18 Jan 2016

MY COMMITMENT IN 2016

இந்த 2016ல்  எனது அர்ப்பணிப்பு 
இந்த வருட புதிய செய்தியோடு உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்! ஆண்டவராகிய இயேசுதாமே உங்களை ஆவிக்குரிய வாழ்க்கையை ஆசீர்வதித்து உயர்த்துவாராக. 


பொதுவாக கிறிஸ்தவர்களாகிய நாம் புதுவருட தீர்மானமாக, அதிகமாக வேதத்தை வாசித்து தியானிக்க அதிக நேரம் கொடுப்பேன்; அதிகமாக ஒரு மணி நேரம் ஜெபிப்பேன்.... என உறுதி எடுப்பார்கள். இதைப்போலவும் நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகின்றார். இந்த தீர்மானத்தைக் கைக்கொள்ளும் பொழுது உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு எழுப்புதல் உண்டாகும்.
 1. நீங்கள் சொன்னதை (நீங்களே) செய்ய கவனமாயிருங்கள்.

2. அவர்கள் சொன்னபடி செய்ய கவனமாயிருங்கள்.

3. பரிசுத்த ஆவியானவர் சொன்னபடி செய்ய கவனமாயிருங்கள்.

1. நீங்கள் சொன்னதை (நீங்களே) செய்ய கவனமாய் இருங்கள்:

நீங்கள் வாயைத் திறந்து எதைச் சொல்லுகின்றீர்களோ, அதை செய்ய கவனமாய் இருங்கள். நண்பர்களிடத்தில், பிள்ளைகளிடத்தில் நீங்கள் அநேக காரியங்களைக் குறித்து பேசுகின்றீர்கள். புத்திமதி கூறுகின்றீர்கள். ஆனால் பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இல்லாமல் இருக்க நீங்கள் பிரயாசப் படவேண்டும். இதில் நமக்கு உதாரண புருஷர் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துதான். சுவிஷேச புத்தகங்களிலே அநேக சம்பவங்கள் இருந்த போதிலும் இங்கே ஒரு சம்பவத்தை மட்டும் பார்ப்போம். மத்தேயு 5:44ல்,
"நான் உங்களுக்கு சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" 
இதையே லூக்கா 6:28ம் கூறுகின்றது,
"உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்"
இயேசு தாம் கூறியவற்றை சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் போதும் நிறைவேற்றத் தவறவில்லை. லூக்கா 23:34ல், 
"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்...."
இயேசுவை உங்களுக்கு முன்மாதிரியாக கொள்ளுங்கள். இதையே யாக்கோபு 3:2ல்,
"ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்" 
இந்த வசனத்தினாலே நீங்கள் பெற்றுக் கொள்ளப் போகிற ஆசீர்வாதங்கள் ஏராளம்! ஏராளம்!! எனவே இந்த வசனத்தின்படி நடக்க கவனமாய் இருங்கள்! 

2. அவர்கள் சொன்னபடி செய்ய கவனமாயிருங்கள்:

மத்தேயு 23:2ல், இயேசு கிறிஸ்து,
"ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்;...." 
இங்கே, அப்பா, அம்மா, பெரியோர்கள், அதிகாரிகள் ஆகியோர் 'மனுஷனுடைய' என்ற வார்த்தையின் கீழ் வருகின்றார்கள். பொதுவாக ஞானம் வெளியில் இருந்து கூப்பிடுகின்றது.

3. பரிசுத்த ஆவியானவர் சொன்னபடி செய்ய கவனமாயிருங்கள்:

யோவான் 16:13,14ல், இயேசு கிறிஸ்து,
"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞசொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்"
ஆவியானவர் எப்பொழுதும் சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை வழிநடத்துவார். மாத்தி பேசு, பொய் சொல்லு, வாய்க்கு வந்ததை சொல்லு என்று கூறவே மாட்டார். ஆண்டவரிடத்தில் கேள்விப்பட்டதை உங்களுக்கு சொல்லுவார். தீர்க்கதரிசனமாக உங்களுக்கு அறிவிப்பார். அவர் இயேசுவை மகிமைப்படுத்துவார்; இவைகளில் இருந்து ஆவியானவர் புரள மாட்டார்; உங்கள் உள்ளத்தில் எழும்புகிற எந்த குரலும் இது இயேசுவை மகிமைப்படுத்துகிறதா? என நிதானித்து ஏற்றுக்கொள்ளுங்கள்; மற்றபடி வழி நடத்துபவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவன்தான்! 

இதிலே ஒரு சாட்சி: ஊழியத்தில் நடந்தது. ஒருமுறை நானும் ஒரு சகோதரனும் ஊழியத்தை ஒரு புதிய பகுதியில் ஆரம்பிக்கலாம் என எண்ணி, சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சென்றோம். (முந்தைய வாரத்தில் ஒரு நாள் அங்கு சென்று அந்த பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றிருந்தோம். கைப்பிரதி கொடுத்தோம், கூடி வந்த பிள்ளைகளுக்கு ஒரு பாடல் கற்றுக் கொடுத்தோம்) இருவரும் அந்த பகுதிக்குள் பிரவேசிக்கும் பொழுது, உள்ளே இருந்து ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டே வந்தார்; நீங்கள் இங்கே வரக்கூடாது என கத்தினார்; கூட வந்த சகோதரன் சற்று ஓரமாக ஒதுங்கிக் கொண்டார். நான் உள்ளத்திலே ஜெபிக்க ஆரம்பித்தேன். அவர் மிக அருகில் வந்ததும் வாயைத் திறந்து 'உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்' என அவரைப்பர்த்துக் கூறினேன். அந்த நாளில் அந்த வசனத்தை நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனவே எனக்கு ஆச்சரியம்! பின்பு மிகுந்த ஆச்சரியம்! காரணம் கேட்டவர்த்தைகளில் பேசி எங்களை அடிக்க வந்தவர், குபீரென்று சிரித்தார்! பின்பு மெதுவாக பேச்சு கொடுத்தேன், முடிவாக எந்த வீட்டுக்கும் போங்கள், எங்கள் வீட்டுக்கு மட்டும் வராதீர்கள் என்றார்! இதுதான் பரிசுத்த ஆவியானவறது நடத்துதல்!

முடிவாக, பரிசுத்த ஆவியானவர் வேத வசனத்துக்கு விரோதமாக உங்களை நடத்த மாட்டார்.

ஜெபிப்போமா?

எங்களை வழி நடத்துகின்ற பரிசுத்த ஆவியானவரே உம்மைத் துதிக்கிறோம் மகிமைப்படுத்துகின்றோம்! இந்த அருமையான சத்தியத்தின்படி இந்த வருடம் முழுவதும் வழி நடத்தும்படியாய் ஜெபிக்கிறோம், எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலே முன்னேறிச் செல்ல, இயேசுவை மகிமைப்படுத்த, அநேகருக்கு முன்பாக சாட்சியாய் வாழ எங்களுக்கு கிருபை செய்யும். இந்த வருடம் முழுவதும் இந்த சத்தியத்தில் இருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கும் பொழுதே எங்களை கண்டித்து உணர்த்தும். இயேசுவின் மூலம் ஜெபங்களும் பிதாவே. ஆமென், ஆமென்.

ஆண்டவர் இந்த சத்தியத்தின்படி இந்த வருடம் முழுவதும் வாழ்ந்து இயேசுவை மகிமைப்படுத்த உதவி செய்வாராக!


5 Jan 2016

I WILL DO BETTER UNTO YOU THAN AT YOUR BEGINNINGS


முந்தின சீரைப் பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச் செய்வேன் 

ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கின்ற புதுவருட  வாக்குத்தத்தம் உங்கள் அனைவரது வாழ்க்கையிலும் நிறைவேற நான் வாஞ்சிக்கின்றேன்! ஜெபிக்கின்றேன்!

இந்த வசனத்தை நாம் கவனித்து வாசித்தோமானால், இந்த வாக்கு மலைக்குச் சொல்லப்பட்டது என அறிந்து கொள்ளுவோம். ஆண்டவர் மலைக்கு அல்லது இடத்துக்கு வாக்குக் கொடுப்பாரா? என்ற கேள்வி எழும். எசேக்கியேல் 36:8ல்,
"இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்கள் கொப்புகளை விட்டு, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு உங்கள் கனிகளைக் கொடுப்பீர்கள்;....." 
இதே புத்தகத்தில், 6:1,2,3ல்,
"கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
இஸ்ரவேல் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; ..........."
மேலே உள்ளபடி பார்க்கும் போது, தீர்கத்தரிசனம் கூட மலையைப் பார்த்துக் கூறப்படுகின்றது. 

இங்கே இஸ்ரவேல் மக்களுக்குத்தான் இந்த வாக்குத்தத்தம். ஆவிக்குறிய இஸ்ரவேலராகிய நமக்கும் இந்த வாக்குத்தத்தம் பொருந்துகின்றது. 
யோபுவினுடைய வாழ்க்கை:
'முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீர்', எனும்பொழுது யோபுவினுடைய வாழ்க்கை நமக்கு நினைவுக்கு வருகிறது. யோபு 42:12ல்,
"கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்;....."
ஆண்டவர் யோபுவின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கக் காரணம், யோபு 2:10ல், 
"யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுவுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்"
நாம் நமது சிநேகிதருக்காக ஜெபிக்க வேண்டும். ஆண்டவரிடம் மன்றாட வேண்டும். அவர்களுக்கு இருக்கும் வியாதி சுகமாகும்படியாக, குடும்பத்தேவைகள் சந்திக்கப்படும் படியாக, பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்படியாக, ஆண்டவருடைய கோபம் அவர்கள் மீது மூளாதிருக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும். அப்பொழுது முந்தின சீரைப் பார்க்கிலும் நற்சீர் உண்டாகும்.  மேலும் மத்தேயு 5:44ல்,
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்"
ஏன் நாம் இந்த வசனத்தை வைத்து ஜெபிக்கக்கூடாது? முந்தின சீரைப் பார்க்கிலும் நற்சீர் உண்டாகும். ஏரேமியா 31:27ல்,
"இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷ விதத்தினாலும், மிருக வித்தினாலும் விதைப்பேன்"
எரேமியா 33:12ல்,
"மனுஷனும் மிருகமும் இல்லாமல் அவாந்தரவெளியாய் கிடக்கிற இவ்விடத்திலும், இதற்கடுத்த பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள் உண்டாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்"
குறிப்பாக புதிய சபைகளின் எண்ணிக்கை பெருகும். 

 சரி! இந்த வாக்குத்தத்தத்தை எப்படி உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம்? ரோமர் 4:17-24ல்,
"அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புவதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப் போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான்.
தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்,
தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்"
மேலே உள்ள வசனத்தைக் கவனித்தோமானால்,
நமக்கு எதில் எதில் நற்சீர் உண்டாக வேண்டும் என நிதானித்து, அதற்கு விரோதமான செய்திகளைத் தவிர்த்து,  அதாவது உங்களது நம்பிக்கையை தகர்க்கக் கூடிய எதையும் மனதைவிட்டு அப்புறப்படுத்த வேண்டும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையானவறுக்கு எதிரான செய்திகளுக்கு உள்ளத்தில் இடமளிக்கக் கூடாது. இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லமையுள்ள கர்த்தரை துதித்து மகிமைப்படுத்தவேண்டும். அப்படி செய்யும் பொழுது நீங்கள் அற்புதவிதமான விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளுவீர்கள். இது எப்படியாகும்? எனக் கேட்ட மரியாளுக்கு இதுதான் பதிலாக கொடுக்கப்பட்டது. 'விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்'
ஜெபிப்போமா?

அன்பின் பிதாவே, இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றேன், இந்த வருட வாக்குத்தத்தத்ததிற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம், நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே உமக்கு ஸ்தோத்திரம்! நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றவரே உமக்கு ஸ்தோத்திரம், நான் கர்த்தர், நான் மாறுவதில்லை என்றவரே உமக்கு ஸ்தோத்திரம், இந்த எசேக்கியேல் 36:11ன் படி முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீர் உண்டாகச் செய்வதற்காய் உமக்கு நன்றி! இந்த வாக்கை நிறைவேற்ற வல்லமையுள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம்! இந்த வாக்கு நிறைவேறும் பொழுது, உமது நாமத்தை இன்னும் அதிகமாய் துதிக்க கிருபை தருவதற்காய் நன்றி! உமது வல்லமைக்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபத்துக்கு பதில் தருவதற்காய் நன்றி! இந்த ஜெபத்தை எனக்காய் மறித்து உயிர்த்த இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கிறேன் பிதாவே. ஆமென் ஆமென். 
வாக்கு மாறாத தேவனின் வாக்கு!