தகப்பனார், அந்தப் பட்டணத்தில் மிகப் பெரிய செல்வச் செழிப்பு மிக்க தொழிலதிபராக இருந்தார்.
எனவே இளைஞன் பிரான்சிஸ்க்கோவிடம் நிறைய பணம் இருந்தது. நிறைய நண்பர்கள், இவன் சொல்லுக்குக் கீழ்ப்படிய நிறையபேர் இருந்தனர். வாழ்க்கை சுகபோகமாக சென்று கொண்டிருந்தது. தன் நண்பர்களோடு குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தான். இன்றும் கூட உங்களில் அநேகர் பணமிருந்தால் உண்மையான மகிழ்ச்சியோடு இருக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கின்ரீர்களல்லவா? அதற்காக அநேகர் குறுக்கு வழியில் பணத்தைப் பெற முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்! உதாரணத்துக்கு இன்றைய அரசியல்வாதிகள், அதிகாரிகள். ஆனால் பிரான்சிஸ்கோவிடம், ஒன்றே ஒன்று இல்லாமலிருந்தது. அதுதான் உண்மையான மகிழ்ச்சி! தினமும் நண்பர்கள் அவனைப் பிரிந்து சென்றவுடன் ஒரு இனம் புரியாத சோர்வு அவனைப் பிடித்துக்கொள்ளும். இதிலிருந்து விடுபட அவனால் முடியவில்லை. (குடித்து வெறித்தாலும் மகிழ்ச்சி இல்லை) பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒன்று அவன் வீரனாக பயிற்சி எடுக்கத் தொடங்கியதுதான். குதிரையேற்றம், வில்வித்தை, வாள்வித்தை, என அனைத்திலும் பயிற்சி எடுத்தான். அந்த ஊரிலேயே ஒரு பெரிய வீரனாகிவிட்டான். 
அவனது 21ம் வயதில், அருகில் இருந்த பெருஜியா என்ற பட்டணத்துக்கு அசிசி பட்டணத்துக்கு இடையில் சண்டை மூண்டது. போர்க்களத்தில் எடுத்த ஒரு மோசமான முடிவினால், பிரான்சிஸ்கோவும் அவனது வீரர்களும் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கே அவனுக்கு காய்ச்சல் வந்து, ஏறக்குறைய சாகும் நிலைக்கு சென்றுவிட்டான். எதிரிகள் அவனை விடுதலை செய்தனர். அவன் அசிசிக்குத் திரும்பிய போது, அவன் மாவீரன் பட்டத்தை இழந்து, வியாதியுடன், தோல்வியைத் தழுவினவனாக, உருவமே உருக்குலைந்து வந்து சேர்ந்தான்.
இந்த அனுபவங்கள் பிரான்சிஸ்கோவை, தன் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யத்தூண்டியது. நாட்கணக்காக வேதாகமத்தோடு ஜெபத்தில் உட்கார்ந்தான். குறிப்பாக மலைப்பிரதேச பிரசங்கத்தை உன்னிப்பாக கவனித்து படிக்க ஆரம்பித்தான். (மத்தேயு 5-7 அதிகாரங்கள்) மேன்மையான மகிழ்ச்சி இந்த இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தான். உங்கள் பொக்கிஷங்களை இந்த பூமியில் அல்ல, பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், நாலையைக் குறித்து கவலைப்படாதிருங்கள், கர்த்தரை விசுவாசியுங்கள் என்பன போன்றவை. இவைகளைத் தியானம் செய்த பொழுது வானத்தில் சிறகடித்து பறப்பது போலவும், பறவைகளை போல பாடி மகிழ்வது போலும் உணர்ந்தார். 
அவர் தனக்குரிய அரண்மனையை விட்டு வெளியேறினார். பொருட்களைப்பற்றிய பாரம் இல்லாமல் வாழும்படியாக குகைகளில் தங்க ஆரம்பித்தார். விலையுயர்ந்த ஆடைகளுக்குப் பதிலாக ஏழைகள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தார். மற்றவர்களோடு கூட இருந்த ஐக்கியமும் மாறியது. முதன் முதலாக மகிழ்ச்சியை அனுபவித்தார்! அவர், ஏழைகளுக்கு, வீடில்லாதவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதில் தனது நாட்களைச் செலவிட்டார். தொழுநோயாளிகள் இருப்பிடத்துக்கே சென்று, அவர்களுடைய காயங்களைக் கழுவி மருந்திட்டுக் காயம் கட்டினார். முன்பு அவர் வெறுத்த மக்களுக்கெல்லாம் உதவிகள் செய்தார். இது அநேக நண்பர்களை அவர் பக்கம் ஈர்த்தது. அவர்களும் பிரான்சிஸ்கோவுடன் சேர்ந்து ஏழைகள் மத்தியில் ஊழியம் செய்தனர்.
பிரான்சிஸ்கோ மரணமடைந்த கொஞ்ச நாட்களுக்குப்பின் அவரது பெயர் புனித பிரான்சிஸ் என அழைக்கப்பட்டது. மேலும் அவர் கிறிஸ்தவர்கள் எல்லோராலும் நேசிக்கப்பட்டார். 
800 வருடங்களுக்குப் பின்னரும் மக்கள், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் கண்டு பிடித்த மகிழ்ச்சியின் இரகசியத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான வேத பகுதிகளில் ஒன்று, மத்தேயு 5:1-12 ஆகும். புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றிய இயேசுவின் "உண்மையான மகிழ்ச்சியின் இரகசியங்களை" நீங்களும் படியுங்கள்!
1. பிரான்சிஸ்கோவின் சோர்வை நீக்கியது இயேசு கிறிஸ்துவின் எந்த வார்த்தையாக இருக்கும் என நீங்கள் நினைக்கிண்றீர்கள்?
2. நீங்கள் கற்றுக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியையும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் உள்ள உண்மையான மகிழ்ச்சியையும் எவ்வாறு சாப்பிடுவீர்கள்?
யோசிக்க:
உங்கள் வீட்டில் உள்ள, உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பொருட்களை உற்று கவனியுங்கள். அதே பொருட்கள் இயேசுவை மகிழ்ச்சிக்குள்ளாக்குமா? என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 
மேலே உள்ள வசனங்களை சிறுசிறு அட்டைகளில் எழுதி, அதை நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டிவைத்து அதை பார்க்கும்போதெல்லாம் சத்தமாக படியுங்கள். 
மேலும் உங்கள் உதவியாக:
1. சங்கீதம் 4; 2. லூக்கா 6:17-49; 3. யோவான் 15:5-11.
இந்த பதிவு உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். இந்த வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்! புதிய பதிவுகள் உங்கள் இன்-பாக்ஸில் வந்து சேரும்! நன்றிகள் பல. நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால் இந்த ஊழியத்துக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்!