8 Sept 2020

CHRISTIAN'S LIFE


 
கிறிஸ்தவ வாழ்க்கை

கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் யாவரையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்!

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சூப்பரான வாழ்க்கை! நீங்கள் எப்படி வாழுகின்றீர்கள்!!

உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது?

உங்களில் பெரும்பாலானோர், கிறிஸ்தவ பெற்றோர்களுக்குப் பிறந்திருப்பீர்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் உங்களைக் கிறிஸ்தவ ஆலயத்துககு அழைத்துச் சென்றிருப்பார்கள். அங்கே சென்று பாடல்களைக் கேட்டீர்கள், கற்றுக்கொண்டீர்கள். ஜெபத்தையும் அப்படியே.... நீங்கள் வளர்ந்து வரும்போது, உங்களுக்கு வேத வசனங்கள் மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்பு தனியாக ஜெபம் செய்யக் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்பு கூட்டத்துக்கு முன்பு.... பாவந்தான் ஆண்டவருக்கும் உங்களுக்கும் பிரிவினை உண்டாக்குகிறது. எனவே பாவமன்னிப்பை ஜெபத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் போதிக்கப்பட்டீர்கள். பெற்றுக் கொண்டீர்கள். பின்பு அபிஷேகம்....  கேள்விப்பட்டபொழுது எப்படியும் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்ப்பட்டது. அதற்காகவும் ஜெபித்தீர்கள். சில நாட்களில் அபிஷேகத்தையும் பெற்றுக் கொண்டீர்கள். கடினமான சூழல் வாழ்க்கையில் வந்தபோது, அபிஷேகம் நுகத்தை முறிக்கும் என்ற வசனத்தின்படி, கடினமான சூழ்நிலைகளை மேற்கொண்டீர்கள். இப்படியே உங்கள் ஆவிக்குறிய வாழ்வு வாழக் கற்றுக் கொடுக்கப்பட்டது. 

மேலே சொன்னபடி பெரும்பாலான கிறிஸ்தவர்களின் ஆவிக்குறிய வாழ்வு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஒரு வேளை மேலே கண்டவற்றுள் ஏதாவது விடுபட்டுப் போய் இருந்தால், பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். 

ஒரு வேளை உங்கள் மனைவியின் கற்புள்ள நடவடிக்கையின் மூலம், நண்பர்களின் வழிநடத்துதலால், அல்லது, கிறிஸ்தவ நற்செய்திக் கூட்டத்தின் மூலமாக நீங்கள் மனந்திரும்பி, இயேசுவை ஏற்றுக் கொண்டிருந்தால், மேலே உள்ளவற்றின்படி, உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைக் கட்டி எழுப்புங்கள். மேலும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு சத்தியம் ஒன்று உண்டு. அதைத்தான் நீங்கள் கீழே பார்க்கவிருக்கின்றீர்கள். அது,

கிறிஸ்தவ வாழ்க்கை ஓர் அழைப்பு: இயேசுகிறிஸ்துவின் முக்கிய மிஷனில் ஒன்று, "பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்". இதுதான். இதையே மாற்கு 2:17; லூக்கா 5:32 வசனங்களில் இருந்தும் பார்க்கலாம். நீங்கள் அனைவருமே கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படியாக அழைக்கப்பட்டவர்கள்தான். கலாத்தியர் 1:15ல்,

 "அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்". 

இப்பொழுது இயேசுவை சொந்த கடவுளாக ஏற்றுக் கொண்ட யாராய் இருந்தாலும் இந்த வசனத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கலாம். ஆக நீங்கள் அனைவரும் அழைக்கப்பட்டவர்கள்!!

முதன் முதலாக ஆபிரகாமை தேவன் அழைத்தபொழுது வாக்குத்தத்தத்தைக் கொடுத்து அழைத்தார். இதைத் தொடக்கநூல் 12:1,2,3 வசனங்களில் பார்க்கலாம். ஆக உங்களை அழைத்த தேவன் உங்களுக்கென, பிரத்தியேகமான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் அந்த வாக்குத்தத்தத்தை முன்னிலைப் படுத்தி, மையப்படுத்தி வாழ அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள்! நீங்கள் எந்த ஒரு நிச்சயமும் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை வாழ அழைக்கப்படவில்லை. ஆண்டவர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு, அவனுடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இழையோடிக் கொண்டிருப்பதை நீங்கள் அறியலாம். இதுவரை உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் எதை வைத்து முடிவெடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஓர் ஒழுக்கமான, நேர்த்தியான, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டுமானால் உங்களுக்குத் தேவை, வாக்குத்தத்தம் அடிப்படையிலான வாழ்க்கை!!!

வாக்குத்தத்தம் உங்களை, அது நினைத்திருக்கின்ற இடத்திற்கு கவர்ந்து கொள்ளும். ஏனெனில் அது தேவனுடைய வாக்கு. அது மாறுவதே இல்லை. 

உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்த இடத்தில் தோற்றுப் போகின்றீர்கள்? உங்கள் சரீரத்தில் வியாதி இருக்கின்றது என வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் 1பேதுரு 2:24ஐ உறுதியாகப் பற்றிக் கொண்டீர்கள் எனில், நீங்கள்தான் வெற்றி வீரராகத் திகழுகின்றீர்கள். உங்கள் சரீரமே உங்களுக்கு வியாதியை உணர்த்திக் கொண்டிருந்தாலும், நான் வேத வசனத்தை மட்டுமே விசுவாசிப்பேன் என உறுதியாக இருந்தீர்கள் எனில், அந்த இடத்திலிருந்துதான் உண்மையான எழுப்புதல் ஆரம்பிக்கின்றது. அது உங்களுக்கு மட்டுமல்ல; உங்களைச் சுற்றி இருக்கின்றவர்கள் மத்தியிலேயும் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. வியாதி உங்களைவிட்டு போய்த்தான் ஆக வேண்டும். அது உங்கள் சரீரத்தை ஆளுகை செய்ய முடிவே முடியாது. இதை விடுத்து, எப்பொழுது நீங்கள் எல்லாருக்கும் வருகின்ற வியாதிதானென ஏற்றுக் கொள்ளுகின்றீர்களோ, அதாவது இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கின்றீர்களோ அந்த இடந்தான் நீங்கள் தோற்றுப்போகின்ற இடம். பிசாசானவன் ஜெயிக்கின்ற இடமும் அதுதான். சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் மாறினால் தோற்றுவிட்டீர்கள். வசனத்துக்கு ஏற்பச் சூழ்நிலையை மாற்றினால், நீங்கள்தான் வெற்றிவீரர்!!

கிறிஸ்தவர்களும் ஒரு காலத்தில் வறுமையில் இருந்தார்கள். ஆனால் ஒரு சில ஊழியர்கள் வறுமையும், ஆண்டவருடைய ஆசீர்வாதங்களில் ஒன்று என்ற பிரசங்கத்தைக் கேட்டு, எப்பொழுது வறுமையை ஏற்றுக் கொண்டார்களோ, அப்பொழுதே பிசாசானவன் ஜெயித்துவிட்டான். எனவே,

வேதவசனத்துக்கு ஏற்ப, உங்கள் உள்ளத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும், வறுமை மேன்மையானது என்ற கருத்து வேதாகமத்தில் எந்த இடத்திலும் இல்லை. பஞ்சம் வந்தது, ஒரு சபையில் இருந்த விசுவாசிகள், பஞ்சம் பாதித்த இடங்களில் உள்ள சபைகளின் விசுவாசிகளுக்குத் தங்கள் திரானிக்கு மேலாகப் பொருளுதவி செய்தார்கள்! ஆனால் வறுமை ஒரு ஆசீர்வாதம் என அவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்னும் சில ஊழியர்கள், பிரதர்.... பிசாசுக்கு அம்மாவாசை, பௌர்னமி என்றால் கொண்டாட்டம். அந்த நாட்களில்தான் நாம் உபவாசமிருந்து, பிசாசுக்கு எதிற்த்து நிற்க வேண்டும் எனக்கூறி, அம்மாவாசை உபவாச ஜெபம், பௌர்னமி ஜெபம் என்று சென்னையிலே நடத்திக் கொண்டிருந்தார்கள். கொரோனாவினால் அந்த ஜெபங்கள் எதுவும் நடக்கவில்லை. இப்பொழுது பிசாசு எங்கே போனான் என்றும் தெரியவில்லை.

பிசாசின் கிரியை இருக்கின்றது என ஒத்துக் கொள்ளுகின்றேன். ஆனால் அது எங்கே இருக்கின்றது என்பது மிக முக்கியம். ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாத ஆவிசுவாசிகளிடம்தான் இருக்க வேண்டும். விசுவாசிகளிடம் இருந்தால்.... கவனிக்கப்பட வேண்டிய விடயம்.... 

எங்கள் ஊழியத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு இங்கே எழுதுவது எங்களுக்குச் சரியாகப்படுகின்றது. அது பில்லிசூனியத்தைப் பற்றியது. 

அவரது குடும்பம் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பம். ஏதோ ஒரு சூழலில், அவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, வியாபாரம் செய்துவந்த மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், தனக்கு பில்லிசூனியம் வைத்துவிட்டார்கள் என நம்ப ஆரம்பித்துவிட்டார். (எண்.23:23ஐ மீறி) பிறகென்ன பிசாசு அதைவைத்தே அவரது குடும்பத்தைக் கசக்கி பிழிய ஆரம்பித்துவிட்டான்.

மிகக் கடுமையான நிலைமை. தனது தொழிலை இழந்தார், தனது கடைசி மகனுடைய நிலைமை சரியில்லை. பல்வேறு இடங்களிலே விபத்துக்களைச் சந்தித்தார். அதுவும் அவர் இப்படி விபத்து நடக்கும் என நினைத்தபடியே நடக்கும். இதிலிருந்து விடுபடுவதற்கு ஜெபிக்க ஆரம்பித்தார். தான் ஆராதிக்கப் போன சபை ஊழியர்களை எல்லாம் அழைத்து வந்து ஜெபிக்க ஆரம்பித்தார். இவருக்காக ஜெபித்த ஊழியர் அனைவரும் நினைவிழந்து கீழே விழுந்தனர். இவர், அவர்கள்மேல் கைகளை வைத்து ஜெபித்து எழுப்பிவிடுவார். அவர் சொன்னது: பில்லிசூனியத்தை எடுத்தால், அடிக்கும்படி, சூனியத்தை எடுக்க முடியாதபடி வைத்துவிட்டனர் என்றார். 

அவர் பேசியதிலிருந்து, நான் அறிந்து கொண்டது: ஆண்டவருடைய வல்லமையைக் காட்டிலும் பில்லிசூனியந்தான் பெரியது என நம்ப ஆரம்பித்துவிட்டார் என்பதுதான். (உங்களில் எத்தனைபேர் இயேசுவைக் காட்டிலும், பிசாசுதான் பெரியவன் என்றும், இயேசுவின் தழும்புகளைக் காட்டிலும்  வியாதிதான் பெரியது என்றும், இயேசுவின் தரித்திரியத்தைக் காட்டிலும், வறுமைதான் பெரியது என நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்) அந்தப் பாதிக்கப்பட்ட விசுவாசியை அறிமுகம் செய்தவர் அப்பொழுதுதான் ஊழியத்தை ஆரம்பித்திருந்தார். நாங்கள் இருவரும் ஜெபிக்கப் போன இடத்தில் பேசியதுதான் மேலே உள்ள அனைத்து உரையாடலும். 'நீங்கள் எங்களுக்காக ஜெபியுங்கள், ஏதாவது ஆனதென்றால் நான் உங்களுக்காக ஜெபித்து எழுப்பிவிடுகின்றேன்'என்றார்.

ஆண்டவருடைய கிருபையால் ஒரு சில அடிப்படை சத்தியங்கள் எனது உள்ளத்திலே ஆழமாகப் பதிந்து போயிருந்தது. அவையாவன:

1. மந்திரவாதம், குறி சொல்லுதல் என எனக்கு விரோதமாக யாரும் செய்ய முடியாது. (எண்.23:23)

2. ஆண்டவர் என்னை ஒருக்காலும் குற்றப்படுத்த மாட்டார் (எண்.23:21)

3. என்னை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம் (எண்.24:1)

எனவே அவர் கூறியதை எனது மனம், ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஆண்டவர் அவரையும், அவர் குடும்பத்தையும் விடுதலை செய்தார். கடைசியாக அவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டேன். ஆண்டவர் உங்கள் பாவங்களை மன்னித்திருக்கிறாரென எதை வைத்துச் சொல்லுகிறீர்கள்?

அவர், "இதை யாராவது சொல்ல வேண்டுமா? என் உள்ளமே எனக்கு இதைச் சொல்லுகிறது".

நான், "வசன ஆதாரத்தைக் கேட்கிறேன்".

அவர், "1யோவான்1:7,9".

நான், "இந்த வசனத்தை விசுவாசிக்கிற நீங்கள் ஏன் எண்ணாகமம் 23:23ஐ விசுவாசிக்கக் கூடாது?". 

அவரிடம் பதில் இல்லை.

எனக்கன்பான நண்பர்களே, நீங்கள் சந்திக்கின்ற பிரச்சனையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? உங்களைக் கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி அழைத்தவர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி பார்த்தால், அதின் அடிப்படையில் பார்ப்பீர்கள். உங்கள் சூழ்நிலையையே மாற்றி அமைப்பீர்கள்! எதையும் எதிர்கொள்ளப் பெலனடைவீர்கள்!! உங்களை வீழ்த்த யாராலும் முடியாது!!! 

ஆண்டவரே குற்றஞ்சுமத்தாத உங்களை முதலாவது நீங்கள் மன்னியுங்கள்! குற்றமனசாட்சியிலிருந்து விடுதலையாவீர்கள்!! உங்கள் வாழ்க்கைத் துணைவரை மன்னியுங்கள்! உங்கள் அரமணைக்குள்ளே சமாதானமும், சுகமும் ஆட்சி செய்யும்.

கிறிஸ்தவ வாழ்க்கை, ஆண்டவரால் அழைக்கப்பட்ட வாழ்க்கை என்பதற்கு மேலும் ஒரு சில வசனங்களைப் பார்ப்போம். (ரோமரிலிருந்து மட்டும்) வ.8:28ல்,

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு  கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்"

வ.8:30ல்,

"எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிரார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறாறோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்"

வ.9:24ல்,

"அவர் யூதரிலிருந்து மாத்திரமல்ல, புறஜாதிகளிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே"

வ.11:29ல்,

"தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே". 

எனவே ஒரு தீர்மாணத்திற்கு வருகின்றோம், ஆண்டவருடைய ஆழைப்பின் மீதுதான் உங்கள் வாழ்க்கை இருக்கின்றது. அழைத்தவர் உங்களைச் சும்மா அழைக்கவில்லை, ஒரு விருந்தை ஆயத்தப்படுத்திவிட்டுதான் அழைத்திருக்கின்றார். 

கிறிஸ்தவ வாழ்க்கையே ஒரு விருந்தின் வாழ்க்கைதான். படைப்பிலிருந்தும் இதைப் பார்க்கலாம் (தொடக்கநூல் முதல் அதிகாரம்). விசுவாசிக்கின்றவர்கள் பாக்கியவான்கள். ஈசாக்கு வரவர விருத்தியடைந்தான் என்பதைப் போல நீங்களும் தினமும் விருத்தியடைவீர்கள். இறுதியாக,

எபேசியர் 1:18,19ன்படி

"தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்.... நீங்கள் அறியும்படி அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகின்றேன்" 

அறிவிப்பு: 1. 

இந்த வலைத்தளத்தில் நீங்கள் உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்!

அறிவிப்பு: 2. 

"ஐசுவரியம் VS பணஆசை" 

என்ற தலைப்பில் 32பக்க புத்தகம் வெளியிட்டிருக்கின்றோம். ஒன்றின் விலை இந்திய ௹10/- மட்டுமே. உங்கள் முகவரியைக் கீழே உள்ள எண்ணுக்கு அனுப்பி வைக்கவும். இப்புத்தகம், குறிப்பாக ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

அறிவிப்பு:3.

 CELL NO: 9840836690

G PAY NO: 9840836690

selvin12zion@gmail.com